ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே - 59: பட்டுக்கோட்டையார் போல் எழுதியவர்!

நண்பர் நாஞ்சில் பி.சி. அன்பழகன் முதன்முதல் இயக்கிய படம் "காமராசு.' இது சூப்பர் குட் பிலிம்ஸ் செளத்திரி தயாரித்த படம்.
ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே - 59: பட்டுக்கோட்டையார் போல் எழுதியவர்!

நண்பர் நாஞ்சில் பி.சி. அன்பழகன் முதன்முதல் இயக்கிய படம் "காமராசு.' இது சூப்பர் குட் பிலிம்ஸ் செளத்திரி தயாரித்த படம். இதில் மேத்தா மூன்று பாடல்கள் எழுதியிருக்கிறார். அதில் பிரபலமான பாடலாக இன்றும் விளங்குவது,
"பாதி நிலாவின்று பெளர்ணமி ஆச்சு
புல்லாங் குழல்தனில் போதை உண்டாச்சு'
என்ற பாடல்.
இதே படத்தில் நானும் ஒரு பாடல் எழுதியிருக்கிறேன். அதுவும் ஓரளவு பிரபலமான பாடல்தான் அந்தப் பாடல்.
"சின்னச் சின்னக் கண்ணுக் குள்ளே
உன்னை அள்ளி வைக்கட்டுமா
மெல்ல மெல்ல நெஞ்சுக்குள்ளே
உன்னை வச்சுத் தைக்கட்டுமா
அந்த - மேகக் கூட்டத்தைப் 
போர்வையாக்கி உன்
மேனி போர்த்தி விடவா - அந்த
மூன்று கடலும் மோதும் மலைக்கு உன்
பேரை வைத்து விடவா'
என்ற பல்லவியோடு ஆரம்பம் ஆகும். கதை நல்ல கதை. ஆனால் திரைக்கதை சரியாக அமையவில்லை.
அதன்பிறகு "ஐயா வழி', "நதிகள் நனைவதில்லை' ஆகிய இரண்டு படங்களைத் தயாரித்து இரண்டு கோடிக்கு மேல் இழப்பைச் சந்தித்தார் அன்பழகன். இவர் எங்கள் கட்சியின் நட்சத்திரப் பேச்சாளர்களில் ஒருவர்.
அ.தி.முக.வில் பேச்சாளர்கள் சிரமப்படுகிறார்கள் என்பதை அறிந்த தலைமைக் கழகம், பேச்சாளர்கள் ஒவ்வொருவருக்கும் ஐம்பதாயிரம் ரூபாய் சென்ற ஆண்டு வழங்கியது. அப்போது என்னைப் பற்றி அமைச்சர் தங்கமணியிடம் எடுத்துச் சொல்லி எனக்கு மேலும் ஒரு லட்ச ரூபாய் கொடுக்கச் செய்தவர் இவர்.
இப்போது அவர் "நாஞ்சில் கைத்தறிப் பட்டு' என்ற நிறுவனத்தைத் தொடங்கியிருக்கிறார். இவர் நாஞ்சில் நாட்டுப் பகுதியைச் சேர்ந்தவர் என்பதால் இந்தப் பெயரை வைத்திருக்கிறார் என்று நினைக்கிறேன். பெண்கள் தொலைபேசியில் சொல்லிவிட்டால் போதும். வீட்டுக்கே பட்டுச் சேலை வந்துவிடுமாம். அடக்க விலையைத்தான் வாங்குகிறார் என்று சொல்கிறார்கள். இவர் எழுதிய புத்தகங்களில் "விதைக்குள் விருட்சம்' என்ற புத்தகம் பாராட்டக்கூடிய புத்தகம்.
"விதைக்குள் விருட்சம்' என்ற சொன்னவுடன் எனக்கு இன்னொன்று நினைவுக்கு வருகிறது. தினமணி இணையதளத்தில் பணியாற்றுகின்ற திருமலை சோமு என்ற கவிஞர் அண்மையில் "மனசுக்குள் பெய்யும் மழை' என்ற கவிதைப் புத்தகத்தை வெளியிட்டார். அதில் மனிதனைப் பற்றிச் சொல்லும்போது "விந்தின் விருட்சம் மனிதன்' என்று குறிப்பிட்டிருக்கிறார். 
இப்படிப்பட்ட சிந்தனையை இதுவரை எந்தக் கவிஞனும் வெளிப்படுத்தியதில்லை. "மரங்களை நிழல் நெசவாளர்கள்' என்று ஒரே வார்த்தையில் பிச்சினிக்காடு இளங்கோ என்ற கவிஞர் குறிப்பிட்டதைப் போல் "விந்தின் விருட்சம் மனிதன்' என்று புதிய முறையில் சொன்ன திருமலை சோமு நமது பாராட்டுக்குரியவர்.
இவரைப் போன்றவர்களுக்கெல்லாம் ஆதரவளிக்கும் தினமணி ஆசிரியர் வைத்தியநாதன் நமது வணக்கத்திற்குரியவர்.
இன்றைய மூத்த கவிஞர்களில் ஒருவர் காமகோடியன். இவருக்குக் காமகோடியன் என்று பெயர் வைத்தவர் "இதயம் பேசுகிறது' மணியன். இவரது இயற்பெயர் சீனிவாசன்.
மாதங்கன் தயாரித்து இயக்கிய முதற்படம் "பொன்னகரம்'. இதில் மாதங்கனுக்கு எல்லா வகையிலும் உதவியாளராக இருந்தவர் காமகோடியன். இவருக்குள் இருந்த கவிஞரைக் கண்டுபிடித்து அவருக்குப் பாடல் எழுத முதல் வாய்ப்பளித்தவர் மாதங்கன் தான்.

