சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

பொதுவெளியில் பெண்கள்; சமையலில் ஆண்கள்..!

'பெண்கள் பொதுவெளிக்கு வரவேண்டும்; ஆண்கள் சமையல் கட்டுக்குள் நுழைய வேண்டும்' என்கிறார் இந்த ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி விருதுக்குத் தேர்வாகியுள்ள எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன்.

News image

எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன்

Updated On :21 மார்ச் 2026, 10:30 pm

தினமணி செய்திச் சேவை

அருள்செல்வன்

'பெண்கள் பொதுவெளிக்கு வரவேண்டும்; ஆண்கள் சமையல் கட்டுக்குள் நுழைய வேண்டும்' என்கிறார் இந்த ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி விருதுக்குத் தேர்வாகியுள்ள எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன்.

தூத்துக்குடி மாவட்டத்துக்கு உள்பட்ட நாகலாபுரத்தைப் பூர்விகமாகக் கொண்டவர் தமிழ்ச்செல்வன். சென்னையிலும், சிவகாசியிலுமாக வசித்து வரும் இவர் எழுத்து, இலக்கியம், கலை தொடர்பாக அறுபதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். அவருடன் ஒரு சந்திப்பு:

விருது குறித்து..?

விருது அறிவிக்கப்படும் என்று மூன்று மாதங்களுக்கு முன்பே சொன்னார்கள். அறிவிப்பதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்னர், அரசுத் துறை செயலாளர் போல யாரோ வந்து நிறுத்தி இருக்கிறார்கள். ஏன் நிறுத்தப்பட்டது என்பதற்கு அவர்கள்தான் விளக்கம் சொல்ல வேண்டும். இப்போது அறிவித்துள்ளனர். மகிழ்ச்சியாக உணர்கிறேன். நான் விருதை எதிர்பார்த்து எழுதும் ஆள் இல்லை. எனது நூலுக்கு விருது கிடைத்திருக்கிறது என்பது அந்த நூலுக்கு அதிக அளவில் வெளிச்சம் கிடைக்கும் என்கிற வகையில் எனக்கு மகிழ்ச்சி.

புனைவு படைப்புக்காக அல்லாமல், அபுனைவு கட்டுரை நூலுக்காக விருது கிடைத்துள்ளது குறித்து..?

இலக்கியத்தில் பல வகைமைகள் இருக்கின்றன. அதில் இது ஒரு வகைமை. கட்டுரை ஆய்வு நூல்களுக்கு அந்தக் காலத்து ரா.பி. சேதுப்பிள்ளை முதல் சென்ற ஆண்டு ஆ.இரா. வெங்கடாசலபதி வரை விருது கொடுத்திருக்கிறார்கள். புனைவுகள்,

அபுனைவுகள், அதாவது கதைகளுக்கும், கட்டுரைகளுக்கும் என்று தொடர்ந்து கொடுத்துக் கொண்டுதான் இருக்கின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டு எனது நூலுக்குக் கொடுத்திருக்கின்றனர். படைப்புக்குக் கொடுத்திருந்தாலும் எனக்கு மகிழ்ச்சிதான். இதையும் எழுதியது நான்தானே? மொத்தத்தில் எனது நூலுக்குத் தானே கிடைத்திருக்கிறது?

உங்களது நூல்கள் குறித்து..?

5 கதை நூல்களையும், 50 கட்டுரைகளையும் எழுதியுள்ளேன். கதைகளைவிட கட்டுரை நூல்கள் அதிகமாக எழுதியுள்ளேன். மக்களிடம் நேரடியாகக் கொண்டு செல்ல வேண்டிய கருத்துகளை எளிமையாகக் கட்டுரையாக எழுதினால் கொண்டு செல்லலாம். 'அரசியல் எனக்குப் பிடிக்கும்' என்பது மாதிரி எளிய நூல்களை நிறையப்பேர் வாசிக்கின்றனர்.

