
கற்பித்தலில் மாற்றம் தேவை
மாணவர்களிடம் அனைத்து ஞானமும் உள்ளது.
மு.வெங்கடேசன்
'மாணவர்களிடம் அனைத்து ஞானமும் உள்ளது. அதை வெளியே கொண்டு வரும் வழிகாட்டிதான் ஆசிரியர். உண்மையான கற்பித்தல் என்பது வெறும் வார்த்தைகளை விடுவதோ, கொள்கைகளைத் திணிப்பதோ அல்ல; அறிவைப் பகிர்வதும், ஆன்மாவைத் தொடுவதுமாகும். கல்வியின் நோக்கம் வாழ்க்கையை, மனிதனை, குணநலன்களை உருவாக்குவதாகவும் இருக்கவேண்டும்' என்கிறார், சுவாமி விவேகானந்தர்.
காலத்துக்கு ஏற்ப மாணவர்களுக்கு ஆர்வம் ஊட்டும் வகையில் கற்றலை ஆசிரியர்கள் கையாள வேண்டும். அதற்கு ஆசிரியர்களுக்குத் திறன் சார்ந்த பயிற்சி அவசியம். ஆசிரியர் மேம்பாட்டுத் துறையில் கால்பதித்து, அதை உலகளாவிய தளமாக உயர்த்தியிருக்கிறார்,
'சென்டர் ஃபார் டீச்சர் அக்கரீடிடேஷன்' (சென்டா) என்ற நிறுவனத்தின் நிறுவனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான ரம்யா வெங்கடராமன். அவரிடம் பேசியதிலிருந்து:
'திருநெல்வேலியைப் பூர்விகமாகக் கொண்ட குடும்பத்தில் பிறந்து மும்பையிலும் தில்லியிலும் வளர்ந்தேன். கல்விக்கு முக்கியத்துவம் தருவதுடன், சமுதாயத்துக்கு நன்மைகள் செய்வது குறித்தும், நாட்டுக்காகப் பங்காற்றுவது குறித்தும் சிந்திக்க, இளம் வயதிலேயே என் குடும்பத்தாரால் ஊக்குவிக்கப்பட்டேன்.
மக்கின்சி நிறுவனத்தில் கனரகத் தொழில்கள் மற்றும் உள்கட்டமைப்பு போன்ற துறைகளில் 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிய பிறகு, எனது பேரார்வத்தால் அடுத்த ஐந்து ஆண்டுகள் அந்நிறுவனத்தின் கல்விப் பிரிவை உருவாக்கி வழிநடத்தும் அரிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இது என்னை இத்துறைக்கு இன்னும் நெருக்கமாகக் கொண்டு வந்தது.
ஒரு கட்டத்தில் மக்கின்சியிலிருந்து வெளியேறி 'சென்டா' அமைப்பை தொடங்கினேன். இதன் முதல்படியாக, ஆசிரியர்களின் திறன்களைச் சான்றளிக்கும் முறையைக் கொண்டு வந்தோம்.
இதன் மூலம் புதிய பணி வாய்ப்புகள், தகுந்த அங்கீகாரம், திறன் மேம்பாடு மற்றும் வலுவான ஆசிரியர் சமூகப் பிணைப்பு ஆகிய அனைத்தையும் ஒரே புள்ளியில் இணைத்தோம். இன்று எங்கள் பணி இந்தியாவையும் தாண்டி விரிவடைந்து உலகிலேயே ஆசிரியர்களுக்கான மிகப் பெரிய தொழில்முறைத் தளமாக உருவெடுத்துள்ளது.
கனவு ஆசிரியர் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை மேம்படுத்தவும், சிறந்த ஆசிரியர்களை ஊக்குவிக்கவும் தமிழக பள்ளிக்கல்வித்துறையால் செயல்படுத்தப்பட்ட கனவு ஆசிரியர் திட்டத்தில், இரண்டாண்டுகளுக்கு முன்பு இணைந்து பணியாற்றினோம். அதில் வெற்றி பெற்றவர்கள் சிங்கப்பூருக்கு அழைத்துச் செல்லப்பட்டு ஊக்கப்படுத்தப்பட்டார்கள்.
ஜென் ஆல்ஃபா சவால்
பொதுவாக 2010 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் பிறந்த குழந்தைகளே 'ஜென் ஆல்ஃபா' என்று அழைக்கப்படுகிறார்கள். 21-ஆம் நூற்றாண்டில் முழுமையாகப் பிறந்த முதல் தலைமுறையினர் இவர்கள். பிறந்தது முதலே டிஜிட்டல் தொழில்நுட்பத்தைச் சுவாசித்து வளரும் இவர்கள், மிகுந்த தன்னம்பிக்கை, படைப்பாற்றல் மற்றும் உலகளாவிய பரந்த பார்வை கொண்டவர்களாகக் கருதப்படுகிறார்கள். அதே
வேளையில், சற்றே சுயநலம், பொறுமையின்மை மற்றும் உணர்ச்சிகளை உடனடியாக வெளிப்படுத்தும் இயல்புடையவர்களாகவும் இருக்கிறார்கள்.
