கல்லூரிகளில் தமிழ் மன்றங்கள் தேவை!
'இலக்கியம், தமிழ் மீது இளைய தலைமுறையினருக்கு ஆர்வம் இல்லாததற்கு, கைப்பேசி உபயோகம்தான் முக்கியக் காரணம்.

'இலக்கியம், தமிழ் மீது இளைய தலைமுறையினருக்கு ஆர்வம் இல்லாததற்கு, கைப்பேசி உபயோகம்தான் முக்கியக் காரணம். மாணவர்களிடையே தமிழை வளர்க்க விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். கல்லூரிகளில் ஒவ்வொரு துறையிலும் தமிழ் மன்றத்தை ஏற்படுத்தி, மாதம்தோறும் ஓர் இலக்கிய நிகழ்வை நடத்தினால், மாணவர்களிடையே தமிழ் மீதான ஆர்வத்தை வளர்த்தெடுக்க முடியும்' என்கிறார் சென்னை கம்பன் கழகத்தின் 2026-ஆம் ஆண்டுக்கான 'கம்பன் அடிப்பொடி சா.கணேசனார்' விருது பெற்றுள்ள காரைக்குடியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் நவீன்.
கம்பராமாயணம், சிலப்பதிகாரம், திருக்குறள் எனத் தமிழின் அரிய பொக்கிஷங்களைப் பற்றி மேடையில் முழங்கும் நவீன், அடிப்படையில் வணிகவியல் மாணவர்.
தமிழ் மீதான தனது காதல் குறித்து அவர் கூறியது:
'என் அம்மா மாரியம்மாவும், இரண்டாவது சகோதரரும் கட்டட வேலை செய்து வருகிறார்கள். மூத்த சகோதரர் வேன் ஓட்டி வருகிறார்.
நான் காரைக்குடி எஸ்.எம்.எஸ்.வி. பள்ளியில் 12-ஆம் வகுப்பு வரை படித்தேன். பின்னர், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் பி.காம்., எம்.காம். படித்துவிட்டு, அங்கேயே முனைவர் பட்ட ஆய்வுக்காகப் படித்து வருகிறேன்.
குடும்பத்தில் முதல் தலைமுறை பட்டதாரி நான். வணிகவியல் படித்துவரும் மாணவன் என்றாலும்கூட, கம்பராமாயணத்திலும் தமிழ் இலக்கியங்களிலும் எனக்கு மிகுந்த ஆர்வம்.
பேச்சாளரானது எப்படி?
நான் எட்டாம் வகுப்பு படித்தபோது, பெருந்தலைவர் காமராஜர் பற்றிய எனது முதல் பேச்சுப் போட்டியிலேயே முதல் பரிசு பெற்றேன். பின்னர் பள்ளியில் நடைபெற்ற நாடகம் ஒன்றில் அதிகமாக வசனம் இருக்கும் வகையில் எனது கதாபாத்திரத்தை உருவாக்கியிருந்தார்கள். எனக்குச் சிறப்பாகப் பயிற்சி அளித்த ஆசிரியர் சத்தியமூர்த்தியே
இப்போதும் என்னை ஊக்கப்படுத்திவருகிறார்.
பேச்சு, கட்டுரை உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் கலந்துகொள்ள நூல்களைத் தேடிப் படித்து தகவல்களைத் திரட்டுவதும், போட்டிகளுக்கேற்ப என்னைத் தயார் செய்து கொள்வதும் எனக்கு மிகவும் பிடித்தமானவை.
கல்லூரியில் படிக்கும்போது, காரைக்குடி கம்பன் கழகப் பேச்சுப் போட்டியில் பங்கேற்று நான் தேர்வாகவில்லை. ஆனாலும், பட்டிமன்றத்தில் காரைக்குடியைப் பற்றிப் பேசி மாணவர் பேச்சாளராகத் தேர்வானேன். பட்டிமன்றத்தில் பேச எனக்கு அளிக்கப்பட்ட தலைப்போ, 'சுக்ரீவனால் வீழ்ந்த வாலியே' என்பதுதான்.
கம்பன் அடிசூடி பழ.பழனியப்பா எனக்கு சுக்ரீவன், வாலி பற்றியெல்லாம் விளக்கி, உரிய புத்தகங்களைத் தந்தார். அந்த மேடையில் மொத்தம் 9 பேர் பேசினர். 8-ஆவது நபராக நான் பேசினேன். பட்டிமன்றத்துக்குத் தலைமை வகித்த முனைவர் பர்வீன் சுல்தானா என்னைப் பாராட்டியதை என் வாழ்நாளில் மறக்க முடியாது.
