நவாபிலிருந்து நவீனம் வரை!

நாடகம் என்றால் ஒரு குறிப்பிட்ட சிலரது பெயர்களை மட்டுமே அறிவார்கள். அவர்களிலும் பலருக்கு, நாடகக் கலைஞர்களின் வாழ்க்கை வரலாறு தெரிந்திருக்குமா என்றால் சந்தேகம்தான்.
நவாபிலிருந்து நவீனம் வரை!

நாடகம் என்றால் ஒரு குறிப்பிட்ட சிலரது பெயர்களை மட்டுமே அறிவார்கள். அவர்களிலும் பலருக்கு, நாடகக் கலைஞர்களின் வாழ்க்கை வரலாறு தெரிந்திருக்குமா என்றால் சந்தேகம்தான். தெரிந்தவர் - தெரியாதவர் எனப் பலரும் அறிந்து கொள்ள நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை காலத்திலிருந்து நிகழ்காலம் வரை நாடகப் பிதாமகர்களின் வாழ்க்கை வரலாற்றை ஆவணப்படமாக எடுத்தும் - எடுத்துக் கொண்டும் இருக்கிறார் முத்ரா பாஸ்கர். அவரிடம் பேசுவோம்:

நமது கலைகளைப் பாதுகாத்து, அவைகளை நல்ல முறையில் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் தான் "முத்ரா' என்ற அமைப்பை நானும் என் மனைவி ராதாவும் இணைந்து 1995-ஆம் ஆண்டு தொடங்கினோம். இயல் இசை நாடகம் என்ற மூன்றையும் ஆரம்பம் முதலே முத்ரா அமைப்பின் வாயிலாக எடுத்து சென்றோம். இந்த ஆண்டு எங்கள் வெள்ளிவிழா ஆண்டு.

எந்த நோக்கத்தில் இந்த அமைப்பை ஆரம்பித்தோமோ அது நிறைவேறிவிட்டதா என்று கொஞ்சம் பின்னோக்கி பார்க்க வேண்டும் என்று தோன்றியது. 25 ஆண்டுகளில் நாங்கள் 32 வித்தியாசமான நிகழ்ச்சிகளை கொடுத்திருக்கிறோம். உதாரணமாக, கர்நாடக இசை நிகழ்ச்சி எப்போதும் ஒரு மணிநேரம் அல்லது இரண்டு மணிநேரம் தான் நடக்கும். நாங்கள் நான்கு மணிநேரம் கூட நடத்தி மக்களை அமர வைத்திருக்கிறோம்.

அதுபோன்று, இந்த நிகழ்ச்சிகளை எல்லாம் நாங்கள் ஒரு DVDயாக போட்டு அதை சோ வெளியிட்டார். இது போன்று நாங்கள் நடத்தும் எல்லா நிகழ்ச்சிகளையும் வீடியோ மற்றும் ஆடியோ எடுக்க முடிவு செய்தோம். செலவு ஆகும் என்றாலும் அதை ஒரு கடமையாக செய்து முடித்தோம். கையில் பலமணிநேர நிகழ்ச்சிகள் இருக்கும் போது அதற்காகவே ஒரு (web TV) வெப் தொலைக்காட்சியையும் அரம்பித்தோம். அதுதான் நாங்கள் உருவாக்கிய "பாலம்TV'. இது நடந்தது 2013-ஆம் வருடம். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நான்கு மணி நேரம் இந்த தொலைக்காட்சியை மக்கள் யாராக இருந்தாலும் பார்க்கலாம். இந்த தொலைக்காட்சி, நிகழ்ச்சி நடக்கும் இடத்துக்கு வர முடியாத முதியவர்களுக்காகவும், வீட்டில் இருந்தபடியே நிகழ்ச்சிகளைப் பார்க்க விரும்பும் இளைய சமூகத்தினருக்காகவும் தொடங்கினோம். இந்த மாதிரி web TV தொடங்கியதில் நாங்கள் தான் முன்னோடி என்று பெருமையாக கூட சொல்லலாம். எட்டு வருடங்களாக இந்த பாலம் தொலைக்காட்சி அமோகமாக நடந்து வருகிறது.

