மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் திமுக எம்.பி.க்கள் சந்திப்பு! இந்தியாவைச் சர்வாதிகார நாடாக மாற்ற பாஜக முயற்சி: ராகுல் காந்தி வெற்றிவேல் முருகனுக்கு ஆரோகரா! அமித் ஷா பதிவு திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றப்பட்டது! தொகுதி மறுவரையறைக்கு திமுக ஆதரவு ஏன்? தயாநிதி மாறன் விளக்கம்

கடைசி நேரப் புகைப்படங்களை நான் பார்த்ததேயில்லை...

சோனியா காந்தி எழுதிய 'பிலாங்கிங் - ஏ ஜர்னி ஆப் லவ்' தன் வரலாறு நூல் அண்மையில் வெளியாகி, இந்திய அரசியலில் ஆதரவு, எதிர்ப்பு என இரு வகை விமர்சனங்களால் பரபரப்பாக விற்பனையாகிக் கொண்டிருக்கிறது.

Updated On :

ஆர்.எஸ்.

சோனியா காந்தி எழுதிய 'பிலாங்கிங் - ஏ ஜர்னி ஆப் லவ்' (சொந்தமாதல் - ஒரு காதலின் பயணம்) தன் வரலாறு நூல் அண்மையில் வெளியாகி, இந்திய அரசியலில் ஆதரவு, எதிர்ப்பு என இரு வகை விமர்சனங்களால் பரபரப்பாக விற்பனையாகிக் கொண்டிருக்கிறது.

பாஜக மீதான சோனியாவின் விமர்சனங்களுக்குப் பதில் அளித்துள்ள பாரதிய ஜனதா கட்சியினர் கூறும் குற்றச்சாட்டுகள், மற்றும் சம்பவங்களின் காலப்பிழைகளுக்குப் பதில் தந்துள்ள சோனியா காந்தி, 'டைரி எழுதும் வழக்கம் எனக்கில்லை. என் நினைவில் இருந்தே இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளேன்' என்று ஒரே பதிலில் முடித்துக்கொண்டுவிட்டார்.

சோனியா வாழ்க்கையில் மூன்று சம்பவங்களை இந்தப் புத்தகம் மீள்பார்வை செய்கிறது.

ராஜீவுடன் ஏற்பட்ட காதல் மற்றும் திருமணம், குடும்பத்தைப் பற்றிப் பேசப்படும் அவதூறுகளுக்கு விளக்கம், இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி படுகொலைகள் ஏற்படுத்திய துயரம், அது சார்ந்த வாழ்க்கையின் திசைமாறிய போக்குகள் ஆகிய மூன்று விஷயங்களையும் சொல்கிறது.

இந்தப் புத்தகத்தின் பெரும்பகுதி பாரதிய ஜனதா மற்றும் வலதுசாரிகள் அனைவரும் சோனியா மீது சொல்லும் குற்றச்சாட்டுகளுக்குப் பதில் என்று சொல்லாமல், தன் வாழ்க்கை வரலாறு என்பதாகச் சொல்லிச் செல்கிறது. இந்திரா காந்தி படுகொலையும், அதைத் தொடர்ந்து ராஜீவ் இந்தியப் பிரதமராகப் பதவியேற்று, அரசியலில் நுழைந்தவுடன் அவருக்கு எப்போதும் மனதில் நீடித்த பதற்றத்தையும் சோனியா விவரித்துள்ளார்.

ராஜீவ் காந்தி உயிருக்கு ஆபத்து ஏற்பட்ட சம்பவங்களையும், இந்திரா காந்தி படுகொலைக்குப் பிறகு உருவான எஸ்பிஜி பாதுகாப்பை அன்றைய பிரதமர் வி.பி.சிங் விலக்கிக்கொண்டதையும் வேதனையுடன் நினைவுகூர்ந்துள்ளார்.

இந்தப் புத்தகத்தில் சீக்கியர் குறித்த தகவல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பஞ்சாப் மாநிலத்தில் இந்தப் புத்தகத்தை எரிக்கும் போராட்டங்கள் நடந்தன. திமுக குறித்தும், விடுதலைப்புலிகள் குறித்தும் விமர்சனங்கள் வைத்துள்ளார். திமுக விளக்கம் அளித்தபோதிலும், புத்தகத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

Story image

தமிழகத்தில் ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். கணவர் கொல்லப்பட்ட சம்பவத்தை பிரியங்கா தெரிவித்ததையும், கடைசி வரை ராஜீவ் முகத்தைக் காண முடியாததையும் அவர் விவரித்துள்ள அத்தியாயம், அரசியல் சாய்வுகளை மறந்து, ஒரு பெண்ணாக அவரைப் பார்க்கும் எவருடைய மனதையும் கலங்கச் செய்யும்.

