'த்ச்... த்ச்... த்ச்...' என்று குரல் கொடுக்கவும், எங்கிருந்தோ அந்தக் கருப்பு நிற நாய், வாலை ஆட்டிக் கொண்டு, அவனை நெருங்கி, 'ம்... ம்...' என்று குரல் கொடுத்தபடியே, அவன் மேல் தாவ ஆரம்பிக்க 'அவசரப்படாதே, பொறு, பொறு' என்றபடியே, தோளில் தொங்கிய பையிலிருந்து, பிஸ்கட்டை எடுத்து, அதன் அருகில் வைக்க, வேகமாக வாலை ஆட்டியபடியே பிஸ்கட்டை தின்ன ஆரம்பித்தது. அதை பார்த்து மகிழ்ந்தவனாய் வீட்டுக்குள் நுழைந்து, தொலைக்காட்சி ஆன் செய்துவிட்டு, கொடியில் கிடந்த துணிகளை எடுத்து, அழகாக மடித்து வைக்க ஆரம்பித்தான். தொலைக்காட்சியில் கம்பீரமாக ஒருவர் பேசிக் கொண்டிருந்தார்.
முடியாது என்று எந்த ஒரு விஷயமும் கிடையவே கிடையாது. மனது வைத்தால், மார்க்கம் உண்டு. முயற்சி என்பது ஒரே ஒரு முறை மட்டும் செய்வது அல்ல. முடியும் வரை தொடர்வது. வெற்றிகரமாக முடிக்க வேண்டும் என்றால், சந்திக்கப் போகும் சிரமத்தை பற்றி கவலைப்படாமல், நம்மால் முடியுமா? என்கிற மாதிரியான, எந்தவிதமான தயக்கமும் இன்றி, தடங்கல் ஏற்படுத்தும் முட்டுக்கட்டை வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், முழு மூச்சுடன், நூறு சதவீதம் நம்பிக்கையுடன், செய்ய ஆரம்பித்தோம் என்றால், கண்டிப்பாக வெற்றியை சந்திக்க முடியும். அதில் எந்தவிதமான சந்தேகமுமே கிடையாது.
'இப்பொழுது உள்ள இளைய தலைமுறையினரில் பாதி பேர், எதற்கெடுத்தாலும் தற்கொலை என்ற ஒரு முட்டாள்தனத்தை நோக்கி நகர்கிறார்கள், பரீட்சையில் ஒரு சப்ஜெக்ட்டில் தோல்வி, அடிக்கடி வெளியே செல்வதற்கு வீட்டில் பிரச்னை, செலவுக்கு பணம் கேட்டால் கொடுப்பதில்லை, விரும்பிய பெண், தன் காதலை ஏற்றுகொள்ளவில்லை, நேற்று வரை தன்னுடன் சுற்றிக் கொண்டிருந்தவள், தன்னை ஒதுக்கிவிட்டு, இன்னொருவருடன் சுற்ற ஆரம்பித்திருக்கிறாள், எதற்கெடுத்தாலும் அறிவுரை சொல்லுகிறார்கள் என்று, ஏன், எதற்கு என்று ஆராய்ந்து பார்க்காமலே, ஒவ்வொரு பிரச்னைக்கும் அவர்கள் தேர்வு செய்வது தற்கொலையை. பிரச்னைகளைச் சந்திக்கத் தைரியம் இல்லாத கோழைகள், எதிர்கொள்வதை எப்படி சமாளிப்பது என்ற அறிவு இல்லாதவர்கள் மட்டுமே, தற்கொலை என்கிற சுலபமான ஒரு விஷயத்தை தேர்ந்தெடுப்பார்கள்.' என்று தொடர்ந்தது.
மேற்கொண்டு அதை பார்க்க, கேட்க விருப்பப் படாதவனாய் தொலைக்காட்சியை அணைத்துவிட்டு, ஏதோ முனகலோடு ரிமோட்டை தூக்கி போட்டுவிட்டு, மடிக்க ஆரம்பித்த டிரஸ்களை முழுவதுமாக மடித்து முடித்தான். அதில் தனக்கென இரண்டு செட் டிரஸ்ஸை மட்டும் எடுத்து ஒரு பேக்கில் வைத்துகொண்டு, மற்ற அனைத்து டிரஸ்களையும் ஒரு கட்டை பையில் எடுத்து வைத்துக் கொண்டான். பேங்க் பாஸ் புக்கையும்.
