நாளை நான் ஐஏஎஸ்! கடினமான பகுதிகளில்தான் கேள்விகள் ஒளிந்திருக்கின்றன!
குடிமைப்பணித் தேர்வுகளில் வினாக்கள் அமைகின்ற பகுதிகளை அனுமானித்து, கவனம் செலுத்துவது மிகவும் முக்கியமானது. இது பெரும்பாலும் பொது அறிவுப்பாடங்களைச் சார்ந்தது.


குடிமைப்பணித் தேர்வுகளில் வினாக்கள் அமைகின்ற பகுதிகளை அனுமானித்து, கவனம் செலுத்துவது மிகவும் முக்கியமானது. இது பெரும்பாலும் பொது அறிவுப்பாடங்களைச் சார்ந்தது.
இதனை நாம் அறிவதற்கு முன் போட்டித் தேர்வர்களின் மனோநிலை பற்றியும், அவர்கள் தன்னை மனரீதியாகத் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் பற்றியும் குறிப்பிட விரும்புகிறோம்.
தற்போது இத்தேர்வுகளை எழுத இளைஞர்கள் பலருக்கும் ஆர்வம் பிறந்துள்ளது. படிக்கின்ற மாணவர்களுக்கும் ஆவல் எழுந்துள்ளது. இது நல்லதோர் மாற்றம்; மகிழ்ச்சியும் கூட.
இவ்வாறு எழுத வருகின்ற தேர்வர்கள் சிலர், இத்தேர்வுகள் தொடர்பாக சில கேள்விகள் கேட்பதைப் பார்க்கிறோம். ""இதில் வெற்றி பெற வேண்டுமென்றால் 6 மாதம் படித்தால் போதுமா அல்லது மேற்கொண்டு எவ்வளவு நாள் படிக்கவேண்டும்? 1 வருடத்திற்குள் வேலை கிடைத்துவிடுமா? நான் உடனே அரசு வேலை வாங்க வேண்டும். ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும். அதற்குத் தக்கவாறு எனக்கு சரியான புத்தகங்களைக் கூறுங்கள்'' என்றெல்லாம் கேட்கிறார்கள்.
அவர்களுடைய ஆர்வத்தில் அவசரம் இருப்பதை நாம் உணர்கிறோம். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் போது, அதிலும் குறிப்பாக குடிமைப்பணித் தேர்வுகள் எழுத விரும்பினால் தேர்வர்களுக்கு நிதானமும், பொறுமையும், விடாமுயற்சியும் அவசியம் என்பதைத் தேர்வர்கள் தெரிந்து கொள்வது முக்கியம்.
ஏனென்றால், குடிமைப்பணித் தேர்வுகளுக்குப் படிப்பது என்பது பிற போட்டித் தேர்வுகளில் இருந்து சற்றே வேறுபட்டது. பாடநூல்களை அணுகும் முறையும் வேறுபடும்.
பொதுவாக, பணியாளர் தேர்வாணையம் (நநஇ), ரயில்வே தேர்வு வாரியம் (ததஆ), வங்கிப்பணிகள் தேர்வு, மாநிலத் தேர்வாணையத்தேர்வுகள் போன்றவை போட்டித்தேர்வுகளில் முக்கியமானவையாகும். இத்தேர்வுகளுக்குத் தயாராகும்போது, பொது அறிவுப் பாடங்களுக்கு ஒருங்கிணைக்கப்பட்ட சில புத்தகங்கள் உள்ளன.
இப்புத்தங்களோடு APTITUDE பகுதிக்கு டாக்டர் R.S.AGGARWAL இன் A MODERN APPROACH TO VERBAL AND NON - VERBAL REASONING மற்றும் QUANTITATIVE APTITUDE போன்ற மற்ற நூல்களை சீரிய முறையில் படித்தாலே வெற்றிக்கான வாய்ப்புகள் அதிகம்.
