கவிஞர் தியாகராஜன் நூற்றாண்டு: தாமரை பூத்த தடாகமடீ!

தமிழ் சினிமாவின் ஆரம்பத்தில் பாடல்களுக்குப் பஞ்சமில்லாமல் இருந்தது. பிறகு பாடல்கள் குறைந்து வசனம் மேலோங்கியது
கவிஞர் தியாகராஜன் நூற்றாண்டு: தாமரை பூத்த தடாகமடீ!

தமிழ் சினிமாவின் ஆரம்பத்தில் பாடல்களுக்குப் பஞ்சமில்லாமல் இருந்தது. பிறகு பாடல்கள் குறைந்து வசனம் மேலோங்கியது. அதன்பிறகு வசனமும், பாடல்களும், இசையும்தான் தமிழ்த் திரைப்படங்களின் வெற்றியை தீர்மானிக்கும் கருவிகளாக இருந்து வருகின்றன. அந்தவகையில் பாடலாசிரியர்கள் பலர் வருகிறார்கள், சிலர் வெற்றி பெறுகிறார்கள். சிலர் ஏதோ காரணங்களால் திரைப்படங்களுக்கு எழுதுவதிலிருந்து ஒதுங்கி விடுகிறார்கள்.
 கம்யூனிசவாதியும் கவிஞருமான கே.சி.எஸ். அருணாசலம் "பாதை தெரியுது பார்' படத்தில் "சின்ன சின்ன மூக்குத்தியாம்' என்று காலங்கடந்து கேட்கும் ஒரே திரைப்படப் பாடலை எழுதினார். பின்னர் எழுதவில்லை. ஆனால் இன்றும் பாடலின் மூலம் நினைவில் நிற்கிறார்.
 அதே போல் "மலர்களே நாதஸ்வரங்கள்' என்ற பாடலை கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியம் "கிழக்கே போகும் ரயில்' படத்திற்காக எழுதினார். இதுவே அவருக்கு முதலும் கடைசிப்பாடலுமாக அமைந்தது. மேலும், படத்தில் இல்லாத இந்தப் பாடல் இன்றைக்கு ஒலிப்பதிவு செய்யப்பட்ட பாடல் போன்று என்று கேட்டாலும் இனிமையாக இருக்கும். இவர்களைப் போல் பல கவிஞர்கள் ஒரே ஒரு பாடலை மட்டும் எழுதி அதன் பிறகு தொடராமல் விட்டுவிட்டனர்.
 பாபநாசம் சிவன், கம்பதாசன், தஞ்சை ராமையாதாஸ், உடுமலை நாராயணகவி, மருதகாசி, பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், கண்ணதாசன் போன்றோர் கோலோச்சிக்கொண்டிருந்த காலத்தில் திருச்சி வீரேஸ்வரம் என்ற சிறிய கிராமத்தில் கோவிந்தசாமி - வரதம்மாள் தம்பதியின் மகனாக 20-03-1920 பிறந்த தியாகராஜன் என்ற இளைஞரும் திரைப்படத்திற்குப் பாடல் எழுத வருகிறார். தமிழில் கவிஞரின் ஆளுமை வளர்ச்சிக்கு அறிஞர் சாரநாத அய்யங்கார், அ.ச. ஞானசம்பந்தத்தின் தந்தை சரவண முதலியார், கந்தையாப்பிள்ளை போன்றோர் குருவாக அமைந்தனர். பொழுதுபோக்காக பல கவிதைகளையும், இசைப்பாடல்களையும் இயற்றியிருக்கிறார். அவற்றில் கீழ்க்கண்ட பாடல் இன்றும் என்றும் பிரபலம் அவற்றில்:
 தாமரை பூத்த தடாகமடீ - செந்
 தமிழ்மணத்தேன் பொங்கி பாயுதடீ - ஞானத் (தாமரை)
 பாமழை யால்வற்றாப் பொய்கையடி - தமிழ்
 பைங்கிளிகள் சுற்றி பாடுதடி - ஞானத் (தாமரை)
 காவியச் சோலை அதன் கலை (கவி ) அழகே - பெரும்
 கவிஞர்கள் கற்பனைக்கோர் தனிச்சுவையே (பெருஞ்
 சுவையே )
 ஆவி மகிழும் தமிழ் தென்றல் அதே - இசை
 அமுதினை கொட்டுது பார் இதனருகே - ஞானத்
 (தாமரை) என்ற பாடல் அனைவரின் பாராட்டையும் பெற்றது.
