கூண்டுக் கிளி

வழக்கமான மெஸ்மரிச குரலைக் காதில் வாங்கியபடியே ஜன்னலை விரியத் திறந்தாள் அகல்யா.
கூண்டுக் கிளி
Published on
Updated on
6 min read

ஜூனியர் தேஜ்

'அம்மாவுக்கு நல்ல காலம்தான்!'

வழக்கமான மெஸ்மரிச குரலைக் காதில் வாங்கியபடியே ஜன்னலை விரியத் திறந்தாள் அகல்யா. ஜன்னலுக்கு வெளியே, கிழிசல் துணிகள், பீத்தல் சாக்குகள், தேங்காய் நார்கள், இறுதி யாத்திரையின்போது விசிறப்பட்டு காய்ந்த மாலைகள், நசுங்கிச் சிதைந்த வாட்டர் பாட்டில்கள் விதவிதமான வண்ணங்களிலும் வடிவங்களிலும் நெகிழிப்பைக் கிழிசல்கள், தலைமுடிகள், வாழையிலைச் சருகுகள், எதிர் சாரியில் வளர்ந்து நிற்கும் மரம் அவ்வப்போது உதிர்க்கும் பழுப்புகள்... என என்னென்னவோ ஒன்றோடொன்று பிணைந்துகொண்டு, சிக்கிச் சின்னாபின்னமாகி சிதறிக் கிடக்கும் கருங்கல் ஜல்லிகளோடு, குண்டும் குழியுமாகக் கிடந்த, பராமரிப்பற்ற பத்தடிச் சாலையைப் பார்த்தாள். திறந்த ஜன்னல் வழியாக வெளிச்சம் உள்ளேப் புகுந்து அகல்யாவின் முகத்தில் பட்டு அறையினுள்ளேயும் பரவியது.

'ஜன்னலைத் திறக்காதேடீ புழுதி உள்ளே வந்துடும்...' என்று அம்மா சொல்வதும், 'ஜன்னலைத் திறந்தா வெளிச்சமும் காத்தும் கூட உள்ளே வருமேம்மா?' என்று அகல்யா கூறுவதும் என அவ்வப்போது அம்மாவுக்கும் மகளுக்கும் நடுவே நடக்கும் சுவாரசியமான உரையாடல். அந்தத் தருணத்தை நினைத்துத் தனக்குள்ளே சிரித்துகொண்டாள் அகல்யா.

ஜன்னலுக்கு அருகாமையில் மாட்டப்பட்டிருந்த நிலைக் கண்ணாடியில் பிரதிபலித்திருந்த தன் முகத்தை ஒரு கணம் அனிச்சையாகப் பார்த்துகொண்ட அகல்யாவின் கண்கள், மறு கணம் மீண்டும் சாலைக்குத் தாவின.

'எப்பத் தான் விடிவுக்காலம் வரப்போகுதோ?' என்று நினைத்துகொண்டாள். தொடர்ந்து, எதிர் சாரியில், பிரம்மாண்டமாக வளர்ந்து நிற்கும், சாலையோர மரத்தடியில் நின்றது அவள் பார்வை. அந்த மரத்தடியை வாழ்வாதாரமாய் வரித்துகொண்டுத், தொழில் நடத்தும் கிளி ஜோசியரையும் அவருக்கு முன்னே, நல்வாக்கை எதிர்பார்த்து அமர்ந்திருத்த மடந்தையையும் பார்த்துத் தனக்குள் சிரித்துக் கொண்டாள் அகல்யா.

'அம்மாக்கு நல்ல காலம்தான்!' என்று ஜோதிடர் சொன்னதை வாங்கிச் சொன்னது கூண்டுக்கிளி. இரண்டு, மூன்று முறை சொல்லி, 'அம்மாவுக்கு நல்ல காலம்தான்' என்று மீண்டும் மீண்டும் கிளியைச் சொல்ல வைத்தார் ஜோசியர். எதிரில் அமர்ந்திருந்த மடந்தைக்கு கிளியின் வார்த்தைகள் சற்றே நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்க வேண்டும். கண்களையும் காதுகளையும் விரியத் திறந்து வைத்துகொண்டு சற்றே நிமிர்ந்து உட்கார்ந்தாள். கூண்டைத் திறந்து விட்டார் ஜோதிடர்.

