பாஜகதான் எதிரி; கூட்டணியை உடைக்க சமாஜவாதி விரும்பாது: அகிலேஷ் யாதவ் உறுதி!உசைன் போல்ட் சாதனையை முறியடித்த சீன ரோபோ!சர்வதேச விமானப் பயணிகளுக்கு போர்டிங் பாஸில் முத்திரை வேண்டியதில்லை!குழந்தைகளுக்கான இருமல் மருந்துகள்: இரு வகை மூலப் பொருள்களுக்குத் தடைவெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இன்று ரஷியா பயணம்!படிக்காமலும் வேலைக்கும் செல்லாத 8.7 கோடி இளைஞா்கள்: நீதி ஆயோக்!

கேளீர் தமிழ் வரலாறு-2: ஓலையில் உலாவி வளர்ந்த ஒண்டமிழ்!

ஒரு தேதியைத் தமிழுள்ளங்கள் சிவப்பு எழுத்துகளில் பதித்துக்கொள்ள வேண்டும் என்றார் உலகளாவிய அறிஞர் ஒருவர்.

Published On :23 ஆகஸ்ட் 2026, 4:00 am IST

ஒரு தேதியைத் தமிழுள்ளங்கள் சிவப்பு எழுத்துகளில் பதித்துக்கொள்ள வேண்டும் என்றார் உலகளாவிய அறிஞர் ஒருவர்.

உயர்ந்த சிந்தனைகளை, ஒப்பற்ற நிகழ்வுகளைச் பெருமைப்படுத்தப் பொன்னெழுத்துகளால் பொறிக்கத்தக்கன எனக் கூறுவது மரபு. பாரதியின் தம்பி என்று போற்றப்படும் பரலி சு. நெல்லையப்பர் பாரதியாரின் பாப்பா பாட்டின் பாடல்களைத் "தங்க ஏடுகளில் நவரத்ன எழுத்துகளால் பொறித்தற்குரியன' எனப் போற்றியிருக்கின்றார்.

ஆனால், சிவப்பு எழுத்துகளில் பொறிப்பது என்பது பற்றி நாம் அதிகம் அறிந்திருக்கிறோமா? அதுவும் தமிழ் வரலாற்றில் ஒரு தேதியைத் தமிழ் மாணவர்கள், தமிழர்கள் சிவப்பு எழுத்தில் பொறித்துவைத்துக் கொள்ளவேண்டும் என்று புகழ்பெற்ற அறிஞர் ஏ.கே. இராமானுசன் கூறியிருப்பது தெரியுமா? அதை வழிமொழிந்து செக்கோஸ்லாவாக்கியா நாட்டுத் தமிழறிஞர் கமில் சுவலபில் பரவலாக எடுத்துரைத்திருப்பது தெரியுமா?

21-10-1880. இந்தத் தேதியைத்தான் சிவப்பு எழுத்தில் பொறித்துவைத்துக் கொள்ளவேண்டும் என அவர் குறிப்பிட்டிருந்தார்.

அப்படி இந்தத் தேதிக்கு என்ன சிறப்பு?

இந்த நாளில்தான் கும்பகோணத்திற்குப் புதிதாக நீதிபதியாக வந்த சேலம் இராமசாமி முதலியாரை எதிர்காலத் தமிழ்த்தாத்தாவாகிய கும்பகோணம் கல்லூரியின் 25 வயது இளைய தமிழாசிரியர் (உ.வே.) சாமிநாதையர் முதன்முதலாகச் சந்தித்தார். உ.வே.சா. எந்தெந்த நூல்களையெல்லாம் படித்திருக்கிறார் என்பதைக் கேட்டறிந்த முதலியார், சிலப்பதிகாரம் படித்திருக்கிறீர்களா? சிந்தாமணி படித்திருக்கிறீர்களா? மணிமேகலை படித்திருக்கிறீர்களா? என வினா எழுப்பிப் பழந்தமிழ் இலக்கிய உலகத்தை உ.வே.சாமிநாதையருக்கு அறிமுகப்படுத்தினார். அந்த நாளே தமிழின் திருநாள்; திருப்புமுனை நாள்.

அந்தச் சந்திப்பின் விளைவுதான் உ.வே.சா. ஓலைச்சுவடிகளைத் தேடி நடத்திய யாத்திரைகள்! ஓலைச்சுவடிகளைப் பதிப்பித்த திருப்பணிகள்! சிந்தாமணியை, சிலப்பதிகாரத்தை, பத்துப்பாட்டை, எட்டுத்தொகையின் புறநானூற்றை, ஐங்குறுநூற்றை, பதிற்றுப்பத்தை, பரிபாடலை எனப் பழந்தமிழிலக்கியங்களில் பெரும்பாலானவற்றை முதன்முறையாக முழுமைவடிவில் உ.வே. சா. பதிப்பித்து நமக்களிக்க, அந்தநாளில் நிகழ்ந்த சந்திப்பே காரணம். அவருடைய வாழ்வில் மட்டுமல்ல, தமிழின் வரலாற்றிலும் திருப்பத்தை ஏற்படுத்திய நாள் அது.

