ரங்கநாதரின் அரங்காயணம்!

அரங்காயணம் - தென்னிந்தியாவை அலங்கரித்த ரங்கநாதர் பயணம்
ரங்கநாதரின் அரங்காயணம்!

ஸ்ரீரங்கத்திலிருந்து ரங்கநாதர் புறப்பட்டு 48 ஆண்டுகள் தென் இந்தியா முழுவதும் பயணித்து மீண்டும் ஸ்ரீரங்கம் திரும்பிய சரித்திரம்தான் "அரங்காயணம்'. அந்தச் சரித்திரத்தை ஆவணப்படமாக எடுத்திருக்கிறார் எழுத்தாளரும் நடிகருமான பாம்பே கண்ணன். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், அவரிடம் பேசியபோது:

"14-ஆம் நூற்றாண்டில் தில்லி சுல்தான்களின் படைகள் ஸ்ரீரங்கத்தைத் தாக்கியபோது, கோயில் சிதிலமடைந்தது. பக்தர்கள் கருவறைக்குள்ளே மூலவர் சிலைக்கு முன்பாக சுவர் எழுப்பி சுல்தானின் படையினரின் கண்களில் படாமல் அரங்கனை மறைத்தனர்.

உற்சவர் அரங்கனின் பஞ்ச லோக திரு உருவச் சிலை, பூஜை பொருள்கள், விலை உயர்ந்த நகைகளை எடுத்துக் கொண்டு குருபீடமான பிள்ளை லோகாச்சாரியார் தலைமையிலான 52 பக்தர்கள் ஸ்ரீரங்கத்தில் இருந்து புறப்பட்டனர்.

வழியில் ஆங்காங்கே ஓராண்டு, ஈராண்டு என்று தங்கி, பயணித்துக் கொண்டே இருந்தனர். முதலில் மதுரைக்குப் பக்கத்தில் உள்ள ஜோதிஷ்குடியில் ஒரு குகையில் பெருமாளை மறைத்து வைத்து பூஜை செய்தனர். அங்கிருந்து இருஞ்சோலை, கோழிக்கோடு, முந்தேரி, திருக்கணாம்பிகை, மேல்கோட்டை, திருப்பதி... என்று பயணித்தனர். திருப்பதியில் ரங்க மண்டபத்தில் வைத்து, அரங்கனுக்கு தினசரி பூஜைகள் நடத்தப்பட்டன. அதன் நீட்சிதான் இன்றும் திருமலையில் பெருமாளுக்குத் தமிழ்ப் பாசுரங்கள் பாடும் மரபு.

பிறகு திருவண்ணாமலைக்கு அருகில் உள்ள சிங்கவரத்தில் சில ஆண்டுகள் தங்கிவிட்டு, இறுதியாக ஸ்ரீரங்கம் வந்தடைந்தனர்.

இப்படியாக, இன்றைய தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், ஆந்திரம் என்று தென்னிந்தியா முழுவதும் பயணம் செய்தனர். இந்தத் தகவல்கள் எல்லாம், அந்தந்த ஊர்களில் உள்ள கோயில்களில் இருக்கும் கல்வெட்டுகளில் பதிவாகி இருக்கின்றன.

கி.பி. 1323-ஆம் ஆண்டு ஸ்ரீரங்கத்தில் இருந்து தொடங்கிய இந்த "அரங்கன் உலா' நாற்பத்து எட்டு ஆண்டுகள் கழித்து, 1371-ஆம் ஆண்டு அரங்கன் ஸ்ரீரங்கம் திரும்பி வந்தபோது முடிவடைந்தது.

அரங்கனோடு புறப்பட்ட 52 பேர் ஒவ்வொருவராக மரணம் அடைய, கடைசியாக மிஞ்சிய ஒருவர் மட்டுமே அரங்கனை மீண்டும் ஸ்ரீரங்கத்துக்குத் திரும்பும்போது உடன் இருந்தார் என்பது வரலாறு.