'... படுக்கை அறையில் புத்தகம் படித்தபடி படுத்துக்கொண்டிருந்தேன். வராந்தாவில் பிரியங்கா வேகமாக ஓடி வருவது கேட்டது. வீட்டில் யாரும் இல்லை. அது அவளாகத்தான் இருக்கவேண்டும். அந்த ஓட்டம் திடுதிப்பெனக் கதவருகே நின்றது. தயக்கத்துடன் கதவைத் திறந்து, மெதுவாகவும், தீர்க்கமாகவும் அடியெடுத்து வந்தாள். வலிந்து ஏற்படுத்திக்கொண்ட அமைதியுடன் என்னிடம் வந்தாள்.

அவளுக்கு வேகமாக மூச்சுவாங்கியது. முகம் வெளிறிக்கிடந்தது. அவளது கண்கள் நான் இதுவரை பார்த்திராத அளவுக்குக் கருமையாக இருந்தன. 'இப்பதான் எனக்கு போன் வந்தது. அங்கே ஒரு குண்டுவெடிப்பு நடந்துள்ளது. அப்பாவுடன் இருந்த 12 பேர் பலியாகிவிட்டனர். ஆனால், அவர் ஓகே என்கிறார்கள். அப்படியிருக்க வாய்ப்பில்லை. பன்னிரண்டு பேர் இறந்திருப்பார்கள் என்றால் அவருக்குக் காயம் ஏற்பட்டிருக்க வேண்டும். அவர் மருத்துவமனையில் இருக்க வேண்டும். நாம் சென்னைக்குச் செல்லவேண்டும் அம்மா. கிளம்பு, உடையை மாற்றிக்கொள்...'

இப்படியாகத்தான் அவருக்கு முதலில் தகவல் அரைகுறையாகத் தெரிவிக்கப்படுகிறது. பிறகு, பிரியங்கா வெளியே சென்று, ராஜீவின் உதவியாளர் ஜார்ஜுடன் பேசி உறுதிப்படுத்திய பின்னர், மீண்டும் அறைக்கு வந்து, பாதி இருளில் நின்று சொல்கிறார்: 'அப்பா இறந்துவிட்டார்'.

நொறுங்கிப்போகும் சோனியா கால்கள் பிடிப்பிழந்து மயங்கி விழப்போகும் நிலையில் பிரியங்கா தாங்கிக்கொள்கிறார். சோனியா மீண்டும் தானே ஜார்ஜுக்கு போன் செய்கிறார். இதெல்லாம் வெறும் கனவாக முடிந்துவிடாதா என்ற ஏக்கத்துடன் போனில் பேசுகிறார்.

'ஆமாம் உண்மைதான்...' என்று ஜார்ஜ் சொன்ன பிறகுதான் அவருக்கு நிஜம் புரிகிறது. 'நான் போயிருக்க வேண்டும்' என்று கதறி அழுகிறார்.

ராஜீவின் உடலைக் கொண்டுவரச் செல்லும் அதே விமானத்தில் நாங்களும் செல்ல வேண்டும் என்று யாருடனோ போனில் பிரியங்கா வாதிடுவதும், அமெரிக்காவில் படித்துக்கொண்டிருந்த ராகுலுக்குத் தகவல் சொல்ல முயன்று கொண்டிருந்ததையும் பார்க்கிறபோது ராகுல் முன்பே சொன்னது நினைவுக்கு வருகிறது.

எஸ்பிஜி பாதுகாப்பு விலக்கப்பட்டிருந்த நிலையில் ராகுல் காந்தி, தன் குடும்பத்தினரிடம், 'அப்பாவின் பாதுகாப்புக்கு ஏதாவது செய்யாவிட்டால், நான் அவரது இறுதி ஊர்வலத்துக்குத்தான் திரும்பி வரவேண்டியிருக்கும்' என்று குறிப்பிட்டதை சோனியா நினைவுக்கு வருகிறது.

அவர்களை சென்னை விமான நிலையத்தில் காங்கிரஸ் தொண்டர்கள், பெண்கள் பார்த்ததும் அழுது, மார்பில் அடித்துக்கொண்டு அழுகின்றனர். 'ராஜீவைப் பார்க்க வேண்டும்' என்கிறார்.

'இப்ப முடியாது. டாக்டர்கள் உடலை எம்பாமிங் செய்கிறார்கள்' என்கிறார்கள்.

மீண்டும் மகளிடம் கேட்கிறார். 'ஏன் பார்க்க அனுமதி மறுக்கிறார்கள்?' பிரியங்காவிடம் பதில் இல்லை.

