தமிழ் மொழியில் பெரிதும் விருப்பம் கொண்டவர் மகாத்மா காந்தி. இவர் கம்பர் குறித்து உயர்ந்த கருத்தைப் பெற்றிருந்தார். 'பார்த்தோலி' எனும் இடத்தில் இருந்த காந்தியடிகள், சிறையில் இருந்த ராஜாஜிக்கு 1922-ஆம் ஆண்டு பிப்ரவரி 2-இல் எழுதிய கடிதத்தில் கூறியிருந்தவதாவது:
'உங்களிடம் ராட்டையும், ராமாயணமும் உள்ளன என்பதை அறிய நான் பொறாமைப்படுகிறேன். அந்த ராமாயணம் வால்மீகி ராமாயணத்தின் மோசமான மொழிபெயர்ப்பாக இராது. அது 'கம்பராமாயணம்' போன்று இருக்கும் என்று நான் நம்புகிறேன். போப்பின் தமிழ் நூலில் நான் கம்பராமாயணத்தைப் பற்றி நிறைய படித்திருக்கிறேன்' எனக் கூறியிருந்தார்.
மறைந்த முதல்வர் அண்ணா வாழ்ந்த காஞ்சிபுரம் இல்லத்தை 1980-ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசு நினைவு இல்லமாக்கியது. இதன் திறப்பு விழாவில் பங்கேற்ற அன்றைய குடியரசுத் தலைவர் நீலம் சஞ்சீவ ரெட்டி, 'இந்த எளிய இல்லத்தில் பிறந்த ஒருவர் பின்னாளில் மாநில முதல்வரானது என்பது ஜனநாயகம் இங்கு தழைப்பதைக் காட்டுகிறது. நான் அண்ணாவின் அளவுக்குப் படித்தவன் அல்லன். இருந்தாலும், குடியரசுத் தலைவராக ஆனதற்கு இந்திய ஜனநாயக அமைப்பே காரணம்' என்றார். முதல்வராக இருந்தவரின் நினைவு இல்லத்தை குடியரசுத் தலைவர் திறந்துவைத்தது இதுவே முதல்முறையாகும்.
'ஆட்டுக்கார அலமேலு' என்றொரு திரைப்படம் அந்தக் காலத்தில் வந்தது. கதாநாயகியால் வளர்க்கப்படும் அந்த ஆடு, அவருக்கு காவல் அரணாக இருந்தது. அவருடைய எதிரிகளைத் துரத்தித் துரத்தி முட்டி மோதி சாகசங்களைச்செய்வதாக ஆட்டைக் காட்டியிருந்தனர். இந்தப் படம் நூறு நாள்களைக் கடந்து வெற்றிப் படமானது. படத்தின் நூறாவது நாள் விழாவில் அந்த ஆடு பங்கேற்பதாக விளம்பரம் செய்தனர். அந்த ஆட்டைக் காண கூட்டம் அலைமோதியது. அதே மாதிரியான ஆடுகள் பல ஊர்களில் நிறுத்தப்பட்டன என்பது சுவையான செய்தி.
அப்போது கவிக்கோ அப்துல் ரகுமான் எழுதிய கவிதை:
'ஆடு என்னவோ கம்பீரமாகத் தான் நிற்கிறது!
மக்கள்தான் மந்தையாகிப் போனார்கள்'
என் வாழ்க்கையில் நான் எவ்வளவோ சிரமப்பட்டிருக்கிறேன். என் தாய் எனக்குக் கிடைத்த பெரிய வரம். அவர் எனக்குப் போதித்த ஒரு முக்கியமான அறிவுரையை இன்றும் நாள் தவறாமல் கடைப்பிடித்து வருகிறேன்.
'விசு! என்றும் நன்றி மறக்காதே. உன் வாழ்க்கையில் உனக்கு உதவி செய்தவர்கள் யாராக இருந்தாலும் தினமும் இரவு தூங்கப்போகும் முன் ஒருமுறை அவர்களை நினைத்து அவர்களுக்கு நன்றி சொல்.'
