ஒரே இடத்தில் 5 ஆண்டுகள் பணியாற்றினால் இடமாற்றம்: தமிழக அரசு நடவடிக்கை இன்று விநாயகா் சிலை ஊா்வலம்: சென்னையில் 23,000 போலீஸாா் பாதுகாப்புகூடலூா் அருகே பிடிபட்ட ஆட்கொல்லி புலி வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு மாற்றம்! தவெக ஆட்சியில் விண்ணை முட்டும் அளவுக்கு விலைவாசி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு மிசாவில் கைதானதை எவனுக்கும் நிரூபிக்கத் தேவையில்லை: மு.க. ஸ்டாலின் பேச்சு! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசார தேதி அறிவிப்பு திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆண்டு பிரம்மோற்சவம் கருட வாகன சேவை! திருச்சியில் விவசாயிகள் போராட்டம் 20 நாள் ஒத்திவைப்பு! இடைத்தேர்தல்: முதல்வர் விஜய், திருமா, வைகோ உள்ளிட்ட 40 நட்சத்திரப் பேச்சாளர்கள்!

சொல்வதற்கு வார்த்தையில்லை

பெங்களூரின் டிராஃபிக் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. ராஜாஜி நகர் 4-ஆவது அவென்யூவின் அந்தச் சாலையில் ஹேமாவின் கார் மெதுவாக நகர்ந்துகொண்டிருந்தது.

Published On :

பெங்களூரின் டிராஃபிக் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. ராஜாஜி நகர் 4-ஆவது அவென்யூவின் அந்தச் சாலையில் ஹேமாவின் கார் மெதுவாக நகர்ந்துகொண்டிருந்தது.

ஏனோ ஏ.சி.யின் குளிரையும் தாண்டி, அவளுக்குக் கழுத்துப் பகுதியில் வியர்த்தது. காரின் டேஷ்போர்டில் கிடந்த அந்த ராஜிநாமா கடிதம் அவளைப் பார்த்துப் பல்லிளிப்பது போலிருந்தது. இன்னும் ஏன் கொடுக்காமல் இருக்கிறாய்?' என்று கேள்வி கேட்பது போல் இருந்தது.

முப்பத்திரண்டு வயதில், ஒரு முன்னணி ஐ.டி. நிறுவனத்தில் பிராஜெக்ட் டெலிவரி மேனேஜர்' அந்தஸ்து, மாதம் இரண்டரை லட்சம் ரூபாய் சம்பளம். வெளியில் பார்ப்பவர்களுக்கு ஹேமா ஒரு சாதனைப் பெண். ஆனால், உள்ளே அவள் ஒரு தீர்ந்துபோன மெழுகுவர்த்தி.

கடந்த மூன்று மாதங்களாக அவளது ஆபீஸில் நடந்த உள்விவகாரங்கள் அவளை தற்கொலையின் விளிம்பு வரை கொண்டுசென்றிருந்தன. அவளது டீமில் இருந்த திறமையான, அவளுக்கு விசுவாசமான இன்ஜினீயர்கள் எல்லாம் மேலிடத்தில் இருந்த காட்பாதர்' அரசியல் மூலம் வேறு பிராஜெக்டுகளுக்கு மாற்றியிருந்தார்கள். அதற்குப் பதிலாக, வேலை தெரியாத, ஆனால் மேனேஜருக்குக் காக்கா பிடிப்பதில் பி.எச்டி. முடித்த சிலரை அவளது டீமில் திணித்திருந்தது நிர்வாகம். அவர்களிடம் வேலை வாங்குவதற்கு மிகவும் சிரமமாக இருந்தது ஹேமாவுக்கு.

தன் மேல் இருந்த தனிப்பட்ட காழ்ப்புணர்வால் சீனியர் மேனேஜர் திட்டமிட்டு இப்படிச் செய்கிறார் என்பது ஹேமாவுக்குத் தெளிவாகத் தெரிந்தது. இதைப்பற்றி அவள் தன் நிறுவனத்தின் உயர் அதிகாரியிடம் பலமுறை முறையிட்டும், அவர் காது கொடுத்துக் கேட்கவில்லை. யாரிடமும் நியாயம் கிடைக்காத அந்த ஏமாற்றமும், மேலிடத்தின் பாராமுகமும், அவளுக்குள் இருந்த பிரஷரை நாளுக்கு நாள் எகிறச் செய்து, அவளது நிம்மதியையே மொத்தமாகப் பறித்துவிட்டது.

