அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

புலம் பெயர்ந்தாலும் எழுத்தால் போராடுகிறேன்...

இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களில் முக்கியமானவர் மாத்தளை சோமு.

News image
சோமு
Updated On :12 ஜூலை 2025, 6:30 pm

தினமணி செய்திச் சேவை

அருள்செல்வன்

இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களில் முக்கியமானவர் மாத்தளை சோமு. சிறுகதைகள், கட்டுரைகள், நாவல்கள் என்று ஆரவாரமற்ற இயல்பான மொழியில் எழுதி வருபவர். தனது நூறு சிறுகதைகள் கொண்ட தொகுப்பை வெவ்வேறு நாட்டு விழாக்களில் வெளியிடவுள்ளார். ஒரு சீரான வேகத்தில் இவரது இலக்கியப் பயணம் செல்கிறது.

அவருடனான சந்திப்பு:

இலங்கை, ஆஸ்திரேலியா நாடுகளையும், தமிழ்நாட்டையும் தொடர்புடைய நீங்கள் இந்த மூன்று நிலத்தையும் எப்படிப் பார்க்கிறீர்கள்? அங்குள்ள மக்களின் பார்வை குறித்து?

இலங்கை, ஆஸ்திரேலியா, தமிழ்நாடு ஆகிய மூன்று நிலங்களும் வெவ்வேறானவை. மலையகமானது இலங்கை அரசின் அடக்குமுறையால் பாதிப்பானவை. இருநூறு ஆண்டு கால வரலாறு கொண்ட மலையக மக்களின் உரிமை 1949இல் அமலான குடியுரிமைச் சட்டத்தால் பத்து லட்சம் தமிழர்கள் நாடற்றவர்களாக்கப்பட்டார்கள்.

இலங்கை சுதந்திரம் பெற்றதும், தேர்தலில் வாக்களித்தவர்கள் இவர்கள். தேர்தலில் வென்ற இலங்கை கட்சிகள் அவர்களை ஒரே இரவில் ஒரு சட்டத்தின் மூலம் நாடற்றவர்களாக்கியது மனித உரிமை மீறல். இதனை உலக நாடுகள் கண்டுகொள்ளவில்லை.

வட கிழக்கு தமிழர்களின் மொழி, பிரதேச உரிமை மாறி மாறி வந்த இலங்கை அரசுகளால் பறிக்கப்பட்டதில், ஆயுதப் போராட்டம் தொடங்கியது. இதில் ஆயிரமாயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டனர். பல்லாயிரம் தமிழர்கள் அகதிகளாக வெவ்வேறு நாடுகளுக்குப் போனார்கள். அவர்களை அகதிகளாக ஏற்றதோடு, தங்கள் கடமை முடிந்தது போல் உலக ஜனநாயகம் பேசும் நாடுகள் வாய் பொத்தி நின்றன. இன்று காஸாவில் 50 ஆயிரத்துக்கும் மேலாக மக்கள் கொல்லப்பட்டும் ஐ.நா. வெறும் பேச்சோடு நிற்கிறது.

தொல்காப்பியம் சொன்ன 'உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே' என்பதை உலகில் காணமுடியவில்லை.

ஆஸ்திரேலியாவில் சமமான உரிமை இருந்தும் தனித்தனி தீவுகளாக வாழும் மக்களே இங்கு உள்ளனர்.

இன்று பொருளாதாரப் பின்னடைவில் இலங்கையில் மக்கள் ஒவ்வொரு நாளையும் எப்படிக் கடத்துவது என்பதிலேயே இருக்கிறார்கள். முடிந்தவர்கள் நாட்டை விட்டுப் போகிற சிந்தனையில் இருக்கிறார்கள். 'ஆஸ்திரேலியாவில் தங்களோடு தாயகத் தொடர்பு அறுந்து போகுமோ?' என்ற எண்ணத்தில் முதியோர்கள் இருக்கின்றனர்.