அவ்வாறு எளிமையாகச் சொல்லலாமே என்று ஆரம்பித்து நிறைய கட்டுரைகளை எழுதிவிட்டேன். மீண்டும் கதையை எழுத ஆரம்பித்திருக்கிறேன். முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு புதிய கதைத் தொகுப்பு அடுத்த மாதம் வரவுள்ளது. இலக்கியம் என்பதே சமூகத்தின் பிரதிபலிப்பு. எழுத்தாளர் சமூகத்தோடு நல்லுறவோடு இருந்தால் சமூகத்துக்குத் தேவையானதை சமூகத்தை நோக்கிப் பேச வேண்டும்.

25 ஆண்டுகள் கதைகளை எழுதாமல் இருந்தேன். எழுதாததற்குக் காரணம் நேரமின்மை கிடையாது. கதைகளை எழுதுவதற்கு தனியான மனநிலை வேண்டும் என்று தவறாக நினைத்துக் கொண்டு தள்ளிப் போட்டு வந்தேன். அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. அது தவறு என்பது புரிந்தது. எழுத ஆரம்பித்து விட்டேன்.

சிறார் நூல்கள் குறித்து..?

வாசிப்புப் பழக்கத்தை சிறுவயதிலேயே கொண்டு வரவேண்டும். அதற்கான நூல்கள் தமிழில் குறைவாகவே இருக்கின்றன. இந்தக் கவலை இருக்கும் எழுத்தாளர்கள் முடிந்தவரை சிறார் கதைகளை எழுதி வருகிறார்கள். நான் எனது பங்களிப்பைச் செய்திருக்கிறேன். சிறார் அனுபவ உலகம், அவர்களது வாசிப்பு உலகம் இரண்டையும் கணக்கில் கொண்டு அதற்கு ஏற்றவாறு எழுத வேண்டும். எதையும் திணிக்கக் கூடாது. அவர்களுக்கு ஒன்றும் தெரியாது என்றும் நினைக்கக் கூடாது. அவர்கள் அளவில் அவர்கள் முழு மனிதர்கள். அவர்களை ஒன்றும் அறியாதவர்கள் என்கிற கண்ணோட்டத்திலும் பார்க்கக் கூடாது.

நீங்கள் எழுதிய 'நமக்கான குடும்பம்', 'அரசியல் எனக்குப் பிடிக்கும்' ஆகிய இரு நூல்கள் பல பதிப்புகளைக் கண்டுள்ளதே?

'அரசியல் என்றால் என்ன?' என்பதை அறிய வேண்டுவோரின் ஆர்வத்தை 'அரசியல் எனக்குப் பிடிக்கும்' என்ற நூல் பூர்த்தி செய்து இருப்பதாக நினைக்கிறேன். அதனால்தான் அந்த நூல் மீண்டும் மீண்டும் பதிப்பாகிக் கொண்டே இருக்கிறது. அதைப் படித்துவிட்டு ஒரு தெளிவு பெற்று அரசியலுக்கு வந்ததாக, இடதுசாரி இயக்கங்களுக்கு வந்ததாகப் பலரும் என்னிடம் கூறியிருக்கின்றனர். திருமண வீடுகளில் பரிசாக அளிப்பதால், 'நமக்கான குடும்பம்' எனும் நூல் பெரிய அளவில் விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. 'குடும்பம்' என்கிற தலைப்பில் பலவற்றை நான் சொல்லி இருப்பேன். அந்தத் தலைப்பைத் தங்களுக்கு நெருக்கமாக உணர்வதால் ஒவ்வொரு திருமணத்திலும் ஆயிரக்கணக்கில் பிரதிகளை வாங்குகின்றனர். குடும்பத்தைப் புரிந்து கொள்ள இந்த நூல் உதவியது என்று பலரும் கூறியிருக்கிறார்கள்.

'சாப்பாட்டு ராமனின் நினைவுகள்' நூல் எழுத நேர்ந்த காரணம் என்ன?