ஹேமா ... இந்தக் குவாட்டருக்கு அமெரிக்கா க்ளையண்ட்கிட்ட இருந்து 100 % அப்ரூவல் வரணும். இல்லைனா உங்க அப்ரைசல்'காலி. அப்புறம் கம்பெனியோட காஸ்ட் கட்டிங்ல உங்க பெஞ்ச் பீரியட்' பத்தி நாங்க யோசிக்க வேண்டியிருக்கும் - கடந்த வாரம் நடந்த மீட்டிங்கில் அவளது சீனியர் மேனேஜர் கொடுத்த மறைமுக மிரட்டல் இது.

விடிய விடிய வேலை, நள்ளிரவில் அமெரிக்கா க்ளையண்ட் உடன் வாக்குவாதம், லேப்டாப்பில் அவளது ஒவ்வொரு நிமிட லாகினையும் டிராக் செய்யும் மைக்ரோ-மேனேஜ்மென்ட்' சிஸ்டம் என மூச்சுவிடக் கூட நேரமில்லாமல் திணறினாள். இந்த நரகத்திலிருந்து தப்பிக்கத்தான் அவள் ஒரு துணையைத் தேடினாள்.

மேட்ரிமோனி மூலம் வந்த வரன் கார்த்திக், பெரிய பதவியில் இருந்தான். பெற்றோர் இல்லாத தனக்கு இவனாவது ஒரு வடிகாலாக இருப்பான். இவன் மூலம் மனதுக்கு நிம்மதி கிடைக்கும்' என்று அனிதா நம்பினாள். தான் வேலைக்குப் போகாமல் வீட்டில் இருக்க வேண்டும்; மிகச் சிறப்பாகக் குடும்பம் நடத்தி ஓரிரு குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைத்திருந்தாள். மேற்கொண்டு கல்யாண விஷயமாகப் பேச, கடந்த வாரம் அவர்கள் அந்தப் பிரபலமான ஹோட்டலில் தனியாகச் சந்தித்தபோது கார்த்திக் பேசிய வார்த்தைகள் அவளது நெஞ்சில் ஈட்டியாய்ப் பாய்ந்தன.

ஹேமா, கல்யாணத்துக்கு அப்புறம் நீ வேலையை விடக் கூடாது. உன்னோட இந்த ரெண்டரை லட்சம் சம்பளத்தை வச்சு மடிவாலாவில் ஒரு த்ரீ-பிஹெச்கே ஃபிளாட் வாங்கிடலாம். லோன் இ.எம்.ஐ.க்கு உன் சம்பளம் சரியா இருக்கும். என் சம்பளத்தை அப்படியே இன்வெஸ்ட் பண்ணலாம் என்றான்.

நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை' என்று சும்மாவா சொன்னார் கவிஞர் கண்ணதாசன். தன் எண்ணங்கள் ஆரம்பப் பேச்சிலேயே நிராகரிக்கப்படும்; தன் ஆசைகள் சுக்கு நூறாக உடையும் என்று அவள் எதிர்பார்க்கவில்லை.

அதுமட்டுமன்றி, அவளது சோர்வான முகத்தைப் பார்த்தவன், ஐ.டி. பொண்ணுங்க நைல் பாலிஷ் போடலைனா நல்லாவே இருக்காது. மாடர்ன் டிரஸ் போடு... என்று அவளது உடம்பையும் அழகையும் மட்டுமே மதிப்பிட்டான்.

அவளது மன உளைச்சலை அவன் காது கொடுத்துக் கூடக் கேட்கவில்லை. ஹேமாவுக்குப் புரிந்தது. கார்த்திக்குத் தேவை ஒரு மனைவி அல்ல; அவளது காசும் உடம்பும் மட்டும்தான். அன்றே அந்தத் திருமணத்தை நிறுத்த முடிவு செய்து, அவனுக்கு வாட்ஸப்பில் தகவல் சொல்லிவிட்டாள்.

ஆபீஸில் அரசியல், சொந்த வாழ்க்கையில் ஏமாற்றம், உறவினர்களின் தூற்றல்... தாங்க முடியாமல் அன்று மாலை ராஜிநாமா கடிதத்தைக் கொடுத்தபோது, அவளது கம்பெனி ஹெச்.ஆர். அதை ஏற்கவில்லை.

ஹேமா நீங்க ரொம்ப ஸ்ட்ரெஸ்ஸா இருக்கீங்க. பொதுவா இது மாதிரி யாருக்கும் செய்வதில்லை. ஆனா, எம். டி.யோட பிரத்யேக உத்தரவுப்படி உங்களுக்கு ஒரு மாசம் சபாட்டிகல் லீவ்' தர்றோம். ஆனா, இந்த லீவ் நாட்களுக்குச் சம்பளம் கிடையாது. ரிலாக்ஸ் பண்ணிட்டு ஜாயின் பண்ணிய பிறகு வந்து பேசுங்க என்றார் ஹெச்.ஆர்.

