இரண்டு தொகுதிகளாகத் தமிழ் வளர்ச்சிக் கழகம் வெளிக்கொணர்ந்திருக்கும் 'தமிழியல் கலைக்களஞ்சியம்' தொகுப்புகளை அனுப்பித் தந்திருக்கிறார் அதன் இப்போதைய தலைவரும், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தருமான முனைவர் ம. இராசேந்திரன். இந்தக் குறிப்பிடத்தக்க தொகுப்பின் பதிப்பாசிரியர்களாக அவருடன் முனைவர் வ. ஜெயதேவனும், முனைவர் பெ. அர்த்தநாரீசுவரனும் இணைகின்றனர்.
தமிழ் மொழி வளர்ச்சியில் மிகப் பெரிய, அரிய பங்களிப்பு தமிழ் வளர்ச்சிக் கழகத்துக்கு உண்டு. அதிகாரபூர்வமாக இந்தியா சுதந்திர நாடாக தன்னை அறிவித்துக் கொண்ட 1947 ஆகஸ்ட் 15-ஆம் தேதிக்கு முதல் நாள், அதாவது ஆகஸ்ட் 14-ஆம் தேதி தமிழ் வளர்ச்சிக் கழகம் நிறுவப்பட்டது. அதற்குக் காரணமாக இருந்தவர் அன்றைய ஒன்றுபட்ட சென்னை மாகாணத்தின் கல்வி அமைச்சராக இருந்த சுதந்திரப் போராட்டத் தியாகியும், மூத்த காங்கிரஸ் தலைவருமான தி.சு. அவிநாசிலிங்கம் செட்டியார்.
தமிழ் மொழிக்குக் கலைக்களஞ்சியம் வேண்டும் என்கிற அவரது தொலைநோக்குச் சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுப்பதற்காக உருவாக்கப்பட்டதுதான் 'தமிழ் வளர்ச்சிக் கழகம்' என்கிற அமைப்பு. அது குறித்த அறிவிப்பு வெளியானதும், முதலாவது நன்கொடையை வழங்கி அந்த முயற்சிக்கு உறுதுணையாக இருந்தவர் வள்ளல் அழகப்ப செட்டியார் என்பதை நாம் நினைவுகூரக் கடமைப்பட்டிருக்கிறோம்.
கலைக்களஞ்சியப் பணிகளுக்கு ரூ. 14 லட்சம் தேவைப்படும் என்று திட்டமிடப்பட்டது. எண்பது ஆண்டுகளுக்கு முன்பு ரூ. 14 லட்சம் என்பதன் மதிப்பு என்ன என்று கணக்கிட்டுக் கொள்ளுங்கள். அப்போது பண்டித ஜவாஹர்லால் நேரு தலைமையில் அமைந்த மத்திய அமைச்சரவையில் நிதியமைச்சராக இருந்தவர் தமிழரான கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் ஆர்.கே. சண்முகம் செட்டி.
தமிழில் வெளிக்கொணர இருக்கும் கலைக்களஞ்சிய முயற்சிக்கு மத்திய அரசு, ஆண்டொன்றுக்கு ரூ. 75 ஆயிரம் நான்காண்டுகளுக்கு வழங்க அவர் உறுதியளித்தார். சென்னை மாகாண அரசும் தனது பங்குக்கு, ஆண்டொன்றுக்கு ரூ. 1 லட்சம் வீதம் ஐந்தாண்டுகளுக்கு நிதியுதவி அளிக்க முன்வந்தது. அதுவரை சொல்லப்பட்டிராத பல்வேறு துறைகள் சார்ந்த கருத்துகளைத் தமிழில் சொல்லத் தேவைப்படும் சொற்களின் 'போதாமையை' ஈடுகட்ட புதிய சொற்களை அறிமுகப்படுத்தி வளம் சேர்த்திருக்கின்றன கலைக்களஞ்சியத் தொகுதிகள்.
1954-இல் முதல் தொகுதியும், 1968-இல் 10-ஆவது தொகுதியுமாகப் பொதுக் கலைக்களஞ்சியத் தொகுதிகள் வெளிவந்துள்ளன. 15,000 பதிவுகளும், 7,500 பக்கங்களும் கொண்டவை அவை. புதுமைப்பித்தன் குறித்து மீ.ப. சோமு, கெüதம புத்தர் குறித்து டாக்டர் ராதாகிருஷ்ணன், பாரதியார் குறித்து பி.ஸ்ரீ.ஆச்சார்யா, காந்தியடிகள் குறித்து நாமக்கல் கவிஞர் ஆகியோர் கட்டுரைகள் அளித்திருக்கிறார்கள். அவர்கள் மட்டுமல்ல, வையாபுரிப்பிள்ளை, ரா.பி.சேதுப்பிள்ளை, தெ,பொ.மீ., மு.வ., கி.வா.ஜ., உள்ளிட்ட அறிஞர்களின் கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன.
