காங்கோவில் திருமண நிகழ்ச்சியில் தீவிபத்து: 22 பேர் பலி சிறப்புத் தீவிர திருத்தம் மூலம் காங்கிரஸ் வாக்குகளை அழிக்க பாஜக சதி: ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு! திண்டுக்கல் மாணவர்கள் 8 பேர் பலி - முதல்வர் விஜய் இரங்கல் கிரேக்கத்தில் வான் சாகச நிகழ்வில் ஜெட் விமானம் விபத்து! விநாயகர் சிலை- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடுநவ. 1-க்குள் கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை: உயர்நீதிமன்றம் உத்தரவுமீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு: உள்ளூர் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு - அமைச்சர் தகவல் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கைதான்: கே.என். நேரு

கோலிவுட் ஸ்டூடியோ!

'விடுதலை', 'கொட்டுக்காளி', 'கருடன்', 'மாமன்', படத்தைத் தொடர்ந்து மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில், 'மண்டாடி' படத்தில் நடித்திருக்கிறார் நடிகர் சூரி.

Published On :6 செப்டம்பர் 2026, 4:05 am IST

300 ரூபாய் வாடகை கொடுக்க முடியாத சூழல் - சூரி நெகிழ்ச்சி!

'விடுதலை', 'கொட்டுக்காளி', 'கருடன்', 'மாமன்', படத்தைத் தொடர்ந்து மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில், 'மண்டாடி' படத்தில் நடித்திருக்கிறார் நடிகர் சூரி. வெற்றிமாறனின் 'விடுதலை' படத்தைத் தயாரித்த எல்ரெட் குமாரின் ஆர்.எஸ். இன்ஃபோடெய்ன்மென்ட் இப்படத்தைத் தயாரித்திருக்கிறது.

இப்படத்தில் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக வெற்றிமாறன் பணியாற்றி இருக்கிறார். ஜி.வி. பிரகாஷ் இந்தப் படத்துக்கு இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் சூரி, 'சில வார்த்தைகளை எத்தனை முறை சொன்னாலும் சலிக்காது. இன்றைக்கு எனக்குக் கிடைக்கக்கூடிய இந்த விசிலும், கைதட்டலும் வெற்றிமாறனுக்குத்தான் சேரும்.

நான் இதுவரை வந்ததற்கும், இதற்கு மேல் நான் பயணிப்பதற்கும் காரணம் அவர்தான். எவ்வளவு புயல் காற்று வந்தாலும் நீங்கள் போட்ட விதை முளைத்துக் கொண்டே இருக்கிறது.

இதற்கு மேல் பலத்தக் காற்றுகூட அடிக்கலாம். எது வந்தாலும், அந்தச் செடி ஒடியாமல் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இளையராஜா பெரிய ஹீரோக்களுக்கும் இசையமைப்பார், சிறிய ஹீரோக்களுக்கும் இசையமைத்துக் கொடுப்பார்.

அவரால் பல இயக்குநர்கள் உருவாகியிருக்கிறார்கள். அதேபோல் ஜி.வி.பிரகாஷும் அனைவருக்கும் பாடல்கள் கொடுத்து வருகிறார். இந்தப் படத்தில் ரிஸ்க் இல்லை, ரிஸ்க்கையே படமாக எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறினேன்.

இந்தப் படத்தை எடுப்பது மிகவும் கடினமாக இருந்தது. ஆனால், ராமநாதபுரம் சுற்றுவட்டார ஊர் மக்கள் எங்களுக்கு அவ்வளவு ஆதரவு கொடுத்தார்கள். அவர்கள் ஒருநாள் வராமல் இருந்திருந்தால்கூட இந்தப் படம் கண்டிப்பாக வந்திருக்காது. என் குடும்பம் இப்போதும் என்னுடன் வந்திருக்கிறது. நான் இந்த இடத்தில் நிற்பதற்கு என் குடும்பம்தான் காரணம். என் அம்மா இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறார்கள்.

அவர் காரில் வரும்போது கூட, 'ஒருகாலத்தில் 300 ரூபாய் வாடகை கொடுக்கக்கூட காசு இல்லாமல் அழுதிருக்கிறான்.ஆனால், இன்றைக்கு அவனுக்காக இத்தனை பேர் போஸ்டர் அடித்து ஒட்டியிருக்கிறார்கள்' என்று சொல்லிக் கொண்டே வந்தார். எங்க அம்மா என்னுடைய சாமி' என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.

பூர்ணா

பூர்ணா

பூர்ணாவின் கண்களைப் பாராட்டிய ரஜினி!

நடிகை பூர்ணா அண்மையில் வெளிவந்த 'ஜெயிலர் 2' படத்தின் பாடலில் நடனமாடியிருந்தார். ரஜினிகாந்தின் இத்திரைப்படம் அக்டோபர் 15-ஆம் தேதி ரிலீஸூக்குத் தயாராகி வருகிறது.

இது குறித்து நடிகை பூர்ணா, 'சூப்பர் ஸ்டார் ரஜினி சாருடன் நடிக்கவேண்டும் என்பது திரையுலகில் உள்ள அனைவரின் கனவு. 'படையப்பா' படத்தின் 'மின்சார கண்ணா' பாடலுக்கு பல மேடைகளில் நடனமாடி இருக்கிறேன். ஆனால்,

ஒருநாளில் நேரில் அவரோடு சேர்ந்து ஒரு பாடலுக்கு நடனமாடுவேன் என்று நான் கற்பனைகூட செய்து பார்த்ததில்லை. எனது கனவு நனவாகியுள்ளது.

