அசத்திய அரியலூர்

ஒவ்வொரு மாவட்டத்திலும் நடைபெறும் புத்தகத் திருவிழாக்களில் வெவ்வேறு புதுமைகள்
அசத்திய அரியலூர்

ஒவ்வொரு மாவட்டத்திலும் நடைபெறும் புத்தகத் திருவிழாக்களில் வெவ்வேறு புதுமைகள். அந்த வகையில், அரியலூரில் நடைபெற்ற விழாவிலும் சிறுதானியங்கள், இயற்கை விழிப்புணர்வோடு அசத்தலாய் இருந்தது.

அரியலூர் மாவட்ட நிர்வாகம், தமிழ்ப் பண்பாட்டு பேரமைப்பு, தென்னிந்திய புத்தக விற்பனையாளர் பதிப்பாளர் சங்கம் சார்பில் உலக புத்தக நாளன்று, அரியலூர் மாவட்ட 7ஆம் ஆண்டு புத்தகத் திருவிழா நடைபெற்றது. இங்கு புத்தக அரங்குகளைத் தாண்டி , பாரம்பரிய விழாக்கள், விழிப்புணர்வு நிகழ்வுகள், சிறைவாசிகளுக்கு புத்தகம் வழங்குதல், 360 காட்சிப் பதிவுகள்.. என பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.

செல்ல பிராணிகள் கால்நடை வளர்ப்பு கண்காட்சி காண்போரை ஆச்சரியப்படவைத்தது. சிறுதானிய ஆண்டை முன்னிட்டு அடுப்பில்லாமல், கம்பு சேமியா, எள் உருண்டை, குதிரை வாலி, பாசிப்பயறு பாயசம், ராகி, கொள்ளு போன்ற 100க்கும் மேற்பட்ட உணவு தயாரித்தல் நிகழ்ச்சி உணவுப் பிரியர்களின் நாவுக்கு ரசனையூட்டியது.

கல்லூரி மாணவர்களுக்காக பல்வேறு மாநிலங்களின் கலாசாரத்தைப் பிரதிபலித்த ஆடை அலங்காரப் போட்டி, குழந்தைகளுடன் தாய்மார்களுக்கான வார்த்தை விளையாட்டு, நினைவுத் திறன், பிரமிடு உருவாக்குதல், பெண்களின் முன்னேற்றம் சார்ந்த கலைப் போட்டிகள், ரங்கோலி வரைதல், நெகிழி ஒழித்தல், பெண் கல்வியின் முக்கியத்துவம் சார்ந்த மாணவர்களின் நாடகம் போன்றவைகுறிப்பிடத்தக்கவை.


புத்தகத் திருவிழா குறித்து கருத்துக் கேட்டோம்:

வி.மீனாட்சி, வாரணவாசி அரசு உயர்நிலைப் பள்ளித் தமிழாசிரியை : மாலையில் நடைபெற்ற கலைநிகழ்ச்சிக்கு மாணவர்களை அழைத்து வந்தோம். அப்போது மாணவர்களும் அரங்குகளைப் பார்வையிட்டு, புத்தகங்களை வாங்கினர். பள்ளிகளுக்குப் புத்தகங்கள் தேவைப்படுகின்றன. இதுபோன்று கண்காட்சியில் வாங்குவதால் 25 சதவீதம் வரையிலான தள்ளுபடி கிடைக்கிறது.

தேர்வுகள் முடிந்து பள்ளி விடுமுறை நாள்கள் என்பதால், ஆசிரியர்களும் பார்வையிட்டு, மாணவர்களுடைய பிற்கால வாழ்க்கையின் முன்னேற்றத்துக்குத் தேவையான புத்தகங்களை வாங்கினர்.

மனிதர்களுக்குத் தெளிவும் தேடலும் வர முக்கியக் காரணம் புத்தகங்கள்தான். எழுத்து என்பது ஒரு தலைமுறை சிந்தித்ததை அடுத்த தலைமுறையைச் அறியச் செய்யும் அறிவு. தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் அமைக்கப்பட்டிந்த அரங்கு ஒன்றில் காகித சுருள், துணி பைகள், அலுமினிய தாள், மண் குவளைகள். மண்பாண்டங்கள், காகித மர உறிஞ்சும் குழாய்கள், காகித சணல் பைகள், துணி கொடிகள், வாழை தாமரை பாக்கு மர இலைகள், உலோக தட்டுகள், உலோக கொள்கலன், பீங்கான் தட்டுகள், கண்ணாடி குவளைகள் இப்படி எண்ணற்ற பொருட்களை அந்த அரங்கில் காட்சிப்படுத்தினர். இது பார்வையாளர்களை ஈர்த்தது.

புத்தக ஆர்வலர் எஸ்.பி.கவிதா: கோடை விடு முறைக்காக, அப்பா வீட்டுக்குச் செல்லும் வழியில் புத்தகத் திருவிழாவைப் பார்வையிடும் வாய்ப்பு கிடைத்தது. குழந்தைகளுக்கு கிடைக்கும் விடுமுறை நாள்களில் நாம் கற்றுக் கொடுக்கப் போகின்ற விஷயம் என்ன? குழந்தைகளின் எதிர்கால வளர்ச்சிக்கும், பிற்கால வாழ்க்கைக்கும் உதவுமா? என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். இப்படிப் பார்த்தால் ஞாபகத்துக்கு முதலில் வருவது பல்வேறு நிலைகளை தாண்டி புத்தகங்கள்தான். புத்தகம் என்பது பாடப் புத்தகங்களை மட்டும் குறிப்பதில்லை. பாடத் திட்டத்தைத் தாண்டி ஏராளமான விஷயங்கள் உள்ளன. அவை புத்தகங்கள் படித்தல். புத்தகங்களின் பயன்களை ஊர் அறிய வேண்டும். அறிந்தும் செயல்படுத்த முடியாமல் இருப்பது தவறு.

சின்ன வயதிலேயே படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தினால் குழந்தைகள் வளர, வளர ஆர்வமும் பெருகும். நாம் படித்தால், குழந்தைகளும் படிக்கத் தொடங்குவர்.

அரியலூர் பின்தங்கிய மாவட்டம் என்றாலும், வரலாற்று ஆய்வுகள் அதிகமாக உள்ளன என்பதை தொல்லியல் சார்ந்த அரங்கத்தில் விளக்கத்துடன் எழுதப்பட்டிருந்ததையும், காட்சிப்படுத்தப்பட்டிருந்த பழங்காலப் பொருள்களையும் பார்த்து தெரிந்து கொண்டோம்.

சிறுதானியங்ளைப் பயன்படுத்தும் முறை பல முன்னேற்றங்களைக் கண்டுள்ளது. பாரம்பரியமாக சில சிறுதானியங்ளை நாம் கைக்குத்தல் வாயிலாகப் பயன்படுத்தினோம். தற்போது அவற்றிக்குத் தேவையான இயந்திரங்களும் இருப்பதால் தோலை நீக்குவதிலுள்ள சிரமங்கள் குறைந்து விடுகின்றன. பண்பாட்டின் ஒருங்கிணைந்த அங்கமாக சிறுதானியங்கள் இருந்து வருகின்றன. சிறுதானியங்கள் விழிப்புணர்வுக்காக, தனியாக அடுப்பிலா சிறுதானிய உணவு தயாரித்தல் போட்டி நடத்தியிருப்பது வரவேற்கத்தக்க விஷயம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com