 தமிழின் பெருமைகளைச் சொல்லும் இப்பாடலை, கச்சேரிகளில் தமிழ்ப் பாடல்களைப் பாடும் எம்.எம். தண்டபாணி தேசிகரை, அவருடைய உறவினர் மூலம் திருச்சி தியாகராஜன் சந்தித்து, இப்பாடலைப் பாடுகிறார், எல்லையில்லா மகிழ்ச்சி கொண்ட தேசிகர் அதன் பின்பு தன்னுடைய இசைக் கச்சேரிகளில் "தாமரை பூத்த தடாகமடி' பாடலைப் பாட ஆரம்பித்ததைத் தொடர்ந்து எம்.கே. தியாகராஜபாகவதரும் தியாகராஜன் எழுதிய இசைப்பாடல்களைக் கச்சேரிகளில் பாட ஆரம்பித்தார். கவிஞரின் பாடல்களுக்கு மேலும் புகழ் சேர்க்க திருச்சி வானொலியும் ஒலிபரப்பு செய்தது. இன்றைக்கு அருணா சாய்ராம் உள்பட பல கலைஞர்கள் தியாகராஜனின் இசைப் பாடல்களைக் கச்சேரிகளில் பாடிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
 பொழுதுபோக்காக எழுதிய கவிதைகளையும், இசைப் பாடல்களையும் தமிழ் அறிஞர்கள் உள்ளிட்ட அனைத்துத்தரப்பினரும் பாராட்டியதால், அவற்றைத் தொகுத்து "இசையருவி' என்ற பெயரில் நூலாக வெளியிட்டார். "தமிழில் நல்ல கீர்த்தனைகள் இல்லை என்ற குறையைப் போக்க, தியாகராஜன் போன்ற கவிஞர்கள் முன் வந்திருப்பது
 "தமிழர்கள் செய்த பாக்கியம்' என்ற கருத்துரையை இந்நூலுக்கு வழங்கினார் கவிமணி தேசியவிநாயகம் பிள்ளை. முதல் நூலுக்குக் கிடைத்த பெரும் வரவேற்பால் "சிந்தனைச் செல்வம்" கவிதைத் தொகுப்பையும், "கலைவிருந்து" என்ற இசைப்பாடல் தொகுப்பையும் வெளியிட்டார்.
 ரயில்வேயில் வேலை பார்த்த கவிஞர், சங்கீதத்தில் டிப்ளமோவும், இந்தியில் ப்ரவீன் வரை தேர்ச்சிப் பெற்றவருமான சாந்தியை மணமுடித்தார். முதலாவதாகப் பிறந்த அழகான பெண் குழந்தைக்கு "வான்மதி" என்று பெயரிட்டு
 "வஞ்சகமில்லா மானிடப் பிஞ்சே
 வான்மதியே இன்பத் தேன்துளியே
 மஞ்சம் உனக்கு என் நெஞ்சமடீ
 மான்விழி மூடியே நீ உறங்காய்''"
 என்று தொடரும் தாலாட்டுப் பாடலில் குழந்தையும் தெய்வமும் ஒன்று, என் தோளும் நெஞ்சும் உனக்குக் கட்டிலடி, எனவே மான்விழி போன்ற கண்களை மூடித் தூங்கு, ஆசையெனும் கடலில் பிறந்த அபூர்வமே என்ற கவிஞர், உடம்பின் வாசனையை அரும்பு மல்லிகையே என்றும், நான் உனக்குக் கொடுக்கும் ஒவ்வொரு முத்தமும் இன்சுவையே என்கிறார். தன்னுடைய குழந்தைகளுக்குக் கூட அந்தாதியில் "வான்மதி" என்றும் "மதிவாணன்" என்றும் பெயரிட்டார்.
