கருவறை: கட்டடக் கலைச் சிறப்பு

மதுரை என்றாலே மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் கோபுரங்களும், அழகுமிக்க சிற்பங்களும், இங்கு நடைபெறும்
கருவறை: கட்டடக் கலைச் சிறப்பு

மதுரை என்றாலே மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் கோபுரங்களும், அழகுமிக்க சிற்பங்களும், இங்கு நடைபெறும் திருவிழாக்களும் எல்லோருடைய நினைவிலும் தோன்றும். தமிழ்மொழியின் வரலாற்றோடு தொடர்பு கொண்டு புகழ்பெற்ற திருக்கோயிலாக மதுரை திருக்கோயில் திகழ்கிறது. பல சிறப்புகளை உடையது இத்திருக்கோயில். இக்கோயிலில் எழுந்தருளியுள்ள சோமசுந்தரக் கடவுள் மானிடராக வந்து திருவிளையாடல்களை செய்தருளிய பெருமை உடையது.

இத்திருக்கோயிலில் சுந்தரேசுவரர் சன்னதி, கம்பத்தடி மண்டபம், வீர வசந்தராய மண்டபம், ஆயிரங்கால் மண்டபம் போன்றவை நாயக்கர் கால சிற்பங்கள், சிற்பக்கலை மற்றும் கட்டடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றன. 

திருக்கோயில் கருவறையில் சொக்கநாதர் லிங்க வடிவில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். இறைவன் கோயில் கொண்டுள்ள கருவறை விமானத்தின் அமைப்பு சற்று மாறுபட்டு விளங்குகிறது. புராண - தல வரலாற்றின் அடிப்படையில் கருவறை விமானம் அமைந்திருப்பதைக் காண்கிறோம். 

கருவறையின் வெளிப்புறச் சுவரில் கம்பீரமான யானை சிற்பங்களைக் காணலாம். இதற்கு "இந்திர விமானம்" என்று பெயர். எட்டு திசைகளிலும் எட்டு யானைகள் தாங்கி நிற்கும் அற்புதக் கோலத்தை இங்கே காணலாம். இவற்றை திக்கஜங்கள் என அழைப்பர். இவ்விமான அமைப்பு வேறெங்கும் காணப்படாத அமைப்பாகும். மேலும் கருவறை வெளிச்சுவரில் அமைந்துள்ள தேவ கோட்டங்களில் தட்சிணாமூர்த்தி, அடிமுடி காணா அண்ணல், துர்க்கை வடிவங்களைக் கண்டு வழிபடலாம். இவ்வரிய அமைப்பு உண்ட கருவறை விமானத்தை மதுரை நாயக்க மன்னன் விசுவநாத நாயக்கர் கி.பி. 1550-இல் கட்டினார் எனக் கூறப்படுகிறது.

மாறுபட்ட அமைப்பு கொண்ட இந்த விமானத்தை பற்றிய குறிப்புகள் திருவிளையாடற் புராணத்தில் காணப்படுகின்றன. மதுரையில் சிவபெருமான் செய்த திருவிளையாடல்களை பற்றி புராணங்கள் இரண்டு உண்டு. இவற்றுள் முற்பட்டது பெரும்பற்றப்புலியூர் நம்பி இயற்றிய திருவிளையாடல் புராணம். இது கி.பி. 13-ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது.

ஆலவாய் மான்மியம் 

பரஞ்சோதி முனிவரால் கி.பி. 10-ஆம் நூற்றாண்டில் மிக விரிவான முறையில் ஆலவாய் மான்மியம் என்னும் திருவிளையாடற் புராணம் அருளப்பெற்றது. இவை இரண்டிலும் இறைவன் சுந்தரேசுவரர் பெருமாள் எழுந்தருளியுள்ள இந்திர விமானம் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.

பெரும்பற்றப் புலியூர் நம்பி இயற்றிய திருவிளையாடல் புராணத்தில் கூறப்படும் வரலாற்றில் மதுரை முன்பு கடம்ப வனமாக இருந்தது. இந்திரன் இங்கு வந்தபொழுது மழையிலும் வெயிலிலும் இருந்த சொக்கநாதப் பெருமானைக் கண்டு வழிபட்டான். விருத்தாசுரன் என்ற அரக்கனை கொன்ற பாவம் போக்க இந்திரன் சிவபெருமானுக்குக் கோயில் அமைக்க விரும்பி தெய்வத் தட்சனிடம் சென்று "நீ தெய்வ விமானத்தை யானைமீது கொண்டு வா" என்றான்.

