FOLLOW US

ON GOOGLE DISCOVER

காங்கோவில் திருமண நிகழ்ச்சியில் தீவிபத்து: 22 பேர் பலி சிறப்புத் தீவிர திருத்தம் மூலம் காங்கிரஸ் வாக்குகளை அழிக்க பாஜக சதி: ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு! திண்டுக்கல் மாணவர்கள் 8 பேர் பலி - முதல்வர் விஜய் இரங்கல் கிரேக்கத்தில் வான் சாகச நிகழ்வில் ஜெட் விமானம் விபத்து! விநாயகர் சிலை- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடுநவ. 1-க்குள் கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை: உயர்நீதிமன்றம் உத்தரவுமீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு: உள்ளூர் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு - அமைச்சர் தகவல் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கைதான்: கே.என். நேரு

மழையில் நனையும் நினைவுகள்

நவம்பர் மாதத்துச் சாயங்கால ஆறு மணி வழக்கம்போல் இல்லை.

Published On :6 செப்டம்பர் 2026, 4:01 am IST

செந்தில்குமார் அமிர்தலிங்கம்

நவம்பர் மாதத்துச் சாயங்கால ஆறு மணி வழக்கம்போல் இல்லை. அதற்கு உண்டான இருட்டு இது இல்லை. வெளிச்சமும் இது இல்லை. மழைக்காலம் என்றாலே பகல் குறைவு, இரவு அதிகம் என்று எப்போதோ என் அம்மாவழி பாட்டி சொல்லியதுண்டு. பாட்டியின் காலம் முதல் இன்றுவரை இப்படியேதான் இருக்கிறது போல இந்த மழைக்காலம்.

பகலெல்லாம் பனிப் போர்வையைப் போர்த்தியது போல் 'சில்'லென்று குளிர்ந்து கிடக்கிறது பூமி. புல் பூண்டு என்று எங்கும் ஈரம் படர்ந்து கிடக்கிறது. தேங்கிக் கிடக்கும் மழைநீர், தூறல் சிந்தும் மரக் கிளைகள், தட்டான்களின் ஊர்வலம், சேறும் சகதியுமாக வாகனங்களின் சக்கரங்கள் இப்படி மழைக்கெனத் தனி அடையாளங்களோடே பயணிக்கிறது இந்த மாமழை.

எனக்கு வேலை முடிந்து கிளம்பிவிட்டேன். 'வேலை முடிந்துவிட்டது' என்றுதான் பெயர். ஏதாவது அவசர கேஸ் என்றால் அழைப்பு வந்துவிடும். உடனே ஓடி வந்துவிட வேண்டும். மருத்துவன் என்றால்

சாதாரண வேலை இல்லையே. சொல்லப் போனால், இது வேலையே இல்லையே. இது ஒரு சேவை. இந்தச் சேவையை செய்யக் கடவுள் எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்திருக்கிறார் என்றே நான் நித்தமும் நினைத்துக் கொண்டிருக்கிறேன். கடவுளுக்கு நன்றியும் தெரிவித்துக் கொண்டிருக்கிறேன்.

அப்பாவின் தங்கை மீனாட்சி அத்தைதான் அம்மா இல்லாத என்னை மருத்துவனாக்கிப் பார்க்க ஆசைப்பட்டார். அந்த ஆசைதான் பெரும் விருட்சமாகி என்னை இப்போது டாக்டர் ஆக்கியிருக்கிறது.

அத்தைக்குக் குழந்தை பாக்கியம் இல்லாததால் என்னை அவளின் குழந்தையாக்கி அழகு பார்த்தாள். மாமாவும் லேசு பட்டவர் இல்லை. அத்தைக்கு மேல் என்னிடம் பாசம் கொட்டுகிறவர். மழைக்காலங்களில் மக்களுக்கு என்னென்னவோ நோய்கள் வந்து வாட்டி எடுத்துவிடுகிறது. அவர்களுக்கு மருத்துவம் பார்த்துக் குணப்படுத்தி அனுப்புவது என் பாக்கியம். அதுவே என் அப்பா, அத்தை, மாமாவுக்கும் மனநிம்மதி.