"வாழுகின்ற மக்களுக்கு
வாழ்ந்தவர்கள் பாடமடி
பெற்றவர்கள் பட்டகடன்
பிள்ளைகளைச் சேருமடி
சேர்த்துவைத்த புண்ணியம்தான்
சந்ததியைக் காக்குமடி'

என்ற பாடல் மூலம் பாடலாசிரியராக அறிமுகம் ஆனார் இவர். இது பிரபலமான பாடலாக அமைந்தது. இதை ஜேசுதாஸ் பாடியிருப்பார். 1980-இல் வெளியான படம் இது.
நடிகர் திலகம் சிவாஜியின் தம்பி வி.சி. சண்முகம் இந்தப் பாடலைக் கேட்டுவிட்டு, ""பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் மாதிரி பாடல் எழுதியிருக்கிறாரே, இவர் யார்?'' என்று பலரிடம் கேட்டிருக்கிறார். அவர் அப்படிக் கேட்டதற்குக் காரணம் அதில் வருகிற ஒரு சரணம்தான்.
"ஆடொன்று வளர்ப்பார்கள் தம் வீட்டில் - அதை
அன்பாக மேய்ப்பார்கள் வயற்காட்டில்
உறவொன்று விருந்தென்று வரும்போது - அந்த
வெள்ளாடு உணவாகும் அப்போது'
இந்த சரணம் பட்டுக்கோட்டையின் கருத்துச் சாயலில் இருந்ததால் அப்படிக் கேட்டார்.
ஒருமுறை சிவாஜியின் படத்திற்குப் பாடல் எழுத வாலி வந்தபோது, ""இந்தப் பாடல் நீங்கள் எழுதியதா?'' என்று கேட்டிருக்கிறார் வி.சி. சண்முகம். ""இல்லை இல்லை, அந்தப் பாடலை எழுதியவரைத்தான் நானும் தேடிக் கொண்டிருக்கிறேன். நன்றாக எழுதியிருக்கிறார்'' என்று சொல்லிவிட்டு, "பொன்னகரம்' படத்திற்கு சங்கர் கணேஷ் தான் இசை; அவரிடம் கேட்டால் தெரியுமென்றிருக்கிறார்.
சங்கர் கணேஷ் இசையில் வாலி பாடல் எழுதும்போது, "" "பொன்னகரம்' படத்திற்கு நீங்கள் தானே இசை, அதில் "வாழுகின்ற மக்களுக்கு வாழ்ந்தவர்கள் பாடமடி' என்ற பாடலை எழுதியவர் யார்?'' என்று கேட்டிருக்கிறார். ""காமகோடியன் என்ற புதுக்கவிஞர்'' என்று சங்கர் சொல்லி
யிருக்கிறார்.
""நான் இதுவரையிலும் அப்படியொரு பெயரைக் கேள்விப்பட்டதில்லையே. யார் அந்த ஆள்?'' என்று வாலி மீண்டும் கேட்டபோது, ""அண்ணே, மாதங்கன் கூடவே எப்போதும் ஒருவர் இருப்பாரே, அவர்தான்'' என்று கணேஷ் சொல்ல, ""எப்போதும் கூட இருப்பவர் சீனிவாசன் தானே. காமகோடியன் யார்?'' என்று வாலி கேட்க, ""அந்த சீனிவாசன் தான் காமகோடியன்'' என்று சங்கர் கணேஷ் இருவருமே சொல்லியிருக்கிறார்கள்.
