ஆல்ஃபா கதிர்களைக் கொண்டு வெற்றிடத்தில் வைக்கப்பட்ட தங்க மென்படலத்தின் மீது மோதலை ஏற்படுத்தி, அணுவினுள் இருக்கும் அணுக்கருவை இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நியூஸிலாந்தைச் சேர்ந்த ஆங்கிலேய இயற்பியலார் ரூதர்ஃபோர்டு என்பவர் கண்டறிந்தார். அதன் நேர்மின்னூட்டத்தையும் உறுதிப்படுத்தியதால், முதன்முதலில் அணுவைப் பிளந்த இவர் அணுக்கரு இயற்பியலின் தந்தை' என்று புகழப்படுகிறார்.
அணுக்கருவினுள் நியூட்ரான், புரோட்டானைத் தவிர வேறு சில பண்புகளுடைய துகள்கள் அடிப்படைத்துகள்கள்' என்று அழைக்கப்படுகிறது. இவை சில வினை
களின்போது, ஒன்றிலிருந்து இன்னொன்றாக மாறும் சிக்கலான தன்மைகளையும் கொண்டிருக்கிறது. புகழ்பெற்ற குவாண்டம் இயற்பியலாளர் பால் டிராக் என்பவர் இத்தகைய குறிப்பிட்ட பண்புகளைக் கொண்ட அணுக்கரு துகள்களை முதன்முதலில் போசான்' என்கிற பெயரில் அழைத்தார். இது இந்திய இயற்பியலாளர் எஸ்.என். போஸின் ஆய்வுகளையும், அவரின் இயற்பியல் பங்களிப்புகளையும் பெருமைப்படுத்தும் விதமாக அவர் பெயரால் உலகம் முழுவதும் அழைக்கப்படுகிறது.
போஸ் செய்த அறிவியல் சாதனை : முன்பெல்லாம் பெரும்பாலான அறிவியல் கண்டுபிடிப்புகள் ஜெர்மன், பிரெஞ்சு மொழிகளில் ஆய்வுக்கட்டுரைகளாக வெளியிடப்பட்டன. இதனால் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பல கட்டுரைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். பின்னர் அவர் ஐரோப்பாவுக்குச் சென்று ஐன்ஸ்டீன், டி ப்ரொக்லீ, மேடம் கியூரி, லாங்கேவின் உள்ளிட்ட விஞ்ஞானிகளைச் சந்தித்து, அவர்களின் ஆய்வகங்களைப் பார்வையிட்டு நிறைய உள்ளீடுகளைப் பெற்றார்.
அநேகமாக ஐன்ஸ்டீனுடன் சகஅறிவியல் கருத்துகளைப் பரிமாறிக் கொள்வதற்காக அதிக அளவில் கடிதப் போக்குவரத்து வைத்திருந்த ஒரே இந்திய விஞ்ஞானியாக போஸ் இருந்திருப்பார். பின்னாளில் போஸூம் ஐன்ஸ்டீனும் இணைந்து உருவாக்கிய சமன்பாடுகள் போஸ்-ஐன்ஸ்டீன் புள்ளியியல்' என முக்கிய சமன்பாடாக புள்ளியியல் இயந்திரவியலில் அழைக்கப்படுகிறது. பிளாங்க்கின் சூத்திரத்தையும் அவர் சில மாறுதல்களுடன் மேம்படுத்தினார்.
ஜப்பானுக்கு ஐன்ஸ்டீன் சென்றிருந்தபோது, அங்கு சிக்கலான அறிவியல் கோட்பாடுகள் ஜப்பானிய மொழியில் ஆசிரியர்களால் போதிக்கப்படுவதைக் கண்டார். இதேபோல, இந்தியாவிலும் பிராந்திய மொழிகளில் நவீன அறிவியல் கருத்துகள் பயிற்றுவிக்கப்பட்டால், அதன் தன்மை மாறாமல் எளிதில் அனைவரையும் சென்றடையும் என்று கருதி வங்க மொழியில் அறிவியில் கட்டுரைகளை மொழிபெயர்த்து வெளியிட குழுவை உருவாக்கி, அதனை முன்னெடுத்தார்.
போசான்: போசான்கள் என்பவை துகள் இயற்பியலில் உள்ள அடிப்படை, மூல அணுத்துகள்களின் ஒரு வகையாகும். அறிவியலுக்கு போஸ் ஆற்றிய பங்களிப்புகளை நினைவு கூரும் இந்திய இயற்பியலாளருமான சத்யேந்திரநாத் போஸின் நினைவாக இவற்றுக்குப் பெயரிடப்பட்டது. குவாண்டம் இயக்கவியலில், போசான் என்பது ஃபோட்டான் அல்லது மீசான் போன்ற ஒரு அணுத்துகள் ஆகும்.
இந்தத் துகள்கள் பூஜ்ஜிய குவாண்டம் எண்களைக் கொண்டுள்ளன. அவை போஸ்-ஐன்ஸ்டீன் புள்ளியியல் விதிகளால் நிர்வகிக்கப்படுகின்றன. ஒரு போசான் இரட்டை நிறை எண் கொண்ட அணுக்கருக்கள், ஒரு முழுமையான சுழற்சி, குவாண்டம் இயக்கவியல் அலகுகளான 0, 1-இல் கோண உந்தம், ஆகிய பண்புகளைக் கொண்டுள்ளது. போசான்களுக்கு எடுத்துக்காட்டுகளாக அடிப்படைத் துகள்களான போட்டான்கள் (ஒளித் துகள்கள்), குளுவான்கள், கடவுள் துகள்கள் என்றழைக்கப்படும் ஹிக்ஸ் போசான் போன்றவைகளைக் கூறலாம்.
