கண்ணொளி நாயகி!

தென் மாவட்டங்களில்  சிறு கிராமங்களில்கூட  கண்ணொளி  மையங்களை  நிறுவியுள்ளோம்.
கண்ணொளி நாயகி!

தென் மாவட்டங்களில் சிறு கிராமங்களில்கூட கண்ணொளி மையங்களை நிறுவியுள்ளோம். உதவிக்கு ஆளில்லாமல் அறுவைச் சிகிச்சைக்கு வரும் ஏழைகளுக்குத் தேவையான சிகிச்சையை இலவசமாக அளித்து பார்வையுடன் திரும்ப அனுப்பி வைக்கிறோம்'' என்கிறார் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையின் நிறுவனர் வெங்கடசாமியின் தங்கையும், கௌரவத் தலைவருமான டாக்டர் நாச்சியார்.

"பத்மஸ்ரீ' விருதுக்காக அண்மையில் தேர்வு செய்யப்பட்ட அவரிடம் பேசியபோது:

'எனது சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டத்தில் வடமலாபுரத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தேன். சென்னையில் பொது மருத்துவப் படித்து முடித்ததும் குழந்தை மருத்துவத்தில் தனிக் கவனம் செலுத்தினேன்.

"கண் புரைக்கு சிகிச்சை தராவிட்டால் பார்வை பறிபோகும் அபாயம் உள்ளது.

கிராம மக்களின் பார்வை இழப்பைத் தடுக்க, கண் மருத்துவம் படி' என்று எனது அண்ணன் வெங்கடசாமி கூறியதன்பேரில், சிறப்பு கண் மருத்துவம் படித்தேன். வெளிநாட்டிலும் பயிற்சி பெற்றேன்.

தென் தமிழகத்தில் வசிப்போர் கண் சிகிச்சைக்காக சென்னைக்குச் செல்ல வேண்டிய நிலைமையை மாற்ற, மதுரை அண்ணா நகரில் அரவிந்த் கண் மருத்துவமனையை டாக்டர் ஜி. வெங்கடசாமி 1976-ஆம் ஆண்டில் தொடங்கினார். நானும் அங்கு பணியாற்றத் தொடங்கினேன்.

ஏழைகளுக்குத் தரமான கண் சிகிச்சையை இலவசமாக வழங்க ஆரம்பித்தோம். அதில்தான் நாங்கள் யோகி அரவிந்தரின் "அன்னை' போதித்த மனநிறைவை உணர்ந்தோம்.

இன்று தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மருத்துவமனைகளைத் தொடங்கியுள்ளோம். கிராமங்களில் அடிக்கடி இலவச கண் பரிசோதனை முகாம்களை நடத்துகிறோம்.

ஏழைகளுக்குத் தரமான கண் சிகிச்சையை முற்றிலும் இலவசமாகவே மருத்துவமனை இன்றுவரை வழங்கிவருகிறது. தினமும் 15 ஆயிரம் பேர் கண் சிகிச்சைகளைப் பெறுவதோடு, 5 ஆயிரம் சிகிச்சைகளும் நடைபெறுகின்றன.

தென் மாவட்டங்களில் சிறு கிராமங்களில் கூட கண்ணொளி மையங்களை நிறுவியுள்ளோம். உதவிக்கு உறவினர் இல்லாமல் அறுவை சிகிச்சைக்கு வரும் ஏழைகளுக்குத் தேவையான சிகிச்சை அளித்து கண் பார்வையுடன் திரும்ப அனுப்பி வைக்கிறோம்.

கண் மருத்துவரான நான் பணியிலிருந்து ஓய்வு பெற்று, இயற்கை வேளாண்மையில் ஈடுபட்டிருக்கிறேன்.
மதுரைக்கு அருகில் கருப்பாயூரணி என்ற ஊரில் உருவாக்கியிருக்கும்

"ஆரோஃபார்ம்' என்ற இயற்கைப் பண்ணை தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

கிராமப்புற மாணவிகள் பள்ளிப் படிப்பை முடித்து மேல்படிப்பு படிக்க இயலாத நிலையில் இருப்பவர்களைத் தேர்ந்தெடுத்து மருத்துவமனை செவிலியராகப் பயிற்சி வழங்குகிறோம். சேவை செய்வதில் விருப்பம் உள்ளவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குப் பயிற்சி கொடுத்து செவிலியர்களாக எங்களது மருத்துவமனைகளில் பணிபுரியச் செய்கிறோம்.

செவிலியராவதில் ஆர்வம் இல்லாதவர்களை இயற்கை விவசாயத்தில் பயிற்சி தருகிறோம். கண்களைப் பாதுகாக்கும் வழிமுறைகள், சிகிச்சைகள் பற்றிய விழிப்புணர்வு வழங்கும் "கண்ஒளி' மாத இதழையும் பிரசுரிக்கிறோம்.

எனக்குக் கிடைத்துள்ள பத்மஸ்ரீ விருதை அரவிந்த் கண் மருத்துவமனைகளில் பணியாற்றும் அனைவரின் சேவைகளை அங்கீகரித்து வழங்கப்பட்டுள்ள விருதாகத்தான் நான் கருதுகிறேன்.

எங்கள் மருத்துவமனையில் டாக்டர் வெங்கடசாமிக்கு 1974-ஆம் ஆண்டிலும், டாக்டர் நம்பெருமாளுக்கு 2006-ஆம் ஆண்டிலும் "பத்மஸ்ரீ' விருது வழங்கப்பட்டது.

எண்பத்து மூன்று வயதில் இப்போது எனக்கு கிடைத்துள்ளது. ஒரே நிறுவனத்தைச் சேர்ந்த மூவருக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்திருப்பது அரவிந்த் கண் மருத்துவமனையின் தொண்டுக்குக் கிடைத்த அங்கீகாரம்'' என்கிறார் நாச்சியார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com