ஆனால், குடிமைப்பணித்தேர்வுகளைப் பொறுத்தவரையில் சர்வதேச, தேசிய, மாநில நிகழ்வுகளை, நாளிதழ்களில் கூர்ந்து கவனித்தல், புதிய மாற்றங்களை ஈர்த்துக் கொண்டு தன்னைப் புதுப்பித்துக் கொள்ளுதல், நவீனமயத்தினை உள்வாங்குதல், தொழில்நுட்ப மற்றும் பொருளாதார அறிவினை மேம்படுத்துதல் போன்றவை தேர்வருக்குள்ளே தொடர்ந்து நடக்கவேண்டும். இத்துடன் தேர்வர்கள் பிற தேர்வுகளைப் போல் அல்லாது குடிமைப்பணித் தேர்வுகளுக்கென பொது அறிவுப்பகுதிக்கு பரிந்துரைக்கப்படும் ஆதார நூல்களைப் பின்பற்றுவதுமே சரியான அணுகுமுறையாக இருக்கும்.
பொது அறிவுப்பாடத்திற்கு படிக்க வேண்டிய சில நூல்கள் குறித்து இதற்கு முந்தைய பகுதிகளில் நாம் குறிப்பிட்டுள்ளோம். இனிவரும் பகுதிகளில் மேலும் சில புத்தகங்களைப் பற்றிக் குறிப்பிட உள்ளோம். தேர்வர்கள் இவற்றைக் கவனத்தில் கொள்வது வெற்றிக்கு வலுச்சேர்க்கும்.
வெறும் களிமண்ணில்தான் பல்வேறு பொருட்கள் செய்யப்படுகின்றன. களிமண்ணேயானாலும் அதனைப் பண்படுத்தாமல் அதிலிருந்து பொருட்கள் செய்வது சாத்தியமல்ல.
அதுபோல, பணிப்பாதுகாப்பும், சமூக மதிப்பும் தருகின்ற அரசுப்பணிகளை, தேர்வுக்கு விண்ணப்பம் செய்தவுடனேயோ, குறுகிய காலத்திலோ பெற்றுவிட முடியாது. அதற்கு கால அவகாசமும் வேண்டும். தன்முயற்சியும், தன்னம்பிக்கையும் வேண்டும்.
பத்தாம் வகுப்பில் ஒரு பாடத்தில் 100க்கு 35 மதிப்பெண்கள் பெற முடியாமல் வெற்றி வாய்ப்பை இழந்து வாழ்க்கையே திசைமாறி விடுபவர்களைக் கூட பார்க்கிறோம்.
அவ்வாறிருக்க, இந்திய நாட்டின் உயர்ந்த பணிக்கான தேர்வில், நாடு தழுவிய போட்டியுள்ள தேர்வில், வெற்றி பெறுவதற்கு நம்முடைய உழைப்பும், நம்மைத் தயார்ப்படுத்திக் கொள்ளத் தேவையான காலமும் எத்தகையதாக இருக்க வேண்டும் என்பதை தேர்வர்கள் சற்றே சிந்திக்க வேண்டும்.
அதற்காக, இத்தேர்வு மிகக் கடினமான ஒன்று என்று அர்த்தமல்ல. இன்று போட்டித் தேர்வுகளைத் தொடர்ந்து எழுதி குடிமைப்பணித் தேர்வுகளில் வென்று நாட்டின் உயர்பணிகளில் இருப்பவர்களில் பலர், கிராமப்பகுதிகளைச் சேர்ந்தவர்கள். முதல் தலைமுறைப் பட்டதாரிகள் என்பதையும் உங்களுக்கு நினைவுப்படுத்திட விரும்புகின்றோம்.
எனவே, தேர்வருக்கு அவசரம் தேவையல்ல. ஆனால் விரைவு தேவை. இந்த அவசரத்திற்கும், விரைவிற்கும் முக்கிய வேறுபாடு உள்ளது. அவசரம் என்பது பதட்டத்துடன் கூடிய வேகம். விரைவு என்பது நேர்த்தியுடன் கூடிய வேகம்.
ஏன் விரைவு தேவையென்றால், தேர்வுக்கு நிறையப் படிக்க வேண்டும். அதிகம் தெரிந்து கொள்ள வேண்டும். நினைவில் நிறுத்த வேண்டும். எழுத்துப் பயிற்சியும் வேண்டும். ஆளுமைப் பயிற்சியும் வேண்டும்.
இவ்வாறு நிறையப் படிக்கும்போது முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய பகுதிகளை அடையாளம் கண்டு அடிக்கோடிடுதல் வேண்டும். குறிப்பெடுத்தலும் வேண்டும்.