கம்பீரமாக நடந்து வந்தது கிளி. 'அதிர்ஷ்ட சீட்டெடு அம்மாவுக்கு!' என்றார் ஜோதிடர்.

சீட்டுக்கட்டை விரித்துப் பரத்தியதைப் போன்று பரத்தியிருந்த அட்டைகளை பார்த்தபடியே ஆடியாடிச் சென்றது கிளி. நட்ட நடுவில் தலையைச் சாய்த்துகொண்டு அலகால் ஓர் அட்டையைக் கவ்வியது. கவ்விய வேகத்தில் விட்டது. அடுத்த அட்டையைக் கவ்வியது . விட்டது. கலைத்துக் கலைத்து, புரட்டிப் புரட்டி இழுத்து இழுத்து இழுத்து, உதறியது. இறுதியாக, ஒரு அட்டையைக் கவ்வியபடி ஜோசியர் முன் நின்றது. கிளியின் தலையை இடது கையால் மெதுவாய் வருடிவிட்டு, அது கொடுத்த அட்டையை வலது கையில் வாங்கினார் ஜோதிடர்.

அட்டைக்குள் மடித்து வைக்கப்பட்டிருந்த, பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான சகாதேவனின், தொடுகுறிச் சாத்திரம் எழுதப்பட்ட காகிதத்தை எடுத்து மடிப்பை விரித்துப் பிரித்தார் ஜோதிடர். அதிலிருந்த அனுமன் சித்திரத்தை வாடிக்கையாளரிடம் காட்டினார். இரண்டு கைகளாலும் பக்தியாய் பிடித்தவாறு தன் நெற்றியில் வைத்து அனுமனை தியானித்தார். 'ஐந்திலே ஒன்று பெற்றான் ஐந்திலே ஒன்றைத் தாவி..' என்று கண்களை மூடியபடி அபூர்வ ராகத்தில் பாட ஆரம்பித்தார்.

'யோகச்சீட்டு!' என்றார் ஜோசியர் எதிராளியின் கண்களைப் பார்த்தபடி. கிளியும் யோகச் சீட்டு என்று பிரதிபலித்தது.

சில கணங்கள் மெளனமாய் கழிந்தது. அந்த நேரத்தில், கிளிக் கூண்டின் கம்பி அடைப்பை மேலேற்றி, வாழைப் பழத்தை பாதி உரித்து கூண்டுக்குள் வைத்தார் ஜோதிடர். கூண்டுக்குள் சென்றது கிளி.

காதுகளில் மாட்டிக் கொண்ட மூக்குக் கண்ணாடியை மூக்கு நுனி வரை இழுத்துவிட்டார். கழுத்தை ஏந்தலாகத் தூக்கி கண்ணாடியின் 'பை ஃபோக்கல்' ஊடாகச் சீட்டைப் படித்தார். கழுத்தை இறக்கி கண்ணாடியின் மேல்பக்க ஃப்ரேமுக்கும் புருவத்துக்கும் இடையில் பார்த்துச் சொல்ல ஆரம்பித்தார்.

'உங்களைச் சுத்தியிருந்த கெட்ட-கிரகங்களெல்லாம் சூரியனைக் கண்டப் பனி போல விலகிக் போகும் நேரம் வந்துருச்சு தாயி' என்று சொல்லிவிட்டு ஜோதிடர் சில கணங்கள் அமைதி காத்தார். இப்படி, விட்டு விட்டு, தகரக் கொட்டகையில் ஆலங்கங்கட்டி மழை பெய்வதைப் போல, சீட்டில் இருந்ததை ராகம் போட்டு பாடுவதும், படிப்பதுமாக போய்க் கொண்டிருக்க, எதிரில் அமர்ந்திருந்த பெண்ணின் முகத்தில் பிரகாசம் தெரிந்தது.

