மோடி - டிரம்ப் உரையாடலில் எலான் மஸ்க் இணைந்தாரா? வெளியுறவு அமைச்சகம் மறுப்பு இந்தியாவில் மகப்பேறு இறப்பு விகிதம் 80 சதவீதம் குறைவு: அறிக்கையில் தகவல்எஃப்பிஐ இயக்குநா் மின்னஞ்சலில் ஊடுருவிய ஈரான் ஹேக்கா்கள்!திமுக எம்.பி. மகள் காா் மோதி விபத்து: பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவுவாக்களித்ததை உறுதி செய்யும் குறுஞ்செய்தி: திட்டத்தை அமல்படுத்தக் கோரி மனு
/

கிராமங்கள் இருக்கும் வரை நாடகங்கள் இருக்கும்...

'இணைய உலகில் சமூக ஊடகங்களின் பயன்பாடு அதிகரித்த நிலையில், நாடகங்களைப் பார்க்க யார் வருவார்கள்?' என்று கூறுகின்றனர்.

News image
Updated On :28 மார்ச் 2026, 10:37 pm

தமிழ்ச்செல்வி

'இணைய உலகில் சமூக ஊடகங்களின் பயன்பாடு அதிகரித்த நிலையில், நாடகங்களைப் பார்க்க யார் வருவார்கள்?' என்று கூறுகின்றனர். ஆனால், மதுரை சுண்ணாம்புக்காரத் தெருவில் உள்ள தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் எப்போதும் சுறுசுறுப்புடன் இயங்கிக் கொண்டிருக்கிறது. எங்காவது நாடகம் போடுவதற்காக அங்கிருந்து நடிகர்கள் பயணப்பட்டுக் கொண்டே இருக்கின்றனர்.

அந்தப் பகுதியில் அதற்கான உடைகள், அலங்காரப் பொருள்கள், ஒப்பனைப் பொருள்கள் விற்பனையாகிக் கொண்டே இருக்கின்றன. இதுகுறித்து மதுரை நாடக நடிகர் சங்கத் தலைவர் டி.வி.ஜெயம் கூறுகையில், 'கிராமங்கள் இருக்கும் வரை நாடகங்கள் இருக்கும்' என்கிறார்.

அவரிடம் பேசியபோது:

'1923- ஆம் ஆண்டு வாசுதேவன் நாயர், ரத்தினபத்தர் ஆகியோரால் தொடங்கப்பட்ட தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் நூற்றாண்டு கண்டது. 380 பேர் உறுப்பினராகவும், 150 பேர் ஓய்வு பெற்றவர்களும் இருக்கின்றனர். சுண்ணாம்புக்காரத் தெருவில் மட்டுமல்லாமல், பாண்டி கோயில் தெருவிலும் புதிய அலுவலகத்தைத் திறந்திருக்கிறோம்.

சிறப்பு நாடக அமைப்பு

தனித்தனி குழுக்களாக நாடகங்கள் போடும் குழுக்கள் குறைவாகவே உள்ளன. எங்களது நாடக சங்கம் இப்போது 'சிறப்பு நாடக அமைப்பு' என்கிற வகையில் நடிகர்களை நாடகங்களுக்கு அனுப்புகிறது. முன்பெல்லாம் ஒரு நாடகக் குழுவில் அனைத்துப் பாத்திரங்களுக்கான நடிகர்கள், இசைக் கலைஞர்கள் என்று இருப்பார்கள்.

இப்போது காலமாற்றத்தில் வேறு மாதிரியான நடைமுறை உள்ளது. ஒரு திரைப்படத்துக்கு எப்படி கதாபாத்திரத்துக்குரிய நடிகர்களைத் தேர்வு செய்வார்களோ, அதே போல எங்களிடம் வாய்ப்பு கேட்டு வருபவர்கள் நாடகத்தின் பெயரைக் குறிப்பிட்டு எந்தெந்தப் பாத்திரத்துக்கு எந்தெந்த நடிகர்கள் வேண்டும் என்று கூறுவார்கள்.