எல்லாம் சரி, அதென்ன சிவப்பு எழுத்தில் பொறித்தல்? புனித நாள் என்று பொருள். இன்றும் நாட்காட்டிகளில் புனித நாள்களை, பண்டிகை நாள்களைச் சிவப்பு எழுத்தில்தானே அச்சிடுகின்றனர். உலக அளவில் சிவப்பு எழுத்தில் புனித நாள்களைக் குறிப்பது மரபு. தமிழுலகுக்குப் புனித நாள், தமிழ் செம்மொழியாவதற்கு வித்திட்ட தலைநாள், பழந்தமிழ் இலக்கியக் கருவூலம் கண்டு

பிடிக்கப்பட, வெளிப்படக் காரணமான நாள்தானே? அதனால்தான் ஏ.கே. இராமானுசன் அப்படிக் குறிப்பிட்டார்.

உ.வே. சாமிநாதையரால் வெளிப்பட்ட இந்த இலக்கியங்களும் அவருக்கும் முன்னோடியாகிய பழந்தமிழ்ப் பதிப்புலகின் தலைமகன் சி.வை. தாமோதரம் பிள்ளையால் அதற்குமுன்பே வெளிப்பட்ட கலித்தொகையும், பிற சங்கத் தமிழ்ச்செல்வங்களும், ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பியமும் ஈராயிரம், மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை.

காகிதம் தோன்றாத காலத்தில் இவையெல்லாம் எவ்வாறு எதில் எழுதப்பட்டன? எப்படி இத்தனை காலங்கள் காப்பாற்றப்பட்டன?

சுவடிகளில்! ஓலைச்சுவடிகளில்! பனையோலைச் சுவடிகளில்! எழுத்தாணி கொண்டு எழுதப்பட்டன.

உலகின் பிற நாடுகளில் வழங்கிய மொழிகளின் எழுத்துகள், நூல்கள், இலக்கியங்கள் பண்டைக் காலங்களில் எவற்றில் எழுதப்பட்டன?

பபைரஸ் எனும் கோரைப்புல்லில் எகிப்து முதலிய நாடுகளில் எழுதியதாகச் சொல்கிறது வரலாறு. தோல், துணி, மரப்பட்டை, மரப்பலகை முதலியனவும் எழுதப் பயன்பட்டன. ஏறத்தாழ நான்காயிரம் ஆண்டுகளுக்குமுன்அக்காடியா மொழியில் படைக்கப்பட்ட "கில்கமேஷ்' என்னும் காப்பியத்தின் பகுதிகள் பன்னிரண்டு கல் தகடுகளில் எழுதப்பட்டுக் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

நம் தமிழ்மொழியின் பண்டைய எழுத்துப் பதிவுகளைப் பாறைகளில், பானை ஓடுகளில், நாணயங்களில், கல்வெட்டுகளில், செப்பேடுகளில் எனக் காலந்தோறும் நாம் காண்கிறோம். ஆயினும், இலக்கிய இலக்கணம் முதலிய பல்துறை நூல்களும் ஓலைச்சுவடிகளிலேயே எழுதப்பட்டிருக்கின்றன. கல்வெட்டுகளில் பல செய்யுள்களும், அருகிய நிலையில் இலக்கியங்களும் இடம்பெற்றுள்ளன. சுவடி, ஏடு, ஓலை ஆகியன குறித்துக் காலந்தோறும் தமிழிலக்கியங்கள் பேசியுள்ளன. நம் அரசர்களின் அவையில் "ஓலைநாயகம், திருமந்திர ஓலைநாயகம்' என்பவர்கள் ஓலையெழுதும் அலுவல் பார்த்தவர்களாவர்.

ஏ.கே. இராமானுசன்

ஏ.கே. இராமானுசன்

சங்க இலக்கியக் காலத்தை அடுத்துத் தோன்றிய ஓர் இலக்கியம் "முத்தொள்ளாயிரம்' என்பதாகும். அதில் ஒரு பாடல்:

மருப்பூசி யாக மறங்கனல்வேல் மன்னர்

உருத்தகு மார்புஓலை யாகத் திருத்தக்க

வையக மெல்லாம் எமதென் றெழுதுமே

மொய்யிலைவேல் மாறன் களிறு.