வெளியே வந்து கொஞ்சம் தூரமாக இருந்த அநாதை விடுதிக்கு நடந்தே சென்று, துணிகள் இருந்த கட்டை பையை அவர்களிடம் சேர்த்துவிட்டு, பின் வங்கிக்கு சென்று, இருந்த தொகை அனைத்தையும் எடுத்து, தனக்கு தேவையானதை வைத்துகொண்டு, மீதியை அதே பகுதியில் இருந்த முதியோர் இல்ல விலாசத்துக்கு மணியார்டர் செய்துவிட்டு, திருப்தியோடு வீட்டுக்கு வந்து, தயாராக வைத்திருந்த பெட்டியை எடுத்துகொண்டு, ரயில் நிலையம் அடைந்து, முதலில் புறப்படப் போகும் வண்டி, ஹுப்ளிக்கு செல்வதுதான் என்பதால், அந்த ஊருக்கே டிக்கெட் எடுத்து, பிளாட்பாரத்தை அடைந்து, ரயிலில் ஏறி அமர்ந்து, கண் மூடி சாய்ந்து, கடந்த மூன்று நாள்களில் நடந்த நிகழ்வுகளை மனதில் ஓட விட்டு பார்த்தான்.
'நீ இல்ல.. காதலிக்கிற எல்லா ஜென்மங்களுக்குமே, காதலைத் தவிர வேற எதுவுமே முக்கியமாகப் படாது. எடுத்து சொன்னாலும் ஏறாது. ஆனா எங்களுக்குன்னு சில விஷயங்கள் இருக்கு. அத எக்காரணத்தை கொண்டு விட்டு தர மாட்டோம். உன்னோட வாழ்க்கையை தேர்ந்தெடுக்கிற உரிமை நிச்சயம் உனக்கு இருக்கு. ஆனா, அத இந்த வீட்டுலே இருந்து எடுக்க, நாங்க அனுமதிக்க மாட்டோம், புரியுதா? எங்களுக்கு தேவை, எங்க கெளரவத்தை காப்பாத்திற, எங்க வார்த்தைகளுக்கு மதிப்பு கொடுக்கிற சூர்யாதான்.
அதுல நாங்க தெளிவா, உறுதியா இருக்கோம். உன்னால அது முடியாதுன்னு நல்லா தெரிஞ்சு போயிட்டு. அதனால, இங்க உனக்கு என்னென்ன தேவையோ அதெல்லாம் எடுத்துகிட்டு, எதா இருந்தாலும் சரி, எதுக்கும் நாங்க மறுப்பு தெரிவிக்க மாட்டோம். எடுத்துகிட்டு நிரந்தரமாகப் போயிடு. நாள பின்ன எந்தக் காரணத்தை முன்னிட்டும் நீ இங்க வரக்கூடாது. மனசுல வச்சுக்க, எந்த காரணத்தை முன்னிட்டும். புரிஞ்சுக்க' என்று அழுத்தம் திருத்தமாக சொல்லிவிட்டு தந்தை மாரிமுத்து உள்ளே செல்ல, நிழலாகத் தொடர்ந்தார் தாய் பங்கஜம்.
எதிர்பார்த்ததுதான் என்பதினால், 'நன்றி பெற்றோரே' என்றபடியே, அலட்டிக் கொள்ளாமல் அங்கிருந்து வெளியேறினான் இரண்டாவது நிகழ்வுக்காக?
'காதலோட அருமை தெரியாத, பணம், வசதிதான் முக்கியமுன்னு நினைக்கிற, நீயெல்லாம் எதுக்கு காதலிக்கிற. உன்னை மாதிரியான ஒரு கேவலமான ஒருத்தன காதலிச்சேன்னு நினைக்கிறப்ப, ரொம்பவே அருவருப்பா இருக்கு. நீயெல்லாம் இருக்கிறதுக்கு...' என்று மீதி வார்த்தைகளை சொல்ல முடியாதவளாய் வெளியேறினாள் சுதா. அவள் போவதையே பார்த்துக் கொண்டிருந்தான்.