அந்தக் கலைக்களஞ்சியத்தின் 10 தொகுதிகளிலும் இடம்பெற்றுள்ள தமிழியல் தொடர்பான பதிவுகளை மட்டும் தொகுத்து, இப்போது தமிழியல் கலைக்களஞ்சியத்தை வெளிக்கொணர்ந்திருக்கிறது முனைவர் ம. இராசேந்திரன் தலைமையிலான தமிழ் வளர்ச்சிக் கழகம்.
வையாபுரிப்பிள்ளை தலைமையில் உருவான ' லெக்சிகன்' என்று பரவலாக அறியப்படும் முந்தைய கலைக்களஞ்சியத்துக்கு சற்றும் குறையாத உழைப்பு 'தமிழியல் கலைக்களஞ்சியத்தை' உருவாக்குவதிலும் இருந்திருக்கிறது. தமிழ் மொழி வரலாற்றில் முக்கியமான இடம்பிடிக்கும் இந்த அற்புத ஆவணத்தின் உருவாக்கத்துக்கு பங்களித்த ஒவ்வொருவருக்கும் தமிழினத்தின் சார்பில் நன்றியைச் சமர்ப்பிக்கிறேன்.
முனைவர் அ. பிச்சையின் ஆறாவது படைப்பு 'காந்தி என்னும் ஆர்ப்பரித்தாடும் சொல்'. இதில் வெளிவந்திருக்கும் 20 கட்டுரைகளும் 'தினமணி' நாளிதழின் ஆசிரியர் உரைப்பக்கத்தில் வெளியானவை. என்னால் தேர்ந்தெடுக்கப்பட்டு, திருத்தி, மெய்ப்புப் பார்த்து அச்சுக்கு அனுப்பப்பட்டவை. அதனால், அவரைப் போலவே அந்தக் கட்டுரைகளைப் புத்தக வடிவத்தில் பார்ப்பதில் அலாதி ஆனந்தம் எனக்கும் ஏற்பட்டதில் வியப்பில்லை.
92 வயதிலும் காந்திஜியையும், காந்தியத்தையும் உற்சாகத்துடன் அவர் தூக்கிப் பிடிப்பதில் யாரும் ஆச்சரியப்படத் தேவையில்லை. அண்ணல் காந்தியடிகள் மறைந்தபோது கோவில்பட்டியில் பள்ளிச் சிறுவனாக இருந்தார் பிச்சை. காந்திஜி சுட்டுக்கொல்லப்பட்டபோது கண் கலங்கி அழுது கொண்டிருந்த
அந்தச் சிறுவனிடம், 'காந்திஜி மறைந்து விட்டார் என்பதற்காகவா அழுகிறாய்?' என்று தமிழாசிரியர் கேட்டபோது,
அந்தச் சிறுவன் சொன்ன பதில் -'இல்லை. இதுவரையில் பார்க்க முடியாத என்னால், இனிமேல் பார்க்கவே முடியாதே, அதை நினைத்து அழுகிறேன்!'
தமிழக அரசின் மாற்றுத் திறனாளிகளுக்காக தனித் துறை உருவாகக் காரணமானவர், அரசு அதிகாரியாக இருந்த முனைவர்அ.பிச்சை. தனது 70-ஆவது வயதில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். முனைவர் அ. பிச்சையின் பேச்சிலும் மூச்சிலும் காந்தியும், காந்தியமும் கலந்திருக்கும். காந்திஜியைப் போலவே அவரை ஈர்த்த இன்னொரு தலைவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்.
2021 முதல் 2025 வரையிலான கடந்த ஐந்து ஆண்டுகளில் அவர் தினமணியில் எழுதிய அத்தனைக் கட்டுரைகளுமே காந்திஜி அல்லது காந்தியம் தொடர்பானவை என்பதை இந்தப் புத்தகம் தெரிவிக்கிறது.
பல்வேறு கோணங்களில் காந்திஜியை அவர் அந்தக் கட்டுரைகள் மூலம் பதிவு செய்துள்ளார். காந்தியடிகளின் வாழ்க்கையில் நடந்த முக்கியமான பல நிகழ்வுகள், அவரது சந்திப்புகள், அவர் எடுத்த முடிவுகள், அவற்றின் எதிர் விளைவுகள் என 20 கட்டுரைகளிலும் காந்தியம் ஆர்ப்பரிக்கப்படுகிறது.
கவிஞர் பானு பாலாவின் முதலாவது கவிதைத் தொகுப்பு 'ம்...' பெண்மையின் பார்வையை வெளிப்படுத்துவதுபோலவே, அவரால் ஆண்களின் உணர்வுகளையும் வெளிப்
படுத்த முடிகிறது என்பதுதான் 'பானு பாலா' என்கிற கவிதாயினியின் தனித்துவம். இது திரைப்படப் பாட
லாசிரியர்களுக்குத்தான் கைவந்த கலை. அந்தத் தொகுப்பில் இடம்
பெறுகிறது இந்தக் கவிதை...
தனியாகத்தானே
வரச்
சொன்னேன்
உன்னை...
வெட்கங்களை
ஏன்
துணைக்கழைத்து
வந்தாய்...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