உயரிய பதவிக்கான போட்டித் தேர்வாகையால் வினாக்கள் தரமிக்கவையாக இருத்தல் வேண்டும் என்று தேர்வாணையம் விரும்புகின்றது. ஆகவே, வினாக்கள் சற்று கடினமானதாகவே தோன்றலாம்.
இதனை மையப்படுத்தி சில வழிகாட்டுதலையும், நீங்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய பகுதிகளையும், வினாக்கள் அமைகின்ற பகுதிகளையும் உங்களின் கவனத்திற்கு கொண்டு வருகின்றோம்.
பொதுவாக நூல்களைப் படிக்கும்போது அவற்றில் உள்ள பகுதிகளை நினைவில் வைப்பது மற்றும் புரிந்து கொள்வதை அடிப்படையாகக் கொண்டு நாம் மூன்று வகையாகப் பகுத்துக் கொள்ளலாம். அவை கீழ்வருமாறு.
1. எளிதாகப் புரிந்து கொள்ளவும், நினைவில் நிறுத்திக் கொள்ளவும் ஏதுவான பகுதிகள்.
2. சற்றே கவனமாகப் படித்தால், புரிந்து கொள்ள முடிவதும், ஆனால் எளிதில் நினைவில் நிற்காத பகுதிகள்.
3. படிப்பதும், புரிந்து கொள்வதுமே கடினமாக உள்ள பகுதிகள்.
பொது அறிவுப் பாடங்கள் அத்தனையிலும் இந்த மூன்று பிரிவுகள் உண்டு. பொதுவாக தேர்வர்கள் முதல் பிரிவைச் சேர்ந்த பகுதிகளைப் படிப்பதில் அதிக ஆர்வம் காட்டுவர்.
இரண்டாவது பிரிவைச் சேர்ந்த பகுதிகளைப் படிக்கும் போது சிறிது ஆர்வம் குறையும். மூன்றாவது பிரிவைச் சேர்ந்த பகுதிகளைப் படிக்கும்போதே ஒரு சிலர் கடமைக்கு வாசிப்பர். வேறு சிலர் இதனை முழுவதுமாக தவிர்ப்பர்.
ஆதலினால், எளிதான பகுதியை வேகமாக வாசித்துவிட்டுச் செல்வதையே பெரும்பாலான தேர்வர்கள் விரும்புகின்றனர். ஆனால் எப்பகுதி படிப்பதற்கும், புரிந்து கொள்வதற்கும் கடினமாக உள்ளதோ, அதனால் அதை ஏனோதானோ என்று வாசித்து, அதைத் தவிர்க்க நினைத்தீர்களோ, அப்பகுதியை மீண்டும் மீண்டும் படியுங்கள். ஆழ்ந்து படியுங்கள்.
அப்பகுதியை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். அதனைப் படிப்பதற்கான ஆர்வத்தினை மென்மேலும் வளர்த்துக் கொள்ளுங்கள். ஏனென்றால், தேர்வர்களே தேர்வுக்கான வினாக்களைத் தருபவை இப்பகுதிகள்தான்.
மேற்கண்ட மூன்று பிரிவுகளில் முதற் பிரிவில் 10 சதவிகித வினாக்களும், இரண்டாவது பிரிவில் 30 சதவிகித வினாக்களும், மூன்றாவது பிரிவில் 60 சதவிகித வினாக்களும் அமைவதற்கான வாய்ப்புகள் அமைந்துள்ளதை ஒவ்வொரு குடிமைப்பணித் தேர்விலும் நாம் காண்கிறோம்.
ஆகவே, ஆதார நூல்களில் நாம் எப்பகுதிகளை கடினம் என்று உணர்கின்றோமோ அப்பகுதிகளில் தான் கேள்விகள் ஒளிந்திருக்கின்றன. அதனையே மீண்டும் மீண்டும் படித்தால்தான் வெற்றிப் பாதைக்கான வெளிச்சம் தெரியும். இதனை மனதில் நிறுத்திக் கொள்ளுங்கள்.
பணியில் இருந்து கொண்டே கிடைக்கும் குறைவான ஓய்வு நேரத்தில், தன்னைத் தேர்வுக்குத் தயார்ப்படுத்திக் கொண்டு, தன் விடாமுயற்சியின் மூலம் இலக்கை எட்டிய பெண் தேர்வர் ஒருவரைப் பற்றி அடுத்த பகுதியில் காண்போம்.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...