*இது எதில் போய் முடியும்!, இறுதிக் கட்டத்தில், ஜோதிடர், என்னனென்ன, சாங்கியங்கள், பரிகாரங்கள் எல்லாம் சொல்வார், என்பதெல்லாம் அகிலாவுக்கு அத்துப்படி.

ஜோசியம் பார்க்க வந்தவர், ஆணாக இருந்தால், ஒவ்வொரு புதன்கிழமையும் பசுவுக்கு அகத்திக் கீரைக்கட்டு வாங்கித் தரச் சொல்வார். பெரும்பாலும் அவர் சொல்லும் பரிகாரம் இதுவாகத்தான் இருக்கும். பெண் குலத்துக்கு இவர் சொல்லும் பரிகாரம், வெள்ளிக்கிழமை அந்தியில் வாசல் - அருகாலுக்கு மஞ்சள் பூச்சுப் பூசி, குங்குமமிட்டு, மலர்கள் தூவி, கலப்பு எண்ணெய் ஊற்றி குத்துவிளக்கில் ஐந்து முகங்களையும் ஏற்றி வைத்து வணங்கச் சொல்வார். இன்று இந்தப் பெண்ணுக்கும் வழக்கமானப் பரிகாரம்தான் சொன்னார் ஜோதிடர். தனக்குள் சிரித்துகொண்டாள் அகல்யா.

'சொன்னதைச் சொல்வது மட்டுமல்ல;

சொன்னதைச் செய்யும் கிளிப்பிள்ளை' என்று தன் கவிதை நோட்டில் இரண்டு வரிகள் எழுதினாள் அகல்யா. தன் எண்ணத்துக்கு உருவம் தர, கணினியை உயிர்ப்பித்து, 'ஃபோட்டோ ஷாப்' புக்குள் புகுந்தாள். அகல்யாவுக்கு ஐ.டி, கம்பெனியில் வேலை. கரோனா காலத்தில் துவங்கிய 'ஒர்க் ஃப்ரம் ஹோம்' இன்றளவும் தொடர்கிறது அவளுக்கு.

ஓய்வு கிடைக்கும்போதெல்லாம் கவிதை எழுதும் பழக்கம் அவளுக்கு இருந்தது. கவிதை எழுதுவது மட்டுமல்ல, கவிதைக்குப் பொருத்தமாய் வண்ண ஓவியங்கள் வரைவதிலும் ஆர்வம் அவளுக்கு. அதில் ஆத்ம திருப்தி கிடைப்பதாக உணர்வாள் அகல்யா.

அகல்யாவுக்கு ஒரே ஒரு தம்பி. பெயர் கணேசன். சமீபத்தில்தான் கல்லூரிப் படிப்பை முடித்திருக்கிறான். 'கேம்பஸில்' தேர்வாகவில்லை. வேலையைத் தேடிக் கொண்டிருக்கிறான். அகல்யா அக்காவின் கவிதைகளுக்கு முதல் ரசிகன் கணேசன்தான். அவனுக்கும் கவிதை எழுதுவதில் நாட்டமுண்டு. கணேசனின் பிடிவாதத்தின்பேரில்தான், முகநூல், ட்விட்டர், இன்ஸ்டா-க்ராம்' போன்ற வலைதளங்களிலெல்லாம், தானே வரைந்த டிஜிட்டல் ஓவியங்களுடன் கூடிய தன் கவிதைகளைப் பதிவிட தொடங்கினாள் அகல்யா.

