இசை உலகின் கலை பொக்கிஷம்!
By - குடந்தை ப.சரவணன் | Published On : 22nd October 2018 10:58 AM | Last Updated : 22nd October 2018 10:58 AM | அ+அ அ- |

கோயில் நகரம் என்றழைக்கப்படும் கும்பகோணத்தில் அமைந்துள்ள மகாமக தீர்த்தவாரியின் முதன்மை திருக்கோயிலான ஆதி கும்பேஸ்வரர் கோயிலில் உள்ள பெட்டகத்தில் பொக்கிஷமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது கல் நாதஸ்வரம் ஒன்று. சிற்பியின் கை வண்ணத்தில் கல் நாதஸ்வரமாக பிறந்து, இசை வல்லுநர்களின் உயிர் காற்றுடன் கலந்து இதயத்தை மயங்க வைக்கும் இன்னிசையாக தவழ்ந்து ராகங்களின் சுவடுகளை சுமந்து வரும் இந்த கல் நாதஸ்வரம் உருவாகி ஆண்டுகள் பல நூறு இருக்கலாம் என்பது ஆய்வாளர்கள் கருத்து.
இந்தக் கல் நாதஸ்வரம், சாதாரண நாதஸ்வரத்தை விட சுமார் ஆறு மடங்கு கூடுதல் எடையுடையது. சுமார் இரண்டடி நீளமுடையதாகவும் வட இந்தியக் குழல் இசைக்கருவியான ஷெனாய் மாதிரியான அமைப்பிலும் உள்ளதாகும். மூவாயிரம் ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட தமிழர் இசையானது அதிகாலை துயில் எழுப்புவதில் தொடங்கி, நள்ளிரவு உறங்கும் காலம் வரை இசைக்கும் தமிழர் மரபாகும். பருவத்துக்கு ஏற்ற கருவிகளை உருவாக்கி அதில் உருவாகும் இசையினை இசைத்து இறைவனை வணங்கினர் ஆதி தமிழர்கள் என்பது வரலாறு.
ஆதி இசைக்கருவியான நாதஸ்வரம், ஆச்சா என்ற மரத்தில் செய்யப்படுகிறது. அதிலும் பல ஆண்டுகள் ஆன மிகவும் பழைய ஆச்சா மரமே நாதஸ்வரம் செய்யத் தகுந்தது. மரத்தின் உடலில் உள்ள ஈரம் உலர்ந்தால் மட்டுமே ஆச்சா மரம் உறுதிப்படும். சுருக்கமாக சொன்னால் வைரம் பாய்ந்த பாறையை போன்ற இறுகிய தன்மையுடையதாக இருக்க வேண்டும்.
மரத்தில் செய்வதற்கும் முந்தைய ஆதிகாலத்தில் இக்கருவியை கருங்கல்லில் செதுக்கி வாசித்திருக்கலாம் என்பது இசை ஆராய்ச்சியாளர்களின் கணிப்பு. இதற்குச் சான்றாக, ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகக் கருதப்படும் கல் நாதஸ்வரம் கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் ஆலயத்திலுள்ளது.
மற்றொரு கல் நாதஸ்வரம்: தூத்துக்குடி மாவட்டம் நவ திருப்பதிகளில் ஒன்றான ஆழ்வார் திருநகரியில் உள்ள ஆதிநாதர் ஆழ்வார் கோயிலிலும் ஒரு கல் நாதஸ்வரம் உண்டு. சுமார் 350 ஆண்டுகளுக்கு முன் அரசாண்ட கிருஷ்ணப்ப நாயக்கர் என்ற மன்னரால் இக்கோயிலுக்கு வழங்கப்பட்ட இந்த கல் நாதஸ்வரம். இப்போது வெறும் காட்சிப்பொருளாக மட்டுமே பாதுகாக்கபட்டு வருகிறது.
கல் நாதஸ்வரத்தின் உடல் அமைப்பு : முகப்பில் உள்ள முக்கிய பாகமான சீவாளி, காவிரிக்கரையில் விளையும் ஒரு நாணல் புல்லில் செய்யப்படுகிறது. கல் நாதஸ்வரத்தில், உலவுப்பகுதி மூன்று உறுதியான கருங்கற்களால் தனித்தனியாகச் செய்யப்பட்டு வெண்கலப்பூணல் இணைக்கப்பட்டு வெங்கல அனசுடன் மிக நேர்த்தியாக உருவாகி உள்ளது இந்த கல் நாதஸ்வரம்.
