அக்கரைச்சீமையிலே...

பத்துக்கும் மேற்பட்ட கிராமியக் கலைஞர்கள் பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளுக்குச் சென்று தமிழ்நாட்டின் பாரம்பரியத்தையும், கலாசாரத்தையும் வெளிப்படுத்தும் வகையில் கிராமியக் கலைவிழாக்களை நடத்திவிட்டுத் திரும்பியிருக்கின்றனர்.
அக்கரைச்சீமையிலே...
Updated on
2 min read

பத்துக்கும் மேற்பட்ட கிராமியக் கலைஞர்கள் பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளுக்குச் சென்று தமிழ்நாட்டின் பாரம்பரியத்தையும், கலாசாரத்தையும் வெளிப்படுத்தும் வகையில் கிராமியக் கலைவிழாக்களை நடத்திவிட்டுத் திரும்பியிருக்கின்றனர்.

இதுகுறித்து பிரான்ஸ் நாட்டின் வொரெயால் பகுதியில் செயல்பட்டுவரும் தமிழ்க் கலாசாரச் சங்கத் தலைவர் இலங்கை வேந்தன், செயலாளர் அலன் கிருஷ்ணராஜ் ஆகியோர் கூறியது:

'அரசு பள்ளி ஆசிரியர்கள் 50 பேருடன் தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பிரான்ஸ் நாட்டுக்கு கடந்த ஆண்டு கல்விச் சுற்றுலா வந்திருந்தபோது, எங்கள் தமிழ்ச் சங்கத்துக்கும் வந்திருந்தார். அப்போது, 'உங்களுக்குத் தேவையான உதவிகளை தமிழ்நாடு அரசு செய்யும்' என்று அமைச்சர் கூறினார்.

அதன்படி, தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத் தலைவர் வாகை சந்திரசேகரோடு பேசி, கடந்த மாத இறுதியில் இரண்டு நாள்கள் வொரெயால் மாநகர அரங்கில் நடைபெற்ற எங்கள் 20-ஆம் ஆண்டு விழாவுக்கு கலைஞர்களை அழைத்தோம். ஐந்து மாநகரங்களின் மேயர்களும், சுற்றுப்புறப் பகுதிகளில் வசிக்கும் தமிழர்களும் தங்கள் குடும்பத்துடன் வந்து கலந்துகொண்டு, கலை நிகழ்ச்சிகளைக் கண்டு ரசித்தனர்.

பிரான்ஸ் நாட்டுக்கு இவர்கள் வருவதை அறிந்த ஐரோப்பியத் தமிழர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் செல்வகுமார், ஜெர்மனியில் மியூனிச் நகருக்கும் வரவழைத்து அங்கு கலைவிழாவை நடத்தினார். மியூனிச்சில் சுமார் 200 தமிழ்க் குடும்பங்களைச் சேர்ந்தோர் விழாவில் பங்கேற்றனர்.

கலைஞர்களை ஓட்டல்களில் தங்க வைக்காமல், தமிழ்க் குடும்பங்களுடனேயே தங்க ஏற்பாடு செய்திருந்தோம். எங்களுக்கு புதிய அனுபவம். சிறார்கள் தமிழ்நாட்டுக் கலைகளை ரசித்தார்கள்' என்றனர்.

தஞ்சையைச் சேர்ந்தவரும் கிராமியக் கலைஞருமான கருங்குயில் கணேசன் கூறியது:

'மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்கெனவே கலைநிகழ்ச்சிகளை நடத்தி வந்திருக்கிறேன். இந்த முறை ஐரோப்பா செல்ல வாய்ப்பு கிடைத்தது. எங்கள் குழுவில் கரகாட்டம், காவடியாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம், கைச்சிலம்பம், பொய்க்கால் குதிரை, தவில், நாதஸ்வரம் உள்ளிட்ட பல கலைஞர்கள் இடம்பெற்றிருக்கின்றனர். எங்கள் கலை நிகழ்ச்சிகளை அங்கே வசிக்கும் தமிழ் மக்கள் மிகவும் ரசித்தனர்.

உலக அதிசயமான ஈஃபிள் கோபுரத்துக்குச் சென்று, அதன் உச்சி வரை ஏறி, பாரிஸ் நகரத்தைக் கண்டு மகிழ்ந்தோம். ஜெர்மனியில் ஹிட்லர் தொடர்பான சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைப் பார்த்தோம். நேர்த்தியான நகர வடிவமைப்பு, பழைமையான கட்டடங்கள். அரண்மனைகள், பசுமைப் பராமரிப்பு, மக்கள் இயற்கைக்கும், உடற்பயிற்சிக்கும் அளிக்கும் முக்கியத்துவம் ஆகியவை இந்தப் பயணத்தின் குறிப்பிடத்தக்க அம்சங்கள்' என்கிறார் கருங்குயில் கணேசன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com