ஆரணி அருகே பாகிஸ்தான் உளவாளி கைது சன்ன ரகப் பொன்னி அரிசியைக் கொள்முதல் செய்வதற்கு அரசு எப்போது டெண்டர் விட்டது? உதயநிதி ஸ்டாலின் கேள்வி ஜம்முவில் எல்லை அருகே ட்ரோன் மீட்பு: காவல் துறையினர் தீவிர விசாரணை சென்னையில் இன்று இரவு முதல் மழை! மற்ற மாவட்டங்களில் மழை எப்படி இருக்கும்?புயல் எச்சரிக்கை: குடியரசுத் தலைவர் முர்முவின் ஒடிசா பயணம் ஒத்திவைப்பு கோயில்களில் பணம் கேட்டால் ஆதாரத்துடன் புகார் அளிக்கலாம்! அமைச்சர் ரமேஷ்மாயமான சிறுவர்களை மீட்டு, அனைத்து கோணங்களிலும் அரசு விசாரிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி ரெட் அலர்ட்: நீலகிரியில் சுற்றுலா தலங்கள் மூடல்! தேசிய பேரிடர் மீட்புப் படை விரைவு!அமைதிப் பத்திரத்தில் கையெழுத்திட மாட்டேன்! நேஹா போரா

கேளிக்கை நிறுவனங்களின் மையம்

ஓராண்டில் ஐந்து கோடிக்கும் மேலான சுற்றுலாப் பயணிகள் ஒரு சதுக்கத்தைப் பார்வையிட வருகிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா?

Updated On :

ஓராண்டில் ஐந்து கோடிக்கும் மேலான சுற்றுலாப் பயணிகள் ஒரு சதுக்கத்தைப் பார்வையிட வருகிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா? அந்தச் சதுக்கத்தை ஒரே நாளில் சராசரியாக மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட பாதசாரிகள் கடக்கிறார்கள். மிகவும் பரபரப்பான அலுவல்கள் அதிகம் நிறைந்த நாள்களில் சுமார் நாலரை லட்சம் மக்கள் தங்கள் பாதங்களைப் பதிக்கிறார்கள். அப்படிப்பட்ட இடம்தான் அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் மன்ஹாட்டன் பகுதியில் உள்ள டைம்ஸ் ஸ்கொயர்.

நியூயார்க் பெருநகர் நிர்வாகத்தின் மேம்பாட்டை ஒட்டி ஐந்து மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. அவற்றில் முக்கியமான, உலகறிந்த ஒன்றுதான் மன்ஹாட்டன்!

மன்ஹாட்டனில் பெரும் வீதிகள் 'அவென்யூ' என்றும், சிறியவை 'தெருக்கள்' எனவும் அழைக்கப்படுகின்றன. அவென்யூக்களும் தெருக்களும் கம்பிச் சட்டத்தைப் போன்ற குறுக்கு நெடுக்கான அமைப்பில் உள்ளன. வடக்கு தெற்காக அவென்யூ எனப்படும் பெரிய வீதிகளும், கிழக்கு மேற்காக தெருக்களும் அமைக்கப்பட்டுள்ளன. தெருக்கள் 1, 2, 3 என எண்களால் குறிக்கப்படுகின்றன. அவென்யூக்களுக்கு பெயர்களும் எண்களும் உண்டு. அவென்யூக்களின் இருபுறங்களிலும் விண்ணை முட்டும் பெரிய கட்டடங்கள் அமைந்துள்ளன.

டைம்ஸ் ஸ்கொயர், ஏழாம் அவென்யூ மற்றும் நாற்பத்திரண்டாம் வீதியின் சந்திப்பில் அமைந்துள்ளது. பிராட்வே எனப்படும் மூலைவிட்டம் போன்ற பாதை இந்தச் சந்திப்பின் வழியே செல்கிறது. நாற்பத்து ஏழாம் தெரு வரை டைம்ஸ் ஸ்கொயர் பரவியுள்ளது.

இந்தச் சதுக்கத்தை 'கேளிக்கை நிறுவனங்களின் மையம்' எனலாம். கலை அரங்குகள் நிறைந்த இடம். குறிப்பாக இசை நிகழ்ச்சிகள் பெரும்பான்மையாக நடைபெறும் இடம். புகழ் பெற்ற டிஸ்னியின் ஆம்ஸ்டர்டாம் கலை அரங்கு இங்குதான் இருக்கிறது. மேலும் அனைத்து உயரமான கட்டடங்களிலும் ஒளி விளக்குகள், டிஜிட்டல் விளம்பரப் பலகைகள் எந்த நேரத்திலும் பிரகாசித்துக் கொண்டிருக்கும். குறைந்தபட்சம் இவ்வளவு ஒளி இருந்தாக வேண்டும் என்ற கட்டுப்பாடும் உள்ளது என்பது ஓர் ஆச்சரியமான செய்தி! சுமார் 161 மெகாவாட் மின்சாரம் ஓர்ஆண்டுக்கு டைம்ஸ் ஸ்கொயருக்கு மட்டும் தேவைப்படுகிறது.