படைப்பைப் படித்தவர்களிடமிருந்து, ஒட்டியும் வெட்டியும் கருத்துகள் வந்தன. தொடக்கக் காலத்தில், எதிர்மறை விமர்சனங்களால் மனப்பிம்பம் சிதைவதாக உணர்ந்த அகல்யா, நாளாவட்டத்தில் ஏற்றுப் பழகினாள். ஆன்லைனில் ஒரு தமிழ்ப் புலவரிடம் 'யாப்பு' கற்றாள். கவிதையின் உருவம், உள்ளடக்கம், மொழி-வளம் எனப் படிப்படியாக தன் திறமையை வளர்த்துகொண்டாள். சிற்றிதழ்களுக்கும், மின்னிதழ்களுக்கும் அனுப்பிவைத்தாள். தன் படைப்புகளின் பிரசுரம் கண்டு மகிழ்ந்தாள். அந்த அங்கீகாரம், மேலும் மேலும் அவளை எழுதத் தூண்டியது. வலிந்து எழுதும் வழக்கம் அவளிடமில்லை, வரும்போது எழுதிவிடுவதை வழக்கமாகக் கொண்டாள்.

'அகல்யாவைப் பெண் பார்க்க இன்னிக்கு வராங்க? ஞாபகமிருக்கில்ல?' என்று அப்பாவிடம், அம்மா சொன்னது ஃபோட்டோஷாப்பில் வரைந்துகொண்டிருந்த அகல்யாவின் காதிலும் விழுந்தது.

'ம்!' என்று வழக்கம்போல ஓரெழுத்தில் பதில் சொன்னார் பரசு. அப்பாவின் வழக்கமான, ஓரெழுத்து அங்கீகாரத்தையும் காதில் வாங்கிய அகல்யா, தனக்குள் சிரித்துக்கொண்டாள். அப்பாவைப் பொருத்தவரை, அம்மா எது சொன்னாலும், மறுபேச்சு கிடையாது. ஓரிரு கணங்கள் தாமதித்தால் கூடச் சிக்கலாகிவிடும். 'எனக்கு இந்த வீட்டில் உரிமையோ, மரியாதையோ துளியுமில்லே!' என்கிற ரீதியில், புலம்பித் தள்ளுவாள்;

அடுத்தக் கட்டமாக, முகத்தைத் 'உம்' என்று தூக்கி வைத்துகொண்டு ஒரு மூலையில் உட்கார்ந்து விடுவாள். அதன் பிறகு அவளைச் சமநிலைக்குக் கொண்டுவருவதற்குள் போதும் போதுமென்றாகிவிடும். அம்மாவின், ஒத்துழையாமை, சத்தியாக்கிரகம், பனிப்போர் அனைத்தையும், தவிர்ப்பதற்காக', அப்பா எல்லாவற்றையும் சரி சரியெனக் கடந்து செல்கிறார்' என்பதை நினைத்துப் பார்த்த அகல்யா அனிச்சையாகப் புன்முறுவல் பூத்தாள்.

'முடிவு என்னவோ அதனதன் போக்குப்படித்தான் இருக்கப் போகிறது. தொடக்கமாவது அவரவர் போக்குப்படித் தான் இருக்கட்டுமே' என்கிற தெளிவு இருந்தது பரசுவிடம்.

எல்லோரையும் சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்கும் சுபாவம் பரசுவுக்கு. தன் மனைவியை மட்டுமல்ல, தன் வயதான தாய், மகள் அகல்யா, மகன் கணேசன் எல்லோருக்குமே முழுமையான சுதந்திரம் கொடுத்திருப்பவர். இப்படி நடந்துகொள்வதால், 'பரசு தன் மனைவி சுலோசனா உட்பட அனைவரையும், 'வேடிக்கைப் பார்க்கிறாரோ?' என்று நினைத்து விடாதீர்கள். 'சுய அனுபவமும், நேரடியாகப் பெறும் புத்திக் கொள்முதலும்தான், வாழ்க்கை முழுவதும் கூடவே வரும்' என்பதே பரசுவின் சித்தாந்தம். கட்டிக் கொடுக்கிறச் சோறு ரொம்ப நாளைக்கு வராது.; எவ்வளவு

தான் எடுத்துச் சொன்னாலும் 'சட்டி நேரடியாச் சுட்டுக் கை விடறத் தாக்கம் இருக்குமா? என்பார் பரசு அடிக்கடி.

அகல்யாவின் அம்மா சுலோச்சனாவோ, 'வெளுத்ததெல்லாம் பால்' என்று நினைக்கும் ரகம். யாரையும் சந்தேகிக்கவோ, எடை போடவோ நூறு சதவீதம்

தெரியாதவள்.

யார் எது சொன்னாலும், 'ப்ச்...!; அடடே...!; அச்சச்சோ...!; பஹவானே...!' என்று காதில் வாங்கியத் தகவலுக்குத் தக்கபடிப் பல்வேறு வகையில், விதவிதமான டெஸிபல்களில், குரல் ஏற்ற இறக்கங்களில், உணர்ச்சிகளை வெளிப்படுத்துவாள்.

'பாவம்!' என்று தலை குனிந்துப் பச்சாத்தாபப்

படுவாள்.

'அடடே..' என்று வியப்பில் முகம் மலர்வாள்.

'அப்படியா!' என்று மூக்கின் மேல் விரல் வைத்து ஆச்சரியப்படுவாள்.

'ஒங்க மனசுக்கு அமோகமா இருப்பீங்க!' என்று அபயக்கரம் காட்டி மனதார வாழ்த்துவாள். எதையும் உட்புகுந்து, பகுத்து ஆய்வதெல்லாம் அவளுக்குத் தெரியாது. மேலோட்டமாகப் பார்த்து ஒரு முடிவுக்கு வந்து விடுவாள்.

'நம்பச் சமூகத்துல வர வர மாப்பிள்ளைங்க அமையறதே குதிரைக் கொம்பா இருக்கு. அதுவும் இப்படி பணக்காரக் குடும்பங்கள்ல ஒண்ணு வரும்போது நாம முழிச்சிக்கணுமில்லையா?'

'கோடி கோடியாக் காசு பணம் கொழிக்கற குடும்பம்; மொத்த ஆஸ்திக்கும் ஒரே மகன்தான். பிக்கல் பிடுங்கல் இருக்காது. சொந்தமா மூணு ஃபாக்டரி நடத்துறாங்களாம்; இந்த இடம் அமைஞ்சா அகல்யாவுக்கு அதிர்ஷ்டம்.'

அகல்யாவுக்குச் சம்பந்தம் பேச வரும் குடும்பத்தைப் பற்றி தான் சேகரித்தத் தகவல்களை அப்பாவிடம் நீட்டி முழுக்கிச் சொன்னாள் அம்மா.

அப்பா 'ம்' என்ற ஒரே சொல்லால், அம்மா சொன்ன அத்தனையையும் ஏற்றுக் கொண்டு, பச்சைக் கொடிக் காட்டி விட்டார்.

'வேறு வழி? எதிர்க் கேள்விக் கேட்டால். அதைக் காதில் கூட வாங்காமல், தன் கருத்தை மட்டுமே பல்வேறு கோணங்களில் சொல்லி, அதை வலியுறுத்தி இயல்பான சூழ்நிலையை இறுக்கமாய் மாற்றி, எல்லோரையும், தர்மசங்கடத்தில் ஆழ்த்திவிடுவாளே அம்மா!'

சுலோசனாவுக்கு இன்னொரு குணமும் உண்டு. எவ்வளவு சீக்கிரம் ஒரு விஷயத்தை அங்கீகரிக்கறாளோ, அதுதான் என்று உறுதியாய் நிற்கிறாளோ, அதே விஷயம் தன் எதிர்பார்ப்புக்கு எதிராக அமைந்துவிட்டால் அதை முற்றிலும் நிராகரித்தும் விடுவாள். தன் அம்மாவின் 'இரு முனைப் பிறழ்வுத் தன்மை'யை நினைத்து எப்போதும் கவலைப்படுவாள் அகல்யா.

குண்டும் குழியுமான சாலையில் ஏறி இறங்கி ஆடி அடங்கி, பெரிய கார் வந்து வீட்டு முகப்பில் நின்றது. தன் எஜமானரின் கார் வந்து நின்றவுடன் ஓட்டமாக ஓடும் வாயிற்காப்பாளர்கள் போல, அகல்யாவின் அப்பாவும், தம்பியும் ஓட்டமும் நடையுமாய் வாசலுக்கு விரைந்தார்கள். முன்கதவை பரசு திறந்தார். கல்யாணப் பையனின் அப்பா இறங்கினார். பின் கதவை கணேசன் திறந்தான். மகனும் அம்மாவும் இறங்கினர்.