காமகோடியனைப் பார்த்தபோது வாலி இந்தப் பாடலைக் குறிப்பிட்டுப் பாராட்டிவிட்டு பாராட்டியதோடு நின்று விடாமல், இளையராஜாவிடம் சொல்லி, ""இப்படிப்பட்ட பாடலை எழுதிய அவருக்கு நீ ஒரு வாய்ப்புக் கொடு'' என்றும் சொல்லியிருக்கிறார். அன்றைய கவிஞர்களுக்கெல்லாம் எப்படிப்பட்ட பெருந்தன்மை இருந்திருக்கிறது என்பதைப் பாருங்கள்.
அதன் பிறகு இளையராஜா "அலை ஓசை' என்ற படத்திற்குப் பாடல் எழுத வாய்ப்பளித்தார். ஒருவருக்குப் பாடல் எழுத வாய்ப்புக் கொடுக்க வேண்டும் என்று எண்ணி விட்டால் ஆள் அனுப்பி எங்கிருந்தாலும் தேடிக் கண்டுபிடித்து வரவழைத்து எழுத வைத்துவிடுவார் இளையராஜா. 
அந்த வகையில், ஒரு நாள் நள்ளிரவு நேரத்தில் தேனாம்பேட்டை திருவள்ளுவர் சாலையில் குடியிருந்த காமகோடியன் வீட்டுக்கதவைத் தட்டி, ""இளையராஜா, பிரசாத் ஸ்டூடியோவிற்கு உங்களை வரச் சொன்னார். நாளை வந்து விடுங்கள்'' என்று சொல்லிச் சென்றிருக்கின்றனர். கம்பெனியைச் சேர்ந்தவர்கள். இது 1986-ஆம் ஆண்டு நடந்த நிகழ்ச்சி. இப்போது அப்படியெல்லாம் நடக்கிறதா என்று எனக்குத் தெரியாது.
"அலை ஓசை' என்ற படம் சிறுமுகை ரவி இயக்கிய முதல் படம். இவர் ஆர். சுந்தரராஜனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். "அலை ஓசை' படத்தில் நானும் பாடல் எழுதியிருக்கிறேன். சிறுமுகை ரவி அண்மையில் மறைந்து விட்டார். அவர் எனக்கு மிகவும் நெருங்கிய நண்பர். "பயணங்கள் முடிவதில்லை' படத்திலிருந்தே அவரை நன்கறிவேன்.
அதுபோல் எம்.எஸ். விசுவநாதன் இசையில் "ஆவணி மாதத் தாவணிகள்' என்ற படத்தில் பாடல் எழுதி விசுவநாதன் அண்ணனுக்கு அறிமுகம் ஆனார் காமகோடியன். இது மாதங்கனின் சொந்தப் படம்.
இசையமைக்க அமர்ந்தவுடன், ""யார் பாட்டெழுதுகிறார்?'' என்று எம்.எஸ்.வி. கேட்க இவர்தான் என்று காமகோடியனை மாதங்கன் அறிமுகப்படுத்தியிருக்கிறார். ""பூஜைப் பாடலென்று சொல்கிறீர்கள். புதுக்கவிஞரைப் போடுகிறீர்கள் பார்த்துக் கொள்ளுங்கள்'' என்று சொல்லியிருக்
கிறார் எம்.எஸ்.வி.
""நன்றாக எழுதுவார். ஏற்கெனவே என் படத்திற்கு எழுதியிருக்கிறார்'' என்று மாதங்கள் சொல்ல, ""சரி, இவர் சொல்லுகின்ற காட்சிக்கு நீங்களே ஒரு பல்லவி எழுதுங்கள். நன்றாக இருந்தால்தான் டியூன் போடுவேன். இல்லையென்றால் இல்லை'' என்று எம்.எஸ்.வி. காமகோடியனிடம் சொல்ல, 