ரயில் புறப்பட்டது.
மறுபடியும் நினைவுகளில் அப்பா, அம்மா வந்து, 'உன் மேல ரொம்பவே நம்பிக்கை வச்சிருந்தோம். குட்டிச்சுவராக்கிட்டியே' என்று கலங்கினர்.
சுதா வந்து, 'ஐ லவ் யூடா செல்லக்குட்டி' என்று கொஞ்சினாள். 'ஏமாத்திடாதடா' என்று கெஞ்சினாள். 'ஏமாத்திட்டியேடா' என்று குமுறினாள்.
'தொந்தரவுக்கு மன்னிக்கணும்' என்று இடைஞ்சலாக ஒரு குரல் புக, மெல்ல கண் திறந்தான். தாடியுடன், கொஞ்சம் உயரமாக, அதற்கேற்ற பருமனுடன், ஒருவர் நின்றிருந்தார். பக்கத்தில் அவருக்கு துணையாக ஒருவன்.
'மன்னிக்கணும், இந்தப் பெட்டிகளையெல்லாம் கொஞ்சம் உள்ள வைக்கணும்' என்று வேண்டுகோள் தொனியில் சொல்ல நகர்ந்து கொண்டான்.
'ரொம்ப நன்றிப்பா? இத வச்சுக்க' என்றபடி உதவிக்கு வந்தவனுக்கு நூறு ரூபாயை நீட்ட, அவன் தயங்க, 'படவா என்ன யோசிக்கிற, வாங்கிக்க, பொறுமையா இருக்கணும், புரியுதா?' என்று அதட்டலாக சொல்ல, சிரித்தபடியே, பவ்யமாக தலையசைத்துவிட்டு, கும்பிடும் தோரணையில் சற்றே குனிந்து நகர்ந்தான்.
அவனையே பார்த்துக் கொண்டிருந்தவர், சூர்யாவுக்காக திரும்பி, 'இதோ போறானே, பழகின பசு மாதிரி, சில வருடங்களுக்கு முன்னாடி, வெட்டு, குத்து, ரத்தம்ன்னு கொடுரமானவனா திரிஞ்சவன். ஏதோ பழமொழி சொல்லுவாங்களே, ம்.. கத்தி எடுத்தவன் கத்தியால சாவான்னு. அது இவனை பொருத்தவரை 90 சதவீதம் நிஜம், இவனால பாதிக்கப்பட்ட, இவனோட எதிர் கோஷ்டி, சமயம் பார்த்து வெட்டிப் போட்டுட்டாங்க.
அவ்வளவுதான் இவன் கதைன்னு எல்லாரும் நினைச்சாங்க. நான் அப்ப அங்க இருந்தேன். எங்க அப்பன் ஈசன் மேல பாரத்த போட்டுட்டு, தூக்கிட்டு ஓடினேன். பொழச்சிட்டான். அந்த நிமிஷத்திலே இருந்து, என் மேல அப்படி ஒரு பாசம், என்ன சொன்னாலும் செய்வான். இப்ப குழந்தை குட்டிகளோட நிம்மதியா இருக்கான்' என்று சொல்லிக் கொண்டே போனவர், சற்று நிறுத்தி, ' மன்னிக்கனும், என்னைப் பத்தி எதுவும் சொல்லாம, ஏதேதோ சொல்லிட்டு இருக்கேன்' என்றவர் தன்னைப் பற்றி சொல்ல ஆரம்பித்தார்.
'என் பெயர் நாகசுவாமி. இருபது, முப்பது பேரோட, ஒரு ஆஸ்ரமம் நடத்திக்கிட்டு இருக்கேன். இதெல்லாம் அங்கதான் போகுது. உங்களபத்தி தெரிஞ்சிக்கலாமா?'
'சூர்யா...' என்று சொல்லிவிட்டு, மேற்கொண்டு சொல்வதற்கு ஒன்றுமில்லை என்பது போல் நிறுத்தினான்.
