ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: 'பிள்ளை வளர்ப்பான்' வசம்புவின் பயன்கள் என்ன?
குழந்தைகளின்ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதில், 'பிள்ளை வளர்ப்பான்' எனும் வசம்பு நிகரற்றது என கேள்விப்படுகிறேன்.


- பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்
குழந்தைகளின்ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதில், 'பிள்ளை வளர்ப்பான்' எனும் வசம்பு நிகரற்றது என கேள்விப்படுகிறேன். அதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும்? அதன் மருத்துவக் குணங்கள் என்ன?
-மஞ்சுளா, வெள்ளியணை.
வசம்பைக் காய வைத்து அப்படியே தூள் செய்து கொடுக்கலாம். சிறு குழந்தைகளுக்கு அரை- இரண்டு அரிசி எடை வசம்பில் சிறிது தேன் விட்டு குழைத்து கொடுக்க, தொண்டையிலுள்ள சளி கட்டியானது இளகி வெளியாகும். இளைப்பு நீங்கும்.
ஆட்டுப்பாலில் வசம்பை ஒரு வாரம் ஊற வைத்து எடுத்து உலர்த்தி, காலை, மாலை வேளைகளில் ஐந்து- ஆறு உரை உரைத்துத் தேன் விட்டு கொடுக்கப் புத்திச் சக்தி வளரும். சரியாகப் பேச வராமல் உள்ள திக்குவாய் குழந்தைகளுக்கும் இதுபோல கொடுப்பது நல்லது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம், முதல் நாள் ஊறிய வசம்பை எடுத்து வேறு புதிய பாலில் ஊற வைக்க வேண்டும். இப்படியாக தினம் பாலை மாற்றி ஏழு நாள்கள் வரை ஊற வைக்க வேண்டும்.
தாமிரக் கலப்பில்லாத சொக்கத் தங்கத்தைக் குண்டூசி போன்று மெல்லிய கம்பியாக்கி, பாலில் ஊறிய வசம்பின் நடுவே செருகி, உலர்த்தி அதைப் பாலிலோ, தேனிலோ இழைத்து கொடுப்பது நம் முன்னோர் பழக்கம். வசம்பும் தங்கமும் புத்திச் சக்தியை வளர்ப்பவை. புத்தி மந்தமான குழந்தைகளுக்கு மட்டுமல்ல; புத்திச் சக்தியை நன்கு வளர்க்க விரும்புவர்களுக்கும் உரைத்து கொடுக்கச் செய்யலாம்.
உணவில் சில குழந்தைகளுக்கு விருப்பம் இருக்காது. பசியும் குறைவாக இருக்கும். இரைப்பையில் கபத்தின் உட்புறச் சவ்வுகளில் ஏற்படும் பூச்சு, இரைப்பையின் மந்த நிலை இதற்குக் காரணமாகலாம். பால் குடிப்பதை வெறுத்து, காரமாக குழந்தைகள் ஏதாவது விரும்பிச் சாப்பிட்டால், வயிற்றுள் மந்த நிலையை உணர்த்துகிறது. முன்குறிப்பிட்டதுபோல வசம்பை உரைத்துக் கொடுத்தால் பலன்கள் என்னென்ன?
தொண்டை, இரைப்பை, நுரையீரல் போன்ற இடங்களில் கபம் தங்கியிருந்தால் அதை இளக்கி அப்புறப்படுத்தும்.
எப்போதும் பரபரப்பும் சிடுசிடுப்பும் உள்ள குழந்தைகளுக்கு அந்தச் சிடுசிடுப்பைக் குறைத்து வேதனையைக் குறைக்கும்.
புத்திக்கு நல்ல சுறுசுறுப்பையும் தெளிவையும் கொடுக்கும்.
பால் செரிமானமாகாமல் சிறுகீரிப்பூச்சிகள்
ஏற்படுவதைத் தடுக்கும்.
காய்ச்சல், குடல் மப்பு, முளைக் கொதிப்பு ஆகியவற்றால் ஏற்படும் மாந்தம், வலிப்பு ஆகியவற்றில் வசம்பை தினமும் கொடுத்து வர, அவை குணமாகி விடும்.
குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்று உப்புசம், வயிற்று வலி ஆகிய நிலைகளில் வசம்பு, வாயுவைப் பிரித்து வெளியேற்றிவிடும்.
உமட்டி வாந்தி எடுக்கச் செய்து மேல் வயிற்றில் சங்கடத்தை உண்டாக்கும் செரிமானமாகாத கபத்தைப் போக்கும்.
சில குழந்தைகள் குண்டாக இருக்கும். ஆனால், வலுவாக இருக்காது. வசம்பைக் கொடுத்தால் கொழுப்பைக் குறைத்து, உடலை வலுவாக்கும்.
பல் முளைக்கும்போது ஏற்படும் வயிற்றுப் பேதி, காய்ச்சல், வாந்தி, சிடுசிடுப்பு இவைகளைக் குறைக்கும். இப்படி 'பிள்ளை வளர்ப்பான்' என்ற பெயருக்கேற்ப குழந்தையின் வளர்ச்சியில் பலவகைளில் உதவக் கூடியது.
வசம்பைச் சுட்டுக் கரியாக்கி, தண்ணீர் அல்லது வெற்றிலைச் சாற்றில் குழப்பி, தொப்புளைச் சுற்றித் தடவ வயிற்று உப்புசம், பேதி நிற்கும். தேனுடன் குழைத்துக் கொடுத்து, பித்த- வாந்தி குணமாகும். பச்சையாக வசம்பைக் கொடுத்தால், வாந்தியைத் தூண்டி எடுக்கச் செய்யும். சுட்டுக் கரியாகக் கொடுக்க வாந்தியை அடக்கும்.
பேதி மருந்தால் ஏற்படும் குடல் அழற்சியால் வாந்தி, பேதி, உமட்டல் உணர்ச்சியைக் குறைக்க, வசம்பு பயன்படுத்துகிறது.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...