(ராணி மைந்தன் எழுதிய மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி. என்னும் நூலின் முன்னுரையில் எம்.எஸ்.விஸ்வநாதன் )
-தங்க.சங்கரபாண்டியன், பொழிச்சலூர்.
'கதர் வேஷ்டியும் கதர் ஜிப்பாவும் இவருடைய உடை. சில சமயங்களில் நேருஜியைப் போல் அரைக்கோட் போட்டுக் கொண்டிருப்பார். மூக்கு கண்ணாடியும் போட்டிருப்பார். தூரத்தில் நின்று பார்த்தால் திரு.வி.க.வின் ஜாடையில் இருப்பார். இவரது எளிய வாழ்க்கைக்கு மகாத்மாஜியின் எளிய வாழ்க்கையைத்தான் உபமானமாகக் கூற முடியும்.
அன்பென்ற மலர், இதழ் விரித்துப் பூத்தது போன்ற தெய்விகச் சிரிப்பு. சாந்தி பொலியும், முகம் அன்பு சுரக்கும், இனிய சொற்கள். இதுதான் அறிஞர் வெ.
சாமிநாதசர்மாவின் சித்திரம்.
சர்மா ஆரம்பத்தில் 'தேச பக்தன்' பத்திரிகையிலும், பிறகு திரு.வி. கல்யாணசுந்தர முதலியாரின் 'நவசக்தி' பத்திரிகையிலும் பணியாற்றினார். சுமார் 12 வருஷ காலம் அங்கே உதவி ஆசிரியராக இருந்தார். அப்பொழுது இவருடைய சகபாடியாக வேலை பார்த்தவர் 'கல்கி' ஆசிரியர் ரா. கிருஷ்ணமூர்த்தி. சென்னை மாஜி பிரதமர் டி.பிரகாசம் நடத்திய தமிழ் 'ஸ்வராஜ்யா'விலும் சேவை செய்தார்.
பின்பு ரங்கூனில் 'ஜோதி' என்னும் சஞ்சிகையைத் தொடங்கி நடத்தி வந்தார். ஜப்பானிய விமானங்களில் இருந்து பத்திரிகாலயத்தின் மீது குண்டு விழும்போது கூட, உள்ளுக்குள் உட்கார்ந்து பத்திரிகையின் கடைசித் தலையங்கத்தை எழுதிக் கொண்டிருந்தாராம் சர்மா.
ஆங்கிலத்தில் போதிய பயிற்சி இல்லாத தமிழர்களும் ஆங்கிலமே தெரியாத தமிழர்களும் மேல்நாட்டு தத்துவ சாஸ்திரத்தையும் அரசியல் சாஸ்திரத்தையும் அத்துடன் பல அரசியல் ஞானிகள் வாழ்க்கை வரலாறுகளையும் தெரிந்துகொள்ள உதவிய பேருபகாரிகளில் முதன்மையாக இருப்பவர் அறிஞர் வெ. சாமிநாத சர்மா.
சிறியனவும் பெரியனவுமாக சுமார் 60 நூல்கள் எழுதி இருப்பார் நம் அறிஞர். அத்தனையும் பயனுள்ள புத்தகங்கள். அவை ஏற்கெனவே பயன்தந்தவை, எதிர்காலத்திலும் பயன் தரப் போகின்றவை.
ஆங்கிலம் தெரியாத தமிழர்களுக்கெல்லாம் பிளோட்டோவையும் ரூஸ்úஸாவையும் அரிஸ்டாட்டிலையும் அறிமுகப்படுத்தியவர் நம் அறிஞர்தான். தமிழ் சமூகத்துக்கு எப்பேர்ப்பட்ட பேருபகாரம் இது!'
('எனது பர்மா வழிநடைப்பயணம்' என்ற நூலில், 'அறிஞர் சாமிநாத சர்மா அவர்களின் வாழ்க்கை குறிப்பு' என்ற தலைப்பில் கு.அழகிரிசாமி எழுதியது.)