பல மணி நேரத்துக்கு சோனியாவை யாரும் நெருங்கி எதுவும் சொல்ல முடியாதபடி பிரியங்காவே எல்லாவற்றையும் எதிர்கொள்கிறார். எல்லாப் பொறுப்புகளையும் தானே ஏற்றுக்கொள்கிறார். கடைசியாக விமானத்தில் ஏறும்போது, ராஜீவ் உடல் வைக்கப்பட்டிருந்த சவப்பெட்டியும், அவரது பாதுகாவலர் சப்-இன்ஸ்பெக்டர் குமார் பிரதீப் குப்தா உடலும் ஏற்றப்படுகிறது. இரு சவப்பெட்டிகளும் விமானத்தின் இருக்கைக்குக் கீழே நடைபாதையில் வைக்கப்பட்டு கட்டப்படுகிறது. பிரியங்கா இரு பெட்டிகள் மீதும் மலர் வளையும் வைத்துவிட்டு, அப்பாவின் உடல் இருந்த பெட்டியின் மீது தலைவைத்தபடி பயணிக்கிறார்.

தில்லியில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வந்த பிறகும் ராஜீவ் உடலைப் பார்க்க முடியவில்லை . 'நான் பார்த்தே ஆகவேண்டும்' என்று பிடிவாதமாக நின்றாலும் மறுக்கப்படுகிறது.

...திடீரென்று, ராஜீவைப் பார்த்தே ஆகவேண்டும் என்ற ஒரு வேகம் என்னுள்ளே எழுந்தது. 'நான் பார்த்தாக வேண்டும்' என்றேன். மீண்டும் மீண்டும் என்னை தடுத்தார்கள். 'இப்ப வேண்டாம். இப்ப வேண்டாம். பொறுமையாக இருங்கள், கொஞ்சநேரம் போகட்டும்' என்கிறார்கள். அப்போது நான் நினைவுகூர்ந்தேன். ஆமாம், ராஜீவ் கண்தானம் செய்திருக்கிறார்.

Story image

அவர் அம்மாவும் கண்தானம் செய்திருந்தார். ஆனால், அந்தத் துயர வேளையில் அது எங்கள் நினைவுக்கு வரவில்லை. இப்போது நான் பார்த்தாக வேண்டும். அவரது கடைசி விருப்பத்தை, கண்தானத்தைச் சொல்ல வேண்டும். அந்தத் துயர வேளையில், எங்களுடன் இருந்த குடும்ப டாக்டர் நினைவுக்கு வந்தார். 'டாக்டர் மாத்தூர் இருக்கிறாரா? அவருடன் உடனடியாகப் பேசவேண்டும்' என்றேன். நான் பேசியபோது டாக்டர் சொன்ன பதில், 'கண்களா? என்ன பேசுறீங்க... உடம்புல ஒண்ணும் மிச்சமில்ல. ஒண்ணுமே இல்ல...'

எனக்குப் பேரிடியாக இருந்தது, வயிற்றைப் பிசைந்தது, வாந்தியெடுக்கும் உணர்வு ஏற்பட்டது. என்னால் சுவாசிக்க முடியவில்லை. செத்துப்போக விரும்பினேன். நான் அவருடன் போயிருக்க வேண்டும்... அவரோடவே போயிருக்க வேண்டும்...'

வெடிவிபத்து நடந்த இடத்தில் ராஜீவ் உடல் பல நூறாகச் சிதறிய படத்தைப் பத்திரிகைகள், ஊடகங்கள் வெளியிட்டபோதும் அதை சோனியா பார்க்க முடியாதபடி, பிரியங்காவும் ராகுலும் தடுத்தனர். அவர் கண்ணில் படாதபடி மறைத்தனர். 'குழந்தைகளுக்கு சில படங்களை பெற்றோர் மறைப்பது போல, இந்தப் படுகொலைப் படங்களை தாய் பார்க்காதபடி என் குழந்தைகள் மறைத்தனர்' என்று குறிப்பிடுகிறார் சோனியா. அந்தப் படங்களை நான் கடைசிவரை பார்க்கவே இல்லை என்கிறார்.

