தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - நா.கிருஷ்ணமூர்த்தி

ஸ்ரீகண்டேஸ்வர பக்த வத்சலன் என்கிற பொன்னீலன் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மணிக்கட்டி பொட்டல் எனும் ஊரைச் சேர்ந்தவர். 1940-ஆம் ஆண்டு பிறந்தார். அவருக்கு சபாபதி என்ற இன்னொரு பெயரும் உண்டு.

பொன்னீலன்

ஸ்ரீகண்டேஸ்வர பக்த வத்சலன் என்கிற பொன்னீலன் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மணிக்கட்டி பொட்டல் எனும் ஊரைச் சேர்ந்தவர். 1940-ஆம் ஆண்டு பிறந்தார். அவருக்கு சபாபதி என்ற இன்னொரு பெயரும் உண்டு.
 இளங்கலை பட்டம் பெற்ற பின் ஆசிரியர் பயிற்சி பெற்று உயர்நிலைப்பள்ளி ஆசிரியராக வாழ்க்கையைத் தொடங்கிய பொன்னீலன் தமிழ் நாடு அரசு கல்வித்துறையில் துணை இயக்குநராக பணி நிறைவு பெற்றார்.
 மார்க்சிய ஈடுபாடு கொண்டவர். முற்போக்கு சிந்தனை கொண்ட எழுத்தாளர். தமிழில் சிறுகதை நாவல், கட்டுரை என பல துறைகளிலும் எழுதி வருகிறார்.
 பொன்னீலனின் முதல் நாவல் "கரிசல்' 1976-ஆம் ஆண்டு வெளிவந்தது. அப்போது அவரது வயது 36. கோயில்பட்டி மண்னையும், மக்களைப் பற்றியும் எழுதப்பட்ட சோஷலிச யதார்த்தவாத நாவல். முதல் நாவலே எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்தது.
 "ஊற்றில் மலர்ந்தது' பொன்னீலனின் முதல் சிறுகதைத் தொகுப்பு 1978 -இல் வெளிவந்தது. "உறவுகள்' என்ற சிறுகதை "பூட்டாத பூட்டுக்கள்' என்ற பெயரில் இயக்குநர் மகேந்திரனால் திரைப்படமாக எடுக்கப்பட்டது.
 பொன்னீலனின் எழுதிய "ஜீவா என்றொரு மானுடன்' வாழ்க்கை வரலாற்று நூல் மிகவும் பிரபலமானது.
 "புதிய தரிசனங்கள்' நாவல் இருபாகங்களாக 1992-ஆம் ஆண்டு வெளிவந்தது. இந்திரா காந்தி அமல்படுத்திய நெருக்கடி காலத்தைச் சித்தரிக்கும் பிரபல நாவல்.
 1994-ஆம் ஆண்டு சாகித்ய அகாதமி விருது "புதிய தரிசனங்கள்' நாவலுக்கு கிடைத்தது.
 திரைப்பட தணிக்கைக் குழு உறுப்பினராக இருந்தவர். தமிழ் நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்.
 பொன்னீலனின் தாயார் அழகிய நாயகி அம்மாள். "கவலை' என்ற சுயசரிதை எழுதியுள்ளார்.
 பணி ஓய்வுக்குப்பின் பொன்னீலன் அவரது ஊரான மணிக்கட்டி பொட்டலில் வசிக்கிறார்.
 விட்டல் ராவ்

