காங்கோவில் திருமண நிகழ்ச்சியில் தீவிபத்து: 22 பேர் பலி சிறப்புத் தீவிர திருத்தம் மூலம் காங்கிரஸ் வாக்குகளை அழிக்க பாஜக சதி: ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு! திண்டுக்கல் மாணவர்கள் 8 பேர் பலி - முதல்வர் விஜய் இரங்கல் கிரேக்கத்தில் வான் சாகச நிகழ்வில் ஜெட் விமானம் விபத்து! விநாயகர் சிலை- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடுநவ. 1-க்குள் கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை: உயர்நீதிமன்றம் உத்தரவுமீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு: உள்ளூர் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு - அமைச்சர் தகவல் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கைதான்: கே.என். நேரு

கம்பன், வள்ளுவன் என் வாழ்க்கைப் பாடம்

திருக்குறள், சிலப்பதிகாரம், கம்பராமாயணம், பெரியபுராணம், சீவகசிந்தாமணி, சீறாப்புராணம் ஆகிய ஆறு இலக்கியங்களிலும் சிறப்பாகச் செயல்படும் மாணவியருக்கு ஆண்டுதோறும் பேராசிரியர் சாலமன் பாப்பையா பட்டிமன்றக் குழு விருது வழங்கப்படுகிறது.

Published On :6 செப்டம்பர் 2026, 4:14 am IST

திருக்குறள், சிலப்பதிகாரம், கம்பராமாயணம், பெரியபுராணம், சீவகசிந்தாமணி, சீறாப்புராணம் ஆகிய ஆறு இலக்கியங்களிலும் சிறப்பாகச் செயல்படும் மாணவியருக்கு ஆண்டுதோறும் சென்னை கம்பன் கழகத்தின் சார்பில் பேராசிரியர் சாலமன் பாப்பையா பட்டிமன்றக் குழு விருது வழங்கப்படுகிறது. 2026-ஆம் ஆண்டுக்கான விருதை நீதியரசர் எம்.எம்.சுந்தரேஷிடம் பெற்றிருக்கிறார், கோவையைச் சேர்ந்த இருபத்து நான்கு வயதான கல்லூரி மாணவி கு.ந.ஹர்ஷிதா.

இதுகுறித்து அவர் கூறும்போது, 'ஒரு தலைமுறைக்கு நடைபெற வேண்டிய மாற்றங்கள் இப்போது ஒரு சில ஆண்டுகளிலேயே நடைபெற்று விடுகிறது. மாறி வரும் தொழில்நுட்ப சமூகத்துக்கேற்ப, எளிய முறையில், இளைஞர்கள் விரும்பும் மொழி நடையில், ரீல்ஸ் (குறுங்காணொலி) போன்றவற்றின் மூலம் தமிழை இளைஞர்களிடையே கொண்டு சேர்க்கவேண்டும். அதற்கு என்னாலான முயற்சிகளைச் செய்கிறேன். செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் வெளியிடும் சின்ன சின்ன ரீல்ஸ்கள் சிலவற்றில் நானும் பேசியிருக்கிறேன்' என்கிறார்.

அவர் மேலும் கூறியது:

'என்னுடைய சொந்த ஊர் ஈரோடு. அப்பா நடராஜு, அரசுப் பள்ளியில் உடற்கல்வி இயக்குநராகப் பணியாற்றுகிறார். அம்மா இளமதி, ஆசிரியராகப் பணியாற்றியவர். ஒரு தம்பி இருக்கிறார்.

ஈரோட்டில் பள்ளிப் படிப்பை முடித்தேன். ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் இளங்கலை தமிழ் படித்துவிட்டு, சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை தமிழ் படித்தேன். கோவை பி.எஸ்.ஜி. கல்லூரியில் தமிழ் இலக்கியத்தில் முனைவர் பட்ட ஆய்வுக்காகத் தயாராகி வருகிறேன்.

நான் 4-ஆம் வகுப்பு படித்தபோது, சுதந்திர தின விழா மேடையில் பேசும் வாய்ப்புக் கிடைத்தது. அந்த நிகழ்வில் நான் சரியாகப் பேசாததால், இறைவணக்கத்தில் மட்டும் பேச வைத்து அனுப்பிவிட்டனர்.

