பாஜகதான் எதிரி; கூட்டணியை உடைக்க சமாஜவாதி விரும்பாது: அகிலேஷ் யாதவ் உறுதி!உசைன் போல்ட் சாதனையை முறியடித்த சீன ரோபோ!சர்வதேச விமானப் பயணிகளுக்கு போர்டிங் பாஸில் முத்திரை வேண்டியதில்லை!குழந்தைகளுக்கான இருமல் மருந்துகள்: இரு வகை மூலப் பொருள்களுக்குத் தடைவெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இன்று ரஷியா பயணம்!படிக்காமலும் வேலைக்கும் செல்லாத 8.7 கோடி இளைஞா்கள்: நீதி ஆயோக்!

தமிழ் நாகரிகத்தின் முதல் பள்ளி...

தமிழர் நாகரிகம் 2,600 ஆண்டுகளுக்கு முன்பே வைகை நதிக்கரையில் செழிந்து வளர்ந்திருந்ததை உலகுக்கு எடுத்துரைத்தது கீழடி அகழாய்வின் கண்டுபிடிப்புகள்.

Published On :23 ஆகஸ்ட் 2026, 4:08 am IST

தமிழர் நாகரிகம் 2,600 ஆண்டுகளுக்கு முன்பே வைகை நதிக்கரையில் செழிந்து வளர்ந்திருந்ததை உலகுக்கு எடுத்துரைத்தது கீழடி அகழாய்வின் கண்டுபிடிப்புகள். அதற்கு நிகரான கல்வி, கலாசாரம், ஆன்மிகம், மருத்துவம், நாகரிக வளர்ச்சியை எடுத்துச் சொல்லும் மற்றொரு இடம் மீனாட்சிபுரம் மலைக்குகை கல்வெட்டுகள்.

மதுரையிலிருந்து 18 கி.மீ. தொலைவில் நிலம், நீர், மலை வளங்களைக் கொண்ட இயற்கை எழில் சூழ்ந்த ஊரான இங்கு வானளாவ உயர்ந்து நின்று தெற்கு வடக்காக சுமார் 1 கி.மீ. நீளத்தில் பெரிய பெரிய குன்றுகளாய்க் காட்சியளிக்கிறது ஒரு மலைத்தொடர். இதன் அடிவாரத்திலிருந்து மிகக் குறுகிய படிக்கட்டுகள் வழியே செங்குத்தாக மலை உச்சிக்குச் சென்றால், இயற்கையாக அமைந்த குகைத் தளங்கள் உள்ளன. வெயில் நேரத்திலும் இந்தக் குகைக்குள் குளிர்சாதன அறைக்குள் உட்கார்ந்தது மாதிரியான சில்லிடும் காற்றை இன்றும் உணரலாம்.

மலைகளில் பல அடி உயரமான வாசனைப் புற்களும், மலைத்துளசியும் பசுமையாய்க் காட்சியளிக்கிறது. தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையினர் இந்தக் குகைத் தளங்களுக்குச் செல்ல வசதியாக வழிநெடுகிலும் குறியீடுகளை அமைத்துள்ளனர். இந்தக் குகைத் தளங்களில் பழந்தமிழ்க் கல்வெட்டுகள் இருப்பதை 1882-ஆம் ஆண்டில் ராபர்ட் சீவல் என்ற தொல்லியல் அறிஞர் பதிவு செய்தார். அவரைத் தொடர்ந்து இந்தியக் கல்வெட்டுத் துறை அறிஞர் வெங்கையா இக்கல்வெட்டுகளை வாசிப்பதற்கு முயற்சித்தபோது, அவர் இதை பாலி, பிராகிருத மொழி கல்வெட்டுகளாக இருக்கலாம் எனக் கூறினார்.

கல்வெட்டியல் அறிஞர் கே.வி. சுப்பிரமணிய ஐயரே இவை முழுவதும் தமிழ்க் கல்வெட்டுகள் என்றும், தமிழுக்கு மட்டுமே உரிய சிறப்பு எழுத்துகளான ழ, ற, ன ஆகியன இடம் பெற்றிருப்பதையும் சுட்டிக் காட்டினார். இதற்கு கல்வெட்டியல் ஆய்வாளர் ஹெச். கிருஷ்ணசாஸ்திரி மறுப்பு தெரிவித்தார். பல்வேறு ஆய்வாளர்களும் இவற்றை தெளிவாகப் பரிசீலித்து முடிவில் தமிழ்க் கல்வெட்டுகளே என உறுதிப்படுத்தினர்.

ஐந்து குகைத் தளங்களில் ஆறு கல்வெட்டுகள்: இந்தக் குன்றில் ஐந்து வெவ்வேறு பெரிய குகைத் தளங்களில் மொத்தம் ஆறு தமிழ் பிராமி கல்வெட்டுகள் உள்ளன. இக்குகைகளில் சமணத் துறவிகள் வாழ்ந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இரு கல்வெட்டுகளில் சங்க கால பாண்டிய மன்னர் நெடுஞ்செழியனின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் காலம் கி.மு. 300 என 'பத்மஸ்ரீ' ஐராவதம் மகாதேவன் கூறியுள்ளார்.

தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் என இரு பாண்டிய மன்னர்கள் நெடுஞ்செழியன் என்ற பெயரால் சங்கத் தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்படுகின்றனர். எனவே, மீனாட்சிபுரக் குகையில் குறிப்பிடப்படும் நெடுஞ்செழியன் இவர்களில் ஒருவராகவோ அல்லது இவர்களுக்கு முந்தைய காலத்தவராகவோ இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

முதல் கல்வெட்டில் நந்தசிரிகுளன் என்ற சமணத் துறவிக்கு பாண்டிய அரசு அதிகாரி கடலன்வழுதி, மன்னனின் உறவினர் இளஞ்சடிகன், இவரது தந்தை சடிகன் ஆகியோர் கல்படுகைகள் அமைத்துக் கொடுத்த செய்தி சொல்லப்பட்டுள்ளது. குகைப்பாறையின் உச்சியில் தமிழ் பிராமி எழுத்தில் 'கணிய்நந்தஸ்ரீ இகுஅன்கே தம்மம் ஈத்தா நெடுஞ்சழியன் பனஅன் கடலன் வழுதி கொட்டுப்பித்த பாளிய்' என்று பொறிக்கப்பட்டுள்ளது. இந்தப் பாறையில் மழைநீர் உள்ளே கல்படுகைக்கு வராமல் தடுக்கும் வகையில் காடிநீர் வடியும் விளிம்பு நெடுக வெட்டப்பட்டுள்ளது. இதில், 'வழுதி' என்ற சிறப்புப் பட்டம் பாண்டிய மரபுக்கு மட்டுமே உரித்தானது.

Story image

இந்தக் கல்வெட்டுக்குக் கீழே மற்றொரு சிறிய கல்வெட்டில், 'கனிநத்தி கொடியோர்' என எழுதப்பட்டுள்ளது. இந்தப் பாறைக்குப் பின்னால் உள்ள இரு பாறைகளில் மூன்றாம், நான்காம் கல்வெட்டுகள் உள்ளன. மூன்றாவதில், 'வெள்ளறை நிகமதோர் கொடியோர்' என்றும், நான்காவதில் 'சந்தரிதன் கொடுப்பித்தோன்' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மற்றொரு குகையில் நீண்ட ஒரே வரியில் அமைந்த ஐந்தாவது கல்வெட்டில், 'கனிநத்தீஸ்ரீ கேதம்மம் வெள்ளறை நிகமது காவிதி கழிதிக அந்தை பிணவு கொடுப்பிதோன்' என்றுள்ளது.

இதில் குறிப்பிடப்படும் 'வெள்ளறை' என்னும் ஊர் காரணப் பெயரால் அமைந்தது. அதாவது, 'பளீர்' என்ற பளிங்கு போன்ற வெண்மையான சுண்ணாம்புக் கற்களால் அமைந்த மலையடிவார ஊர் என்பது இதன் பொருள். காலப்போக்கில் அது மருவி இன்றைக்கு 'வெள்ளரிப்பட்டி' என அழைக்கப்படுகிறது.

2,300 ஆண்டுகளுக்கு முன்பு தூத்துக்குடியில் எடுக்கப்பட்ட முத்துகளை வாங்கி, பிற ஊர்களுக்குச் சென்று விற்கும் முத்து வணிகம் இவ்வூரில் நடைபெற்றது.