விட்டல் ராவ் கன்னடமொழிக் குடும்பத்திலிருந்து வந்தவர். 1942-ஆம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பிறந்தார். தந்தை கிருஷ்ணராவ். தாய் சரஸ்வதி.
 விட்டல் ராவ் பள்ளியில் தமிழைப் பாடமாக எடுத்துப்படித்தார். எழுதுவது புகைப்படம் எடுப்பது, ஓவியம் வரைவது என பல துறைகளில் ஆர்வம் கொண்டவர்.
 விட்டல் ராவ் பள்ளிப்படிப்பை முடித்தவுடன் சென்னை ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 1960- ஆம் ஆண்டு ரேடியோகிராபராகச் சேர்ந்தார். அதன்பின் 1963-இல் தொலைபேசி இலாகா பணியில் சேர்ந்து 2002 -ஆம் ஆண்டு பணி ஓய்வு பெற்றார்.
 விட்டல் ராவின் முதல் சிறுகதை 1967-ஆம் ஆண்டு "ஆனந்த விகடன்' பத்திரிகையில் வெளிவந்தது. முதல் நாவல் "இன்னொரு தாஜ்மகால்' "தினமணி' கதிரில் தொடராக வெளிவந்து பின்னர் 1974 -இல் புத்தகமாக வெளிவந்தது. அப்போது அவரது வயது 32.
 1976-இல் வெளிவந்த "போக்கிடம்' நாவல் இலக்கியச் சிந்தனை விருது பெற்றது. 1981-இல் வெளிவந்த "நதிமூலம்' நாவல் மூன்று தலைமுறைகள் பற்றியது கன்னட மாத்துவாப் பிரிவு பிராமணர்களின் குடும்பம், வாழ்க்கை பற்றியும், சமூக மாற்றங்களினால் அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களையும் யதார்த்தமாகச் சொல்லும் நாவல். அதுவே அவருக்குப் பெயரும் புகழும் தந்த நாவல்.
 9 நாவல்கள், 5 சிறுகதைத் தொகுதிகள், 7 கட்டுரைத் தொகுப்புகள் ஆகியவற்றை எழுதியுள்ள விட்டல் ராவ் பல ஆண்டுகள் சென்னை வாசியாகவே இருந்தார். பணி ஓய்வுக்குப் பிறகு பெங்களூருவில் வசிக்கிறார்.
 சி.எம். முத்து

சந்திரஹாசன் குச்சிராயர் மாரிமுத்து என்கிற சி.எம்.முத்து தஞ்சை மாவட்டம் இடையிருப்பு கிராமத்தில் 14.02,1950 அன்று பிறந்தார்.
 விவசாயம் செய்யும் குடும்பத்தில் பிறந்த அவர் பள்ளிப் படிப்பு முடிந்ததும் அஞ்சல் துறை பணியில் சேர்ந்து பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
 சி.எம்.முத்து இளம் வயதிலேயே சிறுகதைகள் எழுத ஆரம்பித்துவிட்டார். தஞ்சை விவசாயிகள், மிராசுதாரர்கள் வாழ்க்கை பற்றி அவர்களின் மொழியிலேயே எழுதும் படைப்பாளி,
 1982 -ஆம் ஆண்டு "நெஞ்சின் நடுவே' என்ற நாவலை எழுதினார். அதுவே அவரது முதல் நாவல். அப்போது அவரது வயது 32,
 அடுத்து 1989 -ஆம் ஆண்டு "கறிச்சோறு' என்ற நாவலை எழுதினார். அது அவரை அடையாளப்படுத்திய நாவல். இது அவருக்கு இலக்கிய அங்கீகாரம் கிடைக்கச் செய்த நாவலும் கூட.
 தி.ஜானகிராமன், கரிச்சான் குஞ்சு, கு.ப.ரா, ஆகியோர் தஞ்சை மண்ணின் உயர்குடியின் ரசனைக்கு ஏற்றாற் போல இசை, நாடகம் ஆகியவற்றை ஆதாரமாகக் கொண்டு எழுதிய போது சி.எம்.முத்து அடித்தட்டு மக்களின் சுகதுக்கங்களை, ரசனையின் மீது பெரிய ஈடுபாடு இல்லாத வாழ்க்கையைப் பற்றி எழுதினார்.
 தஞ்சை பிரகாஷ் பட்டறையில் உருவான எழுத்தாளர் என சி.எம்.முத்து தன்னைப் பெருமையாக சொல்லிக் கொள்வார்.
 அவரின் பிற நாவல்கள் "பொறுப்பு' (2000),"வேரடி மண்' (2003),"அப்பா என்றொரு மனிதர்' (2010)" மிராசு' (2017)
 கள்ளர் சமூகத்தை மையமாகக் கொண்டு தஞ்சை மண்ணின் பழக்க வழக்கங்களை யதார்த்தமாக எழுதிவரும் சி.எம். முத்து ஒன்றுக்கு மேற்பட்ட தரமான நாவல்களை எழுதியுள்ளார்.
 விவசாயத்தை விடவும் முடியவில்லை, மீளவும் முடியவில்லை என்று சொல்லும் சி.எம்.முத்து பணி ஓய்வு பெற்றபின் சொந்த ஊரான இடையிருப்பில் விவசாயத்தை கவனித்துக் கொண்டு சுயஜீவியாக வாழ்கிறார்.
 - நிறைவு பெற்றது
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com