'மெய்ப்படு சிற்பம் வல்ல உத்தம 
விரைந்து நீ போய் -
ஒப்பில் காஞ்சன விமானமும் உம்பலில் கொணர்தி என்ன- 
அப்பொழுது அவன் போய் ஆசை 
யானையில் தொடர்ந்து காட்டத்- 
தப்பிலா விதியோ தங்கச்சி குளிர் விமானம்'

இந்திர விமானம்

இந்திரனால் அமைக்கப்பட்டதால் "இந்திர விமானம்' என அழைக்கப்பட்டது. இது புராண வரலாறு. ஆனால் ஓர் உருவகமாகவும் கருவறை குறிப்பிடப்படுகிறது. இந்த மாபெரும் உலகு ஒரு பேரண்டம். இதனை எட்டு யானைகள் என்ற அஷ்ட திக்கஜங்கள் தாங்குகின்றன. இவற்றில் உட்பொருளாய் இருந்து அருள் புரிகின்ற அவன் சொக்கநாதர் பெருமான். மதுரை சிவலோகம் ஆகவும் மற்றும் மக்கள் அனைவரும் சிவகணங்களும் பேறு பெற்றனர் என்பதை பெரும்பற்றப்புலியூர் நம்பி ஒரு பாடலில் குறிப்பிடுவதைக் காணலாம்.

இறைவன் எழுந்தருளியுள்ள  "இந்திர விமானம்" பற்றிய குறிப்புகள் பரஞ்சோதி முனிவர் அருளிய திருவிளையாடற் புராணத்திலும் காணப்படுகின்றன. இந்திரன் விருத்திராசுரன் என்ற அரக்கனை கொன்ற பாவம் போக்க கடம்பவனத்தில் இருந்த சிவலிங்கத்தை வணங்கி அருள் பெற்றான். கதிரவன் ஒளி, சிவலிங்கத்தின்மீது படுவதைக்கண்டு தன் வெண்கொற்றக் குடையால் நிழல் செய்ய எண்ணினான். அப்போது விண்ணிலிருந்து ஒரு மாணிக்க விமானம் இறங்கி வந்தது. தேவதச்சனால் உண்டாக்கப்பட்ட அவ்விமானம் எட்டு யானைகளும், 32 சிங்கங்களும், 64 சிவகணங்களும் தாங்கியிருந்தன. அவ்விமானத்தை பெருமானுக்கு சாத்திய இந்திரன் வானுலகத்தில் இருந்து வழிபாட்டுக்குரிய பொருள்களைக் கொண்டுவந்து பொற்றாமரை தீர்த்தத்தில் நீராடி வழிபாடு செய்தான் என கூறுகிறது.

வெள்ளையானை சாபம் தீர்த்த படலம் "இந்திர விமானம்"ஐ பற்றிய குறிப்பு காணப்படுகிறது. இந்திரனுடைய ஐராவதம் என்ற வெள்ளை யானை துருவாச முனிவர் அளித்த மலரை அதன் சிறப்பு அறியாமல் கீழே தள்ளி காலால் மிதித்தது. இதனால் இந்திரனும் ஐராவதமும் துர்வாச முனிவரின் சாபத்தைப் பெற்று வருந்தினர். தான் பெற்ற சாபம் நீங்க பொற்றாமரைக் குளத்தில் நீராடி இறைவனை அபிஷேகம் செய்து வழிபட்டு நலம் அடைந்தனர். 

ஐராவதம் இறைவனிடம் இந்த விமானத்தை தாங்கும் எட்டு யானைகளோடு, தானும் ஒன்பதாவது யானையாக விமானத்தின் முதுகில் தாங்க வேண்டும் என்ற தனது விருப்பத்தைக் கூறியது. இறைவன் மனம் மகிழ்ந்து இந்திரன் "என்னிடம் மிக்க அன்பு கொண்டவன். நீ அவனைச் சுமந்து செல்வது எனக்கு மகிழ்ச்சி அளிக்கும்' எனக்கூற, ஐராவதம் விண்ணுலகம் சென்றதாக ஒரு பாடல் குறிக்கிறது.