யார் இந்த போஸ்?: 1894-ஆம் ஆண்டு ஜனவரி 1-இல் கொல்கத்தாவில் சத்யேந்திர நாத் போஸ் பிறந்தார். இவர் உள்ளூர் தொடக்கப் பள்ளி, நியூ இந்தியன் ஸ்கூல், இந்து பள்ளிகளில் அடுத்தடுத்து பயின்றார். கொல்கத்தா பிரசிடென்சி கல்லூரியில் இளம் அறிவியல் பட்டமும், கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் பயன்பாட்டுக் கணிதத்தில் முதுநிலைப் பட்டமும் பெற்றார்.
பியர்-சைமன் லாப்லாஸூக்கு இணையான கணிதவியலாளராகத் திகழ்ந்த இவருக்கு ஜெர்மன், பிரெஞ்சு மொழிகளில் வெளியான படைப்புகளை வாசிக்கும் அளவுக்கு அறிவியல் சார்ந்த மொழித்திறனும் இருந்தது.

1914-இல் முதலாம் உலகப் போர் தொடங்கியதால், ஐரோப்பிய அறிவியல் இதழ்கள் இந்தியாவுக்கு வந்து சேர்வது அரிதானது. அப்போது, ஐரோப்பாவில் குவாண்டம் கோட்பாடுகள், அணுக்கருக் கோட்பாடுகள், சார்பியல் கோட்பாடு ஆகியவற்றில் புதிய சாத்தியக் கூறுகள் மலர்ந்தன.
போஸூம் தனது நண்பரான மேக்நாத் சாஹாவும் பெங்கால் பொறியியல் கல்லூரியில் இயற்பியல் கற்பித்து வந்த ஆசிரியரான பால் ப்ரூல் என்பவரிடமிருந்து அதிநவீன பாடப் புத்தகங்களைப் பெற்றனர். கடின உழைப்பின் மூலம், மின்காந்தவியல், சார்பியல் கோட்பாடு, நிறமாலையியல், புள்ளியியல் இயக்கவியல், வெப்ப இயக்கவியல் ஆகிய துறைகளில் தங்கள் அறிவை முதுகலை நிலைக்கு உயர்த்திக் கொள்ள அவர்களால் முடிந்தது.
போஸ், சாஹா ஆகியோர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் சிறப்பு மற்றும் பொதுச் சார்பியல் கோட்பாடு குறித்த ஆய்வுக் கட்டுரைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளை வெளியிட்டனர். 1921-இல் போஸ் டாக்கா பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறை ரீடர்' பதவியில் நியமிக்கப்பட்டார். 1914-இல் தனது 20-வது வயதில், போஸ் செல்வந்த மருத்துவரின் மகள் உஷாபாலா கோஷை மணந்தார். இவர்களுக்கு ஒன்பது குழந்தைகள் பிறந்தனர்.
போஸ் அறிவியலைப் பரவலாக மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் ஆர்வம் காட்டியதோடு, இந்தியச் சுதந்திரத்தின் தீவிர ஆதரவாளராகவும் இருந்தார். தொழிலாளர்களின் குழந்தைகளுக்காக அவர் மாலைநேர வகுப்புகளை நடத்தினார். இவர் தனது 33-வது வயதில் டாக்கா பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறைத் தலைவரானார். 1945-இல் போஸ் கொல்கத்தா பல்கலைக்கழகத்துக்குத் திரும்பி, 1956 வரை கற்பித்தார். 1959-இல் இவர் தனது 65-ஆம் வயதில் இந்தியாவின் தேசியப் பேராசிரியர்' என்ற கெüரவப் பட்டத்தைப் பெற்றார். பின்னர், கெüரவப் பேராசிரியராக, அணு இயற்பியல் ஆராய்ச்சியை மேற்கொண்டார். இவர் கவிதை, இசை, சதுரங்கத்தையும் விரும்பினார். சத்யேந்திர நாத் போஸ், 1974-ஆம் ஆண்டு பிப்ரவரி 4-இல் தனது 80-வது வயதில் காலமானார்.
பத்ம விபூஷண்', ஃபெல்லோ ஆஃப் ராயல் சொசைட்டி' போன்ற விருதுகளைப் பெற்ற இவர், நோபல் பரிசு பெறாத விஞ்ஞானியாவார். இவரது அறிவியல் பணிகளைப் பாராட்டும் வகையில், எஸ். என். போஸ் தேசிய அடிப்படை அறிவியல் மையம்' என்கிற ஆய்வு மையம் மத்திய அரசின் ஆளுகையில் கொல்கத்தாவில் இயங்கி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இந்த வாரம் கலாரசிகன் - 26-07-2026

45 வயதில் தாயானதை அறிவித்த நடிகை பத்மப்ரியா!
அரசு கல்லூரிகளில் பி.எஸ்சி. இயற்பியல், கணிதம் படிக்க ஆளில்லை!
அறிவைத் தேடு!
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



