பெண் கல்விக்கு முக்கியத்துவம்...

'நகரங்களுக்கு இணையாக கிராமங்களில் உள்ள குழந்தைகளும் ஆங்கிலத்தில் படிக்க வேண்டும் என்ற கனவை நனவாக்கி வருகிறோம்.
பெண் கல்வி
பெண் கல்வி
Published on
Updated on
1 min read

'நகரங்களுக்கு இணையாக கிராமங்களில் உள்ள குழந்தைகளும் ஆங்கிலத்தில் படிக்க வேண்டும் என்ற கனவை நனவாக்கி வருகிறோம். பெண் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கிறோம்' என்கிறார் திருவாரூர் மாவட்டத்துக்கு உள்பட்ட நீடாமங்கலம் நீலன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் நீலன் அசோகன்.

அவரிடம் பேசியபோது:

'தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநிலத் துணைத் தலைவராகவும், தேங்காய் வியாபாரியாகவும் இருந்த உ.நீலன் கல்விப் பணியை மக்களுக்கு அளிக்கும் நோக்கத்தோடு, மனதில் உதித்த எண்ணத்தை நிறைவேற்ற நீலன் மெட்ரிக் பள்ளியை 1989-இல் துவங்கினார்.

அப்போது மன்னார்குடியில் தனியார் பள்ளி இருந்ததால், நீடாமங்கலம் பகுதியில் ஏழை, எளிய மக்களும் ஆங்கிலத்தில் கல்வி கற்க வேண்டும் என்ற தணியாத ஆர்வம் அவருக்கு இருந்தது. நீடாமங்கலத்தில் துவங்கப்பட்ட முதல் தனியார் பள்ளி இது. அவர் 10-ஆம் வகுப்பு மட்டும் படித்திருந்தார். இருந்தாலும், தேங்காய் வியாபாரத்தில் தனக்கு கிடைத்த வருமானத்தில் நீடாமங்கலம் பகுதி மாணவ, மாணவியர் ஆங்கில வகுப்பில் படிக்க வேண்டும் என்ற விரும்பி பள்ளியைத் துவங்கினார்.

முதலில் எல்.கே.ஜி. முதல் 5-ஆம் வகுப்பு வரை தொடக்கப் பள்ளியைத் துவங்கினார். அப்போது சுமார் 420 மாணவ, மாணவியருடன் தேவையான வகுப்பறைகளுடன் கல்விப் பணி தொடங்கியது. அதன்பின்னர், மேல்நிலைப் பள்ளியானது தொடங்கப்பட்டது. தற்போது சுமார் 1,500 மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர்.

எந்த வகுப்பும் தொடங்கும்போது தேவையான கட்டடங்கள் இருந்தால் மட்டுமே நீலன் விண்ணப்பிப்பார். இதனால் வகுப்பறைகள் இல்லாமல் மாணவர்கள் சிரமத்துக்கு உள்ளானதில்லை.

கடந்த 35 ஆண்டுகளில் பல்லாயிரம் மாணவர்கள் படித்து முன்னேறி உலகெங்கும் பரவியுள்ளனர். ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமில்லாமல் அருகே உள்ள ஏழை, எளிய மக்களும் கல்வி கற்க வேண்டும் என்ற எண்ணத்தில் பள்ளி துவங்கியதால் நீலன் பள்ளியில் பல ஆயிரம் பெண்கள் பயின்றுள்ளனர்.

இங்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தைத் தவிர கூடுதலாக எந்தத் தொகையும் வாங்குவதில்லை. ஆண்டுக்கு சுமார் 25 பெண்களுக்கு இலவசக் கல்வி தருகிறோம். இதுதவிர பல்வேறு வகைகளில் கல்வி உதவித் தொகையை வழங்குகிறோம்.

இக்கல்விக் கூடத்தில் படித்த மாணவ, மாணவியர் உலகெங்கும் பரவிப் படர்ந்துள்ளனர். மாணவி நித்யா துரைராஜ் வருமான வரித்துறையில் திருச்சி மண்டல அலுவலராகப் பணியாற்றுகிறார். இதுதவிர 40-க்கும் மேற்பட்ட மருத்துவர்களையும் நூற்றுக்கணக்கான பொறியாளர்களையும், பல்வேறு அரசுப் பணியாளர்களையும் எங்கள் பள்ளி உருவாக்கியுள்ளது.

படிப்பில் மட்டுமில்லாமல் விளையாட்டுத் துறையிலும் நீலன் பள்ளி சிறப்பாகச் செயல்பட்டுள்ளது. மாநில அளவில் பல்வேறு போட்டிகளில் மாணவர்கள் முதலிடம் பெற்று, கல்லூரிகளிலும் சேர்ந்துள்ளனர்.

பள்ளி நிறுவனரான எனது தந்தை நீலன், கடந்த ஆண்டு உயிரிழந்தார். அவருடைய உருவச் சிலை பள்ளி வளாகத்தில் வரும் மார்ச் 30-இல் திறக்கப்பட உள்ளது' என்கிறார் நீலன் அசோகன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com