லீவு கிடைத்துவிட்டது. ஆனால், சம்பளம் இல்லாத இந்த ஒரு மாதத்தை வைத்துக் கொண்டு, அடுத்த மாத வீட்டு வாடகை, கார் இஎம்ஐ போன்ற பொருளாதார நெருக்கடிகளை எப்படிச் சமாளிப்பது என்ற பயமும், அவளது மன அழுத்தத்தை இன்னும் பல மடங்கு கூட்டியது. எங்குப் போவாள்? யாரிடம் பேசுவாள்?

அந்தச் சிந்தனையில் ராஜாஜி நகர் நாலாவது அவென்யூ அருகே காரைத் திருப்பியபோது, சாலையோரம் இருந்த ஒரு கட்டடத்தின் வாசலில் இருந்த போர்டு கண்ணில் பட்டது: ஆரோக்கியமான அழுகை மன்றம்'.

திகைப்புடன் உள்ளே நுழைந்த ஹேமாவை, நரைத்த முடியும் அமைதியான கண்களும் கொண்டவாசுதேவன் வரவேற்றார். அவர்தான் அந்தக் கிளப்பின் ஓனர்.

ஹேமாவின் முகத்தில் இருந்த குழப்பத்தைப் பார்த்தவர் மென்மையாகப் புன்னகைத்தார்.

வாங்க மேடம்.

தயக்கத்துடன் சென்றாள்.

பிளீஸ் உக்காருங்க!

சார்! இதென்ன புதுசா இருக்கு... அழுவதற்கு ஒரு கிளப்பா?

புதுசா வர்றவங்க எல்லாருமே இப்படித்தான் யோசிப்பாங்க. அழுகையை ஒரு கிளப் வச்சுப் பழகணுமானு தோணும். ஆனா, அறிவியல் பூர்வமா எமோஷனல் டியர்ஸ்' எனப்படும் உணர்வுப்பூர்வமான கண்ணீருக்கு மிகப் பெரிய மருத்துவப் பலன்கள் இருக்கு மேடம். நாம் கோபத்திலேயோ, வலியிலேயோ அழும்போது வர்ற கண்ணீர்ல அட்ரினோகார்டிகோட்ரோபிக்' போன்ற ஸ்ட்ரெஸ் ஹார்மோன் கலந்து உடம்பை விட்டு வெளியேறுது. அழுது முடிச்சதும் மூளையில எண்டோர்பின்', ஆக்ஸிடாசின்' சுரந்து மனசை லேசாக்கும். கண்ணீர்ங்கிறது மனதின் சுத்திகரிப்பு திரவம்மா என்றார் வாசுதேவன்.

ஒரு தந்தையின் வாஞ்சையுடன் அவர் வழிகாட்ட, ஹேமா அந்த அறையின் ஒரு மூலையில் அமர்ந்துகொண்டாள். மெல்லிய நீல நிற வெளிச்சம், பின்னணியில் சோகமான புல்லாங்குழல் இசை, சூடான தேநீர். அங்கு அவளைப் போலப் பலதரப்பட்ட ஆண்கள், பெண்கள் அமர்ந்திருந்தார்கள். ஒவ்வொருவருக்கும் வித்தியாசமான பிரச்னைகள்.

ஹேமாவுக்கு அருகில் ஓர் இளம்பெண் வந்து, தன்னை கவிதா என்றும், தன்னை யாரும் மணந்து கொள்ள விருப்பப்படவில்லை என்றும் கூறினாள்.

ஹேமா அப்போது தான் அந்த கவிதாவைப் பார்த்தாள். அவளது முகத்திலும் கைகளிலும் கடுமையான சருமப் பிரச்னை' இருந்தது. அவளது தோல் ஆங்காங்கே வெளுத்து, தழும்புகளுடன் காணப்பட்டது.

இந்த ஸ்கின் பிராப்ளம் வந்ததில இருந்து எனக்கு லோ கான்ஃபிடன்ஸ்' ஆகிடுச்சு. என்னைப் பார்க்கிறவங்க எல்லாரும் ஏதோ தீண்டத்தகாதவளைப் போலப் பார்த்தாங்க. கண்ணாடியைப் பார்க்கவே பயமா இருந்தது. என்னைக் கல்யாணம் பண்ணிக்க யாருமே வரல. நான் எதுக்கு உயிரோட இருக்கணும்னு நினைச்சேன்... என்று கவிதா கதறி அழுதாள்.