அடுத்த தலைமுறை ஆஸ்திரேலியா வாழ்க்கை முறைக்குள் இருப்பதால் அவர்கள் தாய்மொழி, வாய் மொழி ஆங்கிலமானதால் தந்தையர் மொழியும், தந்தையர் நாடும் மக்களை விட்டு அகன்று விடுமோ என்ற அச்சமும் இருக்கிறது.

தமிழ்நாட்டு அரசியலில் வெறுப்புற்ற இளைஞர்கள் சிலர் எந்த வேலையும் வெளிநாட்டில் செய்யப் புலம் பெயரத் தயாராய் இருப்பதாகவே செய்தி காணப்படுகிறது. ஆக, மூன்று வெவ்வேறு நிலமானாலும் மக்களின் எண்ணங்கள் நல்லது நடக்குமா? என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறது.

உங்கள் சிறுகதைகளின் பேசுபொருள் பெரும்பாலும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள். அனைவரும் போரைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும்போது, நீங்கள் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் பற்றியே பேசுகிறீர்கள்?

1985 வரை இலங்கையில் இருந்தேன். 1986-இல் புகலிடம் தேடி ஆஸ்திரேலியா போனேன். அதுவரை மலையகம் (தோட்டமக்கள்) குறித்து எழுதினேன்.அவ்வாறு எழுதிய கதை 37 மட்டுமே. தற்போது வெளியாகியிருக்கும் இரண்டு பாக சிறுகதைத் தொகுதியில் நூறு சிறுகதைகள் இருக்கின்றன. அதில் பெரும்பாலான கதைகள் புலம்பெயர் வாழ்க்கையைச் சொல்லும் கதைகள். இவற்றில் சில கதைகள் போரில் சிக்கிய தமிழரின் கதைகளைச் சொல்கின்றன. ஆகவே, மலையகத்தை மட்டும் நான் கதைகளில் பேசவில்லை.

இலங்கைப் போரின்போது, கதைகளையும் பேசினேன். போர்க் களத்தை நேரில் பார்க்காவிட்டாலும், அதில் சிக்குண்ட மக்களின் சொல்லொணாத வேதனைகளைக் கேட்டேன். அவற்றைச் சிறுகதைகளாக்கினேன். பாரதி என்ற படைப்பாளிக்கு பிஜி, தென்ஆப்பிரிக்கா, மொரீசியஸ் போன்ற நாடுகளில் கரும்புத் தோட்டங்களில் மக்கள் பட்ட துன்பங்களைக் கேட்டதால், 'ஆப்பிரிக்கத்து காப்பிரி நாட்டிலும் தென்முனையடுத்த தீவுகள் பலவினும் பூமிப்பந்தின் கீழ்ப்புறத்துள்ள பற்பல தீவிலும் தமிழ்ச்சாதி தடியுதையுண்டும் காலுதையுண்டும் கயிற்றடியுண்டும் வருந்தினார்..' என்று கவிதை படைத்ததைப் போல் நான் சிறுகதைகளை எழுதினேன். பாரதி மனதால் அந்த நாடுகளுக்குச் சென்றது போல் நானும் இலங்கையில் நடைபெற்ற போர் பூமிக்குச் சென்றே படைத்தேன்.

படைப்பாளியை ஒரு பிரதேசத்துக்குள் அடக்கக் கூடாது.அவன் படைப்புலகம் மனிதர்களைச் சார்ந்தது . அரசியல் ஆயுதத்தால் துன்பக் கேணிக்குள் தள்ளப்பட்டு வாழ்ந்தவர்கள் இலங்கை மலையக மக்கள். தேர்தல் அரசியலில் தோல்வி கண்டு உரிமை பெற ஆயுதம் தூக்கியதால், வீடுகளை இழந்து உயிரைக் காக்க அகதிகளாக ஓடத் தள்ளப்பட்டவர்கள் மறுபக்கம்.

