பெளத்த நாடுகள் பலவற்றின் நவீன ஆலயங்களும், மடங்களும் சாரநாத் நகரம் முழுவதும் பரவிக்கிடக்கின்றன. பதினோராவது சமண தீர்த்தங்கரரான ஸ்ரேயன்ஷநாத் இங்குதான் பிறந்தார். தமேக் ஸ்தூபி வளாகத்துக்கு அருகில் அவருக்காகக் கட்டப்பட்ட 19-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சமண ஆலயமும் உள்ளது.
பெளத்தம், ஹிந்து, சமணம் என மூன்று சமயத்தவரின் ஒருமித்த சிந்தனையில் இன்றைக்கு சாரநாத் முக்கியப் பண்பாட்டுத் தலமாகியுள்ளது. பெருமையுடைய சாரநாத் ஐ.நா. அமைப்பான யுனெஸ்கோவின் பாரம்பர்ய சின்னங்கள் பட்டியலில் இணைந்துள்ளது. இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்தியாவின் 45-ஆவது இடம் இதுவாகும்.
புத்தர் பிறந்த நேபாளத்தின் லும்பினி, அவர் ஞானத் தெளிவு பெற்ற கயா, அவர் தனது முதல் கொள்கைப் பிரகடனம் மேற்கொண்ட சாரநாத், அவரது முக்தித் தலமான குஷிநகர் என நான்கு ஊர்களும் பெளத்தர்களின் புனிதத் தலங்களாகும்.
'சாரநாத்' என்ற பெயர் சம்ஸ்கிருத வார்த்தையான சாரங்கனாதா, பாலி மொழிகளில் உள்ள சாரங்நாத் என்ற வார்த்தையிலிருந்து உருவானது. இந்தப் பெயர் புராதன பெளத்த புராணத்தைக் குறிக்கும். இதில் சித்தார்த்த போதிசத்துவர் மானாக முன்பு அவதரித்தார் எனக் குறிப்பிடுகிறது.
புத்தர் கயாவில் ஞானோதயம் பெற்றாலும், அவர் தனது போதனை பிரசங்கத்தை முதலில் சாரநாத்தில் தனது ஐந்து சீடர்கள் முன்பே நிகழ்த்தினார் என்பதால், சாரநாத் தனித்துவ மிக்கதாகும். சாரநாத்தில் இன்றைக்கும் 'தமேக் ஸ்தூபி' என அழைக்கப்படும் ஸ்தூபி ஆலயம் உள்ளது.
இந்தச் சம்பவம் நடந்தது கி.மு. 5-ஆம் நூற்றாண்டு. சுமார் 200 ஆண்டுகள் கடந்தவுடன் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் மெளரியப் பேரரசர் அசோகரால் இங்கு பெரும்பாலான கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டன. அசோகர் பாரதம் முழுவதும் மட்டுமன்றி, அருகிலுள்ள நாடுகளுக்கும் தனது சீடர்களை அனுப்பி பெளத்தத்தைப் பரப்பினார்.
வாரணாசியிலிருந்து வட கிழக்கே பத்து கி.மீ. தொலைவில் இருந்ததால் சாரநாத்தில் பெளத்தம் செழித்து வளர்ந்தது. 2300 ஆண்டுகளுக்கு முன்னரே பாரதம் சிற்பக் கலையிலும், கட்டடக் கலையிலும் மிக உன்னதமான இடத்தில் இருந்ததற்கு இன்றைக்கும் சாரநாத்தில் உள்ள இடிபாடுகளின் எச்சங்கள் சாட்சியாகும். இந்தக் கட்டுமானங்கள் மணல், கல்லால் கட்டப்பட்டன.
சிம்மத் தூண்: சாரநாத்தில் நான்கு சிங்கங்கள் முதுகோடு ஒட்டி அமர்ந்தபடி காட்சியளிக்கும் . ஒரே கல்லால் செதுக்கப்பட்ட சிம்மத் தூண் இன்றும் உள்ளது. இந்தச் சிங்கங்களின் பீடத்தில் யானை, குதிரை, காளை, சிங்கம் ஆகிய நான்கு விலங்குகள் செதுக்கப்பட்டுள்ளன. இதன் தலைப் பகுதியில் கம்பீரமாய் சிங்கங்கள் காட்சி தருகின்றன.