நான் சமையல் சார்ந்து மூன்று நூல்களை எழுதியிருக்கிறேன். ஆண்கள் சமைக்காமல் சாப்பிடுகின்றனர். பெண்கள் சமைக்கவும் செய்கின்றனர். பெண்கள் சமைத்துவிட்டுத்தான் சாப்பிடுகின்றனர். சமைக்காமல் சாப்பிடுவோரை 'சாப்பாட்டு ராமன்' என்று சொல்வதில் தவறில்லை. நான் ஒரு சாப்பாட்டு ராமன். என்னுடைய நினைவுகளைச் சொல்லி இருக்கிறேன். இன்னும் பல சாப்பாட்டு ராமன்கள் இருக்கின்றனர். இந்த நூல் பெண்கள் மத்தியில் மட்டுமல்ல; ஆண்கள் மத்தியிலும் வரவேற்பைப் பெற்றது. அதை வாசித்துவிட்டு சமையலைத் தொடங்கிய ஆண்கள் இருக்கின்றனர். நூல்களால் மாற்றம் ஏற்படுத்த முடியும்.

சமையல் குறித்து உங்கள் பார்வை?

பெண்களைச் சமூகவெளிக்குக் கொண்டு வரவேண்டும் என்றால், அடுப்படியை விட்டு விடுதலை செய்தால்தான் கொண்டு வர முடியும். மக்கள்தொகையில் சரி பாதி இருக்கும் பெண்களை விட்டுவிட்டு சமூகத்தில் என்ன மாற்றத்தை நிகழ்த்த முடியும்? அவர்களை வெளியே கொண்டுவர வேண்டும் என்றால், ஆண்கள் உள்ளே செல்ல வேண்டும். ஆகவே ஆண்கள் சமைக்க வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன். சமைப்பது என்னுடைய வேலையாக நினைத்து மூன்று வேளையும் மகிழ்ச்சியாகச் செய்ய வேண்டும். அப்போதுதான் பெண்கள் விடுதலையாகி வெளியே வருவார்கள்.

மதுரகவி பாஸ்கரதாஸ் குடும்பத்தில் இருந்து வந்த உங்களுக்கு நாடகம், இசையில் ஈடுபாடு உள்ளதா ?

என்னுடைய தாத்தாவின் உண்மையான வாரிசு என்னுடைய தம்பி முருகபூபதி. அவர்தான் சொந்தமாக நாடக நிறுவனத்தை வைத்திருக்கிறார். நாடகச் செயல்பாடுகளிலும், இசையிலும் ஈடுபாட்டுடன் இருக்கிறார். எழுத்தில் வேண்டுமானால் அந்தத் தொடர்ச்சி எனக்குள் இருக்கிறது. பணியாற்றும்போது, எழுதும்போது ஏதாவது பாடலோ இசையோ கேட்பது என்ற அளவில் மட்டும்தான் நான் இருக்கிறேன்.

இதுவரையிலான வாழ்க்கை அனுபவம்..?

ராணுவம், தபால் துறை, அறிவொளி இயக்கம், எழுத்தாளர் சங்கம், களச் செயல்பாடுகள், பயிலரங்குகள் என்று கழிந்தது. என் மனதுக்கு சரி என்று பட்டதையெல்லாம் நான் செய்துகொண்டே வந்திருக்கிறேன். அந்த வகையில் இது நிறைவான வாழ்க்கை. அதற்கு எனது வாழ்க்கை அனுமதி கொடுத்திருக்கிறது. அதை நான் பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன் என்பதில் நிறைவுதான்.

திரை அனுபவம் குறித்து..?

'வெயிலோடு போய்' என்ற கதை 'பூ' திரைப்படமானது. தமிழ்நாடு அரசின் விருதுடன் வெற்றியும் கிடைத்தது. திரைப்பட இயக்குநர் சசி என்னிடம் கதை கேட்டார். கொடுத்தேன். யாரும் கேட்டால் தான் கொடுக்க முடியும். நானாக யாரையும் கேட்கும் பழக்கமில்லை. என்னிடம் கேட்டால் கொடுப்பேன். எழுத்து என்பது வேறு வடிவம் திரை என்பது வேறு வடிவம் . அதை நான் புரிந்து கொண்டிருக்கிறேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.