இதற்கிடையில்தான் ஹரிகரர், புக்கர் என்ற இருவரால் விஜயநகரப் பேரரசு நிறுவப்படுகிறது. அவர்கள் வழிவந்த குமார கம்பனார் அரசராகப் பொறுப்பேற்றதும், அரங்கனின் அடியார்கள் சந்தித்து, "சுல்தானை வீழ்த்தி ஸ்ரீரங்கத்தை மீட்க வேண்டும். அங்கே அரங்கனை மீண்டும் எழுந்தருளச் செய்ய வேண்டும்' என்று வேண்டுகோள் விடுத்தனர். அதன் பின்னர், மதுரையை மீட்டு, ஸ்ரீரங்கத்தையும் கைப்பற்றி, அரங்கனை மீண்டும் ஸ்ரீரங்கத்தில் ஸ்தாபித்தனர்.

நான் பிரபல எழுத்தாளர்களின் படைப்புகளை புது முயற்சியாக ஒலிப்புத்தகங்களாகக் கொண்டு வந்தேன். அதில் ஒன்றுதான் ஸ்ரீ வேணுகோபாலன் எழுதிய "திருவரங்கன் உலா' என்ற சரித்திர நாவல். அதை படித்தபோது, 48 ஆண்டு சரித்திர நிகழ்வுகளையும் ஆவணப்படுத்த வேண்டும் என்ற பெரும் ஆர்வம் ஏற்பட்டது.

அரங்கனின் உலாவில் வரலாற்றையும், கற்பனையையும் ஸ்ரீவேணுகோபாலன் பின்னிப் பிணைத்திருந்தார். இதே விஷயம் குறித்து "மதுரா விஜயம்' என்ற நூலிலும் வெளிவந்திருக்கிறது. நான் தீவிர ஆராய்ச்சியின் மூலமாக வரலாற்றுப்பூர்வமான தகவல்களை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு, "அரங்காயணம்' என்று ஆவணப் படமாக எடுத்திருக்கிறேன்.

அரங்கனின் உலாவுடன் தொடர்புடைய அனைத்து இடங்களுக்கும் படப்பிடிப்புக் குழுவினரை 2,500 கி.மீ. பயணித்து அழைத்துகொண்டு, ஆவணப்படுத்தி இருக்கிறேன்.

ஸ்ரீரங்கம் கோயில் கல்வெட்டுகள் குறித்து ஆராய்ச்சி செய்த வைஷ்ணவ ஸ்ரீ கிருஷ்ணமாச்சாரியாரும், என்னுடனே பயணித்து, ஒவ்வொரு இடத்தோடும் தொடர்புடைய ஆன்மிகச் சம்பவங்களை எடுத்துக் கூறி இருக்கிறார்.

அரங்கனின் திரு உலாவுக்கும் அப்பால், ஸ்ரீரங்கம் உருவான வரலாறு, ஸ்ரீரங்கத்தின் வரலாற்றுடன் தொடர்புடையவர்கள், அவர்களின் பங்களிப்புகள், போன்ற விஷயங்களும் ஆவணப் படத்தில் இடம்பெற்றுள்ளன.

அரங்கனின் உலாவை தொலைக்காட்சி நெடுந்தொடராக எடுக்கவே நான் விரும்பினேன். ஆனால், பிரம்மாண்டமான ஒரு சரித்திர, ஆன்மிகத் தொடரை எடுக்கும் அளவுக்கு எனக்கு நிதிவசதி இல்லை. எனவேதான் இரண்டரை மணி நேர ஆவணப் படமாக எடுத்துவிட்டேன்.

சென்னை, மும்பை உள்ளிட்ட சில இடங்களில் சில அமைப்புகளின் ஏற்பாட்டில், அரங்காயணம் ஆவணப் படத்தை நான் திரையிட்டேன். பார்த்தவர்கள் மனம் நெகிழ்ந்து பாராட்டினார்கள். தேவையானவர்களுக்கு இந்த ஆவணப்படத்தை பென் டிரைவ்வில் பதிவு செய்து விற்பனை செய்து வருகிறேன்'' என்கிறார் பாம்பே கண்ணன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com