"ராகவேந்தனை உன் மோக வீணைநான்
உன் விரல்களுக்கும் குரல் கொடுப்பேன்
இறுதிவரை துணையிருப்பேன்' 

என்று பல்லவி எழுதிக் காட்ட விசுவநாதன் அண்ணனுக்கு அது ரெம்பப் பிடித்து விட்டது. உடனே மெட்டுப் போட்டார்.
சரணத்திற்கு நான் போடுகின்ற மெட்டுக்குத்தான் நீங்கள் பாடல் எழுத வேண்டும் என்று சொல்லி மெட்டுப் போட உடனே சரணத்தையும் அங்கே எழுதிவிட்டார்.
"அழைக்காமல் வரும் தலைக்காவிரியில்
குளித்தால் புண்ணியம்
அமைப்பான கதை இமைக்காமல் அதைப்
படித்தால் புண்ணியம்'
என்று சரணம் தொடக்கமாகும்.
இறுதிவரை துணையிருப்பேன் என்று எழுதியதைப் போலே விசுவநாதன் அண்ணனுக்கு இறுதிவரை துணையிருந்த கவிஞர் காமகோடியன் தான். விசுவநாதன் அண்ணன் குடும்பத்தில் நல்லது கெட்டது எல்லாவற்றுக்கும் இவரைத்தான் அழைப்பார்கள். அந்த அளவு அந்தக் குடும்பத்தில் நெருக்கமாக இருந்த கவிஞர் இவர்தான்.
இராம. நாராயணன் இயக்கத்தில் கே.வி.மகாதேவன் இசையில் "சின்னஞ்சிறுசுகள்' என்ற படத்தில் பாடல் எழுதியிருக்கிறார். அது கதையோடு ஒட்டிய பாடல்.
"எந்த இரவு முதலிரவு எனக்குத் தெரியலே - இதில்
எந்த மனசு எந்தப் பக்கம் கணக்கும் புரியலே
கணவன் வேஷம் போட்டுக்கிட்டேன் கூத்து நடக்கலே
நடிக்கவந்த மனைவியவள் கதையை மதிக்கலே
நூத்துலே பத்துதான் காதலில் ஜெய்க்குது 
தொண்ணூறு ஜோடிகள் கண்ணீரில் மிதக்குது
சொர்க்கத்தில் திருமணம் சொன்னவர் யாரடி
நரகத்தில் வாழ்ந்திடும் நாயகன் நானடி'
என்று சரணம் போய்க் கொண்டிருக்கும். கே.வி. மகாதேவன் இசையில் இவர் எழுதிய ஒரே பாடல் இதுதான்.
சந்திரபோஸ் இசையில் "ஒரு தொட்டில் சபதம்' என்ற படத்தில் இவர் எழுதிய பாடலும் பிரபலமான பாடல்தான்.
"பூஞ்சிட்டுக் குருவிகளா
புதுமெட்டுத் தருவிகளா'
என்று ஆரம்பமாகும். இவரும் நூற்றுக்கணக்கான பாடல்கள் சினிமாவில் எழுதியிருக்கிறார். பல மொழி மாற்றுப் படங்களுக்கும் எழுதியிருக்கிறார்.

(இன்னும் தவழும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com