பாண்டிய மன்னனின் யானை, பகையரசரின் மார்பு என்னும் ஓலையில் தனது தந்தம் எனும் எழுத்தாணியால் "இந்த உலகமே எங்களுக்குச் சொந்தம்' என எழுதியதாம்! மிகப் பழங்காலத்திலேயே ஓலைச்சுவடிகளில் தமிழ்நாட்டில் எழுதிவந்தனர் என்பதை இப்படிப்பட்ட பழங்காலப் பதிவுகள் நமக்குக் காட்டுகின்றன. பிற்காலத்தில் தோன்றிய தமிழின் சிறப்பைப் பேசும் நூல் தமிழ்விடு தூது என்பதாகும். இந்த நூல் நயம்பட ஓலைச்சுவடிக்கு மஞ்சள் பூசுதல், மை

பூசுதல் ஆகியவற்றைச் சிலேடையாக்கி,

மஞ்சள் குளிப்பாட்டி மையிட்டு முப்பாலும்

மிஞ்சப் புகட்ட மிகவளர்ந்தாய்

எனத் தமிழைக்குழந்தையாகப் பாவித்துப் பேசுகின்றது. மேலும் மூல ஓலை, படி ஓலை பற்றியெல்லாம் பெரியபுராணம் பேசுகிறது. ஏடு ஆயிரங் கோடி எழுதாது தம் மனத்தே எழுதிப் படித்த விரகன் என்கிறது தனிப்பாடல்.

சங்க இலக்கியம், திருக்குறள் முதலிய பதினெண் கீழ்க்கணக்கு, காப்பியங்கள், பக்தி இலக்கியங்கள், பிரபந்தங்கள், இலக்கண நூல்கள், உரைகள், நிகண்டுகள் முதலிய அனைத்துத் தமிழ் நூல்களும் ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்டு நமக்கு வந்துசேர்ந்தவையே! பல இலட்சக்கணக்கான பாடல்களை, ஆயிரம் ஆயிரம் இலக்கியங்களை ஓலைச்சுவடிகளில் நம் முன்னோர்கள் எழுதியுள்ளனர். ஓலையில் எழுதுவது சாதாரண காரியமில்லை. அவ்வாறு எழுதப்பட்டவற்றை அச்சுநூலாகப் பதிப்பிக்கவும் படாதபாடு படவேண்டும்.

"விவேக சிந்தாமணி' என்னும் நூலின் பாடலொன்று, ஈடுபட்டுவிட்டால் மனத்தை நாளும் பலவகையிலும் துயர்செய்பவை எனச் சிலவற்றை வரிசைப்படுத்துகிறது.

தட்டா னிடத்தினில் தங்கப் பணிகள் சமைப்பதுவும்

வட்டாடு வாரைத் திருத்திநன் மார்க்கத்தில் வைப்பதுவும்

பட்டாங்கு காகிதப் புத்தகம் அச்சில் பதிப்பதுவும்

தொட்டார் மனத்தைப் பலவாறு நாளும் துயர்செய்யுமே!

ஓலைச்சுவடியில் இருப்பதை உரிய வகையில் அச்சுநூலாகப் பதிப்பிப்பதை அனுபவபூர்வமாக உணர்ந்தவர்போலும் இந்தக் கவிஞர்.

கமில் சுவலபில்

கமில் சுவலபில்

இராமலிங்க அடிகள் காலத்தில் ஓலையும் காகிதமும் ஒருசேர எழுதப் பயன்பட்டன. ஒரு சுவையான செய்தி: ஓலைச்சுவடிகளில் எழுதி எழுதிப் பழகிப் போன நம்மவர்கள் பலர்அச்சுநூல் வெளிவந்தபின்பும் அதைப் பார்த்து அந்தக் காலத்தில் ஓலையில் எழுதிவைத்துக்கொண்டனர். அப்படிப்பட்ட சுவடிகளும் நூற்றுக்கணக்கில் கிடைத்துள்ளன.

ஓலைச்சுவடி தேடி உ.வே.சா. தமிழ்நாடெங்கும் பலமுறை பயணம் செய்திருக்கிறார். வேண்டிய சுவடிகள் கிடைத்ததுமுண்டு. ஏமாந்து வெறுங்கையோடு திரும்பியதுமுண்டு. அவர் நெல்லைப் பகுதிக்கும், குன்றக்குடியை அடுத்த மிதிலைப்பட்டிக்கும் சென்றபோது சிலருடைய இல்லங்களில் ஏராளமான சுவடிகள் செம்மையாகப் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்ததைக் கண்டு மகிழ்ந்து அவற்றைப் பயன்படுத்தினார்.

அந்த இடங்களையெல்லாம் "தமிழ்த் தெய்வத்தின் கோயில்கள்' எனக் கொண்டாடினார். அன்று தமிழ்ச் சுவடிகளைஅந்தச் சில அன்பர்களேனும் இல்லங்களில் நன்றாகப் பராமரித்ததால்தான் இன்று "தமிழ்மொழி செம்மொழி' என்று நாம் நாடெங்கும் பெருமிதம் கொள்ள முடிகின்றது.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.