 திருச்சியிலிருந்த தியாகராஜன், திரை உலகில் வானம்பாடியாகக் கானம் பாடுவதற்காக 1952-ஆம் ஆண்டு குடும்பத்தோடு சென்னைக்குப் புலம்பெயர்கிறார். திரைப்படத்தில் பாடல் எழுதுவதில் சிறிது தயக்கம், மறுபக்கம், தீர ஆலோசித்து நிரந்தர வருமானம் கொடுக்கும் ரயில்வே வேலையைத் துறந்து, கவிதை, பாடல் எழுதுவதை முழு நேரத் தொழிலாக எடுத்துக்கொண்டு, ஆங்காங்கே நடைபெறும் கவியரங்கங்களிலும் கலந்து கொள்கிறார்.
 அவருடைய எண்ணப்படி இரண்டு வருடத்தில் வரவேண்டிய பொருளாதாரக் கஷ்டம் இரண்டு மாதத்திலேயே வீட்டில் குடிகொண்டது. மனம் தளராத கவிஞர், தன் இசைப்பாடல்களைப் பாடிய பாடகர் சி.எஸ். ஜெயராமனை, அவரது வீட்டில் சந்தித்துப் பேசுகிறார். அப்போது, புதிதாகத் தொடங்க இருக்கும் "பொன்னு விளையும் பூமி' படத்தைப் பற்றி விவாதிக்க வந்த தயாரிப்பாளர் அரங்கண்ணலுக்குத் தியாகராஜனை அறிமுகப்படுத்துகிறார் சி.எஸ்.ஜெயராமன். இதனால், பொன்னு விளையும் பூமி படத்தில் ஒரே ஒரு பாடல் எழுதும் வாய்ப்புக் கிடைக்கிறது.
 "பொன் விளையும் பூமியிலே
 பொழுதெல்லாம் பாடுபட்டும்
 புதுவாழ்வு காணாமல்
 பொங்குகிறான் தொழிலாளி''
 என்று தொடரும் இப்பாடலில் விவசாயிகளின் அவல நிலையை எடுத்துக் காட்டுகிறார். இப்பாடலின் வெற்றியைத் தொடர்ந்து எம்.ஏ. வேணு தயாரித்த "செங்கமலத்தீவு' படத்தில்
 கைதி தன் நிலைமையை நொந்து
 என்னைப் பார்த்தா பரிகாசம்? எனக்குத் தானா சிறைவாசம்?
 எண்ணிப் பார்த்தா உறவாடும் மனிதன் வாழ்வே சிறைவாசம்"
 என்று தொடரும் இப்பாடல், இன்றைய மனிதர்களின் சூழ்நிலைக்கும், அரசியல் காட்சிகளுக்கும் மிகவும் பொருந்தக்கூடியது. இறுதியில் மனிதனின் குணாதிசியங்களைச் சொல்லி மனிதன் என்றால் துன்பம்தான் என்று முடிக்கிறார். இதே படத்தில் "மலரைப் பறித்தாய் தலையில் வைத்தாய்' என்ற பாடலும் புகழ்பெற்ற பாடலாகும். இதையடுத்து "துளசி மாடம்', "குபேரத்தீவு' ஆகிய படங்களுக்குப் பாடல் எழுதிய கவிஞர் "உல்லாசம்' படத்தில்
 "ஆண்டுக்கு மாதங்கள் பன்னிரண்டு
 ஆண் பெண் வாழ்வின் கண்ணிரண்டு
 சித்திரைப் பெண்ணே சித்திரைப் பெண்ணே
 சிங்காரக் கண்ணே சிங்காரக் கண்ணே
 உன் திருமணத்தின் வாழ்த்துக்களை
 தெரிஞ்சுக்க முன்னே''
 என்ற பாடலில் பன்னிரெண்டு தமிழ் மாதங்களில் ஐப்பசி தவிர மீதமுள்ள பதினோரு மாதங்களின் பெயரைப் பயன்படுத்தி எழுதியிருப்பார். இப்படத்தில் அனைத்துப் பாடல்களும் மக்களின் வரவேற்பை பெற்றது.