அதன்பிறகு நடைபெற்ற தேவகோட்டை கம்பன் கழகப் போட்டியில் பங்கேற்றபோது, பாடல்களைத் தடுமாற்றத்துடன் சொன்னேன். இருப்பினும், அடுத்த ஆண்டில் அனைத்துப் பாடல்களையும் சிறப்பாகச் சொல்லி, முதல் பரிசு வாங்கினேன். 2024-ஆம் ஆண்டில் காரைக்குடி கம்பன் கழகப் போட்டியில் முதல் பரிசும், 2025-இல் சென்னை கம்பன் கழகத்தில் சிலப்பதிகாரத்தில் முதல் பரிசும் பெற்றேன்.
2026-இல் சென்னை கம்பன் கழகத்தில் நடைபெற்ற பேச்சுப்போட்டியில் ஆறு போட்டிகள் நடைபெற்றன. நான் 4 போட்டிகளில் முதல் பரிசுகளைப் பெற்றதால், அந்த விருது எனக்குக் கிடைத்தது. விருதை நீதியரசர் எம்.எம்.சுந்தரேஷிடமிருந்து பெற்றபோது மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். காரணம், முன்பொருமுறை ஒரு பேச்சுப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றதற்காக மதுரை தியாகராஜர் கல்லூரியில் நடந்த விழாவில் அவர்தான் எனக்குப் பரிசு வழங்கினார். அந்த சம்பவத்தை நினைவுபடுத்தியபோது, மிகுந்த மகிழ்ச்சியுடன் என்னைப் பாராட்டினார்.
இலக்கியப் பயணம்
கம்பராமாயணத்தைப் படிக்கும்போது, ஏதாவது சந்தேகம் ஏற்பட்டால் சொற்பொழிவாளர் தாமல் கோ.சரவணன், தேவகோட்டை கம்பன் கழக உறுப்பினர் யோகேஷ்குமார், கோவை கம்பன் கழகச் செயலாளர் வீரபாலாஜி, கோவில்பட்டியைச் சேர்ந்த நண்பர் தீபக் ஆகிய நான்கு பேரிடம் கேட்டுத் தெளிவுபடுத்திக் கொள்வேன்.
நான் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டு வருவதால், நேரம் கிடைக்கும்போதெல்லாம் நூலகத்துக்குச் சென்று புத்தகங்களைப் படிப்பேன். கவிதை நூல்கள் படிப்பதில் எனக்கு மிகுந்த விருப்பம் உண்டு. சிலப்பதிகாரம் மீது மிகுந்த ஈடுபாடு உள்ளதால், அதுகுறித்து எளிய நடையில் புத்தகம் எழுத உள்ளேன்.
பேச்சு, கட்டுரை உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் இதுவரை 200-க்கும் மேற்பட்ட பரிசுகளைப் பெற்றுள்ளேன். தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்பதற்காக நேரம் காலம் பார்க்காமல் பயணிப்பதும், தமிழ் சார்ந்து தொடர்ந்து இயங்கி வருவதும் எனக்கு மிகவும் பிடித்த விஷயங்களாக உள்ளன. என் குடும்பத்தினரின் ஒத்துழைப்பு இருப்பதால்தான் இதைச் செய்ய முடிகிறது.
ஒரு பொது மேடையில் இந்தித் திணிப்பு பற்றி நான் பேசிக் கொண்டிருந்தபோது, வயதான பாட்டி என் பேச்சைப் பாராட்டி என் காலில் விழ முயன்றபோது நான் திகைத்துப் போய்விட்டேன்.
தமிழ் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட, சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 15 பேர் ஒருங்கிணைந்து, 'தமிழ் அன்பர்கள் இலக்கியக் கழகம்' என்ற அமைப்பை நடத்தி வருகிறோம். அதன் செயலராக நான் இருக்கிறேன். இந்த அமைப்பின் வாயிலாக இளைஞர்கள், மாணவர்கள் மத்தியில் தமிழ் ஆர்வத்தை, இலக்கிய ஆர்வத்தை ஏற்படுத்தி வருகிறோம்.
வரும் நவம்பர் மாதத்தில் மாநில அளவில் மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி நடத்தி பரிசுகள் வழங்க உள்ளோம். தமிழை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல எங்களால் இயன்ற சிறு முயற்சி இது...' என்கிறார் நவீன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

