வண்ண நகரங்கள்...

நாட்டில் வண்ண, வண்ண நகரங்கள் இருக்கின்றன.
வண்ண நகரங்கள்...
Updated on
1 min read

நாட்டில் வண்ண, வண்ண நகரங்கள் இருக்கின்றன. ராஜஸ்தான் மாநிலத்தில் தங்க நகரம், நீல நகரம், இளம் சிவப்பு நகரம், வெள்ளை நகரங்களும், உத்தர பிரதேசத்தில் சிவப்பு நகரமும், மகாராஷ்டிரத்தில் ஆரஞ்சு நகரமும் உள்ளன.

தங்க நகரம் - ஜெய்சால்மர்

ராஜஸ்தானின் தார் பாலைவனத்தின் மையத்தில் உள்ள இந்த நகரம் ஒரு மாயத் தோற்றத்தை சுற்றுலாப் பயணிகளுக்கு அளிக்கிறது.

இந்த ஊரின் மணல் முகடுகள், கோட்டைகள், அரண்மனைகள், மாளிகைகள், ஹவேலிகள், அருங்காட்சியங்கள், ஏரிகள் என எல்லாமே சூரிய வெளிச்சத்தில் தங்க நகரத்தைப் போல் ஜொலிக்கின்றன. 'ஜெய்சால்மேர்' என்றால், 'ஜெய்சாலின் மலைக்கோட்டை' எனப் பொருள். இந்த நகரத்தை நிறுவியவர் ராவ் ஜெய்சாலின் நினைவாக, அந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

நீல நகரம் - ஜோத்பூர்

தார் பாலைவனத்தையொட்டி அமைந்துள்ள நகரம். இந்த ஊரின் பழைய நகரத்தில் பிராமணர்கள் ஒரு சமயம் தங்கள் வீடுகளில் நீலவண்ணம் அடித்து தங்களை தனித்து காட்டிக் கொண்டனர். இது இன்று புது நகரம் உள்பட அனைத்து இடங்களுக்கும் நீல வண்ணம் பரவி, 'நீல நகரம்' என அழைக்க வைத்துவிட்டது. உள்ளூர் மக்கள் நகரை 'ஜோத்னா' என அழைக்கின்றனர். அரண்மனை, கோட்டை, கோயில்களுக்கு இந்த நகரம் பிரபலம். இந்த நகரில்தான் ராணுவ ஆராய்ச்சி, மேம்பாட்டு மையம் அமைந்துள்ளது.

ராஜஸ்தானின் இரண்டாவது பெரிய நகரம்.

இளம் சிவப்பு நகரம் - ஜெய்ப்பூர்

நாட்டில் வண்ணமயத்துக்கும், கலாசார ரீதியாகவும் பிரபலமான நகரம். ராஜஸ்தானின் தலைநகரம். ஆம்பர், நாகாகர், ஜெய்கர், ஜெய்ப்பூர் அரண்மனை, அவா மஹால் என பல சுற்றுலாத் தலங்கள் உள்ளன. இவற்றில் பெரும் பாலானவை இளம்சிவப்பு வண்ணங்களில் ஜொலிப்பதால் அந்தப் பெயர்.

வெள்ளை நகரம் - உதய்பூர்

ஒருகாலத்தில் மேவார் ராஜ்யத்தின் தலைநகரம். மேவார் அரசர் மகாராணா உதய் சிங் உருவாக்கியதால் உதய்பூர். ஏராளமான ஏரிகள் உள்ளதால் 'ஏரிகளின் நகரம்'. இந்த நகரின் கோட்டைகள், அரண்மனைகள் வெண்மை வண்ணம் கொண்டவை.

சிவப்பு நகரம் - ஆக்ரா

உத்தரப்பிரதேசத்தில் யமுனை நதிக்கரையில் உள்ள நகரம் இது. ஆக்ரா கோட்டை, பதேபூர் சிக்ரி, சிக்கந்திரா, தாஜ்மகாலைத் தவிர மற்றவை அழகிய சிவப்பு மணற்களால் ஆனவை.

ஆரஞ்சு நகரம் - நாக்பூர்

மகாராஷ்டிரத்தில் உள்ள இந்த நகரத்தில் ஆரஞ்சு தோப்புகள் அதிகம் என்பதால், 'ஆரஞ்சு நகரம்' என பெயர். இதற்கு ஏற்றவாறு அரசு கட்டடங்கள், பொது கட்டடங்களுக்கும் ஆரஞ்சு வண்ணம் பூசப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com