
அமைதி... ஆராய்ச்சி... அண்டார்டிகா!
பெரும்பான்மைப் பரப்பு கடலாக உள்ள ஆர்க்டிக் பகுதியில் வடதுருவம் இருக்கிறது.
பெரும்பான்மைப் பரப்பு கடலாக உள்ள ஆர்க்டிக் பகுதியில் வடதுருவம் இருக்கிறது. அதன் எதிர்ப்புறம் (ஆண்டி - ஆர்க்டிக்) இருக்கும் தென் துருவம் 'அண்டார்டிகா' எனப் பெயர் பெற்றது.
அதிக நிலப்பகுதிகளைக் கொண்ட அண்டார்டிகாவில், சராசரியாக 5 ஆயிரம் அடிக்கும் மேற்பட்ட பனி அப்பகுதிகளை மூடியிருக்கிறது. பனிக் காற்றின் வேகம் அங்கு மணிக்கு 320 கி.மீ. அளவையும் தாண்டும். அண்டார்டிகாவின் சராசரி உயரம் சுமார் 2,200 மீட்டர். உலகின் மிகக் குறைந்த வெப்பநிலையான மைனஸ் 89.2 டிகிரி, அங்குதான் பதிவாகி உள்ளது. இதனால் அண்டார்டிகாவை 'வெள்ளை நிறப் பாலைவனம்' எனக் குறிப்பிடுவோரும் உண்டு.
உலகின் ஐந்தாவது பெரிய கண்டம் அண்டார்டிகா. இங்கு நவம்பர் முதல் பிப்ரவரி வரை உள்ள கோடையில்(?) சுமார் 14 மில்லியன் சதுர கி.மீ. பரப்பைக் கொண்ட அண்டார்டிகா, குளிர்காலத்தில் கண்டத்தைச் சுற்றி உள்ள பனி உறைவதால் இரு மடங்கு பரப்பு கொண்டதாகிறது.
பொதுவாக அண்டார்டிகாவின் கடல்வழிப் பயணங்கள் கோடைப் பருவத்தின்போதுதான் (டிசம்பர்- ஜனவரி) துவங்கப்படுகின்றன.
அண்டார்டிகா வட்டத்துக்குள் அடங்கியுள்ள இந்தக் கண்டத்தை தென்முனைப் பெருங்கடலானது அகழி போல் சூழ்ந்துள்ளது. அந்தக் கடலின் சீற்றம், கடும் காலநிலை அது அண்டார்டிகா கண்டத்தைத் தனிமைப்படுத்தி வந்தது.
அந்தப் பெருங்கடல் சுமார் 10 ஆயிரம் துருவப் பகுதி உயிரினங்களுக்கு அடைக்கலம் தருகிறது. சுமார் 250 மி.மீ. அளவுக்கும் குறைவான மழை பெறும் இடங்களே பாலைவனங்கள் ஆகும். அண்டார்டிகாவில் ஆண்டு மழையளவு 165 மி.மீ. அளவுக்கும் குறைவானது.
பனி வடிவத்தில் சுத்தநீர்
சுருக்கமாக அதிகக் குளிர், அதிக வேகக் காற்று, அதிக வறட்சி, அதிக உயரம் எனப் பூகோள ரீதியாக அனைத்தையும் அதிகமாகக் கொண்டது அண்டார்டிகா . 'உலகின் மிகப் பெரிய ஃபிரிட்ஜ்' எனப்படும் அளவுக்கு உலகுக்குத் தேவைப்படும் சுமார் 75 சதவீதம் சுத்த நீர் அங்கு பனி வடிவத்தில் உள்ளது.
அண்டார்டிகா அமைதிக்கான, ஆராய்ச்சிக்கான கண்டம். புவியின் கடல்கள், வானிலை ஆகியவற்றைச் சரிவர அறிய அண்டார்டிகா பெருமளவு உதவி செய்கிறது. மாசற்ற அந்தக் கண்டம் உலகின் ஒரு மிகப் பெரிய ஆராய்ச்சி நிலையம் என்றே சொல்லலாம்.
லட்சக்கணக்கான ஆண்டுகளாக ஏற்பட்ட வானிலை மாற்றங்களைப் புரிந்துகொள்ள அண்டார்டிகா கண்டம் ஒரு திறவுகோலாகும். இருபதாம் நூற்றாண்டின் மையப் பகுதியிலிருந்தே அண்டார்டிகா கண்டம் உலக நாடுகளின் புவிசார் அரசியலில் முக்கியப் பங்கு வகிக்கத் தொடங்கியது.