முதல் ஷாட் முடிந்ததுமே ரஜினி சார் எனது கண்களைப் பாராட்டிப் பேசினார். எத்தனையோ சிறந்த நடிகைகளுடன் நடித்த ஒரு சூப்பர் ஸ்டாரிடமிருந்து எனக்கு இந்தப் பாராட்டு கிடைத்தது மிகப் பெரிய விஷயம்' எனப் பேசியிருக்கிறார்.

நிமிஷா சஜயன்

நிமிஷா சஜயன்

14 கிலோ எடை அதிகரித்து, குறைத்த நிமிஷா சஜயன்!

நடிகை நிமிஷா சஜயன், தான் நடித்திருக்கும் 'பாபிதா சிங் ரிப்போர்ட்டிங்' படத்துக்காக மேற்கொண்ட கடினமான உடல் எடை குறைப்பு குறித்துப் பகிர்ந்திருக்கிறார். இந்தப் படத்தின் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக அவர் சுமார் 14 கிலோ எடையை அதிகரித்துள்ளாராம்.

இது சம்பந்தமாக அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் நிமிஷா சஜயன், 'இந்தக் கதாபாத்திரத்துக்காக நான் கிட்டத்தட்ட 14 கிலோ கிராம் எடையைக் கூட்டினேன் (58 கிலோவிலிருந்து 72 கிலோ வரை). உண்மையிலேயே, அதற்குப் பிறகு நான் மேற்கொண்ட எடையைக் குறைக்கும் பயணம் முற்றிலும் வேறொரு கதையாக இருந்தது. முதல் 10 நாள்கள் மிகவும் கடினமாக இருந்தன.

சில நாள்களில் என் உடற்பயிற்சியாளரின் முன்னால் அமர்ந்து 'என்னால் இனிமேல் முடியாது' என்று கூறி அழுதிருக்கிறேன். அவர் மட்டும் இல்லையென்றால், நான் உண்மையிலேயே இதனை பாதியிலேயே கைவிட்டிருப்பேன். இந்த முழுப் பயணத்திலும் அவர்தான் என் பக்கபலமாக இருந்தார்.

எனக்கு ஊக்கம் தேவைப்பட்ட நேரத்தில் என்னை ஊக்கப்படுத்தினார்; நான் கைவிட நினைத்தபோது உற்சாகப்படுத்தினார். ஒவ்வொரு நாளும் அவர் எனக்கு உறுதுணையாக இருந்தார்.

நான் விரக்தியடைந்து, களைப்புற்று, பயிற்சியை நிறுத்திவிடலாம் என்று நினைத்த நாள்கள் எத்தனையோ உண்டு. ஆனால், ஏதோ ஒரு வழியில், என்னை அடுத்த நாள் மீண்டும் வரவைத்து, முயற்சி செய்ய வைத்தார்.

திரும்பிப் பார்க்கும்போதுதான் எனக்குப் புரிகிறது, இந்தப் பயணம் வெறும் எடையைக் குறைப்பதைப் பற்றியது மட்டும் அல்ல; அது பொறுமை, சரியான வழிமுறையை நம்புவது, எல்லாவற்றிற்கும் மேலாகச் சரியான நபர் உங்களுடன் இருப்பது பற்றியதாகும்' எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

யஷ்

யஷ்

ராமாயணம் படத்தின் பட்ஜெட் - கணக்குச் சொல்லும் யஷ்!

நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகிவரும் 'ராமாயணம்' திரைப்படம், இந்திய சினிமாவிலேயே அதிக பட்ஜெட் முதலீட்டில் தயாரிக்கப்படும் திரைப்படமாகப் பேசப்பட்டு வருகிறது. படத்தின் தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ரா, இந்தப் படத்தின் பட்ஜெட் சுமார் ரூ. 4,000 கோடி எனத் தெரிவித்திருந்தார்.

இது குறித்து அண்மையில் ஒரு பேட்டியில் நடிகர் யாஷ், 'ரூ. 4,000 கோடி என்பது 'ராமாயணம் பாகம் 1' படத்துக்கான பட்ஜெட் மட்டும் கிடையாது. இரண்டு பாகங்களுக்குமான தயாரிப்புச் செலவு, விளம்பரத்திற்கான செலவுகளை உள்ளடக்கியது. ஹாலிவுட்டில் ஒரு படத்தின் தயாரிப்புச் செலவுக்கு நிகராகவோ அல்லது அதைவிட அதிகமாகவோ உலகளவில் விளம்பரம் செய்யச் செலவழிப்பார்கள். ஏனென்றால், அது உலக சந்தையைக் குறிவைக்கிறது. அதேபோலத்தான் இதிலும் செலவிடப்படுகிறது.

இதன் மூலம் கிடைக்கப்போகும் வருவாயும் உலகளாவிய அளவில்தான் இருக்கும். நாம் முயற்சி செய்யாவிட்டால் வேறு யாராவது இதைச் செய்துவிடுவார்கள். 'ராமாயணம்' படம் இந்திய சினிமாவை சர்வதேச தளத்துக்கு எடுத்துச் செல்வதற்கான முயற்சிகள் தான்' என்று பகிர்ந்துகொண்டார்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.