ஜி 20:  இந்தியாவுக்கு என்ன லாபம்?

ஜி  20 நாடுகளின் உச்சி மாநாடு முதன்முதலில்  2008இல் அமெரிக்காவில் தொடங்கி, 18ஆவது முறையாக இந்தியாவில் நடைபெறுகிறது.
ஜி 20:  இந்தியாவுக்கு என்ன லாபம்?

ஜி 20 நாடுகளின் உச்சி மாநாடு முதன்முதலில் 2008இல் அமெரிக்காவில் தொடங்கி, 18ஆவது முறையாக இந்தியாவில் நடைபெறுகிறது. இந்த அமைப்புக்கு 2022ஆம் ஆண்டு டிசம்பர் முதல் 2023ஆம் ஆண்டு நவம்பர் வரை இந்தியா தலைமை வகிக்கிறது.

இந்த அமைப்பு உருவானதன் நோக்கம் எந்த அளவுக்கு நிறைவேறுகிறது? அதில் பங்கேற்பதால் இந்தியாவுக்கு என்ன லாபம்? என்பதற்கு விளக்கம் தருகிறார் சென்னை அரும்பாக்கம் டி.ஜி. வைஷ்ணா கல்லூரியின் வணிகவியல் துறை உதவிப் பேராசிரியர் ராகேஷ் சங்கர்.

அவருடன் ஓர் சந்திப்பு:

ஜி 20 அமைப்பு தொடங்கியதன் நோக்கம் என்ன? எந்த அளவுக்கு நிறைவேறி இருக்கிறது?

அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்ஸிகோ, ரஷியா, சவூதி அரேபியா, தென்ஆப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி, பிரிட்டன், அமெரிக்கா ஆகிய 19 நாடுகள், ஐரோப்பிய யூனியன் சேர்ந்த அமைப்பே "ஜி 20' ஆகும். 

வளர்ச்சி அடைந்த, வளர்ந்து வரும் நாடுகள் பொருளாதாரத்தின் முக்கியமான பிரச்னைகளை ஆலோசித்து, ஒருங்கிணைக்கும் முயற்சிதான் இது.

சர்வதேச ரீதியில் பார்க்கும்போது, ஜி 20 நாடுகளின் பொருளாதாரம் உலகின் மொத்த உற்பத்தியில் 85 சதவீதம்ஆகும். உலக வணிகத்தில் 80 சதவீதம் ஆகும். உலக மக்கள் தொகை என்ற கோணத்தில்பார்த்தால், இந்த நாடுகள் மூன்றில் இரண்டு பங்கைக் கொண்டிருக்கிறது.

வறுமை ஒழிப்பு முதல் பருவ நிலை மாறுபாடு காரணமாக ஏற்படும் ஆபத்துகள் என பல்வேறு பிரச்னைகளைத் தீர்க்க, ஜி 20 நாடுகள் தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

கடந்த ஆண்டில் இந்தோனேஷியாவில் மாநாடு நடைபெற்றது. அடுத்த உச்சி மாநாடு பிரேசில் நாட்டில் உள்ள ரியோடி ஜெனிரோவில் நடைபெற உள்ளது. 2025இல் தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும்.

நாடு முழுக்க பல்வேறுநகரங்களிலும் ஜி20 தொடர்பான கூட்டங்கள் சில மாதங்களாக நடைபெற்றனவே? அவற்றில் என்ன நடக்கின்றன?

ஒவ்வொருஆண்டும் தலைமை ஏற்கும் நாடும் ஒரு லட்சியத்தை அறிவிப்பார்கள். அதன்படி இந்தியா அறிவித்த லட்சியம்தான் "வசுதேவ குடும்பகம்'. "உலகம் முழுவதும் ஒரே குடும்பம்' என்ற நம்முடைய பாரம்பரிய தத்துவத்தின் அடிப்படையில், "ஒரே பூமி; ஒரே குடும்பம்; ஒரே எதிர்காலம்' என்று எதிர்காலத்துக்கு அழைத்துச் செல்லும் வகையில் இந்தியா லட்சிய அறிவிப்பை செய்துள்ளது.