இரண்டையும் கவனத்தில் கொள்ள வேண்டியது படைப்பாளியின் கடமை. இரண்டையும் கவனத்தில் கொண்டு புலம்பெயர் வாழ்க்கை குமுறல்களையும் சேர்த்தே எழுதியிருக்கிறேன். நூறு சிறுகதைகளுக்கு அணிந்துரை வழங்கிய மதுரை காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழகத் தமிழ்த்துறை பேராசிரியர் ஆனந்தகுமார், என்னை 'உலகத் தமிழ் எழுத்தாளர்' என்று சொல்லியிருக்கிறார்.

புலம்பெயர் மக்களின் வாழ்க்கை தற்போது எப்படி உள்ளது?

தமிழர்கள் பல்வேறு நாடுகளுக்குப் புலம்பெயர்ந்து 42 ஆண்டுகள் ஆகின்றன. அவர்களின் வாரிசுகள் புலம்பெயர்ந்த நாட்டின் பண்பாட்டிலும் ,மொழியிலும் மாற்றம் பெற்றவர்களாகி விட்டனர். அவர்களைப்பொறுத்தவரை தமிழ் ஒரு மொழி.அதனைப் பேசுவதற்க்கும் பகிர்வதற்கும் இங்கு சமூகச் சூழல் இல்லை. படித்தால் வேலை கிடைக்கிறது. பொருளாதாரத்துக்குப் பெற்றோரை நாட வேண்டியதில்லை. தனித்து இயங்க முடிகிறது. திருமணத்தை அவர்களே தீர்மானிக்கின்றனர்.

பெரும்பாலான திருமணங்கள் சாதி, மதம், மாநிலம் கடந்து வேறு மொழி பேசுபவர்களோடு நடக்கிறது. தம் சாதிக்குள்ளே திருமணம் நடக்க வேண்டும் எதிர்பார்த்த பெற்றோர்கள் இந்தியரை திருமணம் செய்வதே போதும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

முதியோருக்கும், இளையத் தலைமுறையினருக்குமான இடைவெளி மிக நீளமானது. வயது முதிர்வால், தாயகம் திரும்ப முடியாததால் முதியோர் ஓய்வகத்தில் காலம் கழிக்கிற நிலையும் உண்டு. முப்பது ஆண்டுகளாக வானொலி, இதழ்கள்,படைப்புகள் ,கூத்து, நாடகம்.. என ஓங்கி ஒலித்த புலம்பெயர் தமிழின் உத்வேகம் குறைந்து வருகிறது. நூல் வெளியீடு, தமிழ் விழாவில் கலந்துகொள்ளும் இளைஞர்களை விரல்விட்டு எண்ணலாம். பள்ளிகளில் கணிசமான முயற்சிகள் செய்தும் தமிழை உயர்தரப் பரீட்சை எடுப்பவர்கள் குறைவே. இது தமிழர்களுக்கு மட்டுமான நிலையன்று. குடியேறிய, புலம்பெயர்ந்த மற்ற மக்களின் நிலையும இதுதான். அதேநேரத்தில் இளையத் தலைமுறையினர் மருத்துவம்,சட்டத்துறை,கணக்கியல்,அரசுத்துறை, வர்த்தகம்,ஆய்வு, போன்றவற்றில் உயர் நிலை சாதனைகளை எட்டியுள்ளனர். அரசியலில் காலடி வைத்து மக்களவை உறுப்பினர் வரை சென்றுள்ளனர். வாழ்க்கையைப் பொருத்தவரை கட்சிகள்,அரசியல்வாதிகள் தலையீடு இல்லை.அனைவரும் சமம் என்ற நிலை. முதியவருக்கான வசதிகள், சலுகைகள் அமோகம்.ஆகவே பண்பாடு தாய்மொழி,தமது தலைமுறை குறித்த கவலை தான் முதியோருக்கு உண்டு. இளம்தலைமுறையினர் வாழும் நாட்டு பண்பாட்டு, மொழியில் சிறகடித்துப் பறக்கும் சுதந்திரப் பறவைகளாக இருக்கின்றனர்.

