பாண்டியன் ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன் என்னும் மன்னனால் முன்மொழியப்பட்டதுதான் 'பிற்றைநிலை முனியாது, கற்றல் நன்றே!' (புறம்.183) என்ற கல்வி குறித்த கோட்பாட்டுப் பாடல் தொடர்.
இதன் பொருள் மிகவும் ஆழமானது, அகலமானது. சமூகம் அறிவுடைச் சமூகமாக வளர்வதற்குக் கல்வியே மூலாதாரமாகும் என்பதை வற்புறுத்துகிறது.
கல்வி ஒவ்வொருவரிடத்திலும் ஆழ்ந்து படிந்துள்ளது, அதை வெளிக்கொணரும் முயற்சியில்தான் அது தொட்டனைத்து ஊறும் மணற்கேணியாகப் பரிணமிக்கும் என்கிறார் திருவள்ளுவர். இது குறித்த ஆங்கிலச் சிந்தனையாகக் கூறுகையில், 'எல்லாத் திறனும் வெளிக் கொணர்வதில்தான் சிறப்புறும்' என்கிறது.
இந்த அடிப்படையில்தான் கல்விக்கான தொடக்கம் கற்றல், கேட்டல் என்ற இரண்டால் அறிவு பெருகுகிறது என்ற கண்டுபிடிப்பு மனிதகுல வரலாற்றின் சிகரந்தொட்ட சாதனைக் கருத்து எனலாம்.
கல்விக்கான தொடக்கம் கற்றல், அதைக் கற்க எனக் கட்டளைச் சொல்லால் வலியுறுத்தினார் திருவள்ளுவர். இந்தக் கற்றலின் மறுபக்கமே கேட்டல், இது கசடறக் கற்பதற்கான தூண்டுதலைச் செய்வது. இந்தக் கேட்டல் கற்றலுக்குள் அடக்கமே யானாலும் கற்றலினும் வேறுபட்ட தனித்தன்மையுடையது.
அதாவது, கற்றலும் கேட்டலும் கல்விக்கான பரிமாணங்களானாலும் சமூக வளர்ச்சியில் இவை இரண்டும் முறைசார் கல்வி என்றும், முறைசாராக் கல்வி என்றும் தனித்த தன்மைக்குரியதாகப் பெயர்பெறும்.
ஒருவரையறைக்கு உட்பட்டது முறைசார் கல்வி. வயது வரம்பு, பாடத்திட்டம், கற்பதற்கான இடம் போன்றவற்றை உள்ளடக்கியது. ஆனால், முறைசாராக் கல்வி என்பது மேற்குறிப்பிட்ட முப்பகுப்புக்கும் அப்பால் பரந்துபட்ட
உலகில் எங்கும் எவரிடத்திலும் பெறும் பலதரமான கல்வி அறிவைக் குறிப்பது. இதைத்தான் சாந்துணையும் கற்றல் (397) என்றும், எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் (423) என்றும் பரந்துபட்ட முறைசாராக் கல்வியை நினைப்பித்தார் வள்ளுவர்.
இதைத்தான் ஆன்றோர்கள் 'கற்றது
கைம்மண் அளவு கல்லாதது உலகளவு'
என்றனர். மேலும், கல்விக்கரசியாம் கலைமகளே இன்னும் ஓதிக்கொண்டே இருப்பதாகக் கூறும்போது 'உற்ற கலை மடந்தை ஒதுகிறாள்' என்றெல்லாம் கூறிக் கல்வியின் இன்றியமையாமையைச் சிறப்பித்தனர்.
இந்த அடிப்படையில் எல்லோருக்குமான கற்றல் கிட்டா நிலை அமைந்து விடுமானால்
'கற்றலின் கேட்டலே நன்று' என்ற கருத்தில்
கற்றிலனாயினும் கேட்க (414)
என வள்ளுவர் கூறியதென்பது சமூக மாந்தர்கள் அனைவரும் கற்றிருக்க வேண்டும் என்ற பேராவலைத் தூண்டுவதாக உள்ளதன்றோ! இதன் தொடர்பில்தான் 'பிச்சை புகினும் கற்றல் நன்றே' என்ற அதிவீரராமன் கருத்துடன் கேள்வி முயல் என்ற ஒளவை வாசகமும் இலக்கியமாக அமைந்தது.