என் வகுப்பு ஆசிரியை எனக்கு தினசரி இறை வணக்கத்தில், திருக்குறள் சொல்லும் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தார். என் உச்சரிப்பு மிகவும் நன்றாக இருக்கிறது என பள்ளி முதல்வராக இருந்த விஜயா முருகேசன் பாராட்டியது நினைவில் இருக்கிறது.

ஏழாம் வகுப்பு படித்தபோது, சுதந்திர தின விழாவில் என்னைப் பேச வைப்பதற்காக ஆசிரியர் சுரேஷ் சொற்பொழிவுக்கான உரையைத் தானே எழுதித் தந்தார். அதை மனப்பாடம் செய்து, ஏற்ற இறக்கத்துடன் மேடையில் பேசினேன். என் பேச்சைப் பாராட்டும் விதமாக 100 ரூபாய் பரிசை சிறப்பு விருந்தினர் அளித்தார். அதனால் கிடைத்த ஊக்கத்தால், எங்கு பேச்சுப் போட்டி நடந்தாலும் கலந்துகொள்ள ஆரம்பித்தேன்.

இலக்கியம் மீதான ஆர்வம்

தமிழ் மீதான காதலால் கல்லூரியில் தமிழ் இலக்கியம்தான் படிக்க வேண்டும் என்று முடிவெடுத்தேன். என் உறவினர் பலரும் தவறான முடிவை எடுத்திருப்பதாகச் சொன்னபோதும், முடிவில் நான் உறுதியாக இருந்தேன். என் பெற்றோரும் என் விருப்பத்துக்கு மறுப்பு ஏதும் கூறவில்லை.

பேச்சாளர்கள் சுகி சிவம், பர்வீன் சுல்தானா அம்மா ஆகியோரின் பேச்சுகள் எனக்குள் மிகப் பெரிய ஆர்வத்தை ஏற்படுத்தின. பிரான்ஸ் கம்பன் கழகத்தில் பர்வீன் சுல்தானா பேசிய 'கம்பனில் பெண்மை' என்ற தலைப்பில் அமைந்த பேச்சை நான் பலமுறை கேட்டிருக்கிறேன்.

யூடியூப் சேனல்கள், பதிவு செய்யப்பட்ட காணொலிகள் மூலமாக பிரபல பேச்சாளர்களின் பேச்சுகளை அடிக்கடி கேட்டுக்கொண்டே இருப்பேன். கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் , ராமலிங்கம் சார், சாலமன் பாப்பையா, பட்டிமன்றம் ராஜா, பாரதி பாஸ்கர் போன்ற பலரது பேச்சுகளையும் கேட்டு என்னுடைய இலக்கிய ஆர்வத்தை வளர்த்துக் கொண்டேன். இப்படிப்பட்ட அருமையான பேச்சாளர்களை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தவர் என் அம்மாதான்.

நான் கல்லூரியில் முதலாமாண்டு படித்தபோது, கோவை கம்பன் கழகத்தில் நடைபெற்ற ஒரு பேச்சுப் போட்டியில் பங்கேற்பதற்காக நூலகத்திலிருந்து கம்பராமாயண நூலை எடுத்துப் படிக்க ஆரம்பித்தேன். அந்தப் போட்டியில் எனக்கு கல்லூரி அளவில் முதல் பரிசு கிடைத்தது. எனக்கு கம்பன் கழகத்தில் பேசுவதென்பது ஒரு கனவாகவே இருந்தது. பேச்சை மட்டுமே ரசித்து வந்த நான், ஒரு பேச்சாளராக கம்பன் கழக மேடையில் பேசியது என்னை சிலிர்க்க வைத்தது.

கோவை கம்பன் கழகத்தில் மாதம்தோறும் நடைபெறும் கம்பராமாயண வகுப்புக்குத் தவறாமல் போய்விடுவேன். ஒரு சிலமுறை நானும்கூட கம்பராமாயணத்திலிருந்து சில பாடல்களைப் பற்றிப் பேசி விளக்கமளித்திருக்கிறேன்.