பெரிய ஓட்டல்களிலும், மால்களிலும், நிறுவனங்களிலும், கைக் கூப்பி வரவேற்கும் ஆசாமிகளைத் துச்சமாகக் கருதி, கண்டு கொள்ளாமல் காரிலிருந்து இறங்கி அலட்சியமாய் உள்ளே செல்வார்களல்லவா? அதைப்போல காரை விட்டு அவர்கள் இறங்கும்போது, பரசுவும், கணேசனும் கைக்கூப்பி வரவேற்றதை வந்தவர்கள் கண்டுகொள்ளவே இல்லை.

'குண்டும் குழியுமான தெரு சாலையின் பொருட்டு, இந்தச் சம்பந்தம் தட்டிப் போய்விடக்கூடாது' என்று பரசுராமன் நினைத்தாரோ என்னவோ? 'தார் ரோடு போடற ப்ரபோஸலே இருக்கு சார்! அநேகமா இந்த சம்மர்ல போட்ருவாங்க!' என்று பூசி மெழுகினார். பரசுவின் இந்தப் பேச்சுக்கும், வந்தவர்களிடம் எந்த 'ரெஸ்பான்ஸூம்' இல்லை.

பக்கத்துல ஒரு ஃபர்லாங்ல 'மாடர்ன் ரைஸ் மில்' இருக்கு. நிறைய டிராக்டரும், லாரிங்களும் இப்படிப் போகுதா! எத்தனை முறைப் போட்டாலும் ஒரு வாரம் பத்து நாள்ல ரோடு இப்படி கலகலத்துடறது. சாலை இப்படி இருப்பதன் காரணத்தையும், 'இந்தச் சாலை இவ்வளவு மோசமாக இருப்பதற்கு, நானோ எங்கள் குடும்ப உறுப்பினர்களோ எந்த விதத்திலும் காரணமில்லை' என்பதை நிலைநாட்டுவதற்காகக் கூட பரசு இப்படிச் சொல்லியிருக்கலாம்.

'இதையெல்லாம் எதுக்கு எங்கக்கிட்டேச் சொல்றீங்க?' என்பதைப் போல, 'வந்த வேலையைப் பார்ப்போம்' என்கிறார்ப்போல, அவர்கள் மூவரும் நடந்துகொண்டார்கள்.

'அம்மா... இது அகல்யா போட்ட கோலம்..' என்று தெரு வாசலில் போடப்பட்டிருந்தக் கோலத்தைக் காட்டி, முகம் பூராவும் பெருமிதத்தோடு சொன்னாள் சுலோச்சனா.

சற்றே தலைக் குனிந்துக் கூடப் பார்க்கவில்லை அவர்கள். சின்ன வயசுலேந்து நன்னாவே கோலம் போடுவா, சித்திரம் வரையறதுன்னா ரொம்ப இஷ்டம் அவளுக்கு. நல்லா பெயிண்டிங் பண்ணுவொ! - கூடுதல் தகவலும் கொடுத்தாள்.

'ம்ஹூம் ...' என்று எதையும் பொருட்படுத்தாது, எந்த எதிர்வினையுமாற்றவில்லை அவர்கள். வெள்ளச் சேதத்தைப் பார்வையிட வந்த மத்திய அமைச்சர் குழு போல் நடந்தார்கள். 'ச்...சே...! என்ன மனிசங்க...!' என்று சுலோசனாவுக்குள் விட்டுப் போயிற்று.

உள்ளே வந்தார்கள் மூவரும். சோபாவையும் நாற்காலியையும் காட்டி உபசரித்தனர் பரசுவும் கணேசனும். உட்கார்ந்தார்கள். அங்கு - இங்குத் திரும்பிப் பார்க்கவில்லை. சிற்பம் போல நிலையாக இருந்தது மூவரின் முகங்களும் பார்வைகளும்.