ஸ்கொயர் என சதுர வடிவத்தைத் தெரிவித்தாலும், டைம்ஸ் ஸ்கொயர் ஒரு கழுத்துப் பட்டை போன்ற அமைப்பைக் கொண்டது. இதனை நடை மாந்தர்கள் கடக்கும் வழியாகக் கருதலாம்; பாதசாரிகள் சந்திக்கும் ஒரு பொது இடமாகவும் நினைத்துக் கொள்ளலாம். பரபரப்பு நிறைந்த நியூயார்க் நகரத்தின் சின்னம் டைம்ஸ் ஸ்கொயர் என்றால் மிகையாகாது.

கிபி 1904-ஆம் ஆண்டு வரை இது லாங்ஏக்கர் ஸ்கொயர் என்ற பெயரில்தான் அழைக்கப்பட்டு வந்தது. நியூயார்க் டைம்ஸ் என்கின்ற செய்தி நிறுவனம் அதன் தலைமையகத்தை இங்கு மாற்றிக் கொண்டவுடன் டைம்ஸ் ஸ்கொயர் என்ற பெயர் நிலைத்தது.

ஊடகம், இதழியல், செய்திகள் பரப்பு என அனைத்து வடிவங்களிலும் அக்காலங்களில் நியூயார்க் டைம்ஸ் அமெரிக்காவினை உலகுக்கு அறிமுகப்படுத்தி வந்தது.

புது வருடப் பிறப்பின்போது ருசிகரம்:

டைம்ஸ் செய்தி நிறுவனக் கட்டடத்தின் முன் ஓர் உயரமான கம்பத்தில் 12.5 அடிகள் விட்டமுள்ள பல நிறங்கள் கொண்ட கண்ணாடிப் பந்து வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 31 இரவு 11. 59 -க்கு அது கம்பத்தின் கீழே வரத் தொடங்குகிறது. சரியாக நள்ளிரவு 12.00 மணிக்கு அது கம்பத்தில் நின்று விடுகிறது. புது வருடத்தின் தொடக்கம் என அது அறிவிக்கிறது. இதனைக் காண உலகெங்கிலிருந்தும் பல்லாயிரக்கணக்கானோர் டைம்ஸ் ஸ்கொயருக்குப் படையெடுக்கின்றனர். பண்டைய நாள்களில் மரத்தால் மற்றும் உலோகத்தால் ஆன பந்துகள் பயன்படுத்தப்பட்டன. பாதுகாப்பு கருதி வானவேடிக்கைகள் நிறுத்தப்பட்டதால் இத்தகைய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நியூயார்க்கின் பிரம்மாண்டமான கிராண்ட் டெர்மினல் ரயில்வே ஸ்டேஷன் டைம்ஸ் ஸ்கொயர் அருகிலேயே உள்ளது. இந்தச் சதுக்கத்தில் கேளிக்கைகளுக்கும் பஞ்சமிருக்காது. ஒருபுறம் நடனம், மறுபுறம் கிடார் இசை, புலம் பெயர்ந்த ஆப்பிரிக்க இளைஞர்களின் கம்பங்கூத்து போன்ற வீர விளையாட்டுகள், கராத்தே பயிற்சி, டிரம்களின் ஓசை என ஒவ்வொன்றாய் சொல்லிக்கொண்டே போகலாம். தெருக்களில் மிக்கி மெளஸ், கொரில்லா, கரடி என வெவ்வேறு வேடங்கள் அணிந்த பலர் சிறுவர்களையும் குழந்தைகளையும் மகிழ்விப்பதில் சளைப்பதில்லை.

கையேந்தி பவன்கள் முதல் உயர்தர உணவுக் கூடங்களும் சதுக்கத்தில் நிறைந்துள்ளன. மேடம் டுஸ்ஸாட் மெழுகுக் கலை அருங்காட்சியகமும் இந்தச் சதுக்கத்தின் அருகிலேயே உள்ளது. பல நட்சத்திரங்களின் உருவப் பொம்மைளைக் காணலாம்.

டைம்ஸ் ஸ்கொயர் தரும் வண்ண விளக்குகள் விண்வெளியிலிருந்தும் தெரிவதாக விண்வெளி வீரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.