""மரத்தால் செய்யப்படும் நாதஸ்வரங்களில் ஏழு ஸ்வரங்கள் இருக்கும், ஆனால், கல் நாதஸ்வரத்தில் 6 ஸ்வரங்கள் மட்டுமே இருக்கும். அதனால் சண்முகப்ரியா, கல்யாணி போன்ற பிரதி மத்திம ராகங்கள் மட்டுமே வாசிக்க முடியும். இதில் 3முதல் 3- 1/2 கட்டை சுதியில் வாசிக்க இயலும். மேலும், சங்கராபரணம், கரகரப்பிரியா, தோடி போன்ற சுத்த மத்திம ராகங்களை இந்த நாதஸ்வரத்தால் வாசிக்க முடியாது. முழுமையாகவும் அடர்த்தியாகவும் மூச்சை உள்ளே செலுத்தினால் மட்டுமே இதில் நல்இசை கிடைக்கும் எனவும் பயிற்சி இருந்தால் மட்டுமே இதை வாசிக்க முடியும்'' என்கிறார் திருக்கோயில் வித்வான் சாமிநாதன் பிள்ளை.
குடந்தையில் வாழ்ந்து மறைந்த நாதஸ்வர மேதை கும்பகோணம் பக்கிரி சாமி பிள்ளை சுமார் 60 வருடங்களுக்கு முன் கும்பேஸ்வரர் ஆலய முக்கிய விழாக்களில் இந்த கல் நாதஸ்வரத்தை வாசித்துள்ளார். அவருக்கு பின் திருக்கோயில் நாதஸ்வர வித்வானாக இருந்த குஞ்சிதபாதம் பிள்ளை, 30 ஆண்டுகளுக்கு மேல் வாசித்து வந்துள்ளார். அவருக்கு பின் வாசித்து வருபவர் தற்போதுள்ள நாதஸ்வர கலைஞர் ஆவார்.
""சுமார் 15 வருடங்களுக்கு முன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மனைவி கமலா கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் ஆலயத்திற்கு வந்தபோது கல் நாதஸ்வரத்தினை இசைக்க சொல்லி கேட்டு சென்றார் என்பதையும் அதன்பின் ஒரு விழா காலத்தில் நடைபெற்ற சப்தாவர்ணம் எனும் திருநாள் விழாவில் திருக்கோயில் இசைக்கலைஞர் இதனை வாசித்தார். அவரே மறுபடியும் 29 செப்டம்பர் 2017 அன்று ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையை முன்னிட்டு கல் நாதஸ்வரத்தில் ஒரு மணி நேரம் வாசித்தார்'' என்று திருக்கோயில் நிர்வாக அதிகாரி கவிதா தெரிவித்தார்:
தென்னிந்தியாவில் இது ஒரு மங்கலமான இசைக்கருவியாகக் கருதப்படுவதனால், பொதுவாக எல்லாவகையான நல்ல நிகழ்வுகளிலும் இதற்கு ஓர் இடம் உண்டு.
இவ்வாத்தியம் முன்பு தென்னிந்தியாவிலுள்ள நாகூர், நாகபட்டினம் முதலிய ஊர்களில் உள்ளவர்களான, நாகர் என்ற இனத்தவரால் வாசிக்கப்பட்டு வந்தது. நாகத்தினை போன்ற உருவத்தைப் போல் நீண்டிருந்ததின் காரணமாகவும் நாதசுவரம் என்னும் பெயர் ஏற்பட்டது. இதனுடைய இனிமையான நாதம் காரணமாக பிற்காலத்தில் இது நாதஸ்வரம் என அழைக்கப்பட்டது என்பது
வரலாறு.
17-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாத சங்கிரகம் என்னும் இசை நூல் துளைக் கருவிகள் பற்றிக் கூறுகின்ற போது இக் கருவியையும் நாகசுரம் என்ற பெயரில் பட்டியல் இடுகின்றது. இதுவே தற்போதைய நிலையில், கிடைக்கின்ற முதல் வரலாற்றுக் குறிப்பு எனலாம்.