'கார் கலர் ரொம்ப நல்லா இருக்கு அங்கிள்..!' என்று சிலாகித்ததன் மூலம், கணேசன் அங்கு நிலவிய இறுக்கமான மெளனத்தை உடைத்தான்.

'அது இவரோட செலக்ஷன்தான்' என்று பெற்றவர்கள், மந்தஹாசத்தோடு மகனைக் காட்டினர்.

'சான்úஸ இல்லே.. ரொம்ப ரசனையோட கார் மாடலையும் கலரையும் செலக்ட் பண்ணியிருக்கார்' என்றான் கணேசன். வயதுக்கு மீறிய பேச்சுதான் கணேசன் பேசியது. இருந்தாலும் அவர்கள் கணேசன் பேச்சுக்கு வாய் திறந்தனர். கிட்டத்தட்ட ரெண்டு - மூணு 'ஷோ ரூம்' ஏறி இறங்கினோம். ஏறக்குறையக் கால் கோடி செலவு பண்றபோது... மனசுக்குப் பிடிக்கணுமில்லியா? சொல்லும்போது பரசுவைப் பார்க்க, 'அதுவும் சரிதான்?' என்றார் பரசு. மாறி மாறி, சிறிது நேரம் 'கார் புராணம்' பேசினார்கள் வந்தவர் மூவரும்.

'ஓ...! அடடே...! பிரமாதம்...! ஓஹோஹோ...! ட்ரமென்டஸ்...! சரிதான் செரிதான்...!' என்று உரையாடல்கள் நீடித்தது. இப்படிப்பட்ட வியப்பொலிகள் வெளிப்பட வெளிப்பட, வெகு சுவாரசியமாக தங்களிடமிருக்கும் கார் - கலெக்ஷன் பற்றி உரையாடினர்.

சொஜ்ஜி பஜ்ஜி வந்தது. எல்லா ஐட்டங்களிலும் கொஞ்சம் கொஞ்சம் எடுத்துகொரித்தார்கள். முக்கால்வாசிப் பதார்த்தங்களை மீதம் வைத்தனர். அரை கப் காபியை அப்படியே மிச்சம் வைத்துவிட்டனர்.

'வரப் போற மருமகளுக்குனு ' அரண்மணை 'தர்பார்-ஹால்' மாதிரி, ஹோ'னு ஒரு 'ரூமே'க் கட்டி வெச்சிருக்கு!' என்று தொடங்கினாள் பையனின் அம்மா.

ஏற்கெனவே கார் புராணம் பேசியதைப்போல இப்போது அவர்களின் பங்களா-புராணம் 'ஆக்ஷன்-ரீப்ளே'யாக ஓடியது.

'வரப் போற மருமக, வீட்டை நல்லாக் கவனிச்சிக்கிட்டாலே போறும்!' என்று கல்யாணப் பையனின் அம்மாச் சொன்னது கருத்தாகவோ, செய்தியாகவோ, அபிப்ராயமாகவோ இல்லை. உத்தரவிடும் தொனி இருந்தது.

'அக்கா ஹைக்கூ எழுதுவொ...!' என்று கணேசன் சொல்ல, அமைதி நிலவியது. 'அவ எழுதற கவிதைக்குப் பொருத்தமா 'ஃபோட்டோ ஷாப்'ல 'பெயிண்ட்டிங்'கும் பண்ணுவொ..!' என்று மேலும் சொன்னான் கணேசன்.

நோ ரெஸ்பான்ஸ்.

'ஃபேஸ் புக், ட்விட்டர்னு சோஷியல் மீடியா, மாகஸின் எல்லாத்துலயும் அக்காவோட கிரியேஷன்ஸ் பப்ளிஷ் ஆகியிருக்கு..' என்ற கணேசனின் கூடுதல் தகவலையும் அலட்சியப்படுத்தினார்கள்.

'அகல்யாவை வரச் சொல்லவா?' என்று கனத்த மெளனத்தை உடைத்தாள் சுலோசனா.