காலையில் நான் வீட்டிலிருந்து கிளம்பும்போது பப்புக்குட்டி தூங்கிக் கொண்டிருந்தாள். குளிருக்கு இதமாகப் போர்த்திக் கொண்டு அவள் கதகதப்பாகப் படுத்திருப்பதைப் பார்த்தேன். இன்னும் முழுமையாய் மலராத ரோஜா மொட்டுப் போல் அழகாய் இருந்தாள். அவள் எழுந்து 'டாட்டா' கூட சொல்ல மாட்டாள் என்று தோன்றியது.

சில நேரங்களில் கண்களைத் திறக்காமல் கண்களைக் கசக்கிக் கொண்டே'பை பை' என்பாள். அவள் கன்னங்களில் முத்தங்கள் பதித்துக் கொஞ்சிவிட்டுக் கிளம்பி வந்துவிடுவேன்.

அவளுக்கு ஏதாவது ஸ்நாக்ஸ் வாங்கிக் கொண்டு போக வேண்டும். அவள் சில பண்டங்களைத்தான் பிரியமாகச் சாப்பிடுகிறாள். அதில் அதிரசத்துக்கு முக்கியப் பங்கு உள்ளது.

வெளியில் புங்கை மரத்தடியில் நின்றிருந்த என் வண்டியில் தூறல் விழுந்த அடையாளமாக சீட் நனைந்து இருந்தது. கூடவே புங்கைப் பூக்களும் சிதறிக் கிடந்தன. வண்டியை ஸ்டார்ட் செய்தேன். தூறல் கொஞ்சம் பலமாகத் தொடங்கியது. மழைக்கோட் அணிந்துகொண்டேன். மஞ்சு எப்போதும் என் மீது அதீத அக்கறை கொண்டவள். காலையில் அவளாகவே மழைக்கோட்டை என் வண்டியில் பத்திரமாக வைத்துவிட்டாள். என்னிடம் சொன்னால் மறந்து விடுவேனாம்.

மூன்றாவது தெரு தாண்டினால் ஒரு வீட்டுத் திண்ணையில் சுடச்சுட அதிரசம், முறுக்கு என்று சுட்டு விற்றுக்கொண்டிருப்பார்கள். அதுவும் இந்த மழை நேரங்களில் எண்ணெயில் நுரை ததும்ப வெந்துக்கொண்டிருப்பது எனக்குத்தான் என்கிற மாதிரி சிலர் அதை வாங்க போட்டிப் போட்டுக் கொண்டு பணத்தை நீட்டிக் கொண்டே இருப்பார்கள். அவ்வளவு ருசி.

நான் எல்லோருக்கும் தெரிந்த அரசு மருத்துவமனை டாக்டர் என்பதால், அந்தக் கூட்டத்தில் கொஞ்சம் சலுகை உண்டு. சிரித்த முகமாய் முதலில் எனக்கு என்ன வேண்டும் என்று கேட்டுக்கொடுத்து விடுவார்கள்.

'ஐந்து முறுக்கு, ஐந்து அதிரசம்' என்று கூறி, அதற்குரிய பணம் கொடுத்து சூடாக இரண்டு பொட்டலங்களை வாங்கிக்கொண்டு கிளம்பும்போது மழை 'ஜோ'வென்று பிடித்துக்கொண்டது.

குறுஞ்செய்தி வந்து விழுந்ததற்கு அடையாளமாக ஒலியும், ஒளியும் எழுப்பியது என்னுடைய செல்போன். மஞ்சு தான் அனுப்பியிருந்தாள். 'பார்த்து பத்திரமா வாங்க. வரும்போது கொஞ்சம் தக்காளி, காய் ஏதாவது வாங்கிட்டு வாங்க.' சிரித்துக்கொண்டேன்.

