
கேளீர் தமிழ் வரலாறு-6: உலகத் தமிழுக்கு ஒருவேலைக்காரன்!
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி; இருபதின் தொடக்கம்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி; இருபதின் தொடக்கம்.
பாரிசிலிருந்து தென்னிந்தியாவின் சின்னஞ்சிறு நகரமான கும்பகோணத்தில் இருந்த ஒருவருக்குக் கடிதங்கள் வந்துகொண்டிருந்தன!
பாரிசிலிருந்து எழுதியவர் பிரெஞ்சு அரசாங்கத்தின் கீழை மொழிகளுக்கான நிறுவனத்தின் தமிழ், இந்துஸ்தானி மொழிப்பேராசிரியர் ஜூலியன் வின்சோன். கடிதங்களைப் பெற்றவரோ கும்பகோணம் கல்லூரியின் தமிழ்ப்பண்டிதர் உ.வே.சாமிநாதய்யர்.
சிந்தாமணி, சிலப்பதிகாரம் என்னும் இரு தொன்மையான தமிழ்க் காப்பியங்களுக்கான பதிப்புகள் இருவரையும் நண்பர்களாக்கிவிட்டன.
தன்னைவிடப் பதின்மூன்று வயது சிறியவரான தமிழ்ப்பண்டிதர் சாமிநாதய்யருக்கு, தான் அவருக்குத் தோழனும் ஊழியனுமாக ஆகியிருக்கிறேன்' (கலீக் அண்ட் சர்வெண்ட்) என எழுதிய முதல் கடிதத்திலேயே அறிவித்துக்கொண்டார் பிரெஞ்சுக்காரரான ஜூலியன் வின்சோன்!
பணிவில் உயரும் பெருமை'க்கு நடமாடும் உதாரணமாக விளங்கியவர்தான் ஜூலியன் வின்சோன்!
எப்படி இது சாத்தியம்?
தமிழால் எல்லாம் சாத்தியம்! இது சத்தியம்!
ஜூலியன் வின்சோன் (1843-1926) நம்மைப் பொறுத்தவரை முதன்மையாகப் பிரெஞ்சுத் தமிழறிஞர். அதேவேளையில் பிரான்சு நாட்டின் தென்மேற்குப் பகுதி மக்களின் மொழியாகிய பாஸ்கி' மொழிக்குக் கணிசமான பங்களிப்புகளைச் செய்த அறிஞரும்கூட. இந்துஸ்தானி மொழிக்கும் பாடநூல் எழுதியவர். திராவிட மொழிகளின் வினைச்சொற்கள் குறித்த நூலொன்றை 1878-ஆம் ஆண்டிலேயே படைத்தவர். 1915-இல் ஏசியாட்டிக்' இதழில் தமிழ் யாப்பிலக்கணம் பற்றிய குறிப்புகள்' எனும் பொருளில் பிரெஞ்சு மொழியில் கட்டுரை வரைந்தவர்.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி ஆண்டில்,1900- இல் ஜூலியன் வின்சோன் சிந்தாமணியையும் சிலப்பதிகாரத்தையும் மணிமேகலையையும் குறித்துப் பிரெஞ்சு மொழியில் பௌத்த, ஜைனப் புராணங்கள் தமிழிலிருந்து மொழி பெயர்த்தவை' என்னும் பொருள்படும் தலைப்பில் நூலினைப் (இரு தொகுதிகள்) படைத்தார். உலகின் முக்கியமானமொழிகளில் ஒன்றான பிரெஞ்சு மொழியில் வெளிவந்த இந்நூல் உலகத்தின் கவனத்தைத் தமிழின்பால் ஈர்த்தது.
தமிழ்நாட்டிலிருந்து அந்தக் காலத்தில் தமிழுக்கான உலக இதழாக ஆங்கிலத்தில் வெளிவந்துகொண்டிருந்த சித்தாந்த தீபிகா' 1901- சூன் - சூலை இதழ், பேராசிரியர் வின்சோன் இந்த மூன்று இலக்கியக் கருவூலங்களையும் ஐரோப்பிய அறிஞர்களின் கவனத்திற்குக் கொண்டு சென்று தமிழ்மொழிக்குப் பெருந்தொண்டினை ஆற்றியிருக்கின்றார்' எனப் பாராட்டியிருந்தது.
தமிழ் மானுவல்' (மானுவல் டி லா லாங்க் டமுல்) என்னும் தமிழ்மொழியைக் கற்பதற்கான பாடநூல் ஒன்றை 1903 -ஆம் ஆண்டு பிரெஞ்சு மொழியில் வின்சோன் வெளியிட்டிருந்தார். இதன்வாயிலாகப் பிரெஞ்சு மண்ணில் தமிழ்க் கல்விக்கு நல்ல அடித்தளத்தையும் அமைத்திருந்தார்.