இந்தியாவின் தேசிய சின்னமாக மட்டுமல்ல; இதில் உள்ள தர்ம சக்கரம் தேசியக் கொடியில் மையத்தில் அமைந்து, இன்றளவும் அசோகரின் பெருமையை விண்ணில் பட்டொளிவீசிப் பறைசாற்றிய வண்ணம் உள்ளது. தூணில் ஓரிடத்தில் சிறிது பழுது ஏற்பட்டதால், தற்போது பூங்கா வளாகத்திலே உள்ள அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வைக்குக் காட்சிப்படுத்தியுள்ளனர்.
பௌத்த மத ஆய்வின் முக்கிய மையம்: அசோகர் காலத்தில் கட்டிய ஸ்தூபிகளையும், மடங்களையும் பிற்கால ஆட்சியாளர்கள் விரிவுபடுத்தினர். 4-ஆம் நூற்றாண்டில் குப்த வம்சத்தின் ஆட்சியில் சாரநாத் தலம் கலை, பெளத்த சிற்பக் கலையின் முக்கிய மையமாகத் திகழ்ந்தது. ஏழாம் நூற்றாண்டுக்குள் பெளத்த மத ஆய்வின் முக்கிய மையமாக மாறியிருந்தது. அதனால் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பெளத்தர்கள் நாள்தோறும் இந்தப் பூங்காவில் ஆயிரக்கணக்கில் கூடி பிரார்த்தனை மேற்கொள்கின்றனர்.
12-ஆம் நூற்றாண்டில் துருக்கிய முஸ்லிம்கள் படையெடுப்பின்போது சாரநாத்தின் புராதனப் பெருமை மிக்க கலைச்சின்னங்களும், வட மாநிலத்தின் பல பெளத்த ஆலயங்களும் கொள்ளையடிக்கப்பட்டதுடன், இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. இவற்றில், அசோகரால் கட்டப்பட்ட தாம்ராஜிகா எனும் ஸ்தூபியின் எஞ்சியிருந்த பல பகுதிகள் 18-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சேதப்படுத்தப்பட்டன. 19, 20-ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மண் மேடிட்டுக் கிடந்த இந்தக் கலைப்பொக்கிஷத்தை மீட்டெடுத்து புனரமைத்தனர்.
தமேக் ஸ்தூபி: இன்றைக்கும் கவரும் வகையில் உள்ள அந்தக் கால இடிபாட்டு எச்சங்கள், மான் பூங்கா, புனரமைக்கப்பட்ட மூலகந்த குட்டி விகாரம் உள்ளன. சாரநாத்தில் புத்தர் அமர்ந்து தியானம் செய்ததாகக் கூறப்படும் ஆலயத்தின் நினைவாக இது
1931-இல் இலங்கை மகாபோதி சங்கத்தால் கட்டப்பட்டது. புத்தர் தனது முதல் போதனையை வழங்கியதாக நம்பப்படும் இடத்தில் தமேக் ஸ்தூபியும் இந்தப் பூங்காவில்தான் உள்ளது. தொல்லியல் துறையால் இந்த வளாகம் பராமரிக்கப்படுகிறது.
பூங்காவில் தினமும் இரவு 7.30 மணி முதல் 8 மணி வரை புதிய உயர் தொழில்நுட்ப ஒலி, ஒளி நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனின் கம்பீரமான மயக்கும் குரலில் புத்தரின் வாழ்க்கை, போதனைகள் தெளிவாகவும் அழகாகவும் விளக்கப்படுகின்றன. தமேக் ஸ்தூபி வளாகத்துக்கு அருகில் அமைந்துள்ள கவர்ச்சிகரமான சாரநாத் தொல்பொருள் அருங்காட்சியகத்தில் கி.மு. மூன்றாம் நூற்றாண்டு முதல் கி.பி. 12-ஆம் நூற்றாண்டு வரையிலான கலைப்பொருள்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கேஜரிவாலின் இன்ஸ்டா கணக்கு முடக்கம்! மெட்டாவிடம் விளக்கம் கோரினார்!

அறிவியல் உலகில் போசான்!

இந்த வாரம் கலாரசிகன் - 26-07-2026

ஆறு தசாப்தங்கள்... நாற்பத்தெட்டாயிரம் பாடல்கள்..!
விடியோக்கள்

திமுகவிற்கு உள்ளுக்குள் சந்தோசம்! அமைச்சர் அருண்ராஜ்! | TVK | DMK