நாதசுவரத்தின் நீளம் சுமார் 2.5 அடி. இக்கருவியின் மேல் பகுதியை "உலவு' என்றும், கீழ்ப்பகுதியை "அனசு' என்றும் கூறுவர். உலவுப் பகுதியில் 12 துளைகள் அமைக்கப்படும். இக்கருவியின் அளவிற்கேற்ப, முகவீணை, திமிரி நாயனம், பாரி நாயனம், இடைப்பாரி நாயனம், மத்திம சுருதி நாயனம் என்ற பெயர்களுடன் வழங்கி வருகின்றனர்.
இது ஏறத்தாழ கூம்பு வடிவிலான மரமாகும். கீழ் பகுதியிலிருந்து மேல் நோக்கி சிறிது சிறிதாக குறைந்து இவ் வடிவத்தினை பெறுகின்றது. மேல் பகுதி வாய் வைத்து ஊதுவதற்கு ஏற்ற உலோக உருண்டை அமையப்பெற்று இருக்கும். பல ஓய்வு நாணல்களும் நாதஸ்வரத்துடன் இணைக்கப்பட்டு இருக்கும். அவற்றுடன் சிறு தந்தத்தினாலான கூம்பு இருக்கும். இவை நாணலில் உள்ள எச்சில் மற்றும் தூசு குப்பைகளை நீக்கி சரியான காற்று போகும் அளவுக்கு திருத்த கொடுக்கப்பட்டிருக்கும். இவற்றுடன் ஓர் உலோக மணியும் பொருத்தப்பட்டிருக்கும்.
தற்போது மூங்கில், சந்தனமரம், தாமிரம், பித்தளை, கருங்காலி மற்றும் ஐவரி ஆகியவற்றிலும் செய்து பயன்படுத்தப்படுகின்றன. நாதஸ்வரத்தில் ஏழு விரல் துளைகளும், ஐந்து கூடுதல் ஓட்டைகளும் போடப்பட்டிருக்கும். ஐந்து கூடுதல் ஓட்டைகளையும் தேவையானபோது பயன்படுத்திக்கொள்ள மெழுகுக் கொண்டு அடைத்திருப்பர். "பான்சூரி' புல்லாங்குழல் போன்று இரண்டரை எல்லை ஓட்டைகளும் போடப்பட்டு இருக்கும்.
நாதசுவரத்தின் மேல் பகுதியில் சீவாளி என்ற கருவி பொருத்தப்படும். ஜீவ வளி என்பதுதான் சீவாளியாகியிருக்கிறது. ஜீவன் என்றால் உயிர். வளி என்றால் காற்று. உடலாகிய நாதஸ்வரத்திற்கு காற்றின் மூலம் சீவாளி உயிர் கொடுக்கிறது.
சாம வேதமே இசையின் அடிப்படை என்று வேத விற்பன்னர்கள் கூறுவர். ஸ,ரி,க,ம,ப, த,நி ஆகிய ஏழு ஸ்வரங்களும் ஆகாயத்திலிருந்து ஒலிக்கக் கேட்டு பூமியில் இசையின் ஆதாரமாக வடிவெடுத்தது என்று மஹாபாரதம் கூறும். ஒவ்வொரு ராகத்திற்கும் ஒரு தேவதை இருப்பதாக நமது பண்டைய இசை நூல்கள் கூறுகின்றன.
இசை ஒலியைக் கூர்ந்து நுட்பமாகக் கேட்டு அனுபவித்தவர்கள் தமிழர்கள். சட்ஜமம் மயில் அகவுதலையும்; ரிஷபம் மாடு கத்துதலையும்; காந்தாரம் ஆடு கத்துவதையும்; மத்யமம் அன்றில் பறவை கூவுதலையும்; பஞ்சமம் குயில் கூவுதலையும்; தைவதம் குதிரை கனைப்பதையும், நிஷாதம் யானை பிளிறுவதையும் ஒத்து இருக்கிறது என்று தமிழர்கள் இனம் கண்டனர்.