கோவை கம்பன் கழகச் செயலராக இருக்கும் முருகேசன் என்னை ஊக்குவித்தார். என்னாலும் சிறப்பாகப் பேசமுடியும் என்ற தைரியத்தை ஷாஜகான், வீரபாலாஜி போன்ற கம்பன் கழக சகோதரர்கள் அளித்தனர்.

ஒவ்வொரு ஆண்டும் ஈரோடு புத்தகத் திருவிழா நடைபெறும் 10 நாள்களிலுமே தினந்தோறும் என்னை அங்கு அழைத்துப் போய் பேச்சாளர்களின் பேச்சுகளைக் கேட்க வைத்ததில் என் அப்பாவுக்கு மிகுந்த பங்குண்டு.

2025-இல் சென்னை கம்பன் கழகத்தில், அனுமனைப் பற்றிப் பேசும் அருமையான வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இந்த ஆண்டு கடவுள் அருளால் சாலமன் பாப்பையா பட்டிமன்றக் குழு விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. நான் பார்த்து, கேட்டு வியந்த பிரபல பேச்சாளர்களிடமிருந்து என் பேச்சுக்கான பாராட்டுகளைக் கேட்கும்போது மனம் சிறகடித்துப் பறக்கிறது.

கம்பரும், திருவள்ளுவரும்

வாழ்க்கையைக் கற்றுக் கொடுப்பவர்களாக கம்பரையும், திருவள்ளுவரையும் பார்க்கிறேன். மேடையில் பேசி கைதட்டல்கள் பெறவேண்டும் என்பதற்காக மட்டுமே நான் இலக்கியம் படிக்கவில்லை. இலக்கியங்களை எனக்கான வாழ்க்கைப் பாடங்களாக எடுத்துக்கொள்கிறேன். எனக்கு மிகவும் பிடித்த குறளான, 'மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன் ஆகுல நீர பிற' என்ற குறளின் கருத்துப்படியே வாழ்கிறேன். வாழ்க்கையில் நான் செய்வது சரியா, தவறா என்ற தடுமாற்றம் வரும்போதெல்லாம் அந்தக் குறளை ஒருமுறை சொல்லிப் பார்த்துக் கொள்வேன். அது எனக்குச் சிறந்த வழியைக் காட்டும்.

ளைஞர்களிடையே தமிழ்

அனைத்துத் துறைகளும் செயற்கை நுண்ணறிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில், மாணவர்களிடையே தமிழார்வம் குறைந்து வருவதைப் பார்க்கிறேன். ஏதாவது ஒரு விஷயத்தைக் கற்றுக்கொள்ளவேண்டுமானால், அதனால் எனக்கு என்ன லாபம் கிடைக்கும் என்ற மனப்போக்கே மாணவர்களிடம் அதிகமாக உள்ளது. இலக்கியத்தை இலக்கியத்துக்காகவே படிக்கும் ஆர்வம் மாணவர்கள் மத்தியில் குறைந்து வருகிறது. தமிழ் சார்ந்து இயங்கக்கூடிய எல்லா தளங்களுமே இளைஞர்களுக்கு ஏற்றதாக இல்லை.

வருங்கால லட்சியம்

பள்ளிப் பருவத்திலிருந்து பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி போன்ற இலக்கியப் போட்டிகளில் பங்கேற்று சுமார் 250 பரிசு

களைப் பெற்றிருக்கிறேன். மிகச் சிறந்த பேச்சாளராவதே என் லட்சியம். பொருளாதார ரீதியில் நான் மற்றவர்களைச் சார்ந்திருக்காமல் இருக்க விரும்புகிறேன். கல்லூரிப் பேராசிரியராகப் பணியாற்றிக் கொண்டே மேடைகளில் பேசவேண்டும் என்பதே என் விருப்பம். நல்ல ஆசிரியர்களால்தான் நல்ல மாணவர்களை உருவாக்க முடியும். தமிழ் இலக்கியத்தைப் படித்து வருவதால், நல்ல இலக்கியங்களை மாணவர்களுக்குக் கற்றுக்கொடுத்து அவர்களை தமிழின் மீது ஈர்க்கவேண்டும்' என்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.