பாஜகதான் எதிரி; கூட்டணியை உடைக்க சமாஜவாதி விரும்பாது: அகிலேஷ் யாதவ் உறுதி!உசைன் போல்ட் சாதனையை முறியடித்த சீன ரோபோ!சர்வதேச விமானப் பயணிகளுக்கு போர்டிங் பாஸில் முத்திரை வேண்டியதில்லை!குழந்தைகளுக்கான இருமல் மருந்துகள்: இரு வகை மூலப் பொருள்களுக்குத் தடைவெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இன்று ரஷியா பயணம்!படிக்காமலும் வேலைக்கும் செல்லாத 8.7 கோடி இளைஞா்கள்: நீதி ஆயோக்!

வாய்ப்புகளை வாழ்க்கை வழங்கிக்கொண்டே இருக்கிறது

'வாழ்க்கையில் அதிர்ஷ்டம் முக்கியப் பங்கு வகிக்கிறது என்பார்கள்.

Published On :23 ஆகஸ்ட் 2026, 4:02 am IST

சுரேஷ்

'வாழ்க்கையில் அதிர்ஷ்டம் முக்கியப் பங்கு வகிக்கிறது என்பார்கள். ஆனால், என் அனுபவத்தில் நல்ல வாய்ப்புகள் பெரும்பாலும் நம்மைச் சுற்றியே இருக்கின்றன. அவற்றை நாம் உடனடியாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். அவை நம் வாழ்க்கையின் திருப்பு

முனைகளாக அமையக் கூடும்' என்கிறார் வித்யா பவானி சுரேஷ். சென்னையைச் சேர்ந்த பரதநாட்டியக் கலைஞர், பாடகர், பேச்சாளர், எழுத்தாளர் எனப் பன்முகங்களைக் கொண்ட அவரிடம் பேசியபோது:

'பதிமூன்றாம் வயதிலிருந்தே எனக்கு மேடைப் பேச்சில் மிகுந்த ஆர்வம் இருந்தது. பள்ளியில் நடைபெறும் அனைத்துப் பேச்சுப் போட்டிகளிலும் நான் கலந்துகொள்வேன். தொடக்கத்தில் பலமுறை தோல்வியடைந்தாலும், தொடர்ந்து சிறப்பாகப் பேச முயற்சித்தேன். கல்லூரிக் காலத்தில் பல பரிசுகளை வென்றேன். இன்று ஒரு நடனக் கலைஞராக எனது நிகழ்ச்சிகள் மிகவும் சிறப்பாக அமைவதற்கு, எனது பேச்சுத் திறனும் முக்கியக் காரணம். அதுமட்டுமன்றி 'மென் திறன்கள்' குறித்தும் நான் பல உரைகளை நிகழ்த்தி வருகிறேன்.

நாட்டுப்புறவியலில் முதுகலைப் பட்டம்

எனக்கு 22 வயதாக இருந்தபோது, என் தாய் விஜயலட்சுமி மூர்த்தி, திருநெல்வேலி அகில இந்திய வானொலி நிலைய இயக்குநராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அங்கேயும் ஒரு வாய்ப்பை நான் கண்டேன். திருநெல்வேலி புனித சேவியர் கல்லூரியில் மட்டுமே நாட்டுப்புறவியலில் முதுகலைப் படிப்பு வழங்கப்பட்டு வந்தது. அந்த இரண்டு ஆண்டுப் படிப்பு, கலை, கலாசாரம் குறித்த எனது கண்ணோட்டத்தையும் புரிதலையும் பெரிதும் விரிவுபடுத்தியது. பிற்காலத்தில் பல புத்தகங்களை எழுதுவதற்கும் அது உதவியது.

நடனமும், பாடலும்...

எனது 29-வது வயதிலிருந்து, எனது நடன நிகழ்ச்சிகளுக்கான பாடல்களை நானே பாடி வருகிறேன். இது எதிர்பாராதவிதமாக நிகழ்ந்தது. 1999-ஆம் ஆண்டில் 'தமிழ் இலக்கியமும் பரதமும்' என்ற தலைப்பில் 21 நிகழ்ச்சிகளை வெளிநாட்டில் நடத்த அழைப்பு வந்தது. திருப்புகழ், பரிபாடல், திருமுருகாற்றுப்படை, மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், நளவெண்பா போன்ற இலக்கியப் படைப்புகள் அந்த நிகழ்ச்சியில் இடம்பெற்றிருந்தன. அந்தப் பாடல்களுக்கு நானே இசையமைத்தேன்.