உலகளாவிய தமிழின் சரித்திரத்தில் ஓர்அத்தியாயம் ஜூலியன் வின்சோனின் தொண்டு! தமிழ்சார்ந்த அவரது வாழ்க்கைப் பக்கங்கள் பலவற்றை இன்று நாம் அறிய உ.வே.சா.வின் எழுத்துகளும் அவருக்கு வந்த கடிதங்களும் சிறந்த துணையாக அமைகின்றன.
உ.வே.சா.வின் எழுத்துகளைப் பற்றிக்கொண்டு நாம் வின்சோனின் தமிழுலகத்தை வலம் வரத்தொடங்குவோம். அப்படி வலம்வருகையில் உ.வே.சா.வும் வின்சோனும் இரட்டையர்களாகப் பல இடங்களில் நம்மெதிரில் காட்சிதருவார்கள். அந்தக் காட்சிகளெல்லாம் கண்கொள்ளாக்காட்சிகள்தான்!
வெண்பா எழுதும் என்கை, வண்ணம்பாடும் என்வாய்! எனக் கவிதை பாடியிருக்கிறார் பாரதிதாசன். வெண்பா எழுதும் வின்சோன் கை, ஆசிரியப்பா பாடும் வின்சோன் அதரம் என நாமும் கவிதைபாடலாம்! ஆம், உ.வே.சா.வின் சிந்தாமணிப் பதிப்பைப் பாராட்டி 1891-இல் வெண்பா ஒன்றையும், சிலப்பதிகாரப் பதிப்பைப் பாராட்டி 1893-இல் ஆசிரியப்பா ஒன்றையும் வின்சோன் எழுதி அனுப்பியிருந்தார்.
ஜூலியன் வின்சோன் ஒரு பிரெஞ்சுக்காரர்தான். ஆனால், அவர் சிறுவயதில் வளர்ந்ததும் கல்வி கற்றதும் தமிழ்மண்ணில்தான்; காரைக்காலில்! அதை அவரே உ.வே.சா. விற்கு எழுதிய கடிதத்தில்,
நாமிங்குத் தமிழைப்படித்தோமல்ல. நாம் பிள்ளையாயிருக்கும்போது எங்கடகப்பனார் காரைக்காலிலே பிரெஞ்சு ஜட்ஜ் ஆயிருந்தாரப்போதே தமிழைப் பேசவுமெழுதவும் படித்தோம் எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
ஜூலியன் வின்சோன், நாம் பாரிசு நகரத் தமிழாசிரியர் எனத் தன்னைக் கடித வழி உ.வே.சாமிநாதய்யருக்கு அறிமுகப்படுத்திக்கொண்டவர்.
அந்தத் தமிழாசிரியரும் உ.வே.சா.வும் நேரில் சந்தித்துக்கொண்டதில்லை. ஆனால், அவருடைய மாணவர்களும் உ.வே.சா.வும் நேரில் சந்தித்துக்கொண்டிருக்கின்றனர்.
வின்சோனின் மாணவரான பிரெஞ்சுக்காரர் பொண்டெனூ' என்பவர் கும்பகோணம் வந்து உ.வே.சா.வைச் சந்தித்திருக்கிறார். கட்டுரையொன்றை எழுதுவதற்காகக் காஞ்சிப்புராணத்தின் காகிதச் சுவடியை உ.வே.சா.விடம் பெற்றுச்சென்று பணிமுடிந்ததும் திருப்பியனுப்பியிருக்கிறார். அதன்பொருட்டுக் கடிதமொன்றை எழுதியஅவர், அழகிய தமிழ்ப்பாஷையின் பெருமையை வெளிப்படுத்தவுமே இந்த உபகாரத்தைத் தங்களிடம் கேட்கிறேன் என எழுதியிருந்தார். இவ்வாறு எழுதுமளவிற்குத் தமிழின்மீது அன்புகொண்டவர்களாய் மாணவர்களை உருவாக்கியிருக்கிறார் ஜூலியன் வின்சோன். திருக்குறள் காமத்துப்பாலை வின்சோனின் மாணவர் பிரெஞ்சுமொழியில் பெயர்த்திருக்கிறார்; அதற்கு வின்சோன் முகவுரை எழுதியுள்ளார்.

