
எம்.எஸ்.விஸ்வநாதன், இசையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், தேவா, வித்தியாசாகர், டி.ராஜேந்திரன், எஸ்.ஏ.ராஜ்குமார், ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்ட பல்வேறு இசையமைப்பாளர்களின் இசையில் பாடகர் பி.ஜெயச்சந்திரனின் குரல் ஒலித்தது. இவர் தனது தனித்துவமான குரல்வளத்தால் ரசிகர்களைக் கட்டிப் போட்டவர்.
தாலாட்டுதே வானம்.., ராசாத்தி உன்னை காணாத நெஞ்சம்.., கொடியிலே மல்லிகைப்பூ.. மணக்குதே மானே, கத்தாழங் காட்டுவழி, சொல்லாமலே யார் பார்த்தது... போன்ற சூப்பர்ஹிட் அடித்த பாடல்களை அவர் பாடியவர்.
கேரள மாநிலத்துக்கு உள்பட்ட திருச்சூர் பூங்குன்னம்தான் இவரது சொந்த ஊர். எர்ணாகுளத்தில் உள்ள இரவிபுரத்தில் 1944-ஆம் ஆண்டில், இசைக் குடும்பத்தில் பிறந்த இவர், தனது ஆறாம் வயதில் மிருதங்கம் வாசிக்கக் கற்கத் தொடங்கினார்.
அவர் பள்ளியில் படித்துகொண்டிருந்தபோது, 1958-இல் கேரள அரசு நடத்திய இசைப் போட்டியில் பங்கேற்று சிறந்த மிருதங்க வித்வானாகப் பரிசு பெற்றார். இதே போட்டியில் சிறந்தப் பாடகராக கே.ஜே.ஜேசுதாஸ் தேர்வு செய்யப்பட்டார்.
1965-ஆம் ஆண்டில் சென்னைக்கு வந்த ஜெயச்சந்திரன் அதே ஆண்டில் இந்தியா- பாகிஸ்தான் போர்நிதி திரட்டும் நிகழ்ச்சியில் ஒரு மேடைப்பாடகராகப் பாடல்களைப் பாடினார்.
இதைக் கேட்ட தயாரிப்பாளர் ஏ.வின்சென்ட், ஆர்.எஸ்.பிரபு ஆகியோர் தாங்கள் தயாரித்த, 'குஞ்சாலி பரக்கார்' எனும் மலையாளப் படத்தில் பாட ஜெயச்சந்திரனுக்கு வாய்ப்பு அளித்தனர்.
இந்தப் படம் வெளிவரும் முன்னரே ஜெயச்சந்திரன் பாடிய 'களித்தோழன்' எனும் மலையாளப் படம் வெளிவந்தது. இப்படித்தான் அவர் திரையிசைப் பயணத்தைத் தொடங்கினார்.
1973-இல் வெளிவந்த 'அலைகள்' எனும் தமிழ்ப் படத்தில் எம்.எஸ்.விஸ்வநாதனின் இசையில், 'பொன்னென்ன பூவென்ன பெண்ணே...' எனும் பாடலைப் பாடிடும் வாய்ப்பு இவருக்கு கிடைத்து. அடுத்து அதே ஆண்டில் 'மணிப்பயல்' எனும் படத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் 'தங்கச் சிமிழ் போல்..' எனும் பாடலையும் பாடினார்.
அன்று தொடங்கிய அவரது தமிழ்த் திரைப் பயணம் அரை நூற்றாண்டுக்கும் மேல் நீடித்தது. இவரது பாடல்களால் இசை ஜாம்பவான்களும் கொடிகட்டி பறந்தனர். இருப்பினும், இவரது குரல் தனித்த அடையாளத்தைப் பெற்றிருந்தது.
ஒரு பாடலுக்காக, தேசியத் திரைப்பட விருதை ஒருமுறையும், தமிழ்நாடு அரசின் விருதை நான்கு முறையும், கேரள அரசின் விருதை நான்கு முறையும் பெற்ற ஜெயச்சந்திரன் 1997-இல் தமிழ்நாடு அரசின் 'கலைமாமணி' விருதைப் பெற்றார்.