'நல்ல பெயர். சூர்யான்னாலே டக்குன்னு சூப்பர் ஸ்டாரும், தளபதி படமும்தான் ஞாபகத்துக்கு வருது. அடிமட்டத்திலே இருந்து உழைத்து உயர்ந்தவர். எப்படிப்பட்ட விமர்சனங்களையும், ஒரு புன்னகையால, கடந்து போகிறவர்' என்று பேசினவரை ஆச்சர்யமாக பார்த்தான் சூர்யா,
'என்ன ஆச்சரியமா பார்க்கிறிங்க... பிசிறு தட்டாம தமிழ் பேசுறானேன்னா? தமிழன்தான். தஞ்சாவூர்காரன். மன்னார்குடி. அங்க பொறந்து... கால ஓட்டத்தில எங்கெங்கோ அலைஞ்சு... இப்ப இங்க வந்து சேர்ந்திருக்கேன். சரி.. நீங்க எங்க போறிங்க? என்ன விஷயமா?'
'வேலை விஷயமா ஹுப்ளி போறேன்.'
'நல்லது. நான் தார்வாடுல இறங்கிடுவேன். நீங்க விருப்பப்பட்டா உங்க குடும்பத்தைப் பத்தி சொல்லலாம்..'
'நான் அநாதை...' என்று தயக்கமில்லாமல் சொன்னான். அதைக் கேட்டதும் சந்தோசமாய் பேச ஆரம்பித்தார்.
'கை கொடுங்க. நானும் உங்க ஜாதிதான்.'
'அத என்ன அவ்வளவு சந்தோஷமா சொல்றிங்க?'
'இதில வருத்தப்படற விஷயம் என்ன இருக்கு? அண்ணன், தம்பி, சித்தப்பா, பெரியப்பான்னு ரத்த உறவுகள் இல்லேன்னா, அநாதையா? இல்லவே இல்ல, என்னதான் எல்லாரும் எந்திரதனமா ஓடிக்கிட்டிருந்தாலும், அய்யோன்னு கத்தறப்ப, என்னன்னு கேட்கறதுக்கு ரெண்டு பேராவது கண்டிப்பா வருவாங்க. அதனால இங்க யாருமே அநாதை இல்ல. அத விடுங்க? நீங்க ஹீப்ளி போய் வேலையில அமர்ந்தோன்ன, கண்டிப்பா ஒரு ஞாயிற்றுக்கிழமை, எங்க ஆஸ்ரமத்துக்கு வாங்க, நிறைய அனுபவங்கள் கிடைக்கும். இதான் என் முகவரி.' என்று அவர் கொடுக்க, வாங்கிஏஈ படித்தவன் ஆச்சரியமாக கேட்டான்.
'வித்தியாசமான பேரா இருக்கு. 'உயர்வோர் நிம்மதி இல்லம்' -அடாடா?' என்று கேட்ட சூர்யாவுக்கு, 'எந்த ஒரு விஷயமுமே உற்சாகம் தரக் கூடியதா இருக்கணும். யாருமே இல்லையேன்னு, தப்பா நினைச்சுகிட்டு, ஏக்கத்தோடு தவிக்கிறவங்களுக்கு, நாங்க இருக்கோம்ன்னு அடைக்கலம் தந்து, அவுங்களுக்குள்ள இருக்கிற பிரச்னைகளை, இல்லாமல் செய்து, நிம்மதியை கொடுத்து, உயர்த்தறதுதான் எங்கள் இல்லம். அதான் அந்தப் பேரு. எங்க இல்லத்தில, உங்க ரக ஆள்கள், அதாவது அநாதைன்னு நினைச்சுகிட்டவங்க, மரணம் தெரிஞ்சவங்க, இப்படி நிறைய வகையான மனிதர்கள்.
