பாலைவனத்தில் பக்தி மலர்கள்
பாலைவனப் பிரதேசமான துபையில் ஜெபல் அலி என்ற இடத்தில் உள்ள இந்துக் கோயிலும், அபுதாபி பாப்ஸ் ஸ்வாமிநாராயண் மந்திரும் பிரபலமானவை.
முனைவர் ஸ்ரீரோகிணி
பாலைவனப் பிரதேசமான துபையில் ஜெபல் அலி என்ற இடத்தில் உள்ள இந்துக் கோயிலும், அபுதாபி பாப்ஸ் ஸ்வாமிநாராயண் மந்திரும் பிரபலமானவை. இரு கோயில்களும் விழாக் காலங்களில் விளக்குகளால் மின்னுகின்றன. தமிழ், தெலுங்கு, மலையாளம், குஜராத்தி, சிந்தி குடும்பங்கள் புத்தாடையுடனும் இனிப்புகளுடனும் வந்து கோலம், தீபாராதனை, பஜனை என வழிபாட்டில் கலந்துகொள்கின்றனர்.
துபை இந்துக் கோயில்
இந்தியர்களுக்கும் துபைக்கும் உள்ள உறவு நூற்றாண்டுகள் பழமையானது. அவர்களுக்கு ஆன்மிக ஆறுதலாக இருந்தவை துபையின் இந்து வழிபாட்டுத் தலங்கள்.
1958-ஆம் ஆண்டில் துபை ஆட்சியாளர் ஷேக் ராஷித் பின் சயீத் அல் மக்தூம், பர் துபாய் பழைய சூக் (சந்தை) பகுதியில் இந்து வழிபாட்டுக்கு அனுமதி அளித்தார். பர் துபையில் கடைகளின் மேல் தளத்தில்அமைந்த கோயிலில் சிவன், கிருஷ்ணன் சந்நிதிகளும், சிந்தி குரு தர்பார் வழிபாட்டுத் தலமும் அமைந்தன. வழிபடுவோர் எண்ணிக்கை பெருகியது.
2019-ஆம் ஆண்டில் பெரிய அளவில் கோயில் கட்ட துபை அரசிடமிருந்து நிலம் கிடைத்தது. 2020-இல் கட்டுமானம் தொடங்கியது. கரோனா காலத்திலும் இந்தத் திட்டம் தொடர அனுமதிக்கப்பட்டது. 2022 அக்டோபரில், விஜயதசமி நாளில் கோயில் திறக்கப்பட்டது. விழாவில் அமீரகத்தின் சகிப்புத்தன்மை, சகவாழ்வு அமைச்சர் ஷேக் நஹ்யான் பின் முபாரக் அல் நஹ்யான், இந்திய தூதர் சஞ்சய் சுதீர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்தக் கோயில் ஜெபல் அலியில் உள்ள 'வழிபாட்டுக் கிராமம்' என்ற பகுதியில் அமைந்துள்ளது. இங்கு ஏழு தேவாலயங்கள், ஒரு குருத்வாரா உள்ளிட்ட ஒன்பது வழிபாட்டுத் தலங்கள் அருகருகே உள்ளன. சிந்தி குரு தர்பார் அமைப்பு உருவாக்கிய இக்கோயில், அமீரகத்தின் மத ஒற்றுமைக்கு ஓர் அழகிய சின்னமாகும்.
வெண்மை நிறத்தில் ஒளிரும் குவிமாடங்கள், நுணுக்கமான சலவைக்கல் வேலைப்பாடுகள் உள்ளன. சுமார் 80 ஆயிரம் சதுர அடிப் பரப்பளவில் இந்திய, அரபுக் கட்டடக் கலைகளின் கலவையாக உள்ளது. சிவன், கிருஷ்ணர், மகாலட்சுமி, விநாயகர், பெருமாள், வள்ளி - தெய்வானை சமேத முருகன் முருகன், ஐயப்பன், குருவாயூரப்பன், மீனாட்சி / மூகாம்பிகை, வெங்கடேஸ்வரர் உள்ளிட்ட 16 தெய்வச் சந்நிதிகள் உள்ளன. இவற்றுடன் குரு கிரந்த் சாகிப் அருள்வதும் தனிச் சிறப்பாகும்.
கோயில் மண்டபத்தின் கூரையில் அமைந்த மிகப்பெரிய தாமரை வடிவமைப்பும் உள்ளது. பக்தர்களுக்கான பெரிய கூடத்தில் திருமணம், ஹோமம் போன்ற நிகழ்வுகளை நடத்திக் கொள்ள க்யூ.ஆர். குறியீடு ஸ்கேன் செய்து முன்பதிவு செய்யலாம். எல்லா மதத்தினரும் உள்ளே வர அனுமதி உண்டு. நுழைந்தவுடனே மனதை அமைதிப்படுத்தும் வளாகம் இது.
அபுதாபி பாப்ஸ் ஸ்வாமிநாராயண் மந்திர்
அபுதாபியின் அபு முரைகா பகுதியில் எழுந்து நிற்கிறது பாப்ஸ் ஸ்வாமிநாராயண் மந்திர். அரபு உலகின் மிகப் பெரிய பாரம்பரிய இந்துக் கற்கோயில்களில் இதுவும் ஒன்றாகும். 1997-ஆம் ஆண்டில் ஆன்மிகத் தலைவர் பிரமுக் சுவாமி மகாராஜ் அமீரகத்துக்கு வந்தபோது, கோயில் இங்கு அமைய வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பினார்.
2015-ஆம் ஆண்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அமீரகப் பயணத்தின்போது, அன்றைய அபுதாபி இளவரசரும் இன்றைய அதிபருமான ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான், அபு முரைகாவில் 13.5 ஏக்கர் நிலத்தை அன்பளிப்பாக வழங்கினார். 2018 பிப்ரவரியில் பிரதமர் மோடி துபையிலிருந்து காணொலிக் காட்சி முறையில் இந்தக் கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார். 2019-இல் விரிவாக்கத்துக்காக மேலும் 13.5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. மொத்தம் 27 ஏக்கர் அபுதாபி அரசின் பரிசாகக் கிடைத்தது. ஏப்ரலில் மஹந்த் சுவாமி மகாராஜ் முன்னிலையில் வேத முறைப்படி 'ஷிலா நியாஸ்' நடைபெற்றது.
2024 பிப்ரவரி 14 -இல் வசந்த பஞ்சமி நன்னாளில், மஹந்த் சுவாமி மகாராஜ், பிரதமர் நரேந்திர மோடி கோயிலைத் திறந்து வைத்தனர். பிப்ரவரி 18 முதல் பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.
இந்தக் கோயில் 108 அடி உயரமும், 262 அடி நீளமும், 180 அடி அகலமும் கொண்டது. ராஜஸ்தானின் இளஞ்சிவப்பு மணற்கல்லும் இத்தாலிய வெள்ளைச் சலவைக்கல்லும் பாரம்பரிய நாகரா பாணியில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிற்பிகள் கல்லைக் கையால் செதுக்கி, அவற்றை கப்பல் வழியாக அமீரகம் கொண்டுவந்தனர். இரும்பு, எஃகு பயன்படுத்தாமல் கற்கள் ஒன்றோடொன்று இணையும் முறையில் கட்டப்பட்டது.
நிலஅதிர்வு, வெப்பநிலை மாற்றம் போன்றவற்றைக் கண்காணிக்க 350-க்கும் மேற்பட்ட சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளன. சுமார் 400 மில்லியன் திர்ஹாம் செலவில் உருவான இந்தக் கோயில் நன்கொடையாளர்களின் பங்களிப்பால் கட்டி முடிக்கப்பட்டது.
கோயிலின் ஏழு கோபுரங்கள் (சிகரங்கள்) அமீரகத்தின் ஏழு அமீரகங்களைக் குறிக்கின்றன. இது இந்தியா அமீரக நட்பின் கலாசாரச் சின்னமாகும். ஒவ்வொரு தூணும் ஒரு கதை சொல்கிறது. தாமரை இதழ்கள், மலர்க்கொடிகள், கலசங்கள், யாளிகள் போன்ற இந்திய வடிவங்களுடன் ஒட்டகம், அரேபிய மான், பேரீச்சை மரம் போன்ற அமீரக அடையாளங்களும் செதுக்கப்பட்டுள்ளன.
மாயன், எகிப்திய, மெசபடோமிய, சீன, ஐரோப்பிய, ஆப்பிரிக்க நாகரிகக் கதைகள் 'உலகமே ஒரு குடும்பம்' என்ற கருத்தை எடுத்துரைக்கின்றன.
சுவாமிநாராயணர்- குணாதீதானந்த சுவாமி, ராதா- கிருஷ்ணர், சீதா- ராமர்- லட்சுமணர் -அனுமன், ,சிவன்- பார்வதி- விநாயகர்- கார்த்திகேயர், ஜகந்நாதர், வெங்கடாசலபதி (திருப்பதி பாலாஜி) - பத்மாவதி, ஐயப்பன் உள்ளிட்ட சிலைகள் இங்குள்ளன. பாலைவனத்தில் திரிவேணி வளாகத்தில் இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட கங்கை, யமுனை நீர் பாயும் அமைப்பு உள்ளது. கண்ணுக்குத் தெரியாத சரஸ்வதி ஒளியாகக் குறிக்கப்படுகிறாள்.
வருகையாளர் மையம், பிரார்த்தனை மண்டபம், அழகிய தோட்டங்கள், படிப்பறைகள், கண்காட்சி, குழந்தைகளுக்கான விளையாட்டுப் பகுதி ஆகியவை உள்ளன.
அகிம்சை, அனைத்து உயிர்களையும் மதித்தல், சகிப்புத்தன்மை, அமைதி, ஒற்றுமை ஆகியவற்றைப் போதிக்கும் இடமாகவும் செயல்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