-மு.வெங்கடேசன்
மைசூரு தர்பாரில் நவமி விழா நடப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று முடிந்தன. அந்த விழாவுக்கு ஓர் ஆங்கில அலுவலர் வருவதாக அறிவிக்கப்பட்டது. விஸ்வேஸ்வரய்யாவுக்கும் மகாராஜா அழைப்பு அனுப்பினார். 'விழாவுக்கு வருவோர் அனைவரும் பட்டுக் கம்பளம் விரிக்கப்பட்ட தரையில் உட்கார்ந்தால் போதும். ஆங்கிலேயருக்கு மட்டும் ஒரு நாற்காலியைப் போட்டால் சரி' என்ற முடிவோடு ஏற்பாடுகள் நடைபெற்றன. இந்த விவரத்தை விஸ்வேஸ்வரய்யா கேள்விப்பட்டார்.
'விழாவுக்கு வர முடியாது' என மகாராஜாவுக்குத் தகவல் அனுப்பினார்.
இதையறிந்த மகாராஜா விஸ்வேஸ்வரய்யாவை அழைத்துக் காரணம் கேட்டார். அதற்கு தன்மானச் சிங்கமாய் சீறியடியே, 'ஆங்கிலேயனுக்கு மரியாதை. இந்தியனுக்கு இழிவா? இதுவா தர்பார் காட்டும் தன்மானம். நான் விழாவுக்கு வரமுடியாது' என்றார் விஸ்வேஸ்வரய்யா.
இவரது சுயமரியாதையை மகாராஜாவும் பாராட்டினார். பின்னர், 'யாருக்கும் யாரும் தன்மானத்தில் குறைந்தவர்கள் அல்லர்! தர்பார் மேடையில் எல்லோருக்கும் நாற்காலியைப் போட்டு விழாவை நடத்துங்கள்!' என்றார். இதன்படியே விழாவும் நடைபெற்றது.
('அறிவியல் மேதை விஸ்வேஸ்வரய்யா' எனும் நூலில் வி.எஸ்.வெங்கடேசன்)
-த.சீ.பாலு, அத்திப்பட்டு.
'எங்க வீட்டுப் பிள்ளை' திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த 'குமரிப் பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க நான் வரவேண்டும்' பாடலின்போது நல்ல விலை உயர்ந்த புடவைகளை எல்லாம் கட்டிக் கொண்டு சரோஜா தேவி இருப்பார். அந்தப் பாடலின் ஒரு சிறிய இடைவெளியின் போது நடிகை சரோஜா தேவிக்கு காபி கொண்டு வந்து கொடுத்திருக்கிறார்கள். அப்போது சில சொட்டு காபி புடவையில் சிந்திவிட்டது. இதைப் பார்த்த எம்.ஜி.ஆர். இரவோடு இரவாக வெள்ளியில் ஸ்ட்ரா வைத்து மூடிபோட்டு இருக்கும் டம்ளரை ஆர்டர் செய்து, அடுத்த நாள் படப்பிடிப்பின் போது நடிகை சரோஜா தேவிக்குப் பரிசளித்துள்ளார். 'வெறும் டம்ளர் மட்டும் கொடுத்தால் நன்றாக இருக்காது' என்று சிறிய வெள்ளி பிளேட்டும் பரிசு அளித்துள்ளார் எம்.ஜி.ஆர்.
அவர் கதை எழுத குளுகுளு இடங்களில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களைத் தேடிப்போக மாட்டார். கடற்கரையில் அமர்ந்து கதை எழுதுவது அவருக்குப் பிடிக்கும். நேரம் போவதே தெரியாமல் கதை எழுதுவார். அப்படி ஒருமுறை கதை எழுதி முடித்தவுடன் கடைசி பஸ் போய்விட்டதை அறிந்தார். அதன் பிறகு ரிக்ஷா பிடித்து வீட்டுக்குத் திரும்பினார். அப்போது ரிக்ஷாக்காரரிடம் பேசிக்கொண்டு வந்தார். அவர் சொன்ன தகவல்களை வைத்து 'பசி' படத்தின் கதையை உருவாக்கினார். அவர்தான் இயக்குநர் துரை.
-எம்.அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

துரைமுருகன் கூறிய குட்டிக் கதை!
பயணம் தொடர்கிறது...
எக்ஸ்ரே கண்கள்
கதையின் மனசாட்சியை பிரதிபலிக்கும்!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