 "லாரி டிரைவர்' படத்தில் காதலன், தை மாதம் திருமணம் முடிக்க ஊருக்கு வரும் செய்தியை கடிதம் மூலம் காதலிக்குத் தெரிவிக்கிறான். கடிதத்தைப் படித்ததும் மகிழ்ச்சியால் பூரித்துப் போகும் காதலி, தனக்கு நடக்கவிருக்கும் மண வாழ்வை நினைத்தும், வாழ்வைத் தரும் "தை' மாதத்தைப் பற்றியும்
 "தை தை தை - மாதத்தில்
 மங்கல மாதம் தை
 மாலைகள் மாற்றும் பருவம் தை
 காதலர் நெஞ்சம் கொஞ்சும் தை
 கரும்பாய் சேதி இனிக்கும் தை''
 என்ற பாடலை கதாநாயகி ஆடிப்பாடுகிறாள். நடனம், மாதம் இரண்டுக்கும் பொதுவாக "தை தை தை' என்று கவிஞர் பாடலை ஆரம்பித்திருப்பார்.
 மற்றொரு படத்தில், கதாநாயகன் குறும்புக்கார ரிக்ஷாக்காரன், பால் வியாபாரம் செய்யும் நாயகி தலையில் பால் குடத்தை வைத்துக்கொண்டு அன்ன நடை நடந்து செல்ல, இதைக் கவனித்த நாயகனுக்குக் குறும்பு தலைதூக்குகிறது பாடலும் பிறக்கிறது
 "சோலையிலே நடந்து போற
 அம்மாளு - பாம்பை
 சுருட்டி வச்சது போலிருக்கிறது
 சும்மாடு (சுமை)''
 எம்.ஜி.ஆரும் - பத்மினியும் நடித்து பாதியில் கைவிடப்பட்ட "ரிக்ஷா ரெங்கன்' படத்திற்காக மேற்சொன்ன பாடல் ஒலிப்பதிவு செய்யப்பட்டது.
 திருச்சி தியாகராஜனின் தனிப்பாடல்களை இசையரசர் எம்.எம். தண்டபாணி தேசிகர் மற்றும் தமிழறிஞர் ரா.பி. சேதுப்பிள்ளை முயற்சியால் சாகித்ய அகாதெமி 14 மொழிகளில் வெளியிட்டது. இசைப் பாடல்களை சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் பாடத்திட்டங்களாக வைத்தது. 1971-ஆம் ஆண்டு இவருக்கு "கலைமாமணி' விருது வழங்கி தமிழக அரசு கெளரவித்தது. கவிஞன் வாழ்வு வளமற்றது, அவனது செல்வமெல்லாம் கவிதைதான் என்பதற்கேற்ப திருச்சி தியாகராஜன் விட்டுச் சென்றதெல்லாம் கவிதைகளும் இசைப் பாடல்களும்தான். காலம் நமக்குத் தந்த அற்புதமான கவிஞர்களுள் ஒருவரான கவிஞர் திருச்சி தியாகராஜன் 19-05-2002 அன்று இயற்கை எய்தினார். 2019-ஆம் ஆண்டு கவிஞருக்கு நூற்றாண்டு.
 -ஆர். சுந்தர்ராமன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com