ராஜீவ் கொலை தொடர்பாக திமுக அரசின் பாதுகாப்பு குறைபாட்டைச் சுட்டிக்காட்டி, 'அவர்களும் ஒரு காரணம், அவர்களுக்கும் பொறுப்பு உள்ளது' என்று கமிஷன் சுட்டிக் காட்டியுள்ளதைக் குறிப்பிட்டுள்ளார். ஆனாலும், பாஜகவைத் தோற்கடிக்க வேண்டும் என்ற அரசியல் காரணங்களுக்காக திமுகவுடன் கூட்டணி வைத்துக்கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ராஜீவ் படுகொலை விசாரணையில், இதற்குச் சதித்திட்டத்தைத் தீட்டியவர்களில் விடுதலைப்புலிகள் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு மாதத்துக்குப் பிறகு முக்கியக் குற்றவாளிகளை இருவரை போலீசார் பெங்களூரில் சுற்றி வளைத்ததைக் குறிப்பிடும் சோனியா, இந்த நடவடிக்கையை ஊடகத்துக்குக் கசிய விட்டது யார்? அவர்களை உயிருடன் பிடிக்க முடியாமல் செய்தது யார்? என்று கேள்வி எழுப்புகிறார். ஒரு முக்கியக் குற்றவாளி தமிழகப் போலீஸாரால் கைது செய்யப்பட்டு, பிறகு காவலில் இருந்தபோது ஒரு மரத்தில் தூக்கில் தொங்கி இறக்கிறார். இதெல்லாம் என்ன? என் கேள்விகள் பல மடங்கு பெருகியது. ஆனால், உண்மை தெரியவரவே இல்லை' என்கிறார் சோனியா.

நீதிபதி ஜே.எஸ்.வர்மா கமிஷன் தனது அறிக்கையில், படுகொலை சம்பவத்துக்கு ஓராண்டுக்கு முன்பு விடுதலைப் புலிகளின் ஓயர்லெஸ் உரையாடலை ஐபிகேஎப் இடைமறித்துக் கேட்டதில், 'ராஜீவ் காந்தி தலையை உடைத்தெறியுங்கள். காலி செய்யுங்கள், கொல்லுங்கள்...' என்று கூறப்பட்டதை அன்றைய பிரதமர் வி.பி சிங் தலைமையிலான அரசு பொருட்படுத்தவில்லை. 'ராஜீவ் மீது தாக்குதல் நடக்க வாய்ப்புள்ளது' என்று திரும்பத் திரும்ப எச்சரித்த போதும் தமிழகப் போலீசார் அதைக் கண்டுகொள்ளவில்லை என்று குறிப்பிட்டுள்ளதை சோனியா மேற்கோள் காட்டுகிறார்.

இந்தப் படுகொலையில் தமிழகத்தின் ஒரு சாமியாரும் சில அரசியல் பிரமுகர்களும் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் கூறிய ஜெயின் கமிஷன், கொலையாளிகளை ஆதரித்துவந்த திமுக தலைவரும் இந்தப் படுகொலைக்குப் பொறுப்பாவார் என்று கூறியதைக் குறிப்பிடும் சோனியா, திமுக மீது அவருக்குக் கடும் மனவருத்தம் இருந்து வந்ததை பதிவு செய்துள்ளார். இருந்தும், திமுகவுடன் கூட்டணி வைக்க நேர்ந்தது.

அந்த வலிதரும் நினைவுகள் என்னை வதைத்தன. என்னை நானே கேட்டுக் கொண்டேன். நான் செய்ய வேண்டியது என்ன? அவர்களுடன் கைகோத்தால் அது ராஜீவுக்கு செய்த துரோகம் ஆகிவிடாதா? மீண்டும் யோசித்தேன். ஒருவேளை ராஜீவ் இருந்திருந்தால், பாஜகவுக்கு எதிராக வலுவான அணி அமைய இது அவசியம் என்று தெரிந்திருந்தால், கூட்டணி முடிவுக்குச் சென்றிருப்பார். உடனடியாக ஒரு முடிவு எடுத்தாக வேண்டும். ஒரு நெடியநோக்கத்துக்காக, திமுகவுடன் கூட்டணி பேச்சை தொடங்குவதற்காக மு.கருணாநிதிக்கு போன் செய்தபோது என் உடல் நடுங்கிக்கொண்டிருக்க இதயம் வேகமாக துடித்து தொண்டையை அடைத்தது.

எனக்குத் தமிழ் தெரியாது, அவருக்கு ஆங்கிலம் தெரியாது என்றாலும், அவரது எதிர்வினை சுமுகமாக இருந்தது. பிறகு சந்தித்து கூட்டணி குறித்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டோம். காலப்போக்கில், கருணாநிதி மீது மரியாதை ஏற்பட்டது. கலைகள் உள்ளிட்ட பொது விஷயங்களில் ஒருமித்தக் கருத்து இருந்தது. அவர் கவிஞர், திரைப்படக் கதாசிரியர், தொன்மையான தமிழ் மொழி மற்றும் இலக்கியங்களின் பாரம்பரியத்தின் மீது பெருமிதம் கொண்டவர். ஆதலால் நல்லவிதமாகச் சென்றது.' இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

சோனியாவுக்கு தான் இந்தியர் என்பதை மெய்ப்பித்தலே இந்தப் புத்தகத்தின் நோக்கம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.