இலங்கைப் பிரச்னையைத் திரைப்படமாக்குவதற்கு ஏன் இவ்வளவு எதிர்ப்பு வருகிறது? சர்வதேச கவனத்தை ஈர்க்கும் அந்த வழியை அடைப்பது ஏன்?

இலங்கைப் பிரச்னையைச் சரியாக உண்மையாகத் திரைப்படம் எடுக்க எவரும் முனையவில்லை. உணர்ச்சி வேகத்தில் கற்பனை கலந்து திரைப்படம் எடுப்பதுதான் பிரச்னை. அதனால்தான் எதிர்ப்பு. 'ஜாட்' என்ற திரைப்படத்தில் ரணதுங்கா (சிங்களப் பெயர்) என்ற கதாபாத்திரம் இலங்கையிலிருந்து தங்கத்தோடு ஆந்திராவில் பின்தங்கிய பகுதியில் ஆதிக்கம் செய்வதாகவும் அதனை முறியடித்துப் போராட கதாநாயகன் வருகிறார். கடைசியில் சிங்களப் பெயரில் இருப்பது தமிழன். இது எத்தகைய அபத்தம்?

இப்படி படம் எடுத்தால் எதிர்ப்பு வராமல் என்ன செய்யும்? கள ஆய்வு செய்து உள்ளதை உள்ளபடி படம் எடுக்க பல கதைகள் இருக்கின்றன. ஆனால் இலங்கைக்கே போகாமல் கற்பனையில் எப்படிப் படம் எடுக்க முடியும்?

புலம்பெயர் வாழ்க்கையின் வடிகால்தான் எழுத்து என்கிறீர்களா? எழுத்து எந்த அளவுக்கு உங்களை மன நெருக்கடியிடமிருந்து காப்பாற்றியுள்ளது?

ஆஸ்திரேலியாவுக்கு வந்த தொடக்க நாள்களில், எவரையும் தெரியாது. கடும் குளிரை முழுமையாக அனுபவித்தேன். தமிழில் பேசுவதற்குக் கூட ஆளைத் தேடவேண்டும்.

பல்வேறு மொழி பேசுபவர்கள் இருந்தபோதும் ஆங்கிலமே உரையாடலில் இணைத்தது. தனித்து விடப்பட்டதாக உணர்ந்தேன். அந்த நேரத்தில் எழுத்து என்னைத் திடப்படுத்தியது. என் மன நெருக்கடியைத் தீர்த்தது.அன்றைய நாற்பது ஆண்டுகளுக்கு முந்தைய புலம்பெயர் வாழ்க்கையை எழுத்தால்தான் அடையாளம் காட்ட முடியும்.அந்த எழுத்தால்தான் புலம்பெயர் தமிழ் இலக்கியமே வந்தது.

1980க்குப் பின்னர் கல்வித்தரத்தில் குடியேறியவர்களால் இலக்கியம் உருவாகவில்லை. இலங்கை இனக் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களால்தான் தமிழ் படைப்புகள் இதழ்களில் வந்தன. தமிழ் மட்டும் தெரிந்தால் உலகில் பல நாடுகளுக்குப் போகலாம் அங்கு நிச்சயம் தமிழ் பேசுபவர்கள் இருப்பார்கள்.

அயலகப் படைப்புலகம் எப்படி இருக்கிறது ?அதற்கு உரிய கவனம் தமிழ்நாட்டில் கிடைக்கிறதா?

புலம்பெயர்வு நாற்பது ஆண்டுகளைக் கடந்துவிட்டது. தொடக்கத்தில் இருந்த உத்வேகம் குறைந்துவிட்டது. 1990களில் சிற்றிதழ் துறையில் தமிழ் சிற்றிதழ்களையே தாண்டிச் சென்றதாக விமர்சகர்களே எழுதினார்கள். ஆனால் இன்று சிற்றிதழ்கள் காணாமல் போய் இணைய வழி இதழ்கள் நிறைந்துள்ளன.

