சோதனைக்குழாய் முறையில் தாவரங்களை வளர்த்தவர்!

அறிவியலின் பல துறைகளில் பல நாடுகள் சாதனை புரிந்து வருகின்றன. அவ்வகையில், தாவரவியலில் உலக அளவில் இந்தியாவின் பெயரை நிலைநாட்டிய விஞ்ஞானி பஞ்சானன் மகேஸ்வரி. சோதனைக்குழாய் முறையில் மலர்த் தாவரங்களை உருவாக்கும் அரிய தொழில்நுட்பத்தைக் கண்டறிந்தவர் அவர்.
சோதனைக்குழாய் முறையில் தாவரங்களை வளர்த்தவர்!
Updated on
2 min read

அறிவியலின் பல துறைகளில் பல நாடுகள் சாதனை புரிந்து வருகின்றன. அவ்வகையில், தாவரவியலில் உலக அளவில் இந்தியாவின் பெயரை நிலைநாட்டிய விஞ்ஞானி பஞ்சானன் மகேஸ்வரி. சோதனைக்குழாய் முறையில் மலர்த் தாவரங்களை உருவாக்கும் அரிய தொழில்நுட்பத்தைக் கண்டறிந்தவர் அவர்.

ராஜஸ்தானத்தின் ஜெய்ப்பூரில் 1904, நவ. 9-இல் பிறந்தார் பஞ்சானன் மகேஸ்வரி. அங்குள்ள எவிங் கிறிஸ்தவப் பள்ளியில் படித்த பஞ்சானனுக்கு மருத்துவக் கல்வி பயில வேண்டும் என்பதே ஆர்வமாக இருந்தது. ஆனால், அவரது பார்வைக் குறைபாடு காரணமாக, அத்துறையில் அவரால் சேர முடியவில்லை. அதுவே அவர் பிற்காலத்தில் தாவரவியல் விஞ்ஞானியாக மலர உதவியது எனலாம்.

அலகாபாத் பல்கலைக்கழகத்துக்கு உள்பட்ட எவிங் கிறிஸ்தவக் கல்லூரியில் இன்டர்மீடியட் படிப்பும் (1921), அறிவியல் இளநிலைப் பட்டமும் (1925), முதுநிலைப் பட்டமும் (1927) பெற்ற பஞ்சானன், 1931-இல் ஆராய்ச்சி முனைவர் பட்டமும் பெற்றார்.

கல்லூரிக் காலத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல தாவரவியல் பேராசிரியர் வின்ஃபீல்டு ஸ்காட் டட்ஜனின் வழிகாட்டுதலில் பாஞ்சானன் ஆராய்ச்சிகளைச் செய்தார். தாவர வடிவமைப்பியல், கருவியல், உடலியல் தொடர்பான ஆய்வுகளை டட்ஜனின் மேர்பார்வையில் பஞ்சானன் மேற்கொண்டார். அவரை தனது தலைமை மாணவராக டட்ஜன் நடத்தினார்.

1930-இல் ஆக்ரா கல்லூரியில் பஞ்சானன் விரிவுரையாளராகச் சேர்ந்தார். அங்கு அவரது முயற்சியால் தாவரக் கருவியல் துறை தோற்றுவிக்கப்பட்டது. அவரது மனைவி சாந்தியும் அவரது தாவரவியல் ஆராய்ச்சிகளுக்கு உறுதுணையாகச் செயல்பட்டார். தனது தீவிர களஆய்வால் மிக விரைவிலேயே உதவிப் பேராசிரியராக பஞ்சானன் உயர்ந்தார். அப்போதே தாவரவியலில் நம்பிக்கை நட்சத்திரமாக அவர் கருதப்பட்டார்.

1936-37-இல் ஐரோப்பாவுக்கும் பிரிட்டனுக்கும் ஆய்வுப் பயணமாகச் சென்று வந்த பஞ்சானன், பிரபல தாவரவியல் விஞ்ஞானி பீர்பல் சாஹ்னியின் அழைப்பை ஏற்று, லக்னோ பல்கலைக்கழகத்தில் சிறிதுகாலம் பேராசிரியராகப் பணிபுரிந்தார். அப்போதுதான் டாக்கா பல்கலைக்கழகத்தில் பணிபுரிய வருமாறு அவருக்கு அழைப்பு வந்தது.

உலகப் புகழ் பெற்ற இந்திய விஞ்ஞானிகளான சத்யேந்திரநாத் போஸ், மேகநாத் சஹா ஆகியோர் அங்கு பணிபுரிந்த காலம் அது. அங்கு 1939 முதல் 1947 வரை தாவரவியல் துறையின் தலைவராகப் பணிபுரிந்தார். அந்த காலகட்டத்தில் தாவரவியலின் பல நவீனப் பிரிவுகளை டாக்கா பல்கலைக்கழகத்தில் வளர்த்தார் பஞ்சானன்.

தேசப் பிரிவினையை அடுத்து கிழக்கு வங்கப் பகுதிகள் பாகிஸ்தானில் சேர்ந்தபோது, டாக்கா பல்கலைக்கழகத்திலிருந்து பஞ்சானன் வெளியேற நேர்ந்தது. அவரைப் பதவியில் தொடருமாறு கிழக்கு பாகிஸ்தான் அரசு நிர்வாகிகள் வேண்டுகோள் விடுத்தனர். ஆயினும் பஞ்சானன் பிரிவினையின் துயரத்தால் அங்கிருந்து தில்லி வந்தார்.