அதன்படி நாங்கள் ஒப்பந்தம் போட்டுக் கொடுப்போம். தொழில்முறை நாடக நடிகர்களாக இருப்பதால் ராஜபார்ட், ராஜா வேடம், பெண் வேடம், நகைச்சுவை வேடம், துணை நடிகர்கள் என்று உரியவர்கள் சிலர் இருப்பார்கள். அவர்களில் ராஜா வேடம் போடுவதற்கு என்று புகழ்பெற்ற சில நடிகர்கள் இருப்பார்கள். அவர்களுக்கென்று வணிக மதிப்பு இருப்பதால், அவர்களுக்கான சம்பளத்தை அவர்களே கூறுவார்கள். அதற்குச் சம்மதித்தால் ஒப்பந்தம் செய்வார்கள்.

அந்த ஒப்பந்தத்தை நாங்கள் முறைப்படுத்தி, ஆவணமாக்கி நடைமுறைப்படுத்துவது எங்கள் பணி. ஒப்பந்தத்தை மீறாமல் நடிக்க வேண்டியது நடிகர்கள் கடமை. சம்பளமும் சரியாகக் கொடுக்க வேண்டியது அமைப்பாளர்களின் பணி. ஏதாவது பிரச்னை வந்தால் சங்கம் தலையிட்டுத் தீர்த்து வைக்கும். உறுப்பினர்களுக்கு இறப்புக்கால நிதி, கல்வி உதவித்தொகை என்றும் சங்கம் செய்து வருகிறது.

விழாக் காலங்களில் சங்க அலுவலகத்தில் வேடம் புனையும் கலைஞர்கள் சங்கமித்திருப்பார்கள். இங்கிருந்துதான் அனைவருமே நாடகம் போட புறப்பட்டுச் செல்கின்றனர்.

இவர்கள் தொழில் முறை நடிகர்களாக இருப்பதால், பல நாடகங்களுக்குத் தயாராகி இருப்பார்கள். எந்த நாடகம் என்று சொன்னால்போதும் அவர்களே தயாராகி நடித்துக் கொடுத்துவிடும் ஆற்றல் கொண்டவர்கள். சில நாடகங்களுக்கே முன்தயாரிப்பு ஒத்திகை என்று சில நாள்கள் பயிற்சி கொடுப்பார்கள்.

Story image

நாடகங்களைஆதரிப்பது கிராமங்கள்தான்

ரீஸ்ஸ் மோகம் இருக்கும் இந்தக் காலத்தில், நாடகங்களை ஆதரிப்பது கிராமங்கள்தான். திருவிழாக்கள், வழிபாடு என்று கலாசாரம் இன்றும் இருப்பதால், கிராமங்கள் இருக்கும் வரை நாடகங்கள் இருக்கும். எங்கள் சங்க உறுப்பினர்கள் மூலம் மட்டுமே ஆண்டுக்கு 5 ஆயிரம் நாடகங்கள் ஆங்காங்கே நடைபெறுகின்றன.

மதுரை அருகேயுள்ள வளையங்குளத்தில் சிவராத்திரியில் தொடங்கி இரண்டு மாதங்களுக்கு 60 நாடகங்கள் போடுவார்கள். அங்கே உள்ள சுயம்பு தனி லிங்க பெருமாள் என்கிற சிவன் கோயிலில்தான் இந்த நாடகத் திருவிழா பல ஆண்டுகளாக நடைபெறுகிறது.

ஒரு காலத்தில் ராம நாடகம் புகழ் பெற்றிருந்தது. இப்போது வள்ளித் திருமணம், அரிச்சந்திரன், பவளக்கொடி, சத்தியவான் சாவித்திரி, பாமா விஜயம், கோவலன் சரித்திரம், நந்தனார், வீரபாண்டிய கட்டபொம்மன் உள்ளிட்ட பல நாடகங்கள் புகழ்பெற்றுள்ளன. அண்மைக்காலத்தில் மகமாயி, முத்தாலம்மன், மார்க்கண்டேயன் போன்றவற்றையும் நடத்துகின்றனர்.

அறிவியல் முன்னேற்றம் அதிகரித்தாலும், நாடகங்களுக்கென்று மதிப்பு இருக்கிறது. குறைந்த கலைஞர்களைக் கொண்டு நேரடி அனுபவத்தைத் தருவதே நாடகங்கள்தான். நாடகத்தில்தான் நடிகர்களை நேரடியாகப் பார்க்கிற உணர்வும் திருப்தியும் கிடைக்கிறது. பத்துப் பேர் கொண்ட நாடகக் குழுவில் இசைக் கலைஞர்கள் நான்கு பேர் இருப்பார்கள். மிருதங்கம், ஆர்மோனியம், தாள வாத்தியம் , பேங்கோ என்று குறைந்தபட்ச இசைக்கருவிகளைக் கொண்டே நாடகங்களை நடத்துகிறோம். நான் கூட மிருதங்கக் கலைஞர்தான். இதற்கு மேல் ஆள்களைச் சேர்ப்பதில்லை.

ஆபாசம் கிடையாது

தொழில் போட்டியில் திரைப்படப் பாடல்களைப் பாடுதல், கிளுகிளுப்பு, ஆபாச வசனங்கள் உள்ளன என்று நாடகங்கள் மீது புகார் கூறுகின்றனர். இதெல்லாம் கூடாது என்றே நாங்கள் சொல்கிறோம். ஆனால் ஏற்பாடு செய்பவர்கள் ஜாலியாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். நாங்கள் சொல்வதை வெளியே செல்பவர்கள் பின்பற்றுவதில்லை.

திரையுலகத் தொடர்பு

எம்.கே.தியாகராஜ பாகவதர், டி. ஆர். மகாலிங்கம், திருச்சி லோகநாதன், ஆர்.வி. உடையப்பா, டி எம் தங்கப்பா, எம் .யூ .பிரேம்குமார், எம். எம். மாரியப்பா, எம். ஆர். ராதா, கே. பி.சுந்தராம்பாள் உள்ளிட்டோர் எங்கள் நாடகங்களில் நடித்தோ, எங்கள் சங்க விழாக்களில் கலந்து கொண்டோ பெருமை சேர்த்திருக்கின்றனர்.

எம்.ஆர்.ராதாவுக்கே வாத்தியாராக இருந்த பி. ஆர். தர்மராஜ் எங்களது சங்க உறுப்பினர்தான். ஆண்டுதோறும் நவம்பர் 13-இல் நடைபெறும் சங்கரதாஸ் சுவாமிகளின் குரு பூஜையில் எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், மனோரமா, காக்கா ராதாகிருஷ்ணன் ,டி. எஸ். துரைராஜ், டணால் தங்கவேலு உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு முதலில் 'தமிழ்நாடு நடிகர் சங்கம்' என்றே பெயரிடப்படுவதாக இருந்தது. அந்தப் பெயரில் மதுரையில் இருப்பதால், அவர்கள் 'தென்னிந்திய நடிகர் சங்கம்' என்றும் மாற்றிக் கொண்டார்கள். சென்னையில் உள்ள தென்னிந்திய நடிகர் சங்கத்தில் எங்கள் உறுப்பினர்களையும் சேர்த்துக் கொள்வதுண்டு.

நடிகர் சங்கத் தலைவராக விஷால் பதவியேற்றவுடன், மேடை நாடக இசைக் கலைஞர்கள் உறுப்பினர்களாக அதிகமாகச் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.

எங்கள் சங்கத்திலிருந்து 25 பேருக்கு மேல் 'கலைமாமணி' பட்டம் பெற்றுள்ளனர். இந்த ஆண்டு அறிவிக்கப்பட்டவர்களில் எம்.பி. விஸ்வநாதன், ஆர்.எம். தமிழ்ச்செல்வி, ஏ. ஆர். ஏ. கண்ணன் உள்ளிட்டோர் எங்கள் சங்க உறுப்பினர்கள்தான். மேடை இசை நாடகக்கலைஞர்களை ஊக்கப்படுத்த அரசு திட்டங்கள் கொண்டுவர வேண்டும்...

சங்க வளர்ச்சிக்கு செயலாளர் எம். கே . வல்லரசு, பொருளாளராக எஸ். எம். காளிமுத்து உள்ளிட்டோர் உறுதுணையாக இருக்கின்றனர்' என்கிறார் டி.வி.ஜெயம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.