மீட்சிக்குப் பிறகு சென்செக்ஸ், நிஃப்டி மாற்றமின்றி நிறைவு!!ஜூனில் சில்லறை விலை பணவீக்கம் 4.38 சதவீதமாக உயர்வு!டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 27 காசுகள் சரிந்து ரூ. 95.65 ஆக நிறைவு!தில்லியில் ஞானபீட விருது பெற்றார் வைரமுத்து!முட்டை கொள்முதல் விலை ரூ. 6.70-ஆக நிர்ணயம்.லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் ஏ. அருண், சென்னை காவலர் பயிற்சி மைய இயக்குநராகப் பணியிட மாற்றம்பட்ஜெட்: ஜூலை 16 -ல் தமிழக அமைச்சரவை கூட்டம்!தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் கழகத்தின் தலைவராக லயோலா மணி நியமனம்!பெரம்பூர் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்!மேற்கு வங்க இடைத்தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்! முதல்வர் விஜய்யுடன் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும தலைவர் மனோஜ் குமார் சொந்தாலியா சந்திப்பு! திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் மீது நில அபகரிப்பு வழக்குசென்னையில் தரையிறங்கிய விமானம் மீது பறவை மோதியது!எழுத்தாளர் பூமணி உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு! 7,700 பக்தர்கள் அடங்கிய 12-வது குழு அமர்நாத் புறப்பட்டது!
/

மண்ணுக்கு வளம் சேர்க்கும் வேர் ஊக்கி மருந்து

பஞ்ச பூதங்களில் ஒன்றான நிலம் தன்னோடு ஐக்கியமானவர்களை உயிர்ப்போடு வைத்திருக்கும். அந்த வகையில்தான் தாவரங்கள்.

News image
Updated On :7 ஜூன் 2026, 4:00 am IST

தமிழானவன்

பஞ்ச பூதங்களில் ஒன்றான நிலம் தன்னோடு ஐக்கியமானவர்களை உயிர்ப்போடு வைத்திருக்கும். அந்த வகையில்தான் தாவரங்கள். மனிதர்களுக்கு இதயத்தைப் போலவே, தாவரங்களுக்கு வேர்கள். நிலத்தில் கிடைக்கும் சத்துகளை உறிஞ்சும் தன்மையுடைய வேர்கள் முக்கியத்துவம் கொண்டவை. தகுதியுள்ள தாவரங்கள்தான் மண்ணில் வேர்ப் பிடிக்கும். மீதமுள்ள தாவரங்கள் அழியும்.

இதைக் கருத்தில் கொண்டு அனைத்துத் தாவரங்களும் வேர்ப் பிடிக்கும் வகையில் ஊக்கி மருந்தைக் கண்டுபிடித்துள்ளார் தாவரவியல் நிபுணர் வெ. ஸ்ரீலட்சுமி. பெங்களூரு ஹசரகட்டாவில் உள்ள மத்திய அரசின் இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனத்துக்கு இவருடைய வேர் ஊக்கி மருந்து விரைவில் பயன்படுத்தப்பட உள்ளது.

இவர் திசு வளர்ப்பு முறையில் பல்வேறு வீரியமுடைய செடி, மரக்கன்றுகளை உருவாக்கியும், அதற்கான மருந்துகளையும் தொழில்நுட்பங்களையும் கண்டுபிடித்துள்ளார். இதற்கு இவரது தந்தையும், 'பத்மஸ்ரீ' விருதாளரும் வேளாண் விஞ்ஞானியுமான டி. வெங்கடபதி ரெட்டியாரும் இணைந்து உறுதுணையாக இருக்கிறார்.

Story image

'இப்படி சாதனை மருந்தைத் தயாரித்தது எப்படி?' என்பது தொடர்பாக, புதுச்சேரி கூடப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீலட்சுமியிடம் பேசியபோது:

'ரசாயனம் கலந்ததே நான் கண்டுபிடித்த வேர் ஊக்கி மருந்து. ஆனால், 100 சதவீதம் பயோ கலவை. ஐபிஏ- இன்டோல்-3 பியூட்ரிக் ஆசிட், ஐஏஏ-இன்டோல்-3 அசிட்டிக் ஆசிட், என்ஏஏ- நேப்தலிக்டிக் அசிட்டிக் ஆசிட் ஆகிய மருந்துகள் தண்ணீரில் கரையாது. இதைக் கரைக்க ரெக்டிக்பைடு ஸ்பிரிட் (ஆர்.எஸ்.) துணையுடன் கரைத்து ஊக்கி மருந்தைத் தயாரிக்கிறோம்.

பொதுவாக டிஏபி, யூரியா, பொட்டாஷ் கொடுப்பதால் செடிகள், கொடிகள் குளூக்கோஸ் சுகர் உடையதாக மாறுகிறது. இதனால் செடியின் இலைகள், வேர்கள் நோய் எதிர்ப்புத் தன்மையை இழக்கின்றன.

இதைக் கருத்தில் கொண்டு திசு வளர்ப்பு முறையில் பெரிய மூலக்கூறு, சிறிய மூலக்கூறு, கனிமங்கள் அடங்கிய கலவையைப் பதத்துடன் (எல்.டி. 50) அளித்தால் செடி செழித்து வளரும். ஊட்டச் சத்து, வேர் ஊக்கி, நோய் எதிர்ப்புச் சக்தியுடன் செடி நன்கு வளரும். இதற்குப் பெயர் 'காம்பளக்ஸ் சுகர்'. தேவையான பல்வேறு மூலப் பொருள்களை இஸ்ரேல் நாட்டில் இருந்து வரவழைக்கிறோம்.

