ரூ. 100 கோடி மோசடி: தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் கைது!தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

அறிவைத் தேடு!

'கிராமத்தில் பிறந்து, தமிழ் வழியில் கல்லூரிப் படிப்பை முடித்து அறிவியல் துறையில் உச்ச நிலையை அடைந்தவனாக இருக்கிறேன்.

News image
Updated On :28 ஜூன் 2026, 4:06 am IST

'கிராமத்தில் பிறந்து, தமிழ் வழியில் கல்லூரிப் படிப்பை முடித்து அறிவியல் துறையில் உச்ச நிலையை அடைந்தவனாக இருக்கிறேன். நேர்மை, விடாமுயற்சி, சமூகப் பொறுப்புணர்வு ஆகியன இருந்தால் சாதிக்க முடியாதது எதுவுமில்லை. 'அறிவைத் தேடு..

சமூகத்துக்குத் திருப்பிக் கொடு' என்ற இலக்கைக் கொண்டு செயல்பட்டால் இளைய தலைமுறையினர் எதிர்காலத்தில் வெற்றியாளராகலாம்' என்கிறார் பேராசிரியர் எஸ்.குணசேகரன்.

ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு உள்பட்ட கத்தியவாடி என்கிற கிராமத்தைப் பூர்விகமாகக் கொண்ட இவர், சென்னை செயின்ட் பீட்டர்ஸ் உயர்கல்வி, ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆராய்ச்சி, மேம்பாட்டுப் புல முதன்மையராகப் பணியாற்றி வருகிறார். தமிழ்நாட்டில் பல பகுதிகளில் உள்ள முப்பத்தைந்துக்கும் மேற்பட்ட பள்ளிகள், கல்லூரிகளுக்கு புரவலராக உள்ளதோடு, கல்வி, விளையாட்டில் சிறந்து விளங்கும் மாணவ, மாணவியர்களுக்கு ஆண்டுதோறும் பரிசுகள் வழங்கி ஊக்கப்படுத்தி வருகிறார்.

அவரிடம் பேசியபோது:

'1954- ஆம் ஆண்டில் பிறந்தேன். உள்ளூரில் பள்ளிக் கல்வியை முடித்தேன். தமிழ் வழியில் சென்னை மாநிலக் கல்லூரியில் இயற்பியலில் இளம் அறிவியல் பட்டமும், திருச்சி தூயவளனார் கல்லூரியில் முதுஅறிவியல் பட்டமும், அண்ணா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும், சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுமுனைவர் பட்டமும் பெற்றேன்.

சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பேராசிரியராக 32 ஆண்டுகளும், சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் 4 ஆண்டுகள் பதிவாளராகவும் பணியாற்றினேன்.

தமிழ்நாடு அரசின் பாடத் திட்ட திருத்தக் குழு உறுப்பினர், பாடநூல் எழுத்துக் குழுத் தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளில் திறம்பட கல்விப் பணியாற்றினேன்.

இந்திய நிறமாலை இயற்பியல் கழகம்

அறிவியல், சுற்றுச் சூழல் கல்வி தொடர்பான 14 நூல்களை தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளேன். இதுவரை 86 ஆய்வு மாணவ, மாணவியர் எனதுஆய்வுநெறியாளுகையின் கீழ் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். எனது ஆராய்ச்சி மூலம் 500 ஆய்வுக் கட்டுரைகள் இதுவரை சர்வதேச ஆய்விதழ்களில் வெளியிடப்பட்டுள்ளன. தமிழ்நாடு விஞ்ஞானி விருது, நல்லாசிரியர் விருது, சிறந்த ஆராய்ச்சி வழிகாட்டி விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளேன்.

உலகளாவிய ஆராய்ச்சியாளர்களை ஒருங்கிணைக்கும் நோக்கத்துடன் 'இந்திய நிறமாலை இயற்பியல் கழகம்' என்கிற சங்கத்தை உருவாக்கி, இருபத்தாறு ஆண்டுகளுக்கும் மேலாக நடத்திவருகிறேன். இந்த அமைப்பின் வாயிலாக நாட்டில் பல்வேறு இடங்களில் கருத்தரங்குகளை நடத்தியுள்ளேன். அதனால் ஆயிரக்கணக்கான ஆய்வு மாணவர்களுக்கும், பேராசிரியர்களும் பயன் பெற்றுள்ளனர். இப்போதும் கருத்தரங்குகள் நடைபெற்று வருகின்றன.

வாழ்நாள் சாதனையாளர் விருது

இதுதவிர, அறிவியல் ஆராய்ச்சியில் சிறந்து விளங்கும் மூத்த, இளம் விஞ்ஞானிகளை கெளரவிக்கும் வகையில் அவர்களுக்கு மூத்த விஞ்ஞானி விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது உள்ளிட்ட விருதுகள் வழங்கப்படுகின்றன. அறிவியல் ஆராய்ச்சிகளை ஊக்குவிப்பதிலும் இளம் தலைமுறை ஆய்வாளர்களை உற்சாகப்படுத்துவதிலும் தீவிரமாகப் பங்களிப்பைச் செய்கிறோம். பல கல்லூரிகளில் நடைபெறும் அறிவியல் ஆய்வு மாநாடுகளுக்கும் நிதியுதவி அளிக்கிறோம்.

உலகத் தரத்திலான அறிவியல் ஆராய்ச்சிக்கு வித்திடும் வகையில் 'மேம்பட்ட மருத்துவ இயற்பியல் மையம்', 'ஆராய்ச்சி மேன்மை மையம்' உள்ளிட்ட ஆய்வு மையங்கள் தமிழ்நாட்டில் நிறுவப்படுவதற்கு உறுதுணையாக இருந்துள்ளேன்.

ஆய்வுக்காக காப்புரிமை

குலு விதைகளிலிருந்து தைராய்டு நோய்க்கான சிகிச்சையில் பயன்படும் உயிர்ச்செயல் கூறுகளைப் பிரித்தெடுத்த ஆய்வுக்காக காப்புரிமை பெற்றுள்ளேன். கரும்புச் சர்க்கரையிலிருந்து பெறப்பட்ட நானோ செல்லுலோஸிஸ் நாரிலிருந்து புற ஊதாக் கதிர்களைத் தடுக்கும் பொருளை உருவாக்கியுள்ளேன். மருத்துவம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, வாழ்வாதார மேம்பாட்டுக்காக உதவும் ஆராய்ச்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறேன்.

பல்கேரியாவின் சோஃபியா மருத்துவப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து இந்திய மதிப்பில் சுமார் ரூ.ஆயிரம் கோடியில் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவியுடன் சர்வதேச ஆராய்ச்சி ஒத்துழைப்புத் திட்டத்தை உருவாக்கியுள்ளேன்' என்கிறார் குணசேகரன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.