பேல் பூரி

'நீ வீணாக்கும் உணவு மற்றொருவரின் உணவு என்பதை மறந்துவிடாதே..!'
பேல் பூரி
Published on
Updated on
2 min read

(தருமபுரி- ஒகேனக்கல் சாலையில் உள்ள ஓர் உணவகத்தில் எழுதியிருந்தது)

'நீ வீணாக்கும் உணவு மற்றொருவரின் உணவு என்பதை மறந்துவிடாதே..!'

-பாக்யபாரதி, தருமபுரி.

(புதுச்சேரி பாகூர் அருகேயுள்ள ஒரு கிராமத்தின் பெயர்)

'ஆராய்ச்சிகுப்பம்'

-நாகஜோதி, நாகப்பட்டினம்.

(திருச்சியில் உள்ள தனியார் பள்ளியொன்றில் எழுதியிருந்தது)

'விட்டு பிடிப்பது நட்பல்ல; விட்டு கொடுப்பதுதான் நட்பு!'

-எம்.அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி.

கேட்டது

(சென்னை- கிழக்கு தாம்பரத்தில் உள்ள அரசு கிளை நூலகத்தில் நூலகரும், வாசகரும்...)

'சார்.. தூங்காதீங்க.. தலைக்கு மேலே கேமரா இருக்கு?'

'ச்சே.. சே.. தூங்கலை.. இந்த புக்கில் படிச்சதை கண்ணை மூடி அசை போட்டுக்கிட்டிருந்தேன்...'

-கே.ஜி.எஃப். விசாகன், கிழக்கு தாம்பரம்.

(மன்னார்குடி பேருந்து நிலையம் அருகே இரு பெண்கள் பேசியது)

'நமக்கு எந்த செலவும் இல்லை.. கல்யாணச் செலவை எல்லாம் பெண் வீட்டிலேயே ஏத்துக்கிட்டாங்க?' 'மண்டபம்கூட பெண் வீட்டிலேயே பிடிச்சிட்டாங்க?'

'சித்தி... அப்படியே குழந்தை மிஞ்சி நாத்திபட்டம் கட்டுற செலவையும் பெண் வீட்டிலேயே பார்த்துக்கச் சொல்லுங்க.. புண்ணியமா போகும்.'

-ஜி.அழகிரிவேல், ஒதியடிக்காடு.

(நாகப்பட்டினத்தில் உள்ள டீக்கடையொன்றில் மாஸ்டரும், வாடிக்கையாளரும்...)

'சர்க்கரை கம்மியா ஒரு இஞ்சி டீயா...?'

'மாஸ்டர்.. சர்க்கரை பொருட்டல்ல.. நித்திரை கலைய அக்கறையாய் டீ போடுவதுதான் முக்கியம்...'

-அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை.

யோசிக்கிறாங்கப்பா!

நிலைமை மாறினால் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்பது பொய்.

மகிழ்ச்சியாக இருந்தாலே நிலைமை மாறிவிடும் என்பதே உண்மை.

-பி.கோபி, கிருஷ்ணகிரி.

மைக்ரோ கதை

கடைகள் நிறைந்த அந்தச் சாலையில் மனைவியுடன் நடந்துகொண்டிருந்தான் ராமன். ஒரு கடையின் வெளியே வைத்திருந்த பெரிய விலைப் பட்டியலைக் கண்டு கண்களை அகல விரித்து சட்டென நின்றாள் ராமனின் மனைவி பார்வதி.

'பாலிஸ்டர் சாரி - 10 ரூபாய், காட்டன் சாரி: 8 ரூபாய், நைலான் சாரி : 6 ரூபாய்..' என்று எழுதியிருந்தது.

'ஏங்க சீக்கிரம் ஒரு நூறு ரூபாயை எடுங்க ,விலை மாறிடதற்குள்ள நான் போய் பத்து சாரி எடுத்துட்டு வரேன்..'

பார்வதி கையை நீட்ட, தலையில் அடித்துகொண்டான் ராமன்.

'அடி மண்டு , போர்டை நல்லா பாரு, அது சாரி அயர்ன் பண்ற கடை, அயர்ன் பண்ற விலை பட்டியலைத்தான் வெளியே எழுதி வச்சிருக்காங்க... !'

மறுபடியும் போர்டை முழுதாக படித்தவுடன் பார்வதி, தன் அகல கண்கள் சுருங்க நடையைக் கட்டினாள்.

-எம்.பி.தினேஷ், கோவை - 25.

எஸ்.எம்.எஸ்.

சிரிப்பு என்னும் சாவி தொலைந்துவிட்டால் மகிழ்ச்சி என்னும் வீடு பூட்டியே இருக்கும்.

-அ.கருப்பையா, பொன்னமராவதி.

அப்படீங்களா!

வாட்ஸ் ஆஃப்பை பயன்படுத்த ஆன்ட்ராய்ட், ஐஓஎஸ், ஐபேட்ஓஎஸ், மேக்ஓஸ், வியர்ஓஎஸ், வின்டோஸ் என பல்வேறு தளங்களுக்கு தனித் தனி செயலிகள் உள்ளன.

இவை வாட்ஸ் ஆஃப்பை எந்தத் தளத்தில் இருந்தாலும் எளிதில் பயன்படுத்த ஏதுவாக உருவாக்கப்பட்டுள்ளது. இதில், 'வாட்ஸ் ஆஃப் வெப் வெர்ஷன்' என்பது இணையதளத்தில் இணைத்து பயன்படுத்த உதவுகிறது. இதை 2021-இல் வாட்ஸ் ஆஃப்பின் தாய் நிறுவனமான மெட்டா அறிமுகம் செய்தது. இதை நிறுத்த வாட்ஸ் ஆஃப் முடிவு செய்துள்ளது.

தற்போதைய வாட்ஸ் ஆஃப் வெப் செயல்பட கணினியில் பெருமளவு இடம் தேவைப்படுவதால் மெதுவாக இயங்குகிறது. இதற்கு மாற்றாக குறுகிய இடத்தில் செயல்படும் வகையில் வெப் ரேப்பரை தயார் செய்து அதில் பல்வேறு புதிய அம்சங்களை புகுத்தி வேக வாட்ஸ் ஆஃப் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த வெப் ரேப்பரை வின்டோஸில் உள்ள அனைத்து இணையதளத்திலும் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதை விரைவில் வாட்ஸ் ஆஃப் அறிமுகம் செய்ய உள்ளது.

அ.சர்ப்ராஸ்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com