மேலும் திருநகரம் கண்ட படலத்திலும் (பாடல் 477), பொன்னாலாகிய இவ்விமானம் (பாடல் 486) பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. மதுரை கோயிலில் இருந்த விமானம் பொன்மலைத் தாங்கிய தோற்றம் போல் பொலிவு பெற்று ஒளி வீசும் விமானமாக காட்சியளித்தது. வேத ஆகம நெறியில் நடக்கும் முனிவர்களைப் பூஜை செய்ய நிமித்தமாகவும் (பாடல் எண் : 575) கூறுகிறது.

மாமனாக வந்து வழக்குரைத்த படலத்தில் கருவறை விமானம் "வந்து வானகடு போழ்ந்த மணிமுடி விமானம் கோயிற்' எனக் குறிப்பிடப்படுகிறது. (பாடல் 1933)
இறுதியாக அருச்சனைப் படலத்திலும் ‘மணிக்கனக விமானத்தமர்ந்த தனிச்சுடரின் செம்மை யடித்தாமரை வேணிச்சிரமேன் மலர்ப்பணிந்தேத்த", என்ற பொன்னாலாகிய விமானத்தில் எழுந்தருளிய ஒப்பற்ற ஒளி வடிவினனாகிய சோமசுந்தரக் கடவுளை போற்றி வழிபட்டனர் (பாடல் : 3347) எனக் குறிப்பிடப்படுகிறது.

சுந்தரேசுவரர் சந்நிதியில் கருவறையை அடுத்து அர்த்தமண்டபம், மகா மண்டபம் அமைந்துள்ளது. மகாமண்டபத்தில் வெளிப்புறச் சுவரில் கீழ்பகுதியில் இறைவன் அருளிய 64 திருவிளையாடல் நிகழ்ச்சிகள் சுதைச் சிற்பங்களாக அமைக்கப்பட்டுள்ளன. 

இதில் நான்மாடக்கூடலான படல வரலாற்றில் மதுரை கோயிலைக் குறிக்கும் பொழுது யானைகளுடன் கூடிய விமானத்தை சுதைச் சிற்ப வடிவமாக அமைத்து இருப்பதைக் கண்டு மகிழலாம்.

மேலும் திருவரங்கம் கோயிலுக்கு மதுரை நாயக்க மன்னர்கள் பெரும் தொண்டு செய்துள்ளனர். இங்கிருந்த மண்டபம் ஒன்றில் தந்த வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இம்மண்டபத்தில் இருந்த தந்தச் சிற்பங்கள் எல்லாம் ஸ்ரீரங்கநாதர் கோயில் கலைக்கூடத்தில் காட்சிக்காக வைத்துள்ளனர். 

இதில் ஒன்று மதுரை கோயில் வடிவத்தை இந்திர விமானமாக யானைகளுடன் வடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் காரைக்குடி அருகே உள்ள ஒரு கோயிலிலும், காரமடைக் கோயிலிலும் இத்தகைய அமைப்பினைக் காணலாம்.

யானைகளுடன் கூடிய இந்திர விமானத்தைப் புராணம் மற்றும் தல வரலாற்று அடிப்படையில் கருவறையை அமைத்திருக்கின்றனர் என்பதை அறியும் பொழுது நாம் மகிழ்ச்சி அடைகிறோம். மதுரை திருக்கோயிலுக்குச் செல்லும் பொழுது இதனைக் கண்டு போற்றுவோம்.

இந்திரன் பழிதீர்த்த படலத்தில் ஒரு பாடலில் (பாடல் : 432) "சுடர்விடு விமானம் மேய சுந்தர விடங்கா போற்றி' என்று போற்றப்படுகின்றது. பொன் வேய்ந்த விமானத்தில் எழுந்தருளியுள்ள சுந்தரேசுவரர் பெருமானை வழிபட்டு எல்லா நலன்களை யும் அடைவோம்!

- கி. ஸ்ரீதரன்,
தொல்லியல் துறை (ஓய்வு), சென்னை
புகைப்படம் - பொன். கார்த்திகேயன்

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com