எங்க இல்லத்துக்குள் வந்திட்டா, அவங்க பிரச்னை, பிரச்னையாவே தெரியாது, அந்த அளவுக்கு அங்க நிலவும் சூழ்நிலை மாற்றிடும். அங்க உள்ளவங்களோட முக்கியமான நோக்கமே, தானும் மகிழ்ச்சியா இருந்து, மற்றவங்களையும் மகிழ்ச்சி அடைய வைப்பதுதான். மரணம்ங்கிறது தெரிஞ்ச ஒண்ணுதான? எதுக்கு அதை நினைச்சு கவலைப்படணும். இருக்கப் போறது கொஞ்ச நாள், அத சந்தோஷமா கழிக்கணும், அடுத்தவங்களையும் சந்தோஷமாக வச்சுக்கணும். மாறாக தானும் கவலைபட்டு, அடுத்தவங்களையும் கவலைபட வைக்கிறது முட்டாள்தனம். இது அங்க இருக்கிறவங்க ஒவ்வொருத்தங்களோட மனசுலயும் ஆழமா பதிஞ்சு போன ஒண்ணு' என்று ஒரு பிரசங்கமே நடத்தி முடித்தார்.
ஆச்சர்யத்தோடு அவரைப் பார்த்துகொண்டிருந்தான் சூர்யா. அவனுள் ஏதேதோ நடந்து கொண்டிருந்தது.
அதற்குள் இறங்க வேண்டிய இடம் வர, 'ஓ.கே. சூர்யா. இடம் வரப்போகுது. இந்தப் பெட்டிகளையெல்லாம் எடுத்து வைக்க கொஞ்சம் உதவி செய்யுங்க?' என்றவரிடம் 'அய்யா ஒரு வேண்டுகோள். என்ன வா, போன்னே கூப்பிடுங்க. மரியாதை வேண்டாம்' என்றவனிடம் 'அப்படியே' என்றபடி தயாராக, ரயில் ஸ்டேஷனுக்குள் நுழைந்து, வேகம் குறைந்து நின்றது.
பெட்டிகளை எல்லாம் வெளியே எடுத்து வைத்துவிட்டு நிமிர்ந்த சூர்யாவிடம், 'ரொம்ப நன்றி சூர்யா. உன்னை சந்திச்சதில ரொம்ப சந்தோஷம். நான் வெளியே போய் ஆட்டோ இல்ல வேனோ பிடிச்சிட்டு வரணும். நான் வர்றதுக்குள்ள ரயில் புறப்பட்டா, நீ கிளம்பு. வேலையில சேர்ந்த பிறகு, ஒரு ஞாயிற்றுக்கிழமை கண்டிப்பா வா. சொல்லிவிட்டு, அவர் வெளியே செல்ல, சூர்யா அவரையே பார்த்துகொண்டிருந்தான். மனதுக்குள் சின்ன போராட்டம்.
'என்ன சூர்யா? ஏன் போகல?' என்று திரும்பி வந்தவர், சூர்யா நின்றிருப்பதை பார்த்ததும் ஆச்சரியமாக கேட்டார்.
'நீங்க தான சொன்னிங்க. இருக்கிறது கொஞ்ச நாளா இருந்தாலும், சந்தோஷமா இருந்து, சந்தோஷப்படுத்தணும்ன்னு. அதான் போகலை.'
'புரிலய, தெளிவா சொல்லு' என்று குழப்பத்தோடு கேட்டார்.
'சொல்றேன். தயவுசெய்து தப்பா எடுத்துக்காதிங்க. எனக்கு என்னோட மரணம் தெரியும். என் நாள்கள் எண்ணப்பட்டு கொண்டிருக்கு' என்று சொன்னவனை பார்த்து,
'புதிர் போடாம, தெளிவா சொல்லு' என்று அவர் பொறுமையாக கேட்க, சூர்யா சொல்ல ஆரம்பித்தான்.
'சொல்றேன் அய்யா. ஏதோ ஒரு காரணத்துக்காக ரத்தம் டெஸ்ட் செய்யப் போனப்பதான் தெரிஞ்சது, எனக்கு புற்றுநோய்ன்னு. கடைசி நிலை, காப்பாற்ற முடியாதுன்னு, சினிமா டாக்டர் மாதிரி சொன்னாரு நிஜ டாக்டர். என்னோட வாழ்க்கை திடீர்ன்னு, இப்படி ஒரு யூ டேன் எடுக்கும்ன்னு நான் எதிர்பார்க்கவே இல்ல. இது என்னோட அப்பா, அம்மாவுக்கு..'