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் வெவ்வேறு இலக்கியப் பகுதிகளுக்கு வெவ்வேறு பாடகர்கள் பாடியிருந்தனர். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அனைத்துப் பாடல்களையும் முழு இசைக்கருவிகளுடன் கூடிய 'ஸ்டூடியோ' பதிவுகளாகக் கேட்டனர். ஆனால், எங்களிடம் அவை தயாராக இல்லை. ஒரு வாரத்துக்குள் சுமார் 50 பாடல்களைப் பதிவு செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது.

அப்போது என் கணவர், 'நீயே ஏன் பாடக் கூடாது?' என்று தைரியம் தந்தார். அந்த எதிர்பாராத வாய்ப்பு எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. அன்றிலிருந்து, எனது நடனத்துக்கு நானே பாடுவது வழக்கமானது. நடனமும் பாடலும் இரண்டும் சேர்ந்ததே எனது தனித்துவமான அடையாளமாகவும் மாறியுள்ளது.

எழுத்துப் பணி

கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக நடனம், இசை குறித்த புத்தகங்களை எழுதி வருகிறேன். ஒவ்வொரு புதிய புத்தகத்தையும் எழுதும்போதும் முதல் புத்தகத்தை எழுதியபோது இருந்த அதே உற்சாகம் இப்போதும் எனக்குள் இருக்கிறது. எனது மிகச் சமீபத்திய படைப்பு '30 டைம்லெஸ் காம்பிடேஷன்ஸ் ஆஃப் கர்நாடிக் மியூஸிக்'. ஒருநாள் எங்கள் அடுக்குமாடிக் குடியிருப்பில் எதிர்பாராதவிதமாக தண்ணீர் விநியோகம் நின்றபோதுதான், இந்தப் புத்தகத்துக்கான கருப்பொருள் என் மனதில் தோன்றியது.

நாம் சாதாரணமாகக் கருதி கவனிக்காமல் விட்டுவிடும் சிறிய ஒலிகள் என் கவனத்தை ஈர்த்தன. பல புத்தகங்கள் அத்தகைய ஒரு தருணத்திலிருந்தே பிறக்கின்றன. அந்த எண்ணத்தைப் பின்தொடர்ந்து அது நம்மை எங்கு அழைத்துச் செல்கிறது என்று பார்க்க வேண்டும்! சில சமயங்களில் அது பாதியிலேயே நின்றுபோகலாம்; ஆனாலும் நாம் முயற்சிக்க வேண்டும்.

கர்நாடக இசைப் பயணம்

கர்நாடக இசையில், எனது தாயார் விஜயலட்சுமி மூர்த்திதான் எனது முதல் குரு. எனக்கு 13 வயதாக இருந்தபோது, அவர் என்னை விதுஷி ஏ.பி. கோமளாவிடம் இசை பயிலச் சேர்த்தார். ஆனால் நடன வகுப்புகள் எனது நேரத்தின் பெரும்பகுதியை எடுத்துக்கொண்டதால், அந்த இசை வகுப்புகள் நின்றுபோயின. எதிர்பாராதவிதமாக, ஒரு பத்திரிகையில் எனது குருவின் நேர்காணல் ஒன்றைப் பார்த்தேன். அவரிடமிருந்து மீண்டும் இசையைக் கற்கவேண்டும் என்ற விருப்பம் திடீரென எனக்குள் எழுந்தது. அப்போது அவருக்கு வயது எழுபத்து ஒன்பது. எனக்கு முப்பத்து ஒன்பது வயது.

நான் ஏற்கெனவே ஒரு பிரபலமான நடனக் கலைஞராகவும் எழுத்தாளராகவும் இருந்தேன். எனது மூன்று குழந்தைகளும் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தனர். அப்படியிருந்தும், நகரின் மறுமுனையில் இருந்த அவரது முகவரியைக் கண்டுபிடித்துச் சென்றேன்.

அந்தத் தூரம் என்னை ஒருபோதும் தடுக்கவில்லை; அதன் விளைவாக, ஒரு சிறந்த இசை மேதையுடன் பத்து ஆண்டுகள் பயிலும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இது எனது திறன்களை வளர்த்துக்கொள்ள பெரிதும் உதவியது. என் வாழ்க்கையின் இந்தக் காலகட்டம் மறக்க முடியாதது. வாழ்க்கை எப்போதும் நமக்கு பல வாய்ப்புகளை வழங்குகிறது; அவற்றை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்' என்கிறார் வித்யா பவானி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.