மதுராந்தகம், தாராபுரம் இடைத்தோ்தல் பிரசாரம் இன்று நிறைவு! கோவை, நீலகிரி, தேனியில் இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புநாடாளுமன்ற நிலைக் குழுக்கள் மாற்றியமைப்பு! திருச்சி சிவா, கனிமொழிக்கு மீண்டும் தலைமைப் பொறுப்பு!தேஜஸ் போா் விமானத் திட்ட தாமதத்தால் பாதிப்பு: விமானப் படை தலைமைத் தளபதிபிரேஸிலில் இன்று அதிபா் தோ்தல்ஹசீனா நாடு கடத்தல்: காலக்கெடு இல்லை - இந்தியா

200 ஆண்டுகளுக்கு முன்பே உடற்கூறு மருத்துவம்

தஞ்சாவூரை கி.பி. 1798 - 1832 ஆம் ஆண்டுகளில் ஆட்சி செய்த மன்னர் சரபோஜி கலை, அறிவியலில் மேதையாகத் திகழ்ந்தார்.

Published On :

தஞ்சாவூரை கி.பி. 1798 - 1832 ஆம் ஆண்டுகளில் ஆட்சி செய்த மன்னர் சரபோஜி கலை, அறிவியலில் மேதையாகத் திகழ்ந்தார். அவரது காலத்தில்தான் பாரம்பரியக் கலைகள் புத்துயிர் பெற்றன. அதோடு அவர் மருத்துவத் துறையில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தினார்.

இதுகுறித்து தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி ஓய்வு பெற்ற பேராசிரியரும், மருத்துவத் தமிழறிஞரும், எழுத்தாளருமான சு. நரேந்திரன் கூறியது:

'மன்னர் சரபோஜிக்கு ஆங்கிலேயரின் தொடர்பால் சிறந்த ஆங்கில அறிவும், பல்துறைப் புலமையும் பெருகின. ஐரோப்பியக் கல்வியின் தாக்கத்தால் மருத்துவத் துறையில் புதிய நடைமுறைகளைக் கொண்டு வந்தார். பல நோய்களுக்கான மருந்துகளை ஆராய்ந்து வகைப்படுத்தினார். அவரது காலத்தில் ஆயுர்வேத, சித்தா, யுனானி, அலோபதி ஆகிய மருத்துவ முறைகள் நடைமுறையில் இருந்தன.

தன்வந்திரி மகாலின் சிறப்புகள்:

'தன்வந்திரி மகால்' என்ற ஆராய்ச்சிக் கூடத்தில் சிறப்பு மருத்துவமனை நிறுவப்பட்டு, அங்கு வரும் நோயாளிகளுக்கு மருந்துகளைக் கொடுத்து, ஆங்கில மருத்துவரைக் கொண்டு ஒவ்வொரு நோயாளி பற்றிய வரலாற்றைக் குறிக்கச் செய்தார். இதுபோல, இவர் கண்ட 5 ஆயிரத்துக்கும் அதிகமான மருத்துவ முறைகளை அவையிலிருந்த புலவர்களைக் கொண்டு தமிழ்ப்பாடல்களாக எழுதி, 18 நூல்களாகப் பதிப்பித்தார்.

அரசு ஆரோக்கிய சாலைகளை அமைத்து, அங்கு மருத்துவ முறைகளைக் கற்பித்தலும், நோயாளியைக் குணப்படுத்துதலும் மேற்கொள்ளப்பட்டன. நோயாளிகளுக்குப் பத்தியம், கசாயம், கங்கம் செய்து கொடுப்பதற்காக நியமிக்கப்பட்ட பெண்ணின் பெயர், அவர்களுக்கான ஊதியம் போன்றவற்றையும் ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

மருத்துவ ஆய்வுகளுக்கு உதவியாக மூலிகைத் தோட்டமும், மருந்து தயாரிக்கும் தொழிற்கூடமும் இருந்தன. அங்கு தயாரிக்கப்படும் மருந்துகளில் அதன் பெயரும், மருந்து தயாரான காலமும் பதிக்கப்பட்டன. இந்த மருந்துகள் 'ஒளஷதக் கொட்டடி' என்ற இடத்தில் மாத்திரை, லேகியம் போன்ற வடிவங்களில் சேமித்து வைக்கப்பட்டன.

எஸ். கணபதி ராவ் மோடி ஆவணங்களை (மராத்திய சுருக்கெழுத்து) ஆராய்ந்ததில், இன்றைய சரஸ்வதி மகால் நூலகம் உள்ள இடத்திலேயே தன்வந்திரி மகால் நடைபெற்று வந்தது தெரியவந்தது. இதுவே மற்ற இடங்களில் நடைபெற்ற ஆரோக்கிய சாலைகளுக்குத் தலைமை பீடமாகத் திகழ்ந்தது. ஆரோக்கிய சாலைகளில் மருத்துவர், மருந்து கட்டுபவர், மருந்தாளுநர், கணக்கர், உதவி புரிபவர் ஆகியோர் பணிபுரிந்தனர். சித்த மருத்துவ ஆய்வுகளுடன் சரபோஜி மன்னர் 'நவ வைத்திய கலாசாலை' என்ற சிறு பல்கலைக்கழகத்தைத் தொடங்கி, மருத்துவக் கல்வியைப் போதித்துள்ளார்.