சி.வை.தா., உ.வே.சா. உள்ளிட்டவர்கள் ஓலைச்சுவடிகளைப் பதிப்பிக்கப் போராடிக்கொண்டிருந்த காலம் அது. அந்தக் காலத்தில் சுவடிகளைப் படிப்பவர்களும், அவற்றிலிருந்து பிரதிசெய்பவர்களும் மிகச்சிலர்தான் இருந்தனராம்.
1891 மே 7-ஆம் தேதி உ.வே.சா. விற்கு எழுதிய கடிதத்தில் பாரிஸ் நகரில் உள்ள பிபிலேதேகு நேஷனல்' என்னும் பெரிய நூலகத்தில் ஓராயிரம் தமிழ்க் கையெழுத்துப் புத்தகங்கள் உள்ளன என ஜூலியன் வின்சோன் குறிப்பிட்டிருந்தார்.
அதனைக் கண்ட உ.வே.சா. அங்குள்ள சுவடிநூல்களின் பெயர்களைக் கேட்டறிந்தார். வில்லைப்புராணம் எனும் நூற்பெயர் அவரை ஈர்க்க அதுபற்றி விசாரித்தார். உ.வே.சா.வின் ஆர்வத்தைக் கண்ட ஜூலியன் வின்சோன் 494 செய்யுட்களைக் கொண்ட அந்நூலைச்
சுவடியிலிருந்து தன் கையாலேயே எழுதிஅனுப்பிவிட்டார். அதன் தலைப்பில் சிவலிங்கத்தின் உருவத்தையும் நந்தியின் உருவத்தையும் தன் கையாலேயே வரைந்தும் அனுப்பியிருந்தார். முதன்முதலில் ஒரு பிரெஞ்சுக்காரர் கையால் வரையப்பட்டசிவலிங்கமும் நந்திஉருவமும் இவையாகத்தான் இருக்கவேண்டும். சைவ உலகம் மனங்கொள்க!
உ.வே.சா. எழுதுகிறார் இப்படி!
ஏட்டுச்சுவடியைப் பார்த்து எழுதுவது எவ்வளவு சிரமமென்பது எனக்கு நன்றாகத் தெரியும்.
தமிழ்நாட்டில் அங்ஙனம் எழுதக்கூடியவர்கள் மிகச் சிலரே. தமிழ்நூல்களைச் சிரத்தையோடு படிப்பவர்களேஅதிகமாக இல்லாதபோது ஏட்டுச்சுவடியைப் படிப்பதாவது! பார்த்து எழுதுவதாவது!... என் நண்பர் அதை எத்தனை சிரத்தையோடு எழுதியிருந்தார்!
சுவடிகளைப் படிப்பதிலும் பிரதி செய்வதிலும் தேர்ந்த அறிஞர் ஜூலியன் வின்சோன்!
உ.வே.சா. கடவுள் நம்பிக்கையாளர்! சமயப்பற்றாளர்! அவரா இப்படி எழுதியிருக்கின்றார்? என எண்ண வைக்கிறார் ஓர் இடத்தில்.
தமிழ்நாட்டில் உள்ள திருத்தலங்களின் பெருமை போற்றிக் கொண்டாடியவர் உ.வே.சாமிநாதய்யர்.
ஆனால், வில்லைப்புராணம் நூலானது, அது எழுந்த தலமாகிய புதுச்சேரிக்கு அருகிலுள்ள வில்வநல்லூர் என்னும் வில்வவனப்பெருமையைவிட வேறொன்றைத்தான் அவருக்கு அறிவுறுத்தியதாம்!
வில்லைப்புராணம் வில்வவனப் பெருமையைக் காட்டிலும் அதிகமாக வின்சோன் துரையின் தமிழன்பை அறிவுறுத்திக்கொண்டிருக்கிறது! என்றெழுதியுள்ளார் உ.வே.சா.
சி.வை. தாமோதரம் பிள்ளை கலித்தொகையினைப் பதிப்பித்து வருகையிலே, இந்து' நாளிதழினை நடத்திய ஜி. சுப்பிரமணிய அய்யர், மு. வீரராகவாசாரியர்ஆகிய இருவரும் பழந்தமிழ் நூலொன்றைத் தமது செலவில், தமது அச்சுக்கூடத்தில் பதித்துத் தருவதாகச் சி.வை.தா.விடம் தெரிவித்தனராம். அவரும் அந்த உதவிகொண்டு தொல்காப்பியத்தைப் பதிப்பிக்கக் கருதியிருந்தாராம்.
அந்த உதவி கைகூடியதாகத் தெரியவில்லை.