அவளது அழுகை அந்த அறையை உலுக்கியது. அப்போது, அவளுக்கு அருகில் இருந்த ஒரு நடுத்தர வயதுப் பெண், எந்தப் பதிலும் சொல்லாமல் கவிதாவை அப்படியே நெஞ்சோடு அணைத்துக் கொண்டார். அந்த அணைப்பு, கவிதாவின் அழுகையை இன்னும் அதிகமாக்கியது. ஆனால், அதே சமயம் அவளுக்குள் இருந்த அத்தனை வலியையும் அது கரைத்தது.

ஹேமா ஆச்சரியத்தோடு பார்த்தாள்.

ஒருவாரம் கழித்து கவிதா இந்தக் கிளப்புக்கு வருவது இது நான்காவது செஷன் என்றும், இங்குக் கிடைத்த ஆறுதலால் அவளுக்குள் புதிய தன்னம்பிக்கை பிறந்து, இப்போது அவளது குணத்தைப் புரிந்து கொண்ட ஒரு நல்ல மனிதருடன் அவளுக்குத் திருமணம் நிச்சயமாகியிருக்கிறது என்றும் மற்றவர்கள் பேசிக் கொண்டனர்.

அங்குக் கூடியிருந்தவர்கள் அழுது முடித்து, ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து ஆறுதல் கூறிக் கொண்ட பின், ஹேமா மெதுவாக வாசுதேவனிடம் சென்றாள்.

இங்க இருக்கிற மத்தவங்களுக்கு எப்படி சார் இந்த இடம் தெரிஞ்சது? நீங்க டி.வி.யிலயோ இல்ல சோஷியல் மீடியாலயோ பெருசா எந்த விளம்பரமும் பண்ணலையே? என்று கேட்டாள்.

வாசுதேவன் தன் நரைத்த தாடியை வருடிக் கொண்டே மெலிதாகப் புன்னகைத்தார். நீங்க கேக்குறது நியாயம்தான்மா. இப்போ இருக்குற அவசர உலகத்துல, நாலு பேருக்கு நல்லது பண்ண நினைச்சாகூட அதை மக்களுக்குக் கொண்டு போய்ச் சேர்க்கிறது பெரிய கஷ்டம். ஆரம்பத்துல நான் இந்தச் செய்தித்தாள் இடையே ஒரு சின்னத் துண்டுப் பிரசுரத்தை வச்சு விநியோகம் பண்ணேன்மா. அதுல, மனபாரம் தாங்க முடியவில்லையா? தனிமையில் தவிக்கிறீர்களா? யாரிடமும் சொல்ல முடியாத சோகங்கள் இருக்கிறதா? ஞாயிறு மாலை ராஜாஜி நகர் நாலாவது அவென்யூ வாருங்கள்... அழுது தீர்ப்போம். கட்டணம் எதுவும் இல்லை!' அப்படின்னு ரொம்ப எளிய தமிழ்ல, கன்னடத்தில், ஹிந்தியில் அச்சிட்டுப் போட்டேன். முதல் வாரம் அந்த நோட்டீஸைப் பார்த்துட்டு வெறும் ரெண்டு பேர்தான் வந்தாங்க. ஆனா, இங்க வந்து அழுதுட்டு, சக மனிதர்களோட அணைப்புல ஆறுதல் கிடைச்சு மனசு லேசானவங்க, ராஜாஜி நகர்ல இப்படி ஒரு இடம் இருக்குப்பா... அங்க போனா நிம்மதி கிடைக்குது'னு மத்தவங்களுக்குச் சொல்ல இந்த விஷயம் முழுக்கப் பரவி, இன்னைக்கு வாரம் 50 பேராவது வந்துடுறாங்கம்மா... என்றார்.

இப்படியொரு விசித்திரமான கிளப்பை ஆரம்பிச்ச காரணமே எனக்கு நடந்த சோகம்தான். 2021-ல வந்த அந்தக் கொடூரமான கரோனா அலை... ஒரே வாரத்துல என் வயசான அம்மா, அப்பா, என் மனைவி, என் ஒரே மகன்... நாலு பேரையும் பலி வாங்கிடுச்சுமா. எல்லாரையும் என் கையால கூட அடக்கம் பண்ண முடியல. நாலு சுவத்துக்குள்ள நான் தனியா நின்னப்போ, எனக்கு அழுகையே வரல. துக்கம் நெஞ்ச அடைச்சு, பைத்தியம் பிடிக்கிற மாதிரி இருந்தது. அப்போதான் உணர்ந்தேன். துக்கத்தைவிட அதை வெளிப்படுத்த முடியாம உள்ளுக்குள்ளேயே பூட்டி வைக்கிறது எவ்வளவு பெரிய நரகம்னு. அந்தத் தாக்கத்துல தான் இந்தக் கிளப்பை ஆரம்பிச்சேன். இப்ப எல்லாப் பெரிய நகரங்களில் இது மாதிரி க்ளப் உருவாயிடுச்சு. ஆரம்பத்துல நானும் எல்லாரையும் சிரிக்க வைக்கணும்னு சிரிப்பு யோகா தான் வச்சிருந்தேன்.