அடுத்த கடையே காய்கறிக் கடைதான். வண்டியை நிறுத்தியவுடன் கடைக்காரர் 'உள்ள வந்து நின்னுக்கோங்க, சார்' என்றார். மழையும் விடுவதாக இல்லை. கொஞ்ச நேரம் உள்ளே நிற்கலாம் என்று எனக்கும் தோன்றியது. அந்தக் கடையில் ஒரே ஒரு குண்டு பல்பு மட்டும் எரிந்துகொண்டிருந்தது. அந்த வெளிச்சத்தில் தக்காளி, காய்கள் எல்லாம் ஈரத்தோடு பளபளத்தது.

'ஒக்காருங்க சார்' என்று அவர் உட்கார்ந்து இருந்த ஸ்டூலை என் பக்கம் நகர்த்தினார். எல்லா இடங்களிலும் ஒரே ஈரமயம். கடைக்குள் ஏதோ அழுகிய நாற்றம். மல்லித் தழையின் வாடையும் சேர்ந்துகொண்டது. நான், 'பரவால்ல நிக்கிறேன்' என்று சொல்லிவிட்டு, 'ஏதோ மூணு காய்கள்லயும் கால் கால் கிலோ போடுங்க. தக்காளி மட்டும் ஒரு கிலோ போடுங்க' என்று என்னென்ன காய்கள் போடுவது என்பதை அவரது விருப்பத்துக்கே விட்டுவிட்டேன். அவர் ஒவ்வொரு காய்களிலும் கால் கிலோவுக்கு மேலேயே போட்டுக் கூடவே கறிவேப்பிலை, மல்லித்தழையும் சேர்த்து வைத்துப் பையை நிரப்பி என்னிடம் கொடுத்தார். நான் 'எவ்ளோ?' என்று கேட்டுப் பணத்தைக் கொடுத்துவிட்டு நகர்ந்தேன்.

'கொஞ்சம் மழ விட்ருச்சி' என்றார் கடைக்காரர் வெளியே குனிந்து பார்த்தபடி.

அவரின் கடை வாசல் கூரையில் இருந்து மழை நீர் சொட்டிக் கொண்டிருந்தது. அருகே இருந்த சாக்கடையில் நீர் நிரம்பி வேகமாய் ஓடிக் கொண்டிருந்தது.

வீட்டில் மஞ்சுவும், பப்புக்குட்டியும் எனக்காகக் காத்திருப்பார்கள் என்கிற எண்ணம் வந்து பளிச்சிட்டது. எனக்குள் ஏதோ மகிழ்ச்சியும் ஊறியது. அவர்கள் எனக்கானவர்கள்.

சாலையில் அதிகம் நடமாட்டம் இல்லை. மழை எல்லோரையும் வீட்டுக்குள் அடைத்து வைத்திருந்தது. சில கடைகள் மட்டும் திறந்திருந்தது. அங்கும் வாடிக்கையாளர்கள் யாரும் இல்லை.

ஒரு நாய் மட்டும் மூடிக் கிடந்த ஒரு கடையின் வாசலில் படுத்திருந்தது. என்னைப் பார்த்ததும் எழுந்துகொண்டது. ஏனோ குரைக்கவில்லை. மனித நடமாட்டம் கண்ணில் படவே இல்லை. ஒவ்வொரு காலகட்டத்திலும் மனிதர்கள் வித்தியாசமாக இருக்கிறார்கள். கோடைக்காலம் என்றால் இரவு பத்து மணி வரை கூடத் தெருக்களில் திரிந்துகொண்டிருப்பார்கள். பெட்டிக்கடை, டீக்கடைகளில் எல்லாம் ஏதோ முக்கிய விவாதங்களில் இருப்பது போல், பாய்லர் புகை, பீடி புகைகளுக்கு நடுவே குழுமியிருப்பார்கள்.

நசநசவென்று பெய்து கொண்டே இருக்கும் மழை மீது மட்டும் எப்போதும் மக்களுக்குக் கொஞ்சம் வெறுப்பாய்த்தான் இருக்கிறது. விவசாயிகளுக்கு வேண்டுமானால் மழையைப் பிடிக்கும். அதுவும் அளவான மழை. தன் பயிர்களை மூழ்கடிக்காத மழை. தன் வாழைத்தோப்பை சாய்த்து நாசமாக்காத மழை.

ஆனால், பப்புக்குட்டிக்கு மழை என்றாலே தனிப்பிரியம். மஞ்சுவுக்குத் தெரியாமல் எத்தனை முறை மொட்டை மாடிக்குப் போய் நனைந்து விட்டு வந்திருக்கிறோம். வேண்டுமென்றே கடைக்குப் போவது போல் குடையை எடுத்துக்கொண்டும் பிடிக்காமல் நனைந்து வந்திருக்கிறோம்.

போன வருடம்தான் காய்ச்சல் வந்து அவஸ்தைப்பட்டாள் பப்புக்குட்டி. குழந்தை மீது மஞ்சு உயிரையே வைத்திருக்கிறாள்.

அவள் எனக்கு மனைவியாகக் கிடைத்தது நான் பெற்ற வரம்.

மழை விட்டிருந்தது. தெரு அடங்கி இருந்தது. சில வீடுகளில் விளக்குகள் எரியவில்லை. பூச்சிகளின் தொல்லையால் இருக்கலாம். பூச்சிகள் எல்லாம் விளக்குகளைச் சூழ்ந்து கொண்டு அப்படி என்னதான் செய்யுமோ தெரியவில்லை. வீட்டுக்குள் விளக்கு எரிந்துகொண்டு இருக்கிறது. வெளியே லைட் போடவில்லை. நான் ஹாரன் அடித்தேன். வெளி லைட்டைப் போட்டுவிட்டுக் கதவைத் திறக்க பப்புக்குட்டி ஓடிவருவதை அவளது கொலுசுகள் சத்தமிட்டுக் காட்டின. நான் வண்டியை நிறுத்திவிட்டு, மழைக் கோட்டை கழற்றி வண்டியிலேயே போட்டுவிட்டு உள்ளே நுழைந்தேன்.

'ஏய், பப்புக்குட்டி' என்றபடி பப்புவிடம் என் கையில் இருந்த அதிரசப் பையைக் கொடுத்தேன். வாங்கிக் கொண்டு எனக்கு முன்னே போனாள்.

மஞ்சு உள்ளிருந்து துண்டு எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தாள். காய்கறிப் பையை அவளிடம் கொடுத்துவிட்டு பாத்ரூம் போய் கை, கால், முகம் கழுவிக்கொண்டு வந்தேன்.

கொஞ்சம் விட்டிருந்த மழை மீண்டும் ஆரம்பித்து விட்டதாகத் தெரிந்தது. ஒரே தாள லயத்தில் விடாமல் பெய்து கொண்டிருந்தது. புயல் எப்போது கரையைக் கடக்குமோ?

டி.வி.யில் கார்ட்டூன் ஓடிக்கொண்டிருந்தது. நியூஸ் பார்க்கலாம் என்றால் பப்பு விடுவாளா? தெரியவில்லை.

நான் ரிமோட்டை எடுத்து நியூஸ் சேனலுக்கு மாற்றினேன்.

ஷோபாவில் அமர்ந்திருந்த பப்பு என்னையும் அமரச் சொன்னாள். டி.வி.யை நான் மாற்றியது பற்றி அவள் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. அதிசயமாக இருந்தது. எப்போது பப்புக்குட்டி கார்ட்டூன் பார்த்தாலும் வேறு யாரும் வேறு சானல் மாற்ற முடியாது. அழுது அடம்பிடித்துச் சாதிப்பாள்.

ஆனால், இரண்டாம் வகுப்பு படிக்கும் அவளின் வீட்டுப் பாடங்களை முடித்துக்கொண்டிருக்கும் போது மட்டும் டி.வி.யை சட்டை செய்ய மாட்டாள்.

ஷோபாவை ஒட்டிய ஜன்னலில் மழை பெய்வது நன்றாகத் தெரிந்தது. பப்பு அதை ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் கையில் பாதி கடித்த அதிரசம் இருந்தது.

மஞ்சு சுடச்சுட பஜ்ஜி செய்துகொண்டுவந்து எங்களோடு அமர்ந்துகொண்டாள். அவள் வயிற்றில் இன்னொரு குட்டி தேவதை (தேவன்?) வளர்ந்துகொண்டிருக்கிறது.

வாழைக்காய் பஜ்ஜிக்கு ருசியாகப் பொட்டுக்கடலைச் சட்னி செய்திருந்தாள். எப்போது என்ன செய்ய வேண்டும் என்று அவளுக்குத் தெரியும்.

நான் பஜ்ஜியைக் கடித்துக்கொண்டே செய்திகளை மாற்றி மாற்றிப் பார்த்துக்கொண்டிருந்தேன். அதிரசக் கவரை மஞ்சுவிடம் கொடுத்துவிட்டு ஜன்னல் மழைப்பக்கம் திரும்பிக் கொண்டாள் பப்புக்குட்டி.

எல்லாச் சானல்களிலும் மழை, மழை, மழைதான் செய்தியாக இருந்தது. வெயிலை யாரும் இப்படிப் பேசு பொருளாக்கி நான் பார்த்ததில்லை. வெயிலுக்கு யாரும் மைக்கைப் பிடித்துக்கொண்டு பரபரப்பாய் செய்திகளைப் பரப்பிக் கொண்டிருப்பதில்லை. வெயிலுக்காக எந்த எச்சரிக்கையும் விடுவதில்லை. வயதானவர்கள் என்றால் மட்டும் வெயிலில் திரியாமல் வீட்டுக்குள் இருங்கள் என்று சொல்வார்கள். நான் கூட என்னிடம் வரும் நோயாளிகளிடம் மழைக்குத் தருகிற ஆலோசனை அளவுக்கு வெயிலுக்குத் தருவதில்லை.

நான்கு நாள்கள் தொடர்ந்து மழையின் ஆட்சியாகவே இருந்தால் எப்போதான் இந்த வெயில் வருமோ? என்று கூடத் தோன்றிவிடும். துவைத்துப் போட்ட துணிகள் எல்லாம் காயாமல் நமத்துக்கிடக்குமே.

டி.வி.யில் இடுப்பளவு தண்ணீரில் தலையில் ஏதாவது ஒரு முக்கியப் பொருளை சுமந்தபடி மக்கள் அவதிப்படும் காட்சிகள். வாகனங்கள் நெரிசலில் ஊர்ந்து செல்லும் காட்சிகள். பாலம் உடைந்து வெள்ளம் ஓடும் காட்சிகள். ஆட்சியாளர்கள் சரியில்லை என்கிற காட்டமான குற்றச்சாட்டுகள் என்று பார்த்துக்கொண்டிருக்கும் நமக்கும் ஒரு பரபரப்பைத் தொற்ற வைத்துவிடுகின்றன இந்தச் செய்திச் சானல்கள்.

சில வருடங்களுக்கு முன்பு ஆந்திர மாநிலத்தில் இருக்கின்ற ஒரு கடலோரக் கிராமத்தில் புயல் கேம்ப் போட்டிருந்தார்கள். மறுக்காமல் சென்றேன். இதுபோன்ற புயல் காலங்களில் எல்லாம் வயிற்றில் புளியைக் கரைக்கும். சுற்றி இருக்கும் பதின்மூன்று கிராமங்களில் எங்கு எப்போது வெள்ளம் சூழும் என்றே தெரியாது. ஆங்காங்கே கேம்ப் போட்டு இரவு, பகல் பாராமல் வேலை பார்க்கும் சூழ்நிலை. என் கண் முன்னே வெள்ளத்தின் பாதிப்புகளை நிகழ்த்திக் காட்டியது காலம். கிராமங்கள் மூழ்கி அடையாளம் தெரியாமல் ஒரே வெள்ளக்காடாய்க் காட்சி தரும். அரசு எச்சரிக்கைக் கொடுத்து மக்களைப் பாதுகாப்பான இடங்களில் அமர்த்தியும் பல மனித உயிர்கள், ஆடு, மாடுகள் பலியாகும். மின்சாரங்கள் துண்டிக்கப்பட்டு வெள்ளத்தோடும் இருட்டோடும் போராடும் கொடுமையான சூழ்நிலை.

அந்தக் கொடூரப் புயல், மழைக் காலங்களில் அசராமல் ஓடி ஓடி வேலை பார்த்தது காவல்துறையும், தீயணைப்புத் துறையும், மருத்துவத் துறையும்தானே? நான் ஒரு மருத்துவன் என்கிற கடமை உணர்வு எப்போதும் எனக்குண்டு. ஓர் உயிரைக் காப்பதுதானே எங்களது பணி.

எத்தனை கூச்சல்கள், எத்தனை எத்தனை உயிர்கள், எத்தனை ஆம்புலன்ஸ்கள். சிலரை இழந்தாலும் பலரைக் காப்பாற்றிவிட்டோம். மனம் முழுக்கப் பதைபதைத்தாலும் நிதானம் இழக்காமல் வேலை செய்யவேண்டும். பதறினால் காரியம் கேட்டுவிடும்.

அந்தச் சூழலில் உடம்பில் ஒட்டுத்துணி இல்லாமல், சில கீறல்கள், காயங்களோடு வீரிட்டு அழுதுகொண்டிருந்த ஒரு வயதுக் குழந்தையைத் தூக்கிக்கொண்டு என்னிடம் ஓடிவந்த பெண் காவலர் ஒருவரின் முகத்தில் தாய்மை உணர்வு கொப்பளித்ததைப் பார்த்தேன். எப்படியாவது அந்தக் குழந்தையைக் காப்பாற்றியாக வேண்டும் என்கிற மனத்துடிப்பை அவர் முகத்தில் பார்த்தேன்.

அந்தக் குழந்தைக்கு மருத்துவம் பார்த்து நல்ல விதமாக குணமாகி சில நாள்கள் எங்கள் மருத்துவமனையிலேயே இருந்தது. அந்தப் பெண் காவலர் அடிக்கடி வந்து நலம் விசாரித்துப் போவார்.

ஓரளவு புயல் அடங்கி நிலைமை சீரானப்பின் அதே பெண் காவலர், 'அந்தக் குழந்தைக்கு யாரும் இல்லை. நீங்கள் வளர்க்கிறீர்களா? எனக்கு மூன்று பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள். எங்கள் வீட்டில் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்' என்று கண்ணீரோடு என்னிடம் கேட்டபோது என்னால் மறுக்க முடியவில்லை. மஞ்சுவுக்கும் முன்னால் என் வாழ்வில் நுழைந்தவள் பப்புக்குட்டி. பப்புக்குட்டி எப்போதும் இந்த மழையைப் பார்த்தபடி மட்டும் மகிழ்ச்சியாக இருக்கட்டும். இந்த மழைக்குப்பின்னால் இருக்கும் அவளின் கதையை எப்போதும் தெரிந்துகொள்ளவே வேண்டாம், என் செல்லப் பப்புக்குட்டி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.