பெ.பெரியார்மன்னன்
ஆரம்பத்தில் எனது குடும்பத்தினர் எதிர்த்தாலும், நாள்கள் செல்ல செல்ல எனது செயல்பாட்டை அங்கீகரித்தனர். வயது முதிர்ந்த நிலையிலும் சுய சம்பாத்தியத்தில் உண்பது மன நிறைவைத் தருகிறது. உடல் தளரும் வரை சோர்வடையாமல், மது ஒழிப்பு பிரசாரத்தையும் சமூகப் பணியையும் தொடர்வேன்' என்கிறார், எஸ்.கே.கூத்தன்.
சேலம் மாவட்டத்துக்கு உள்பட்ட வாழப்பாடி அருகேயுள்ள சிங்கிபுரம் குட்டிமணி பள்ளி பகுதியைச் சேர்ந்த எழுபத்து ஏழு வயதான தொழிலாளியான கூத்தன், அரை நூற்றாண்டுக்கும் மேலாக மது ஒழிப்பு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
எந்த நேரமும் வெண்ணிற உடையில், தலையில் காந்தி குல்லாவையும், சட்டைப் பைக்கு மேல் 'மதுவை ஒழிப்போம்... மக்களைக் காப்போம்' என்ற விழிப்புணர்வு வாசகம் பொறித்த பட்டையும் அணிந்துகொண்டு சைக்கிளில் வலம் வரும் அவரிடம் பேசியபோது:
'ஏராளமான இளைஞர்கள் மதுப் பழக்கத்தால் மதிப்பு, மரியாதை, சொத்து சுகத்தையும் இழந்து, உடலைக் கெடுத்துக் கொண்டு, உயிரை மாய்த்துக் கொள்கின்றனர். மதுவால் ஏற்படும் மனித உயிர்கள், பொருளாதார இழப்புகளைக் கண்டேன். அமைதி வழியில் போராடி நாட்டுக்குச் சுதந்திரம் பெற்றுத் தந்த மகாத்மா காந்தியின் கருத்துகளால் ஈர்க்கப்பட்டேன்.
எனது இருபது வயது முதலே மது ஒழிப்பு பிரசாரத்தில் ஈடுபட்டேன். இதற்கான விழிப்புணர்வு கருத்துகளை, படித்தவர்களை அணுகி எடுத்துக் கூறுவேன். பாக்கு மரம் ஏறுதல், விவசாயப் பணிகள் செய்தல் போன்ற பணிகளால் கிடைக்கும் பணத்தைக் கொண்டு, துண்டுப் பிரசுரங்களாக அச்சிட்டு தயார் செய்து, செல்லுமிடமெங்கும் விநியோகிப்பேன்.
என்னைத் தேடி வரும் விதவைகள், முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு ஓய்வூதியம் பெற்றுக் கொடுத்தல், இலவச வீட்டுமனைப் பட்டா, சான்றிதழ்கள் போன்ற அரசு நலத் திட்ட உதவிகளைப் பெற்றுக் கொடுக்கும் பொது நலச்சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறேன்.
சிங்கிபுரம் கிராமத்தின் காவல் தெய்வமான பெருமாள் மலைக் கோயிலுக்குச் சாலை அமைத்தல், மின்சார வசதிக்கான அனுமதியைப் பெற்றுத் தந்துள்ளேன்.
எனக்குக் கிடைக்கும் குறைந்த வருவாயிலும் சிறிதளவு சேமித்து வைத்துக் கொண்டு, ஆண்டுதோறும் தைப்பொங்கல் தருணத்தில், மது ஒழிப்பு பிரசாரத்துக்குத் துண்டுப் பிரசுரங்களை அச்சடித்து, பொதுமக்களுக்கு விநியோகித்து, காந்திய வழியில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன்.
இளம் வயதில் பள்ளிக்குச் செல்லவில்லை. படிப்பறிவு இல்லாத நான், முதியோர் கல்வி வாயிலாகக் கற்றேன். எனது பணிகளுக்கு மனைவி ராஜம்மாளும், மகள்கள் செல்வராணி, அமுதவள்ளி, மகன் செந்தில் குமார் மற்றும் குடும்பத்தினர் உறுதுணையாக இருக்கின்றனர்' என்கிறார் கூத்தன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.