ஸ்மார்ட்ஃபோன்களின் பரிணாம வளர்ச்சியோடு சேர்ந்து வளர்ந்த 'ஜென் ஜி' தலைமுறையினரைப் போலல்லாமல், 'ஜென் ஆல்ஃபா' பிறந்ததே ஒரு முழுமையான டிஜிட்டல் உலகுக்குள்தான். அதனால் தான் இவர்கள் சிறந்த இருவழிச் செயல்பாட்டையும் (இன்ட்ராக்டிவ்), விளையாட்டுபூர்வமான அணுகுமுறைகளையும் (கேமிஃபைடு ஃபார்மட்ஸ்) விரும்பும் உண்மையான 'செயற்கை நுண்ணறிவுத் தலைமுறையாக' (ஏ.ஐ. நேட்டிவ்ஸ்) திகழ்கிறார்கள்.
ஜென் ஆல்ஃபாவின் பலம், பலவீனம்
டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் அபாரத் தேர்ச்சி, அசாத்தியமான படைப்பாற்றல் மற்றும் சுயமாகக் கற்றுக்கொள்ளும் ஆர்வம் போன்றவை இவர்களது பலம்.
தொழில்நுட்பத்துக்கு அடிமையாகும் வாய்ப்பு, குறுகிய கவனக் குவியல் மற்றும் நேரடி சமூகத் தொடர்புகளில் உள்ள தயக்கம் போன்றவை இவர்களது பலவீனமாகும்.
'ஜென் ஆல்பா' குழந்தைகளைக் கவர்தல்
மாணவர்களின் பரிணாம வளர்ச்சிக்கு ஏற்ப, கல்வியாளர்களின் பங்கும் மாறத்தான் வேண்டும். எனவே ஜென் ஆல்ஃபா மாணவர்களுக்கு ஏற்றவாறு கற்பிக்க, ஆசிரியர்கள் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும்.
பாடத்தின் மீதான ஆழமான அறிவும், கற்பித்தல் முறைகள் பற்றிய தெளிவான புரிதலும் என்றுமே மாறாத அடிப்படை அஸ்திவாரமாகும். மாறிவரும் காலத் தேவைகளுக்கு ஏற்ப, ஆசிரியர்கள் தங்களின் இந்த அடித்தளத்தில் உறுதியாக நின்றுகொண்டே, தங்கள் பாடச் சூழலுக்கு எது சிறப்பாகப் பொருந்துமோ, அதற்குரிய நவீன கருவிகளையும், கற்பித்தல் உத்திகளையும் கையாண்டு செயல்பட இந்த அடிப்படைகளே அவர்களுக்குப் பெரும் பக்கபலமாக இருக்கின்றன.
டிஜிட்டல் மற்றும் ஏ.ஐ. (செயற்கை நுண்ணறிவு) அறிவாற்றல் என்பது இன்றைக்கு மிக முக்கியமான திறனாக மாறியுள்ளது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. எனினும், தொழில்நுட்பக் கருவிகளை வெறுமனே இயக்குவதோடு நின்றுவிடாமல், அவற்றின் வழியே மாணவர்களுக்கு இன்னும் சிறந்த, சுவாரஸ்யமான கற்றல் அனுபவங்களை உருவாக்கிக் கொடுப்பதே ஆசிரியர்களின் உண்மையான திறமையாகும்.
பாடங்களை வெறும் புத்தக அறிவோடு நிறுத்தாமல் நிஜ உலகப் பயன்பாட்டோடு பிணைப்பதும், வெவ்வேறு பாடங்களை ஒன்றுடன் ஒன்று ஒருங்கிணைத்துக் கற்பிப்பதும் இந்த நவீன யுகத்தில் ஆசிரியர்களுக்கு இருக்க வேண்டிய மிக முக்கியமான பிற திறன்களாகும்.
ஹைபிரிட் டிஜிட்டல் வகுப்பறைகள்
வகுப்பறைகள் டிஜிட்டல் மயமாய், 'ஹைபிரிட்' சூழலுக்கு மாறிக் கொண்டிருக்கும் இந்த யுகத்தில், ஆசிரியர்களுக்கு நவீன திறன்கள் அவசியமாகத் தேவைப்படும். ஆசிரியர்கள் பாடம் எடுக்கும்போது மட்டுமல்லாமல், அதற்கு முந்தைய தயாரிப்புகள் மற்றும் பிந்தைய செயல்பாடுகளிலும் தொழில்நுட்பத்தைச் சுலபமாகக் கையாளப் பழகியிருக்க வேண்டும். ஆனால், அதைவிட மிக முக்கியமாக... எந்த இடத்தில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினால் கற்றல் உண்மையில் மேம்படும், கூடுதல் மதிப்பைப் பெறும் என்பதை அவர்கள் ஆழமாகப் புரிந்திருப்பது தான் மிகவும் அவசியமாகும்.