அன்றே உடற்கூறு சோதனை:

கி.பி. 18- ஆம் நூற்றாண்டில் மனித உடலை மேற்புறமாக மட்டும் தொட்டு உணராமல், உடலைக் கூறுபோட்டு கூர்ந்து கருத்தூன்றிப் பார்த்து, அதை நூல் வடிவத்தில் ஒவ்வொரு அடுக்காக, அங்கமாகப் பார்ப்பது என்பது மருத்துவ உலகுக்கு பெரு வெளிச்சத்தை ஏற்படுத்தியது. சுதேசி மருத்துவத்துக்கு மாறாக பிரேதப் பரிசோதனை என்பது மேலை மருத்துவத்தில் ஒரு பிரிவாக இருந்தது. இதைக் கூர்ந்து அறிந்த மன்னர் சரபோஜி இதில் இருந்த குறைபாடுகளைக் களைய, தானே முயற்சி மேற்கொண்டார். கி.பி. 1805-இல் உடலைக் கூறு போட்டுச் சோதனை செய்தார்.

ஏனெனில், கொல்கத்தா மருத்துவக் கல்லூரியில் கி.பி. 1835-இல் மதுசூதன் குப்தா செய்த முதல் உடல்கூறு பரிசோதனை என வரலாற்றுப்பூர்வமாக அறியப்பட்டதற்கு 31 ஆண்டுகளுக்கு முன்பே, மன்னர் சரபோஜி நிகழ்த்தினார். அந்தக் காலகட்டத்தில் மைக்ராஸ்கோப், மருத்துவத் தொழில்நுட்பங்கள், நுண்ணுயிர்களுக்கான பரிசோதனைகள் போன்ற எந்தவித முன்னேற்றமும் இல்லை.

அந்தக் காலத்தில் உடலைக் கூறுபோட்டு நோயை அறிந்து கொள்வதை இந்திய சமூகம் முழுமையாக, ஆழமாக விருப்பமில்லாது அருவருக்கத்தக்கதாக நினைத்தது உண்டு. கொல்கத்தா உடற்கூறு சோதனைக்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே, சரபோஜியால் மேற்கொள்ளப்பட்ட உடற்கூறு சோதனை நிகழ்வு முறையாகப் பதிவு செய்யப்படவில்லை என்பதால் அது இந்திய வரலாற்றில் இடம் பிடிக்காமல் போய்விட்டது.

எலும்புக்கூடும் சரபோஜியும்:

கி.பி. 1850-இல் திருவாங்கூர் மன்னர் உத்திரம் திருநாளிடம் தனது திறமையான கைவினைஞர்களால் தந்தத்தில் செய்த எலும்புக்கூடு இருந்தது. அதற்கு 40 ஆண்டுகளுக்கு முன்பே சரபோஜியால் விலை உயர்ந்த மரம், பளிங்கு எலும்புக்கூடுகள் இங்கிலாந்திலிருந்து வரவழைக்கப்பட்டன. இதை ஒத்த மரப்பொம்மை கேரள மாநிலம், திருவனந்தபுரத்திலுள்ள தேசிய வரலாற்று அருங்காட்சியகத்தில் காணப்படுவதாக நூல்களில் கூறப்பட்டிருந்தாலும், அது, தற்போது விசாகப்பட்டினம் மருத்துவக் கல்லூரியில்தான் உள்ளது.

கண் மருத்துவம்:

1805-ஆம் ஆண்டில் உடற்கூறு குறித்த கல்வியைக் கற்க ஆரம்பித்த மன்னர் சரபோஜி, தன் சொந்த பிரச்னைக்காக கண் நோய்

குறித்து 1820-ஆம் ஆண்டுக்கு பின்பு அறிந்து கொள்ளத் தொடங்கினார். மன்னர் சரபோஜிக்கு இடது கண்ணில் கோளாறு ஏற்பட்டது. அவர் சென்னை கண் மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் லேனின் உதவியாளர் ஜான்மேக் மூலம் தஞ்சாவூரில் அறுவை சிகிச்சை பெற்று, முழு குணமடைந்தார். இதனால், தஞ்சாவூர் ஆரோக்கிய சாலையில் கண்புரைக்கான அறுவை சிகிச்சையை இலவசமாக மேற்கொண்டதோடு, சிகிச்சை முடிந்து செல்லும் மக்களுக்கு ரூ. 2 நன்கொடையாகக் கொடுக்கப்பட்டது. எனவே, அவரை 'கண் மருத்துவர் மன்னர் சரபோஜி' என ஆராய்ச்சியாளர்கள் புகழ்கின்றனர்' என்கிறார் மருத்துவர் நரேந்திரன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.