'என்னது அப்பா, அம்மாவா?' என்று இடைமறித்துக் கேட்டார்.
'மன்னிச்சுடுங்க அய்யா. பொய் சொன்னதுக்கு. என்னோட வியாதி என் பெற்றோருக்கும், என்னை உயிரா நினைக்கிற சுதாவுக்கும் தெரிஞ்சா, ரொம்பவே நொறுங்கி போய்டுவாங்க. முடியாதுன்னு தெரிஞ்சும், காப்பாற்ற முயற்சி செய்வாங்க, பண விரயம், தேவையில்லாத பரிதாப பார்வைகள், மறக்க நினைக்கும் மரணத்தை ஞாபகப்படுத்தும். மரணம் நிச்சயம், எதுக்கு காத்திருக்கணும்ன்னு, நானே சந்திக்க முடிவெடுத்தேன். நாடகமாடி எல்லார்க்கிட்டேயும் வெறுப்பை சம்பாரிச்சிட்டு, தற்கொலை செய்துக்கலாம்கிற முடிவோட, யாருக்குமே தெரியாத தூரத்துக்கு வந்தேன். ஆனா என்ன எழுதியிருக்கோ அதுதானே நடக்கும். அது உங்க மூலமா எனக்கு நடந்திட்டு. மனசு மாத்திகிட்டு இறங்கிட்டேன்' என்று வாக்குமூலம் போல் சூர்யா சொல்லி முடித்தான்.
கேட்ட நாகசுவாமி, புதிய பார்வையோடு சூர்யாவை நெருங்கி தட்டி கொடுத்து, 'சரியான வார்த்தை, எழுதியிருக்கிறபடிதான் அனைத்தும் நடக்கும். எல்லாம் அவன் செயல்ன்னு, உணர்ந்திட்டாலே போதும், எதா இருந்தாலும் ஏத்துக்கிற பக்குவம் கிடைச்சிடும். நமக்கு மட்டும் ஏன் இப்படிங்கிற புலம்பலுக்கு அவசியமே இருக்காது. காரண, காரியம் இல்லாம எதுமே நடக்காது. தேடி போக கூடாத விஷயங்கள்ல, மரணமும் ஒண்ணு. நம்மளோட பாவ, புண்ணிய கணக்க வச்ச, அதுவா தேடி வரும். அதுவரை நாம காத்திருக்கணுமே தவிர தேடி போக கூடாது.
உன்னை மாதிரி, நம்ப கஷ்டம், நம்மளோட போகட்டும்ன்னு நினைக்கிறவங்க அபூர்வம். நல்லவேளை தற்கொலைங்கிற முட்டாள்தனமான முடிவை செயல்படுத்தாமல் இருந்ததுக்கு. காரணம் நான்தான்னு நம்பினதுக்கு ரொம்ப நன்றி... நன்றி. எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது. எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும். பகவான் சொன்னத மனசில நினைச்சுகிட்டு, இந்த நிமிஷத்திலேயிருந்து எங்க இல்லத்தில நீயும் ஒரு உறுப்பினர் மற்றும் சேவகனாயிடு. உன் முதல் பணி, இந்த பெட்டிகளை கவனமா அந்த ஆட்டோவுக்கு கொண்டு போறது. தொடங்கு' என்றபடி ஒரு பெட்டியை தான் எடுத்துகொண்டு முன்னே செல்ல, சூர்யாவும் தொடர்ந்தான். அவன் தெளிவான, மகிழ்ச்சியான மன நிலையில்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
வீடியோக்கள்

BJP Annamalai interview | விஜய் 234 வேட்பாளர்களை நிறுத்த முடியுமா? | TVK Vijay | DMK | ADMK
தினமணி வீடியோ செய்தி...

Vijay full speech | "தமிழ்நாடே திவாலாகப் போகிறது!" - தஞ்சையில் விஜய் பேச்சு! | TVK
தினமணி வீடியோ செய்தி...

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...