பஞ்சானன் மகேஸ்வரி இந்தியாவுக்கு திரும்பியபோதும், கிழக்கு பாகிஸ்தான் அரசு, அவரது சேவையை மறக்கவில்லை. அவர் டாக்கா பல்கலைக்கழகத்தில் நிறுவிய ஆய்வகத்தையும், அலுவலகத்தையும் பொக்கிஷமாகப் பாதுகாத்து வருகிறது. அங்கு அவருக்கு நினைவுச் சின்னமும் நிறுவப்பட்டுள்ளது.

1949-இல் தில்லி பல்கலைக்கழகத்தில் தாவரவியல் துறைத் தலைவராகச் சேர்ந்த பஞ்சானன், தனது இறுதிக்காலம் (1966) வரை அங்கு பணிபுரிந்தார். அப்போது, தாவரவியலில் பல அரிய ஆராய்ச்சிகளை வெற்றிகரமாக நிகழ்த்தினார்.

1950-இல் அவர் எழுதிய பூக்கும் தாவரங்களில் கருவியல் -ஓர் அறிமுகம் (An Introduction to the Embryology of Angiosperms)) என்ற நூல் உலக அளவில் அவருக்கு புகழைத் தந்தது. இருபதாம் நூற்றாண்டின் முதல் இருபது உயிரியல் புத்தகங்களில் ஒன்றாக அது மதிக்கப்படுகிறது. அவரது ஆராய்ச்சிகளுள் முதன்மையானது, சோதனைக்குழாய் முறையில் மலர்த்தாவரங்களை உருவாக்கும் புதிய தொழில்நுட்பத்தைக் கண்டறிந்ததாகும். அதற்கு முன் வீரிய ஒட்டுரகங்களை உருவாக்குவதில் இயற்கையான நடைமுறையே கடைப்பிடிக்கப்பட்டது. அதில் வெற்றியின் சதவீதம் குறைவு.

தில்லி பல்கலைக்கழகத்தில் கருவியல் ஆய்வு (Embryology), திசு வளர்ப்பு (Tissue Culture) துறைகள் பஞ்சானன் தலைமையிலான விஞ்ஞானிகள் குழுவால் வளர்ச்சி பெற்றன.

1951-இல் சர்வதேச தாவர வடிவமைப்பியல் வல்லுநர் சங்கத்தை (International Society of Plant Morphologists) பஞ்சானன் தோற்றுவித்தார். அதற்காக, Phytomorphology என்ற சஞ்சிகையை பஞ்சானன் துவக்கினார். 1966 வரை அதன் ஆசிரியராக இருந்து அதை நடத்தினார். அதேபோல Botanica என்ற பத்திரிகையும் அவரால் வெளியிடப்பட்டது.

பஞ்சானன் தேர்ந்த விஞ்ஞானி மட்டுமல்ல, சிறந்த எழுத்தாளரும்கூட. தில்லியின் மலர்கள் (Flora of Delhi- 1963), இந்தியாவின் மலர்கள் Flora of India- 1965) ஆகியவை பஞ்சானனின் முக்கியமான நூல்கள்.

பண்டைய பாரதத்தில் தாவரவியலின் பயன்பாடு குறித்த "இந்தியாவில் தாவரவியலின் வரலாறு' (History of Botany in India) புத்தகம், அவரது சமஸ்கிருத ஞானத்துக்குச் சான்றாக விளங்குகிறது. அதில் ரிக் வேதம், அதர்வண வேதம், விருக்ஷ ஆயுர்வேதம் முதலிய பழமையான சுவடிகளிலிருந்து பல தரவுகளைத் தொகுத்துள்ளார்.

உயிரியலை விருப்பத்துடன் மாணவர்கள் கற்க வேண்டும் என்ற ஆர்வத்தில், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்துக்காக (NCERT), 40 கல்வியாளர்களின் உதவியுடன் அற்புதமான நூல் தொகுப்பை பஞ்சானன் உருவாக்கினார். அதுவே உயிரியலின் மீது மாணவர்களின் கவனம் திரும்பக் காரணமாக இருந்ததாக, கல்வியாளர்கள் கூறுகின்றனர்.

பெங்களூரிலுள்ள இந்திய அறிவியல் கழகத்தின் கெüரவ உறுப்பினர் (1934), அமெரிக்க தாவரவியல் சங்கத்தின் வெளிநாட்டு கெüரவ உறுப்பினர் (1947), இந்திய அரசின் பீர்பால் சாஹ்னி விருது (1958), பிரிட்டனின் எஃப்.ஆர்.எஸ். (1965) உள்ளிட்ட பல்வேறு கெளரவங்களைப் பெற்றுள்ள பஞ்சானன் மகேஸ்வரி, 1966, மே 18-இல் மறைந்தார்.

தாவரவியலில் முத்திரைகள் பதித்த விஞ்ஞானி பஞ்சானனின் பெயர், பல புதிய தாவர வகைகளுக்கு சூட்டப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com