கவிஞர் கண்ணதாசன் ஒரு கவிதையில் சொல்வார்: சொல்லி அழுதுவிட்டால் துயரமெல்லாம் தீர்ந்துவிடும். சொல்லியழ வார்த்தையில்லை சொல்வதற்கு நண்பர் இல்லை.' மனிதர்களுக்குச் சிரிப்பைவிட, தங்களோட சோகங்களைக் கொட்டி அழத்தான் ஒரு பாதுகாப்பான இடம் தேவைப்படுதுன்னு புரிஞ்சுகிட்டேன். இங்க வர்றவங்க ஒவ்வொருத்தரும் தங்களோட கதையைச் சொல்லி அழும்போது, பக்கத்துல இருக்கிறவங்க அவங்களை தோளில் சாய்த்து ஆறுதல் சொல்றாங்க. அந்தத் தொடுதல், அந்த அணைப்பு... மனிதனோட மன பாரத்தை அஞ்சே நிமிஷத்துல இறக்கி வச்சிடுதுமா என்று அவர் கண்கள் பனிக்க மேலும் கூறினார்.

தொடர்ந்து, இதிலே மனோதத்துவம் அடங்கியிருக்கு. மனதின் மென்மையான உணர்வுகளை வெளிப்படுத்துவதும், அழுவதும் பலவீனமல்ல; அது இயல்பானதுதான் என்பதைச் சமுதாயத்துக்குப் புரிய வைப்பதே இந்த மன்றத்தின் நோக்கம்மா. தொழில்நுட்பம் நம்மை வசதியாக்கி இருக்கலாம். ஆனா, அது மனிதர்களைத் தனிமையில்தான் தள்ளிவிட்டிருக்கு. மனித மனங்கள் எப்போதுமே இன்னொரு சக மனிதனோட அன்புக்காகவும் பிணைப்புக்காகவும் மட்டுமே ஏங்குபவை. இந்த அழும் மன்றம், அந்த மனிதப் பாசத்தை மீண்டும் கொண்டு வர்றதுக்கான ஒரு சின்ன வழி.

கண்ணதாசன் ஒரு பாட்டுல சொல்வார், பணத்தின்மீதுதான் பக்தி என்றபின் பந்த பாசமே ஏனடா. பதைக்கும் நெஞ்சினை அணைக்கும் யாருமே அண்ணன் தம்பிகள்தானடா.' அவ்வளவுதான். அதுதான் தேவை... என்று அவர் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் ஹேமாவின் ஆழ்மனதைத் துளைத்தது.

உண்மைதான். தொழில் நுட்பம் கையில் விலை உயர்ந்த ஸ்மார்ட்போன், சொகுசான கார் இருந்தும் அவளுக்குள் இருந்த மனிதப் பிணைப்பை' இந்த உலகம் மொத்தமாகப் பிடுங்கிக் கொண்டு, அவளைத் தனிமையின் இருண்ட குகைக்குள் தள்ளியிருந்தது.

அவளது பிரச்னை ஐ.டி. ஆபீúஸா, கார்த்திக்கோ அல்லது கண்டுகொள்ளாத உயர் அதிகாரிகளோ அல்ல; தனக்குள்ளே இருக்கும் உணர்வுகளை வெளியில் காட்டக் கூடாது என்று அவள் சமுதாயத்துக்காக அணிந்திருந்த போலி கெளரவ முகமூடிதான் என்பதை உணர்ந்தாள்.

ஒரு மாத லீவு முடிந்தது.

கடைசிநாளன்று வாசுதேவனை நோக்கி இரு

கைகளையும் கூப்பி வணங்கினாள் ஹேமா.

ரொம்ப நன்றி சார். அழுகை என்னை இவ்வளவு பலசாலியா மாத்தும்னு நான் நினைக்கலை என்றாள்.

காரில் ஏறி அமர்ந்தவள், டேஷ்போர்டில் இருந்த அந்த ராஜிநாமா கடிதத்தைக் கையில் எடுத்தாள். இரண்டாகக் கிழித்து வெளியில் போட்டாள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER