பயிற்றிப் பல கல்வி தந்து...
பத்து ஏழை மாணவர்களுக்குக் கல்வி கற்பிக்கத் தன்னிடமிருந்த வீடு, நிலத்தை விற்றார் புணேவைச் சேர்ந்த ஆசிரியர் யஜுர்வேந்திர மகாஜன்.
பத்து ஏழை மாணவர்களுக்குக் கல்வி கற்பிக்கத் தன்னிடமிருந்த வீடு, நிலத்தை விற்றார் புணேவைச் சேர்ந்த ஆசிரியர் யஜுர்வேந்திர மகாஜன். அவரிடம் பயின்றவர்கள் மகாராஷ்டிராவில் அரசுப் பணிகளில் நல்ல வேலைகளில் அமர்ந்தனர். இன்று அந்த ஆசிரியர் தனது சொந்த ஊரில் ரூ.20 கோடி மதிப்பிலான பயிற்சி வளாகத்தை நடத்தி வந்தாலும், இன்றும் வாடகை வீட்டிலேயே வசித்து வருகிறார்.
அவர் தொடங்கிய 'தீப்ஸ்தம்ப அறக்கட்டளை' இன்று அறுநூறு மாணவர்களுக்கு ஆதரவளிக்கிறது. மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்றோர், திருநங்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் இந்த அறக்கட்டளையில் தேர்வர்களுக்கு இலவசக் கல்வி, தங்குமிடம், ஆலோசனை, வேலைவாய்ப்புக்கான உதவிகள் வழங்கப்படுகின்றன. அவர் கூறியது:
'2005-ஆம் ஆண்டில் 25 வயதான நான் புணேவில் உள்ள போட்டித் தேர்வு பயிற்சி மையம் ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றினேன். அப்போது, ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள், அரசுத் தேர்வுகளுக்குப் பயிற்சி பெறும் சமயத்தில், பயிற்சிக் கட்டணம், தங்குமிடம், அன்றாட உணவுக்கான செலவுகளைச் சமாளிக்க முடியாமல் திணறுவதைக் கவனித்தேன். எனது மனம் சஞ்சலப்பட்டது.
வேலையை விட்டுவிட்டு ஜல்கானுக்குத் திரும்பினேன். தந்தையின் சொத்தில் எனது பங்காகக் கிடைத்த வீடு, விவசாய நிலத்தை விற்று, ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, 'தீபஸ்தம்ப அறக்கட்டளை'யைத் தொடங்கினேன். அதன் சார்பில் பயிற்சி நிலையத்தைத் தொடங்கி, முதலில் 10 மாணவர்களுக்குப் போட்டித் தேர்வுகளுக்காக வகுப்புகளை நடத்தினேன். அதில் படித்த அனைவரும் மகாராஷ்டிர அரசின் பொதுப் பணி ஆணையத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றனர்.
இதன்பின்னர், கல்வி, தொழில் வாய்ப்புகள் கிடைக்காத இதர மாணவர்களின் பக்கம் எனது கவனம் திரும்பியது. அந்தச் சந்தர்ப்பத்தில் 18 வயது ஆதரவற்ற சிறுமியைச் சந்திக்க நேரிட்டது. அப்போது மாற்றுத்திறனாளி மாணவர்களுக்குப் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராவதற்கு மிகக் குறைவான வாய்ப்புகளே இருப்பதையும் உணர்ந்தேன். வெவ்வேறு தேவைகளைக் கொண்ட மாணவர்களுக்கு ஆதரவளித்து உதவ, தகுந்த ஆலோசகர்கள், பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், தொழில்நுட்பங்களை ஒன்றிணைக்கத் தொடங்கினேன்.
2019-ஆம் ஆண்டில் நன்கொடை மூலம் ரூ.20 கோடி செலவில் ஜல்காவ்னில் 'தீபஸ்தம்ப அறக்கட்டளை' குடியிருப்பு வளாகத்தை நிறுவினோம். பின்னர் அறக்கட்டளையின் கிளைகள் புணே, தில்லியில் தொடங்கப்பட்டன. இந்த அறக்கட்டளை அங்கீகரிக்கப்பட்ட 21 மாற்றுத்திறன் பிரிவுகளுக்குப் பொருத்தமான மாணவர்களுடன் இணைந்து செயல்படுகிறது. அறக்கட்டளையின், இணையவழித் திட்டங்கள் 16 மாநிலங்களில் உள்ள மாணவர்களையும் சென்றடைகின்றன.
சாதித்தவர்களில் முக்கியமானவர்கள்
பயிற்சி நிலையங்களில் பயனடைந்தவர்கள் பலர் என்றாலும், ரேணுகா கேகான் என்பவரைக் குறிப்பிட்டாக வேண்டும். ரேணுகா கேகன் மகாராஷ்டிராவின் அகோலா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வளர்ந்தவர். உதட்டசைவைப் பார்த்துப் பேசக் கற்றார். அவர் 80 சதவீதத்துக்கும் அதிகமான செவித்திறன் குறைபாடு உடையவர். எனது அறக்கட்டளையின் 'மனோபலம்' திட்டத்தில் சேர்ந்த ரேணுகாவுக்கு மூன்று ஆண்டு பயிற்சிகள் வழங்கப்பட்டன. ரேணுகா குடிமைப் பணித் தேர்வில் அகில இந்திய அளவில் 948- ஆவது இடத்தில் வெற்றி பெற்றார்.
அதேபோல், 32 வயதான ராஜேஷ் பில்லேவுக்கு சுமார் மூன்று வயதில், மின்சார விபத்தில் இரு கைகளும் துண்டிக்கப்பட்டன. அடுத்த மூன்று மாதங்களுக்குள் கார் விபத்தில் அவர் தனது பெற்றோரை இழந்தார். ராஜேஷ் சேர்ந்த ஆதரவற்றோர் இல்லம் சில ஆண்டுகளில் மூடப்பட்டது. மும்பை செல்லும் ரயிலில் பயணம் செய்த ராஜேஷை காவல்துறையினர் மீட்டு, தொண்டு நிறுவனத்திடம் ஒப்படைத்தனர். 18 வயதை எட்டிய பிறகு, அவர் கோலாப்பூரில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான இல்லத்துக்கு அனுப்பப்பட்டார்.
ராஜேஷ் பாலிடெக்னிக் கல்லூரியில் பொறியியல் படிப்பைத் தொடர்ந்தார். 'மனோபலம்' திட்டம் பற்றி அறிந்து, எனது அறக்கட்டளையில் சேர்ந்தார். இங்கு பயிற்சி பெற்ற பிறகு, ராஜேஷுக்கு இன்ஃபோசிஸில் மென்பொருள் பொறியாளராக வேலை கிடைத்தது' என்கிறார் யஜுர்வேந்திர மகாஜன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

