தமிழகத்தில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்: சென்னையில் முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்!இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு!ஓராண்டில் 229 சிறப்பு ரயில்களை இயக்கி தெற்கு ரயில்வே சாதனை7 - 9 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு மும்மொழிக் கொள்கை பொருந்தாது: சிபிஎஸ்இமது இல்லாத நகராட்சியாக மாறியது அரக்கோணம் நகராட்சி! முதல்வர் விஜய்க்கு மக்கள் பாராட்டு!
/

கற்க கசடற..!

ஆசிரியர் பணி அறப்பணியாகும். கற்றவை, கற்பவை பிறருக்கும் பயனுள்ளதாக அமைய வேண்டும்.

News image
Updated On :28 ஜூன் 2026, 4:09 am IST

'ஆசிரியர் பணி அறப்பணியாகும். கற்றவை, கற்பவை பிறருக்கும் பயனுள்ளதாக அமைய வேண்டும். வெளிநாட்டவர்கள்தான் சாதிக்க வேண்டும் என்றில்லை. நம்மாலும் சாதனைகளைப் படைக்க முடியும்' என்கிறார் நாமக்கல் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் எம்.செல்வம்.

'தான் கற்றதை ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் பயிற்சியாக வழங்குவதோடு மட்டுமின்றி, பணியாற்றும் இடத்தை பசுமைச் சோலையாக மாற்றி, பூத்துக் குலுங்கும் மரங்கள் ரசிப்பதற்கு மட்டுமல்ல; அவற்றின் மூலம் பொது அறிவையும், அறிவியலையும் அறியலாம்' என்ற நோக்கில் இவர் செயல்படுகிறார்.

போட்டித் தேர்வுகளில் கேட்கப்படும் விசித்திரமான கேள்விகளுக்குப் பதில்களுடன் இணைத்து எழுத்து வடிவில் பலகையாக தயார் செய்து அவற்றை மரங்களில் கட்டி பாதுகாத்து வரும் செல்வத்திடம் பேசியபோது:

'சேலம் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வராகப் பணியாற்றி வந்த நிலையில், மூன்று ஆண்டுகளுக்கு முன் நாமக்கல்லுக்குப் பணியிட மாறுதல் செய்யப்பட்டேன்.

தொடக்கம் முதல் உயர்நிலை வரையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு அறிவியல், விஞ்ஞானம் சார்ந்த தகவல்களைப் பயிற்சிகள் வாயிலாக அளித்து வருகிறேன். இதனை கற்கும் ஆசிரியர்கள் அவற்றை மாணவர்களுக்கும் கற்பிக்கின்றனர். இதற்குத் தேவையான ஆதரவை ரோட்டரி, அரிமா சங்கத்தினர் அளிக்கின்றனர்.

அண்மையில், நிலவின் நிலவியலை ஆய்வு செய்யும் வகையில் 160 வானோக்கிகள் தயாரிக்கப்பட்டன. இதனால் 150 ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. அந்த வானோக்கி கருவியில் 69 ஆசிரியர்கள் நிலவின் நிலப்பரப்பை மூன்றாம் பிறை முதல் பெளர்ணமி வரை நிலவின் ஒளிபடும் பகுதியையும், இருள் பகுதியையும் பிரிக்கும் டெர்மினேட்டர் கோடு, மாரே அமைதிக்கடல், டைக்கோ, கோபர்நிகஸ் நிலக்குழிகள், தூக்கி எறியப்பட்ட எஜெட்டா பாறைகள், டைக்கோ, நிலக்குழியில் உள்ள கதிர்கோடுகள், மான்டெஸ் மலைப்பகுதி போன்றவற்றை ஆய்வு செய்தனர்.

மே 30 முதல் ஜூன் 3 வரை ஆசிரியர்கள் நிலவின் நிலப்பரப்பை ஆய்வு செய்தபோது, 342 களப்பதிவுகள் செய்யப்பட்டன. இதுதவிர, மாணவர்கள் உள்ளிட்ட 5,228 பேர் வானோக்கி மூலம் நிலவின் ரகசியங்களை நேரில் கண்ட அனுபவத்தைப் பெற்றனர். நிலவியல் ஆய்வில் ஈடுபட்ட 69 ஆசிரியர்களுக்கு 'கலிலீயோ வான்நோக்கர்' விருதுகளை வழங்கினோம். இதுதவிர, பல்வேறு வகையான ஆராய்ச்சி வாய்ப்புகளையும் ஆசிரியர்களுக்கும், அவர்கள் மூலம் மாணவர்களுக்கும் கற்பிக்கிறோம்.

நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பின்புறம் அமைந்துள்ள மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனமானது சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. கட்டடம் இல்லாத இதர பகுதிகளில் மியாவாக்கி வனப் பகுதியை அமைத்துள்ளதால், அது மயில், புறா, கிளி, மைனா போன்ற பல பறவைகளிடம் புகலிடமாகவும் விளங்குகிறது.

அடர்த்தி மிகுந்த மரங்கள் இருப்பதாலும், இயற்கை எழில் சூழ்ந்த இடமாக உள்ளதாலும் போட்டித் தேர்வாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இவர்களுக்காக ஒவ்வோர் மரத்திலும் தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், வரலாறு, ஆன்மிகம் போன்ற தகவல்களை எழுத்து வடிவில் பெயர்ப்பலகையாக தயார் செய்து தொங்க விட்டுள்ளோம்.

மாணவர்களும், தேர்வர்களும் இதனை குறிப்பெடுத்து தங்களுடைய கல்விக்கும், வாழ்வியல் முன்னேற்றத்துக்கும் பயன்படுத்திக் கொள்கின்றனர். ஆசிரியர் பணி அறப்பணி. அதிலிருந்து சற்றும் விலகிவிடக்கூடாது' என்கிறார் எம்.செல்வம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.