பாடத் திட்டங்கள் தயார் செய்வது, மதிப்பீடுகள் மேற்கொள்வது மற்றும் வகுப்பறைச் செயல்பாடுகளை வடிவமைப்பு செய்வதிலும் ஏ.ஐ. உட்பட பல்வேறு டிஜிட்டல் கருவிகள் முக்கியப் பங்காற்றி வருகின்றன. இருப்பினும், இக்கருவிகளின் உண்மையான பயனை அடைய, அவை தரும் தரவுகளை ஆசிரியர்கள் பகுத்தாய்ந்து, தங்கள் மாணவர்களின் தேவைக்கேற்பத் தனிப்பயனாக்கிப் பயன்படுத்த வேண்டும்.
தொழில்நுட்பத்தின் பயன்
தொழில்நுட்பம் ஆசிரியர்களின் பங்கை பல கோணங்களில் மறுவரையறை செய்து வருகிறது. உதாரணமாக, மற்ற துறைகளைப் போலவே, ஆசிரியர்களின் பணியில் இருக்கும் ஒரே மாதிரியான, திரும்பத் திரும்பச் செய்யப்படும் சலிப்பூட்டும் வேலைகளின் சுமையைத் தொழில்நுட்பமே குறைத்துவிடுகிறது.
மேலும், 'ஜென் ஏ.ஐ.' எனப்படும் ஆக்கபூர்வ செயற்கை நுண்ணறிவு, பாடத் திட்டங்களை உருவாக்குவது, மாணவர்களின் பதில்களில் உள்ள நுட்பமான போக்குகளைக் கண்டறிவது போன்ற கற்பித்தலின் ஆழமான தளங்களிலும் தன் முத்திரையைப் பதிக்கத் தொடங்கியுள்ளது. ஆனால், இந்த மின்னல் வேகத் தொழில்நுட்ப மாற்றங்களுக்கு மத்தியிலும், ஆசிரியர்களின் பங்கு முன்னெப்போதையும் விட இப்போது இன்னும் மிக மிக முக்கியமானதாக மாறியுள்ளது.
எதிர்கால உலகத்தை எதிர்கொள்ள மாணவர்களுக்குப் பிரச்னை தீர்க்கும் திறன், திறனாய்வுச் சிந்தனை, சரியான பகுத்தறியும் திறன் மற்றும் மனித உறவுத் திறன்கள் அவசியம்; அதோடு தொழில்நுட்பத்தைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தும் கலையும் தேவை. ஆசிரியர்கள் கேட்கும் கூர்மையான கேள்விகள், வகுப்பறைப் பாடங்களை நிஜ வாழ்வியலோடு பிணைக்கும் விதம் ஆகியவற்றின் மூலமாகவே மாணவர்களிடம் இந்த உயரிய திறன்களைச் செதுக்கமுடியும்.
கற்பித்தலின் எதிர்காலம்
கல்வி என்பது வெறும் புத்தக அறிவாக இல்லாமல், நடைமுறை சார்ந்ததாகவும் நிஜ உலகச் சூழல்களோடு பிணைந்ததாகவும் மாறிவரும் இந்தச் சூழலில், 'செயல்திட்டம் சார்ந்த கற்றல்' மற்றும் 'வடிவமைப்புச் சிந்தனை' போன்ற நவீன கற்பித்தல் முறைகளுக்கு ஆசிரியர்கள் தங்களைச் சிறப்பாக ஆயத்தப்படுத்திக்கொள்வது அத்தியாவசியமாகிறது.
இரண்டாவதாக, ஆசிரியர்களின் சொந்தப் பணிப்பாதை மற்றும் அவர்களின் தொழில்முறை வளர்ச்சி ஆகியவற்றின் மீது மேலும் மேலும் அதிகக் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பதே எனது ஆவல்.
மூன்றாவதாக, தொழில்முறைத் திறன் மேம்பாடு என்பது முற்றிலும் தனிப்பட்ட தேவைகளுக்கேற்ப அமைந்திருக்க வேண்டும். அப்பொழுதுதான், ஆசிரியர்கள் தங்களுக்கும் தங்களது வகுப்பறைகளுக்கும் மிகவும் அவசியமான, பொருத்தமான திறன்களில் முழுமையாகக் கவனம் செலுத்தமுடியும்' என்கிறார் ரம்யா வெங்கடராமன்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