இதைப்போலவே ஒருசூழல் உ.வே.சா.விற்கும் ஏற்பட்டிருக்கிறது. எட்டுத்தொகையின் பரிபாடலைப் பதிப்பிக்க ஆகும் செலவு முழுவதையும் தாம் ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்திருக்கிறார் வின்சோன்.
உ.வே.சா. பரிபாடலைப் பதிப்பிக்கும்போது அந்த உதவியைப்பெற வாய்க்கவில்லை.
அதனால் என்ன? சங்க இலக்கியத்துள் ஒன்று அச்சாகி வெளிப்படக் கொடையாளியாய் ஆக முன்வந்தவர் ஜூலியன் வின்சோன் என்பது வரலாறாகும்.
போப், வின்சோன் இருவரும் ஒருவரையொருவர் மேற்கோள்காட்டித் தமிழ் குறித்த முக்கியமான கருத்துகளை மொழிந்துள்ளனர். இந்த இருபெரும் உலகத் தமிழ் அறிஞர்களையும் இணைத்து எண்ணிப் பார்த்தார் உ.வே.சாமிநாதய்யர்.
பாரிஸ் நகரத்தில் இருந்த ஜூலியன் வின்úஸôனது அன்பையும் ஆக்ஸ்போர்டிலிருந்த போப்பினுடைய தமிழன்பையும் ஒப்பிட்டுப் பார்ப்பேன். ஒவ்வொன்றும் ஒவ்வொரு முறையில் சிறப்புடையதாக இருந்தது. இருவரிடத்தும் விடாமுயற்சியும் மேற்கொண்ட காரியத்தில் ஆழ்ந்த அன்பும் இருந்தன என்னும் உ.வே.சா.வின் கூற்று நமக்கும் தமிழன்பு, விடாமுயற்சி வேண்டுமென்பதை உணர்த்துகின்றது.

1891 ஏப்ரல் 3-ஆம் நாள் தன்னை உ.வே.சா.வின் தோழனும் ஊழியனும்' எனப் பொருள்பட ஆங்கிலத்தில் (கலீக் அண்ட் சர்வெண்ட்) எழுதியவர், 1895 ஏப்ரல் 17 -ஆம் நாள் உ.வே.சாமிநாதய்யருக்கு எழுதிய கடிதத்தில் அவரை வேலைக்காரன் எனக் குறிப்பிட்டார். அதுவும் நீர் பெரியவேலைக்காரன் எனத் தமிழில் எழுதியிருந்தார்.
உ.வே.சா.வைப் பெரியவேலைக்காரன்' என்று எப்படிச் சொல்லலாம் ஜூலியன் வின்சோன்?
நமக்கு எழும் சினத்தை, அதையடுத்து அவர் எழுதிய தொடர் மாற்றிவிடுகிறது. நீர் பெரியவேலைக்காரன் என்றும் மகாகனம் பொருந்திய வித்துவானாயிருக்கவேணும் என்றும் நினைத்து வருகிறேன்... எனத் தொடர் அமைந்திருந்தது.
இதைப்பற்றி உ.வே.சா.வே எது தமிழ்? என்னும் கட்டுரையில் சுவையாக எழுதியிருக்கிறார்.
வேலைக்காரன் என்னும் சொல்லுக்கான பணியாள் என்னும் நடைமுறைப் பொருளிலோ, பெரிய வேலைக்காரன் என்பதற்கான தந்திரமாகக் காரியங்களைச் செய்பவன்' என்னும் பொருளிலோ ஜூலியன் வின்சோன் இதை எழுதவில்லை.
பேச்சு மரபின் நுட்பங்களைஅறியாத வின்சோன், பெரிய காரியங்களைச்சாதிக்கிறவன்' என்னும் பொருளில் வேலைக்காரன் என்னும் சொல்லைப் பயன்படுத்தியுள்ளார். திருக்குறள்படி சொன்னால் செயற்கரிய செய்யும் பெரியோன்!
உ.வே.சா.விற்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்தத் தமிழுக்கும் தன்னை நண்பனாகவும் வேலைக்காரனாகவும்' (சர்வெண்ட்) ஆக்கிக்கொண்டார் ஜூலியன் வின்சோன். பிரான்சு நாட்டிலிருந்து தமிழுக்குப் பெருந்தொண்டைப் புரிந்த ஜூலியன் வின்சோனை, உ.வே.சா.வைப் பாராட்ட அவர் பயன்படுத்திய தமிழ் வார்த்தையிலேயே சொன்னால், அவர் உலகத் தமிழுக்கு வாய்த்த ஒரு பெரியவேலைக்காரன்!
வள்ளுவத்தமிழில் - செயற்கரியசெய்த பெரியோன்!.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