உலக அமைதிக்கான அண்டார்டிகா ஒப்பந்தம்
அண்டார்டிகா கண்டத்தை, அங்குள்ள கடல்சார் உயிரினங்களைப் பாதுகாக்க, அக்கண்டத்தை ராணுவம், அணு ஆயுதம் போன்றவற்றின் நிழல் கூடப்படாமல் உலக அமைதிக்காகவே மட்டுமே பயன்படுத்த சில முக்கிய அம்சங்களுடன் ஏற்படுத்தப்பட்டதுதான், 'அண்டார்டிகா ஒப்பந்தம்' .
1959-ஆம் ஆண்டு முடிவு செய்யப்பட்ட இந்த ஒப்பந்தம் 1961-ஆம் ஆண்டு அமலுக்கு வந்தது. முதலில் 12 நாடுகளிடையே கையெழுத்தானது. 2023-ஆம் ஆண்டு வரை 56 நாடுகள் ஒப்பந்தத்தை ஏற்றுள்ளன. அவற்றில் இதுவரை 29 நாடுகள், ஆராய்ச்சிகளுக்காக நிலையங்களை அங்கு அமைத்துள்ளன. அந்த நாடுகள் ஆண்டுதோறும் பயணங்களை மேற்கொண்டு வருகின்றன.
இந்தியா சார்பில் 42 பயணங்கள்
இந்தியாவில் கடல் அபிவிருத்தி, ஆராய்ச்சிக் கழகத்தின் கீழ் உள்ள கடல், துருவ ஆராய்ச்சி மையம் அண்டார்டிகா பயணங்களை நடத்தி வருகிறது. 1981-ஆம் ஆண்டில் தொடங்கி இதுவரை 42 பயணங்களைச் செயல்படுத்தி உள்ளது.
இந்தியாவின் தொடக்க முகாம் தக்ஷின் கங்கோத்திரி, 1983- 84-ஆம் ஆண்டில் இந்தியாவின் மூன்றாவது பயணத்தின்போது நிறுவப்பட்டது. முதன் முறையாக குளிர்காலத்திலும் அங்கு விஞ்ஞானிகள் தங்கி ஆராய்ச்சிகளை மேற்கொண்டனர். நாளடைவில் அறிவியல் ஆராய்ச்சிப் பிரிவுகள் அதிகரிக்க ஆராய்ச்சி நிலையத்தின் அளவு அதிகமாகத் தேவைப்பட்டது.
சற்றே கண்டத்தின் உள்புறமும் செல்ல உத்வேகம் அதிகரித்தது. பின்னர், கண்டத்தின் உள்பகுதிகளில் மைத்திரி என்ற ஆராய்ச்சி நிலையம் 1989-ஆம் ஆண்டும், பாரதி என்ற ஆராய்ச்சி நிலையம் 2012-ஆம் ஆண்டும் தொடங்கப்பட்டன. ஆனால், பாரதி ஆராய்ச்சி நிலையத்துக்கான முதற்படிகள் 2003, 2005-ஆம் ஆண்டுகளிலேயே முடுக்கி விடப்பட்டிருந்தன.
சிறிய அளவில் தொடங்கிய இந்திய அண்டார்டிக் பயணங்கள், இன்று கோடையில் 40 முதல் 60 பேர் வரை விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள், உதவிப் பணியாளர்களை அழைத்துச் செல்கிறது. குளிர்கால ஆராய்ச்சியில் மைத்திரி, பாரதி நிலையங்களில் 25 முதல் 40 ஆராய்ச்சியாளர்கள் தங்கி இருக்கின்றனர்.
ஆராய்ச்சிகளில் பங்கேற்கும் அனைத்து நாடுகளையும் சேர்த்து அண்டார்டிகாவில் கோடையில் 4,800 பேர், குளிர் பருவத்தில் சுமார் 1,200 பேர் என விஞ்ஞானிகள் ஓராண்டில் தங்கியிருக்கின்றனர்.
இந்தியாவின் அண்டார்டிக் அறிவியல் ஆராய்ச்சி செயல்திட்டங்கள் வளி மண்டலம், வானிலை மாற்றங்கள், காலநிலை மாறுதல்கள், உயிரியல், மருத்துவம், புவியியல், குளிர் அறிவியல், பனிப் பாறைகள் அறிவியல் போன்றவற்றை உள்ளடக்கியது. அண்மைக்காலமாக விமான சேவைகளும் தொடங்கப்பட்டுள்ளது. சிலி (தென் அமெரிக்கா), கேப் டவுன் (ஆப்பிரிக்கா), நியூசிலாந்து (கிரைஸ்ட்சர்ச்) ஆகிய இடங்களிலிருந்து ஆராய்ச்சிகள், சுற்றுலாக்களுக்காக விமானங்களும் செல்கின்றன.
உறுப்பினர், நான்காம் இந்திய அண்டார்டிக் குழு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