Story image

இந்தத் தொழில்நுட்பத்தை அறியாத பல மிளகுச் செடி உற்பத்தியாளர்கள் மிளகு ஓடு கொடியிலிருந்து வெட்டி எடுத்து உற்பத்தி செய்கின்றனர். அதனால் கொடியுடன் நோயும் வளர்கிறது. அதைத் தடுக்கத்தான் எங்களிடம் மருந்து இருக்கிறது. எங்களின் இந்த பயோ மருந்தை ஒருமுறை பயன்படுத்திவிட்டால், ஆறு மாதங்களுக்கு இறப்பதில்லை.

செடி வாங்குவோருக்கு ஓராண்டுக்கு இந்த மருந்து இலவசம். ஒரு மிளகுச் செடி ரூ.100-க்கு எங்களிடம் கிடைக்கும். ஒரு செடிக்கு 50 கிராம் மருந்து போதுமானது. மழைக் காலத்துக்கு முன்பும், பின்பும் இதை ஓராண்டுக்கு இரண்டு முறை பயன்படுத்த வேண்டும். பௌடர் வடிவில் இருக்கும் இந்த மருந்தை செடியைச் சுற்றிலும் வைத்துவிட்டு மண்ணை மூடிவிட்டு நீர் பாய்ச்ச வேண்டும். சொட்டு நீர்ப் பாசனம் வழியாகவும் நீர் அளிக்கலாம். இந்த மருந்து வைக்கும்போது ஒரு செடிக்கு 5 லிட்டர் தண்ணீர் தேவை.

சிறப்பு அம்சங்கள்

பல்கலைக்கழகங்களும், ஆராய்ச்சி நிறுவனங்களும் தற்போதுள்ள தொழில்நுட்பங்களின் உதவியால் உருவாக்கப்படும் செடிகளில் 30 சதவீதம் மட்டும்தான் பிழைக்கும். 70 சதவீதம் அழுகிவிடும். எங்களிடம் 100 சதவீதம் செடிகள் பிழைக்கும் தொழில்நுட்பம் இருக்கிறது.

இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.ஏ.ஆர்.) , இந்தத் தொழில்நுட்பம், கண்டுபிடிப்புகளை மற்ற ஆராய்ச்சி நிலையங்களுடன் பகிரும்படி கேட்டுக் கொண்டுள்ளது. இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கும் கடிதம் எழுதியுள்ளோம்.

சந்தையில் கிடைக்கும் எத்தனையோ மருந்துகள் மண்ணை பற்றிய சிந்தனை இல்லாமல் செயல்படுகின்றன. எங்களது ஊக்கி மருந்து மண்ணுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாது. மாறாக மண்ணின் தன்மையைப் பல்வேறு வகையிலும் மேம்படுத்த உதவும்.

மிளகுக் கொடிக்கு அதிக அளவில் பயன்படுத்துகிறோம். மனிதர்களுக்கு மருந்தாகப் பயன்படும் மிளகு சாகுபடியை நம்பி ஏராளமான மலைப் பிரதேச, குளிர்ப் பிரதேச விவசாயிகள் இருக்கின்றனர். மரபு ரீதியாக சாகுபடி செய்யப்படும் மிளகு பலன் கொடுக்க ஐந்து ஆண்டுகளாகும்.

45 அடி உயரம் வரை வளரும் கொடியில் ஏறி பறிக்கவும் ஆள்கள் கிடைப்பது அரிது. இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் வேர் ஊக்கி மருந்தை மட்டும் கொடுக்காமல், நாங்களே மிளகுச் செடியை திசு வளர்ப்பு முறையில் உற்பத்தி செய்து தருகிறோம். எங்களிடம் பெற்றுச் செல்லும் செடிகள் 18 மாதங்களில் பலன் கொடுக்க ஆரம்பிக்கும். 15 அடி உயரத்துக்கு மேல் வளராது.

ஏற்கெனவே உயிர்வாழும் மரத்தில் இந்தக் கொடியைப் படரவிட்டால், போதுமானது. சரியாகப் பராமரித்தால் ஒரு மிளகுக் கொடி சுமார் 30 ஆண்டுகள் வரை பலன் கொடுக்கும்.

Story image

பொதுவாக மற்ற விவசாயிகள் பயன்படுத்தும் மிளகுக் கொடி ஓராண்டுக்கு 7 கிலோ பச்சை மிளகு அளவுக்குதான் மகசூல் கொடுக்கும். ஆனால், நாங்கள் உற்பத்தி செய்யும் கொடி 8 முதல் 10 ஆண்டுகளில் நல்ல பராமரிப்பில் 70 கிலோ பச்சை மிளகை கொடுக்கும்.

நீர் கடினத்தன்மையாக மாறிவிட்டது. அதனால் நீரைத் தூய்மைப்படுத்திப் பயன்படுத்தினால் மிளகு உள்ளிட்ட சாகுபடிகள் விரைந்து வளரும். அதிகமாக நீரைப் பாய்ச்சினாலும் மிளகுச் செடி அழுகிவிடும். சொட்டு நீர்ப் பாசனத்தின் வாயிலாக நன்னீர் தெளித்தாலே போதுமானது. அனைத்து மாதங்களிலும் எங்களிடம் உற்பத்தியாகும் மிளகுக் கொடிகளை நடலாம்'' என்கிறார் ஸ்ரீலட்சுமி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.