போராடிக் கொண்டிருந்த இதழ்களும் கரோனா காலத்தில் மூச்சை நிறுத்தின. ஆனாலும் கனடா முத்துலிங்கம் உள்பட பலர் எழுதி வருகின்றனர். இவர்களுக்குப் பிறகு குறிப்பிட்டுச் சொல்லக் கூடியவர்கள் உருவாகவில்லை. ஆனால் ஆங்கிலத்தில் பல தமிழர்கள் புதினங்கள் படைத்து படைப்புலகில் கவனத்தை ஈர்க்கின்றனர்.

தமிழ்நாட்டில் அயல் படைப்புகளுக்கு ஆதரவு தரப்படுகிறது. ஆனால் சிலரையே தூக்கிக் கொண்டாடும் நிலை உண்டு. 'கண்டிச்சீமை' நாவலை பிரசுரிக்க ஒரு பதிப்பகத்தை அணுகியபோது, 'நீங்கள் நான்கு ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்' என்று சொல்லப்பட்டது. நண்பர் மூலமாக அதனை வெளியிட்ட போது, அது தமிழ்நாடு அரசுத் துறையின் சிறந்த நாவல் பரிசு பெற்றது. எழுதியவரின் பெயரை வைத்து மதிப்பீடு செய்கிற நிலை இங்கு மட்டுமல்ல; மேலைநாடுகளிலும் உண்டு.

கரோனா காலத்துக்கு முன் லண்டனைச் சேர்ந்த எழுத்தாளர், 'கரோனாவால் லண்டனில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும்' என தனது நாவலில் குறிப்பிட்டார். ஆனால் பதிப்பகத்தார் அதீத கற்பனை என்று நாவலை பிரசுரிக்கவில்லை. பிறகு ஒரு சிறிய பதிப்பகம் வெளியிட்டது. ஆனால் புத்தகம் விற்கவில்லை. கரோனா காலத்தில் அந்த நூலின் விற்பனை ஒரு லட்சத்தைத் தொட்டது.

தமிழ்நாட்டிலும், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், மியான்மர், ,பிஜி உள்ளிட்ட நாடுகளிலும் தமிழ் எழுத்து இலக்கியம் ஓங்கி ஒலித்தது. பின்னர், தமிழர்கள் புலம்பெயர் நாடுகளில் தமிழ் ஒலிக்கத் தொடங்கியது.இதனால் தமிழில் உச்சம் தொட்ட படைப்புகள் வெளியாகின.

முதலில் தமிழ் நூலை அச்சில் சேர்த்த சி.வை.தாமோதரம் பிள்ளை, வசன எழுத்தை அறிமுகம் செய்த ஆறுமுகநாவலர், யாழ் நூல் தந்த விபுலானந்தர் உள்ளிட்டோர் அயலகத் தமிழர்கள். கடைசியாக அயலகத் தமிழ்ப் படைப்புகள் சரியாக அடையாளம் காணப்படவில்லை. இதனை முழுமையாக காண தனித் துறை அமைக்கப்பட வேண்டும.

எழுத்தால் போராடிக் கொண்டிருப்பதாகக் கூறுகிறீர்கள். யாருடன்,யாரை எதிர்த்து.. ?

எழுத்து ஓர் ஆயுதம், அது சமூகத்தின் பாதுகாப்புக் கவசம். சமூகத்தைச் சாராத, சமூக அவலங்களை எதிர்க்காத எழுத்துகளால் இலக்கியம் மேம்படப் போவதில்லை.

எழுத்தால் அடக்கப்பட்ட,ஒதுக்கப்பட்ட, உதாசீனப்பட்ட மக்களுக்காகப் போராடுகிறேன் என்று சொன்னேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.