"யாதும் ஊரே! யாவரும் கேளிர்!' என்று கணியன் பூங்குன்றனார் சொன்னதும் இதுவே.

இருபது நாட்டுத் தலைவர்கள் ஒருஇடத்தில் இரண்டு நாள்கள் கூடி பல்வேறு பிரச்னைகளையும், தீர்வுகளையும் குறித்துப் பேசுவது சாத்தியமா? எனவேதான், ஆண்டு முழுவதுமாக பல்வேறு துறைகள் தொடர்பான விஷயங்களையும் விவாதிக்க, நாட்டில் அறுபதுக்கும் மேற்பட்டநகரங்களில் சுமார் 200 கூட்டங்கள் நடைபெற்றன.

அவற்றில் உறுப்பு நாடுகளிலிருந்து அந்தந்தத் துறை பிரதிநிதிகள்கலந்துகொண்டு, தங்களது கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.

உலகத்துக்கு இந்தியா சொல்லும் செய்தி என்ன?

உலக மக்களின் மேம்பாட்டுக்கு அனைவரும் உழைக்க வேண்டியதன் அவசியத்தை இந்தியா வலியுறுத்துகிறது. ஒவ்வொரு நாடும் சுயசார்பு அடைய வேண்டியதன் முக்கியத்துவம் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

ஜி 20 மாநாடு இரு பிரிவுகளாக நடைபெறுகிறது. முதலாவது நிதி சார்ந்த விஷயங்களைப் பற்றியது. இந்த நாடுகளின் நிதிஅமைச்சர்களும், மத்திய வங்கிகளின் ஆளுநர்களும் சர்வதேச அளவில் நிலவும் பிரச்னைகளை விவாதிப்பார்கள். இன்னொரு பிரிவில் மற்ற அனைத்து விஷயங்கள் குறித்தும் அலசப்படும்.

சிறிய நகரங்களையும் மத்திய அரசு தேர்ந்தெடுத்து, கூட்டங்கள் நடத்தப்பட்டதால் அந்த நகரங்களில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்பட்டு, சுற்றுலா வளர்ச்சியும் பொருளாதார வளர்ச்சியும் அதிகரிக்கும்.

அனைவருக்குமான நிதிச் சேவையில் எண்ம பணப் பரிமாற்றத்தில் இந்தியா அபாரமான சாதனை புரிந்துள்ளது. உலகின் பல நாடுகளுக்கும் இந்தியா முன்னோடியாக உள்ளது.

உதாரணத்துக்கு, இந்தியாவின் "பீம்' பணப்பரிவர்த்தனை செயலியின் செயல்பாட்டை ஏழு நாடுகள் வியந்து, தாங்களும் பயன்படுத்த ஆர்வம் காட்டி உள்ளன.

இந்தியாவின் புவிசார் குறியீடு குறித்து மற்ற நாடுகளுடன் பகிர்ந்துகொள்ளப்பட்ட தகவல்களின் பயனாக, பாரம்பரிய கலைப் பொருள்கள், விவசாயப் பொருள்களுக்கு சர்வதேச அங்கீகாரம்கிடைத்துள்ளது.

ஜி 20 நாடுகளின் வேளாண் விஞ்ஞானிகளின் கூட்டமும் நடைபெற்றுள்ளது. உலக நாடுகள் பலவற்றில் வறுமை நிலவும் சூழ்நிலையில், உணவு உற்பத்தியைப் பெருக்கி, அனைவருக்குமான உணவு உறுதிப்பாட்டை நிலைநாட்டிட வேண்டியது அவசியம்.

இவை அனைத்துக்கும் மேலாக, சிறுதானியங்கள் விஷயத்தில் இந்தியா அதிக கவனம் செலுத்துகிறது. மறைந்துபோன பல சிறுதானியங்கள் மீட்டெடுக்கப்பட்டுள்ளன. இவற்றை ஜி20 நாடுகளிடையே அறிமுகப்படுத்தி, அவற்றின்முக்கியத்துவத்தையும் இந்தியா எடுத்துச் சொல்லிவருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com