அதைத் தொடர்ந்து 2017- இல் வானொலி ஆரம்பிதோம். அதுவும் இன்று வரை நன்றாக நடந்து வருகிறது. இந்த covid-19 காலத்திலும் பாலம் தொலைக்காட்சியில் ஏப்ரல் 5- ஆம் தேதியில் இருந்து 14 -ஆம் தேதி வரை மற்றும் அதே மாதம் 19- ஆம் தேதி முதல் 28 - ஆம் தேதி வரை தொடர்ந்து இந்த தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை அளித்தோம்.

நாடகம் ஒரு காலத்தில் பாடல்களாக இருந்தது. பின்னர் வசனங்களாக மாறியது. பல நாடகக்கலைஞர்கள் இந்த நாடக உலகில் தங்களது முத்திரையை ஆழமாகப் பதித்துள்ளனர். அவர்களது திறமையை, உலகெங்கும் உள்ள தமிழர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்று முடிவு செய்து ஆரம்பிக்கபட்டது தான் இந்த குறும்படங்கள்.

"நவாபிலிருந்து நவீனம் வரை'. இதற்கு முன் "அரியக்குடியிலிருந்து செம்மங்குடி வரை' என்று ஒரு நாள் கருத்தரங்கம் நடந்தினோம். அதிலிருந்து உருவானதுதான் இந்த "நவாபிலிருந்து நவீனம் வரை' என்ற இந்த குறும்பட எண்ணம். நாங்கள் 32 புதுமைகளை செய்தோம் என்று சொன்னேன் அல்லவா? அதில் இது 32-ஆவது புதுமை என்று சொல்லலாம்.

இந்த குறும்படங்கள் எல்லாம் எங்கள் முகநூல் பக்கத்தில் யார் வேண்டுமானாலும் பார்க்கலாம். இதுவரை நாங்கள் நாலு பேர்களின் குறும்படங்களை வெளியிட்டு இருக்கிறோம். இன்னும் 6 பேர்களின் குறும்படங்கள் வர இருக்கின்றன.

நவாப் ராஜமாணிக்கம் நமது நாடகக்கலையின் மூத்தவர். அவரிலிருந்து தொடங்கி, இதுவரை நான்கு பேர்கள் வரை வெளியிட்டுள்ளோம். நவாப் ராஜமாணிக்கம், டி.கே.எஸ். சகோதரர்கள், எஸ்.வி.சகஸ்ரநாமம், ஆர்.எஸ்.மனோகர் என்று இதுவரை செய்துள்ளோம். மற்ற 6 பேர்கள், ஒய்.ஜி.பார்த்தசாரதி, டி.எஸ்.சேஷாத்ரி, பூர்ணம் விஸ்வநாதன், கோமல் சுவாமிநாதன், வி.கோபாலகிருஷ்ணன், மேஜர் சுந்தர்ராஜன்.

இவை இந்த மாதம் 27-ஆம் தேதிக்குள் வந்துவிடும். மக்கள் இந்த குறும்படங்களை என்றென்றும் பார்க்கலாம். இவர்களை தெரிந்தவர்கள் பல பேர், இன்று நம்மிடையே இல்லை என்பது வருத்தத்திற்குரியது. இந்த குறும்படங்களை எழுதி இயக்கியவர் ராம்கி. இவர் நாடக உலகில் சுமார் 40 -ஆண்டு காலம் நடிகராக, பாடல் ஆசிரியராக, இருந்தவர். மூன்று தலைமுறை நடிகர்களுடன் நடித்துள்ளார். 4000 முறை மேடை ஏறி உள்ளார். 300 சீரியல்கள், 30 படங்களில் நடித்துள்ளார். இவர் எழுதிய 15-க்கும் மேற்பட்ட நாடகங்கள் வானொலியிலும், தொலைக்காட்சியிலும் இடம் பெற்றிருக்கிறது. இவர் இதை செய்வதற்கு மிகவும் தகுதியானவர் என்று நினைக்கிறேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com