'வேண்டியதில்லை. என் மகன் அவங்ககிட்டே பேசினால் போதும் ; பேசலாம்தானே?' என்று டிப்ளமேட்டாகக் கேட்டார் பையனின் அப்பா.

'ம்..' என்றார் பரசு.

ஒருக்களித்த கதவோரம் நின்று பட்டகச் சாலையில் நடைபெறும் பேச்சுவார்த்தைகள் அனைத்தையும் கவனித்துகொண்டிருந்த அகல்யா, தன்னிடம் பேச உள்ளே வரப்போகும் கல்யாணப் பையனின் வரவை அறிந்ததும் உள்ளே போய் நாற்காலியில் அமர்ந்தாள்.

'டொக்... டொக்... டொக்!' என்று ஒருக்களித்த கதவாயிருந்தாலும், கதவைத் தட்டிவிட்டுக் கதவை உள்புறம் தள்ளித் திறந்தான் கணேசன்.

'உள்ளே போங்க அங்கிள்! அக்கா நல்லாவேப் பேசுவா!' என்றான். அகல்யா மரியாதை நிமித்தம் நாற்காலியிலிருந்து எழுந்து நின்றாள்.

எதிர் நாற்காலியைக் காட்டி அவனை உட்காருமாறு பணித்தாள். அவன் உட்காரவில்லை. நாற்காலியைப் பிடித்தபடி நின்றான்.

'என் பேரண்ட்ஸ் உங்க பேரண்ட்ஸ்கிட்டே பேசிக்கிட்டிருந்ததைக் காதுல வாங்கினீங்கல்ல?'

'ம்!'

'நாங்க சொந்தமா மூணு ஃபாக்டரீஸ் நடத்தறோம்.'

'ஓ..'

'வருமானம் கொழிக்கற

ஃபேமிலி எங்களுது. காசு பணத்துக்கு ஏதும் குறைவே கிடையாது. அதனால கல்யாணத்துக்குப் பிறகு நீங்க வேலைக்குப் போகவேண்டிய அவசியமே இல்லை.'

'...........'

'சமையலுக்கு, சுத்து வேலைக்கு எல்லாத்துக்கும் நிறைய வேலைக்காரங்க உண்டு, அதனால சமையல் வேலை, வீட்டு வேலை எதுவும் இருக்காது உங்களுக்கு!'

'..........'

'நான் சொல்ல வேண்டியதைச் சொல்லிட்டேன். ப்ளீஸ் டேக் யுவர் ஓன் டெஸிஷன்.'

பளிச்சென வியாபார டீல் போலப் பேசிவிட்டு, 'டக்'கெனத் கூடத்திற்குத் திரும்பினான் அவன். 'வேறுக் கடை பார்ப்போம்' என்று கிளம்பும் கஸ்டமர்களைப் போலப் பளிச்சென்று மூவரும் எழுந்து வெளியேச் சென்றனர்.

வந்தவர்களை அனுப்பிவிட்டு அம்மா, அப்பா, தம்பி என மூவரும் அகல்யாவின் அறைக்கு வந்தனர். 'வந்தவங்களைப் பாத்தா மருமகளைத் தேடறாப்ல தெரியலை. அவங்க பணக்காரப் பெருமையை திரும்பத் திரும்பப் பேச ஒரு கிளியைத் தேடறாப்ல இருக்கு' என்று சொல்லி வரண்ட சிரிப்புச் சிரித்துவிட்டு, 'நான் கூண்டுக் கிளியா இருக்க விரும்பலைப்பா' என்றாள் அகல்யா முடிவாக?

இதைச் சொல்லும்போது, சாலையோர கிளி ஜோசியரின் கூண்டுக்குள் வாழைப்பழத்தைக் கொத்திக் கொண்டிருந்தக் கிளியை இப்போது, அப்பா பரசுவும், அம்மா சுலோச்சனாவும், தம்பி கணேசனும் கூடப் பார்த்தார்கள். அவர்களுக்கும், அகல்யா சொல்வது 'சரி' என்றே பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com