இப்படியாகக் கல்வியின் குறிக்கோள் முழுமை அடையும் பொருட்டுத்தான் ஒரு காலத்தில் அரசால் அறிவொளி இயக்கம்,
முதியோர் கல்வித் திட்டம் போன்றவை கொண்டு வரப்பட்டன. காலப் போக்கில் சமூகத்தின் பன்முக வளர்ச்சியில் தொலைநிலைக் கல்வி, அஞ்சல்வழிக் கல்வி என்ற அமைப்புகளும் உருவாயின.
இவையாவும் 'பிற்றைநிலை முனியாது, கற்றல் நன்றே!' என்றதற்குள் அடக்கம் எனலாம். அதாவது, வாழுங்காலத்தில் கற்கும் வாய்ப்பைப் பெறத் தவறியவர்கள், கல்வி கற்காமல் ஆகிவிட்டதே எனப் பின்னாளில் வருந்தி ஏங்கும் நிலை ஏற்படாதவாறாகக் கல்வியைக் கற்க வேண்டும் என்பதை நாடாளும் ஒரு மன்னன் கல்வி குறித்த கொள்கையைத் தன் ஆட்சிக் காலத்தில் கண்ட சமூக அனுபவத்தால், 'பிற்றை நிலை முனியாது, கற்றல் நன்றே!' எனச் சட்ட விதிபோல் பிரகடனப்படுத்தினான் என்றால் கல்வி வளர்ச்சியில் கொண்ட அந்த மன்னனின் முன்னெடுப்பான முற்போக்குக் கருத்தை என்னென்பது!
இந்தக் கல்விச் சிந்தனை பாண்டிய மன்னனுக்குத் துளிர்த்தது என்பது சிந்திக்கத்தக்க ஒன்றாகும். ஏனெனில், அவன் ஆரியப் படை கடந்த பாண்டியன் நெடுஞ்செழியன் என்ற அடைமொழிச் சிறப்பால் புரட்சிகரமான கல்விச் சிந்தனையைப் பெற்றானோ என எண்ணத் தோன்றுகிறது.
அதாவது, ஆரியப் படை கடத்தல் என்பது புறப்பகையாக வந்ததை பாண்டியன் வெற்றி கொண்டதைப் போல, அனைவருக்குமான கல்வி மறுக்கப்படுதல் என்ற உணர்வைத் தகர்த்தெறியும் போக்கில்தான் 'பிற்றைநிலை முனியாது, கற்றல் நன்றே!' என்றானோ என எண்ணத் தோன்றுகிறது.
'பயிற்றிப் பல கல்வி தந்து இந்தப் பாரை உயர்த்திடல் வேண்டும்' என்ற மகாகவி பாரதியின் கல்வித் திட்டம் தனிப்பட்ட எவராலுமின்றித் தேசிய மயமாக்கப்படும் ஓர் அரசால்தான் கொடுக்க முடியும் என்ற சிந்தனை முகிழ்ப்பின் மூலத்தைத் தொட்டுத் துலக்கியவன் ஆரியப் படை கடந்த பாண்டியன் எனவும் சிந்திக்கலாம்.
இதை வழிமொழிவார் போலவே வள்ளுவரும் பொருட்பாலில் அரசியல் குறித்த தொடக்கமாகிய இறைமாட்சிக்குப் பின்னர் கல்வி என்ற அதிகாரம் வைக்கப்பட்டதாக ஊகிக்க முடிகிறது. கல்வி பரவலாக்கப்பட ஓர் அரசாட்சியால்தான் முடியும் என்ற சிந்தனை தமிழகத்தில் அந்தக் காலத்திலேயே இருந்ததால்தான் தன் அரசாட்சியின் தேர்ந்து தெளிந்த அனுபவ வாக்காக,
வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும்
கீழ்ப்பா லொருவன் கற்பின்
மேற்பா லொருவனும் அவன்கண் படுமே!
என்றான் (புறம். 183) மன்னன்.
ஆக, கல்வியால் தன்னிறைவு பெற்ற நாடாக இருக்க வேண்டும் என்பதற்காகவே சங்க மொழியாகப் பிற்றைநிலை முனியாது, கற்றல் நன்றே! என்ற கொள்கையைச் சட்டமாக வற்புறுத்துவது போல ஓர் அரசாட்சியின் கவசக் கொள்கையாகக் கருத இடம் தருகின்றதன்றோ!
இந்தக் கருத்து அரசியல் நிலையில் மட்டுமின்றி ஆன்மிக நிலையில் 'கற்றல் கேட்டல் உடையார் பெரியார்' என்றார் திருஞான சம்பந்தர் என்பது சிந்திக்கத்தக்கதாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