'நிகமம்' என்பது வடசொல். அது ஒரு வணிகக் குழுவைக் குறிப்பிடுகிறது. அதாவது, 'வெள்ளறை' என்ற வணிக நகரைச் சேர்ந்த அந்தை அதிதன் என்பவரும், 'நத்திய' என்ற துறவியும், வெள்ளறை வணிகக் குழுவினரும் கல்படுகைகளைத் தானமளித்தனர் எனச் சொல்லப்பட்டுள்ளது. இதற்குக் கீழாக உள்ள மற்றொரு பெரிய குகை வாயிலில் ஆறாவது கல்வெட்டாக, 'கனிநத்திஸ்ரீ இருவன் கே நெடுஞ்சழியன் சாலகன் இளஞ்சடிகன் தந்தை கொட்டுப்பித்த பளிய்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில், 'நெடுஞ்செழியனுடைய சகலை இளஞ்சடிகன் என்பவனுடைய தந்தை இக்கல்படுகைகளைத் தானமளித்தார்' என்பதாகும்.

இந்தக் கல்வெட்டுகளில் நிகமம், தம்மம், சாலகன் ஆகிய சம்ஸ்கிருதச் சொற்கள் காணப்படுகின்றன. அதேபோல் ச, த என்ற இரு சொற்களும் கலந்துள்ளன. எனவே, வடக்கேயிருந்து புலம் பெயர்ந்து கர்நாடக மாநிலம் வழியாக மதுரைக்கு வந்து தங்கிய சமணத்துறவிகள் இங்கு வந்தவுடன் தமிழையும் நன்கு கற்று கல்வெட்டு பொறிக்கும்போது வட சொற்களையும், வட எழுத்துகளையும் கலந்து எழுதியுள்ளனர்.

2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பள்ளி: சமணத் துறவிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தங்கினர். அங்கு அவர்கள் கல்வி, மருத்துவம், உணவு, அடைக்கலம் ஆகிய தர்மங்களை வாழ்நாள் முழுவதும் தொடர்ந்தனர். இவர்களுக்கு வேண்டிய பொருளுதவியை பாண்டிய மன்னர்களும், பல்வேறு வணிகக்குழுக்களும் மனமுவந்து அளித்தனர்.

இந்த மலையில் 2007-ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையினர் அகழாய்வு மேற்கொண்டபோது, இரண்டு அறைகளைக் கொண்ட செங்கல் கட்டடங்கள், ஒரு அடி நீளமும், அரை அடி அகலமும், நான்கு அங்குலம் பருமனுமாக இரண்டு கறுப்பு, சிவப்பு பானை ஓடுகளைக் கண்டறிந்தனர்.

இந்த அறைக்கு அருகிலேயே மூலிகை அரைக்கும் பட்டியல் கல் இருந்தது. இரு அறைகளுக்கு சற்று தள்ளி இயற்கையாக வீடு போன்ற அமைப்புடன் கூடிய விசாலமான குகை ஒன்று உள்ளது. அங்கே சுமார் நூறு மாணவர்கள் வசதியாக தரையில் அமர்வதற்கேற்றவாறு மண் மேடையும் உள்ளது. பகல் முழுவதும் வெளிச்சமும், நல்ல காற்றோட்ட வசதியும் உள்ள இடமாக அது அமைந்துள்ளது.

இந்தச் செங்கல் கட்டடங்கள் 2000 ஆண்டுகளுக்கு முந்தையதாகும். இந்த அறைகளின் மேற்கூரை மரக்கட்டைகளால் வேயப்பட்டு, சுட்ட ஓடுகளால் மூடப்பட்டிருந்தன. அகழாய்வின்போது துளையிடப்பட்ட விரல் பதிவு ஓடுகளும், ஆணிகளும், மரக்கட்டைகளும் கண்டறியப்பட்டன.

இந்த மலையானது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மாணவர்களுக்கான உண்டு, உறைவிடப் பள்ளியாகவும், மருத்துவச் சாலையாகவும் செயல்பட்டது என்றும், தமிழ்நாட்டின் முதலாவது பள்ளியாகவும் இருந்திருக்கலாம் என்றும் தொல்லியல் அறிஞர் முனைவர் செ. சாந்தலிங்கம் கூறியுள்ளார். ஆக, தமிழர் நாகரிகம் மிரளவே வைக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.