
'எம். ஏ.டி.'- மேட் , மேடுன்னா கிறுக்கு! 'ஹெச்.இ.ஏ.டி. ஹெட்.'- ஹெட்டுன்னா தலை. 'தலைகிறுக்குப் புடிச்சி நீ ஏனோ திண்டாதே'' என்ற ஒரு நகைச்சுவைப் பாடல்.
சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கருப்பு, வெள்ளைத் திரைப்படத்தில் வெளிவந்து, ஜனரஞ்சகமா, கிறுக்குப் புடிச்ச மாதிரி, பொதுமக்களிடையே சக்கைப் போடு போட்டது. நினைவிருக்கிறதா?
உண்மையிலே ஒரு புத்திசாலி அந்த 'கிறுக்கை' இறுகப் பற்றிக் கொண்டு, உலகைத் தன்வசமாக்கிப் பெருஞ்சாதனை புரிந்தார் என்பதை அறிந்தால் மிகவும் ஆச்சரியப்படுவீர்கள்.
எலிகளும் கரப்பான் பூச்சிகளும் மேலும் கீழுமாக ஆடித் திரிந்த ஒரு வெகுசாதாரண அலுவலகக் கட்டடத்தில்தான் வில்லியம் கெய்ன்ஸ் என்பவர் 'மேட்' பத்திரிகையை 1952இல் தொடங்கினார்.
அமெரிக்கர்களிடையே மிகப் பிரபலமாகி, உலகளாவிய புகழ்பெற்றுவிட்டது. இந்தப் பத்திரிகையின் உரிமையாளர்களான வார்னர் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தினர் 'மேட்' (எம்.ஏ.டி.) விற்பனை மூலம் ஆண்டு லாபம் நான்கு மில்லியன் டாலர்களுக்கு மேலாக ஈட்டினர்.
மற்றொரு அமெரிக்கச் சிரிப்புப் பத்திரிகை, ஒன்பது லட்சம் பிரதிகள் விற்பனையாகி வந்தநிலையில் இருந்து 2.5 லட்சம் சரிந்தது. அந்தக் காலகட்டத்தில் மேட் மட்டும் லாபகரமாக நடந்துவந்தது. இத்தனைக்கு இந்த 'மேட்' இதழின் பதிப்பாளரான வில்லியன் கெய்ன்ஸ் இதில் எந்தவிதமான விளம்பரங்களும் வெளியிட அனுமதிப்பதில்லை.
அதோடு மட்டுமல்லாமல் தம் 'மேட்' இதழைப் பற்றி விளம்பரம் செய்யவும் அவர் சல்லிக்காசு கூட செலவழிக்கவில்லை. 'மேட்' நகைச்சுவைப் பத்திரிகையை எத்தனை பேர் வாங்குகிறார்கள்? எத்தனை வாசகர்கள் படிக்கிறார்கள் என்றெல்லாம் ஆராய்ச்சி செய்வதுமில்லை.
ஆண்டுதோறும் மேட் சுமார் 75 இதழ்களைப் புதியதாகத் தயாரிப்பதோடு, பழைய 'மேட்' இதழ்களில் இருந்து சுவையான பகுதிகளையெல்லாம் திரும்பவும் எடுத்துத் தொகுத்துப் புதிய இதழ்களைத் தயாரிப்பதிலும் வல்லவராக விளங்கினார் வில்லியம் கெய்ன்ஸ்.
இவ்வாறு தயாரிக்கப்படும் இதழ்கள் எல்லாம் 'சிறப்பிதழ்கள்' என்று பெயரிட்டு, இருமடங்கு விலையில் விற்கப்பட்டன. இந்த 'மேட்' இதழுக்கு விஷயதானம் செய்தவர்கள் எண்ணிக்கை ஏராளம். இந்தப் பத்திரிகையில் பணிபுரிய பல ஓவியர்கள் கேலிச் சித்திரக்காரர்கள் எல்லாம் படையெடுத்து வந்தனர். திறமையானவர்களும், கற்பனையும் நகைச்சுவை யும் நிறைந்தவர்கள் வரவேற்கப்பட்டனர்.
'மேட்' இதழ் பதினொரு மொழிகளில் பதிப்பிக்கப்பட்டது. பின்லாந்து, பிரேசில், ஜெர்மனி போன்ற நாடுகளில் அந்தந்த மொழிகளில் பிரசுரிகப்பட்டு, லட்சக்கணக்கில் விற்பனையானது. இப்பத்திரிகையின் ஜெர்மன் மொழிப் பதிப்புதான். அப்போதே 2.50 லட்சம் பிரதிகள் விற்கும் அளவுக்குக் கொடிகட்டிப் பறந்தது.
வில்லியன் கெய்ன்ஸ் முதலில் மர்மக் கதைகள், துப்பறியும் கதைகள், குடும்பக் கதைகள், அறிவியல் கதைகளில் கவனம் செலுத்திவந்தவர், பிறகு அவற்றைக் கைவிட்டு நகைச்சுவைத் தசும்பும் 'மேட்' இதழைத் தொடங்கினார். இந்த இதழ் இரண்டு பேரிடம் கைமாறி, வார்னர் நிறுவனத்திடம் வந்தது. எனினும், வில்லியம் கெய்ன்ஸ் பதிப்பாளராகத் தொடர்ந்து முழுச் சுதந்திரத்துடன் பணியாற்றினார்.
டி.எம்.ரத்தினவேல், சத்தியமங்கலம்.