காலம் திருடிய கடுதாசிகள்

தெருவுக்கு ஒரு தொலைபேசியே அதிகம் என்ற அந்தக் காலத்தில், அதிநவீன தனிமனித தகவல் தொடர்பாக இருந்தவை கடிதங்களும் தந்திகளும்.

தெருவுக்கு ஒரு தொலைபேசியே அதிகம் என்ற அந்தக் காலத்தில், அதிநவீன தனிமனித தகவல் தொடர்பாக இருந்தவை கடிதங்களும் தந்திகளும்.

""பொண்ணைப் புடிச்சிருக்கு... கொடுக்கல் வாங்கலும் சரிதான்.... இருந்தாலும் குடும்பத்துல கலந்துக்கிட்டுக் கடிதம் போடறோம்'' எனச் சொல்லிவிட்டு எழுந்துபோகும் மாப்பிளை வீட்டாரின் சம்மதக் கடிதம் வந்து சேரும் வரை தூக்கம் தொலைத்த பெண்ணின் பெற்றோரையும், "தாயும் சேயும் நலம்' என்ற வரிகளைத் தாங்கிய கடிதம் கையில் கிடைக்கும் வரை கர்ப்பிணி மகளை நினைத்து அல்லும் பகலும் கலங்கிய தாயையும், "அப்பாவுக்குத்தான் உடல்நிலை சரியில்லை. நாங்கள் இருக்கிறோம். புகுந்த வீட்டில் நீ முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டிருக்காதே' என்பதைப் படித்துத் துக்கத்தைத் தொண்டைக்குழிக்குள் அடைகாத்த மகளையும் இன்றைய குறுஞ்செய்தி, முகநூல் தலைமுறைக்குத் தெரியுமா?

""காலணா கடுதாசிக்கு வக்கத்துப் போயிட்டேன்... இருக்காளா? போயிட்டாளான்னு தெரிஞ்சிக்கக் கூட ஒரு கடுதாசி போடக்கூடாதா?'' என்ற புலம்பல் பிள்ளைகளால் மறக்கப்பட்ட முதிய தாய்மார்களின் அன்றாட அங்கலாய்ப்பாய் இருந்த காலம் அது.

ஆனால் இன்றோ....

""இந்த ஒரு தபாலுக்காக இத்தனை தூரம் வர வேண்டியிருக்கு....''

பக்கவாட்டில் தபால்களும் பார்சல்களும் பிதுங்கி வழியும் பெரிய சாக்குப் பைகள் இல்லாத இளைத்துப்போன சைக்கிளைத் தள்ளிக்கொண்டு தனியாகப் பேசியபடி சென்றவரிடம் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, அவருக்குச் சைக்கிள் ஓட்ட வருமா எனக் கேட்கத் தோன்றியது... என்னைக் கடந்து சென்றுவிட்டவரை திரும்பிப் பார்த்தேன்... உக்கிரமான வெயிலில் நீண்டு தள்ளாடிய அவரின் நிழலைக் கண்டதும் பேசத் தோன்றவில்லை.

சாலையோர டீக்கடையின் கானத்தைப் போலவே காலம் திருடிய கடுதாசிகளும் காற்றில் கரைந்துவிட்டாலும் அந்தக் கடிதங்களின் வரிகள் இன்னும் பலரது மனச் சுவர்களில் அழியாமல்தான் இருக்கின்றன.

(சாமானியனின் கிறுக்கல்கள் - http:saamaaniyan.blogspot.in)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com